| கடவுள் மீதான நம்பிக்கை எனக்கு என் அம்மாவின் மூலம் 
		வந்திருந்திருக்கக்கூடும். அம்மா ஒரு முருக பக்தை. நானும் அது போல ஆக 
		வேண்டும் என நிறைய ஆசை பட்டார். நான் முருகனின் அருளால் பிறந்த குழந்தை 
		என்றும் கடவுளின் அம்சம் எனக்கிருப்பதாகவும் தீர்க்கமாக நம்பினார்.
 நான் சின்ன வயதிலேயே பிள்ளையார் பக்தனாகி விட்டேன். `திருவிளையாடல்’ 
		படத்தில் பிள்ளையார் முருகனை குறுக்குவழியில் வெற்றி கொண்டு ஞானப்பழத்தை 
		பெற்றது அதற்கு முக்கியக் காரணம். எனக்கு நல்ல நன்னெறி பாட ஆசிரியர் 
		கிடைத்ததால், பின்னாளில் முருகன் மீது இரக்கமும் பிள்ளையார் மீது கோபமும் 
		வந்து நானும் தீவிர முருக பக்தனாகி விட்டேன்.
 
 நான் ஒரு முருக பக்தன் என்பதை வெளிபடுத்த சில காரியங்களைச் செய்ய 
		வேண்டியிருந்தது. காலையில் எழுந்து பூப்பறிப்பது தொடங்கி கந்த சஷ்டி 
		கவசத்தை மனப்பாடமாக பாடுவது வரை எனது பணிகள் நிரம்பியிருக்கும். நான் கந்த 
		சஷ்டி கவசம், சிவபுராணம் போன்றவற்றை ஏழு வயதிலேயே மனப்பாடமாக சொல்வது 
		மாணவர்கள் மத்தியில் என்னை தனித்துக்காட்டியது. ஆசிரியர்களுக்கு நான் 
		பிடித்த மாணவனானேன். கடவுள் என்ற விஷயமும் அதைச் சார்ந்த இதர சடங்குகளும் 
		ஒரு தனி மனிதனுக்குக் கொடுக்கும் பலம், அன்றே எனக்கு ஓரளவு புரியத் 
		தொடங்கியது. தொடர்ந்து அந்தப் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள சமய 
		போட்டிகளும், தேவார வகுப்புகளும் எனக்கு உதவின.
 
 அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் நான் லுனாஸ் தோட்டத்தில் அமைந்திருந்த 
		மாரியம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் அனைவருக்கும் 
		என் முகம் நல்ல அறிமுகமானது.அர்ச்சகரும் எனக்கு நெருக்கிய நண்பரானார். 
		கோயிலில் சடங்குபூர்வமான நம்பிக்கைகளையும் அதன் பலன்களையும் சதா எனக்கு 
		போதித்தபடி இருப்பார். அவரிடம் சில மந்திரங்களைக் கற்றேன்.நானும் அவரைப்போல 
		அர்ச்சகராக வர வேண்டும் என ஒவ்வொரு நாளும் முருகனிடம் வேண்டிக்கொள்வேன். 
		கோயிலுக்கு பின்புறம் அமைந்திருந்த எளிய அறையில் இருந்த அவர் வாழ்வும் 
		சமூகமும் அவரின் மேல் வைத்திருந்த மரியாதையும் அதற்குக் காரணமாக 
		இருக்கலாம்.
 
 பின்னாளில் கோயிலில் மணி அடிக்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்குக் 
		கிடைத்தது. நான் அடிக்கும் மணியின் ஒலி பிறர் அடிப்பதை விட இனிமையாகவும் 
		தெய்வீக அம்சங்கள் நிரம்பியிருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.எந்த நேரமும் 
		அம்பாள் என் மணியோசையில் கிறங்கி தோன்றப்போகும் தருணம் பெரிய 
		எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எனக்குள் ஏற்றியிருந்தது.
 * * * படிவம் மூன்று படிக்கும் போதெல்லாம், எனக்கு கவிதை 
		பரிட்சயம். கவிதை எழுத பேனா காகிதத்தோடு ஒரு நிழல் தரும் மரமும், நதியும், 
		வெள்ளை ஜிப்பாவும் மிக அவசியம் என உறுதியாக நம்பிய காலங்கள் அவை. லுனாஸ் 
		வட்டாரத்தின் ஆற்றோரப் பகுதியில் அமைந்திருந்த புத்தர் கோயில் எனக்குப் 
		பொருத்தமாகத் தோன்றியதால் மதிய வேளைகளில் அங்குள்ள புல் தரையில் `கவிதை 
		எழுத’ அமர்ந்து கொள்வேன். அச்சமயத்தில்தான் `நடை தியானம்’ அறிமுகமானது.
 தினமும் சில மணிநேரங்கள் புத்த பிக்குகள், பெருவிரலை உற்றுப்பார்த்தபடி மிக 
		நிதானமாய் காலடிகளை மாற்றி வைப்பதும், ஒவ்வொரு பாத அழுத்தத்திற்கு பின் 
		முழு நிறைவுடன் சுவாசம் விடுவதும் என்னை திகைப்பில் ஆழ்த்தின. ஓசைகளின்றி 
		ஆர்ப்பாட்டங்களின்றி தனிமனிதர்களாக அவர்கள் இறைத்தன்மையை நெருங்குவதாக 
		எனக்குப் பட்டது. எனக்கு புத்தர் பிடித்துப் போனார். அங்கிருந்த தாய்லாந்து 
		குருவிடம் சென்று தினமும் அமர்ந்து கொள்வேன். அவர் ஆங்கிலம் கலந்த மலாயில் 
		என்னிடம் பேசுவார். நான் மலாய் கலந்த தமிழில் அவரிடம் பேசுவேன். அவர் 
		புத்தரின் போதனைகள் பற்றி கூறுவார்.ஒரு மனிதன் நெருங்கக்கூடாத செயல்கள் 
		பற்றி விளக்குவார்.அவற்றில் பெரும்பாலும் நான் செய்துகொண்டிருந்ததும் இனி 
		செய்ய திட்டமிட்டிருப்பதுமே நிரம்பிக் கிடந்தன.ஒன்றும் விளங்காவிட்டாலும் 
		அவர் பூண்டிருந்த அமைதியை நான் முழுவதுவமாக சுவாசித்து என்னில் நிரப்பிக் 
		கொண்டேன். சில தினங்களில் நானும் அவர்களோடு `நடை தியானம்’ செய்யத் 
		தொடங்கினேன்.சில வினாடிகளுக்கு மேல் என்னால் பெருவிரலில் கவனம் செலுத்த 
		முடியவில்லை. நான் தொடர்ந்து தோற்றபடி இருந்தேன். எனது தோல்விகள் மேலும் 
		மேலும் புத்தரின் மேல் ஈடுபாட்டை வர வைத்தது.புத்தபிக்குகள் மொட்டை போட 
		வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லாதிருந்தால் நானும் புத்த 
		பிக்குவாகியிருப்பேன்.
 * * * புத்தரைப் பற்றிய தேடலில் இருக்கும் போது, அவர் 
		தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரைத் தொகுப்பு புத்தகம் கிடைத்தது. 
		(தலைப்பு நினைவில் இல்லை). எடுத்து படிக்கத் தொடங்கிய போது மூளையின் 
		நரம்புகளில் சில மின் அதிர்வுகள் ஏற்படத்தொடங்கின. நான் இந்த மாற்றத்தை 
		எதிர்பார்க்கவில்லை. அந்த புத்தகத்தில் புத்தர் இல்லை. நான் இதுவரை 
		நினைத்திருந்த புத்தர் என்ற உருவம் உடைந்து புத்தர் எழுந்து நின்றார். 
		அதில் புத்தர் ஒன்றும் செய்யவில்லை. எந்த போதனைகளும் கூறவில்லை.கட்டளைகள் 
		இடவில்லை. ஒன்றும் செய்யாத புத்தர் என்னை வியப்பில் 
		ஆழ்த்தினார்.உரையாற்றியவர் பெயரை தேடினேன். `ஓஷோ` என்று இருந்தது. பின்புற 
		அட்டையில் வழுக்கைத் தலையும் நீண்ட வெண்ணிற தாடியில் கண்களில் ஒளியுடன் 
		ஒருவர் இருந்தார். 
 `ஓஷோ`வை நான் தீவிரமாக படித்த காலங்கள் இன்றும் தெளிவாக நினைவில் 
		இருக்கிறது. அக்கால கட்டத்தில், நான் எந்த செயல் புரிவதிலும் ஆர்வம் 
		காட்டாமல் தனிமையாக இருப்பதை மட்டும் பழக்கமாக்கிக் கொண்டேன். ஓஷோ போதித்த 
		120 தியான முறைகளில் குறைந்த பட்சம் ஏழிழாவது என்னால் முழுமையாக ஈடுபட 
		முடிந்தது. எந்தச் செயல்களும் என்னை பெரும்பாலும் பாதிக்காமலும் உணர்ச்சி 
		மாற்றங்கள் ஏற்படாமலும் இருந்தேன். உலகில் ஆச்சரியங்கள் இல்லாததை ஓஷோ 
		எனக்கு கூறியபடி இருந்தார். ஓஷோவின் சொற்கள் ஆழம் மிகுந்தவை. அவர் 
		சொற்களினூடே பயணிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் அனைத்தும் முடிவில் 
		சூனியத்தையே பிரதிபலித்தன.இதற்கு முன்பான எனது நம்பிக்கைகள் பற்றிய 
		கேள்விகள் எழுந்து பின் எந்தக் கேள்விக்கும் பதில்கள் தேவையில்லை என 
		தோன்றியது. எல்லா கேள்விகளும் அதற்கான எல்லா பதில்களும் தற்காலிகமானவையாக 
		தோன்றியது. எதையும் வழிபட பிடிக்கவில்லை. எல்லா வழிபாடுகளும் ஏமாற்று 
		வேலையாகப்பட்டது. பக்குவப்படாத ஒரு மனம் ஓஷோவை நெருங்குகையில் உண்டாகும் 
		அத்தனை பிரழ்வுகளும், தடுமாற்றங்களும், அவநம்பிக்கைகளும் என்னைப் 
		பற்றிக்கொண்டன.
 
 எனக்கு எல்லா பாதைகளிலும் வெறுப்பாக இருந்தது. எல்லா சொற்களும் போலியாக 
		இருந்தன. நான் புத்தராகவும், மகாவீரராகவும், மீராவாகவும், கிருஷ்ணனாகவும் 
		உருமாறி, உருமாறி உருகுலைந்தேன். எனக்குள் சக்தி நிறைய தேக்கம் கண்டது. 
		ஒன்றும் செய்ய முடியாத சக்தி பதினேழாவது வயதில் வன்முறையாக மாற்றம் கண்டது. 
		எதிலும் ஒரு அவசரமும், முன்யோசனையற்ற துணிச்சலுமாய் வாழ்வு வீரியம் 
		கொண்டிருந்தது. அறிவை கடந்து பயணம் செய்யும் உடலும் மனமும் வாழ்வில் சிலரை 
		அகற்றியும் கூட்டியும் புதிதாக ஏதோ செய்ய முனைந்தது. வாழ்வதற்கு வேறு தளம் 
		தேவை என நிச்சயமானபோது கோலாலம்பூர் வந்தேன். அங்குதான் ஓவியர் ராஜாவின் 
		நட்பு கிடைத்தது.
 * * * ஓவியர் ராஜா ஒரு வகையில் எனக்கு உறவினர். அவர் நான் 
		கூறுவதை மிக அமைதியாக கேட்பவராகவும் குறுக்கிடாதவராகவும் இருந்ததால் எனக்கு 
		அவரைப் பிடித்துப் போனது.நான் வைத்திருந்த `நல்லவர்கள்’ பட்டியலில் அவரும் 
		ஒருவரானார். அவர் முன்யோசனைகளற்ற எனது வேகத்தை நன்கு அறிந்தவராக இருந்தார். 
		சில தினங்களில் அவர் என்னை ஒரு `தன்முனைப்பு தூண்டல்’ பயிற்சியில் சேர்த்து 
		விட்டார். அங்கு, உலகை சூழ்ந்துள்ள காந்த சக்தியை உடலில் புகுத்துவது 
		போன்றான தியான முறைகள் போதிக்கப்பட்டன. அது எனக்கு ஆச்சரியம் 
		தரவில்லை.ஏற்கனவே அதுபற்றி நான் அறிந்து வைத்திருந்தேன். முன்னூற்று ஐம்பது 
		ரிங்கிட் கட்டணம் செலுத்தியதற்காக தொடர்ந்து ஐந்து நாட்கள் பயிற்சியில் 
		கலந்து கொண்டேன். 
 முதலில் அப்பயிற்சியைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என உறுதிமொழி 
		வாங்கிக்கொண்டனர். வாழ்வில் புரிந்த அத்தனை செயல்களில் உள்ள குறைகளையும் 
		கண்முன் எடுத்துக்காட்டி, குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து, என்னை உடைத்து 
		சுக்குநூறாக சிதறடிப்பது அவர்கள் நோக்கமாக இருந்தது. அவர்கள் நடவடிக்கைகள் 
		அனைத்தையும் அனுமதித்தேன். என்னிடம் பெரிதாக எந்த இரகசியமும் இல்லாததால் 
		நான் அந்தக்கூட்டத்தில் சுவாரசியமற்றவனாகக் கருதப்பட்டேன். அங்கு இருந்த 
		எல்லோருக்கும் சொல்லி அழவும்...கதறவும்...குறுகிப்போகவும் ஏதாவதொரு காரணம் 
		இருக்கவே செய்தது. பயிற்சியாளர்களின் நச்சரிப்பு அதிகரிக்க வேறு 
		வழியில்லாமல் அவர்கள் சொன்னது போல கத்தினேன்... அழ முயன்றேன்.... 
		பயிற்சிக்கு பின் மனமும் உடலும் சோர்ந்திருந்தது. நான் சாந்தமாக இருந்தது 
		அம்மாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. நான் பொறுமையின் உருவாக மாறிவிட்டதாக 
		அனைவரும் நம்பினர். இரண்டு வாரங்களில் எனது சோர்வு நீங்கிய பிறகு மீண்டும் 
		அம்மா கவலைப்படத் தொடங்கினார்.
 * * * நான் குற்ற உணர்வுகளில் திரிந்த காலங்கள் அதிகம். சின்ன 
		வயதில் மிதியடி, நாற்காலி, காகிதங்கள் என எதில் கால் பட்டாலும் மூன்று 
		நான்கு முறை அவற்றை தொட்டு கும்பிட்டு நகர்வதை இன்னும் வீட்டில் 
		நகைச்சுவையாக சொல்லி சிரிப்பர். 
 பெரியவனான பின்பும் நான் செய்யும் எல்லா செயல்களுக்குப் பின்னாலும் காரணமே 
		இல்லாமல் குற்ற உணர்ச்சி என்னை தொற்றிக் கொண்டே வந்தது. பெரிய மன உளைச்சலை 
		ஏற்படுத்திய காலகட்டம் இது. இந்த குற்ற உணர்விலிருந்து தப்பிக்கவும் 
		வேகத்தடையை ஏற்படுத்தவும்தான் நான் பத்துமலை அருகில் அமைந்துள்ள 
		ஆசிரமத்தில் நுழைந்தேன்.
 
 எனக்கு அவர்களைப் பிடித்தது போன்று, அங்கிருந்த குருமார்களுக்கும் என்னை 
		பிடித்தது. நான் இளைஞனாக இருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக 
		`குகபக்தானந்தாவும்’ அவர் தலைமை சீடர் `குமுக்சி’யும் என்னை அன்போடு 
		எதிர்கொண்டனர். அவர்கள் தியானம் செய்யும் பிரம்ம முகூர்த்தத்தில் நானும் 
		தியானம் செய்ய அனுமதிக்கப்பட்டேன். எனக்காக மட்டுமே `குமுக்சி’ நேரம் 
		ஒதுக்கி `யோகா` சொல்லிக் கொடுத்தார். நான் அவர்களில் ஒருவனானேன். எனக்கு 
		ஆசிரமத்தில் நிறைய வேலைகள் இருந்தன. பூத்தொட்டிகள் அடுக்குவது... புற்களை 
		வெட்டுவது... மணல் பரப்புவது..என. குகபக்தானந்தா எனக்கு அடுத்தடுத்த 
		வேலைகளை கூறிக் கொண்டிருப்பார். ஒவ்வொரு வேலை முடிந்ததும், ஏதேனும் 
		சந்தேகம் கேட்பேன். அவை பெரும்பாலும் ஆன்மீகம் சார்ந்தே இருக்கும். அவரும் 
		பதில் கொடுப்பார்.அந்தப் பதில் இன்னும் நிறைய கேள்விகளை எனக்குள் 
		ஏற்படுத்தும். மேலும் மேலும் என் கேள்விகள் தொடரும். அவருக்கு எதற்கும் 
		ஆதாரங்கள் தேவையில்லாமல் இருந்தது. முழுவதுமாக இறைவனை நம்புவதும் அவரைச் 
		சரணடைவதும் மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆன்மீக நம்பிக்கைகளை ஏற்றுவதும் 
		அவர்களின் முக்கிய கடமையாக இருந்தது.
 
 எனக்கு சில நாட்களில் நம்பிக்கையின் தொடர்ச்சியில் வந்த வார்த்தைகள் மீது 
		அவநம்பிக்கை ஏற்பட்டதால் ஆசிரமத்திற்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டேன். 
		மனம் முற்றிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. நான் 
		கேள்விகள் கேட்க ஆட்களைத் தேடினேன்.
 * * * வாழ்வின் மர்மம் பற்றியும் அதில் புதைந்துள்ள 
		சூட்சுமங்கள் பற்றியும் நமக்குத்தோன்றும் அனைத்து சந்தேகங்களையும் 
		குழப்பங்களையும் நீக்கி முற்றிலும் யோக நிலைக்குக் கொண்டு செல்லும் ஓர் 
		இயக்கம் இலவசமாக இயங்குவது பற்றி கேள்விபட்டு அதில் நுழைந்தேன். அங்கு 
		அனைவரும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தனர். வெள்ளைமுடியுடன் இருந்த 
		ஒருவரின் படத்தை வைத்திருந்தனர். சிவப்பு நிற மங்கிய ஒளியில் தியானம் 
		செய்தனர். அந்தத் தியான முறையை போதிப்பதற்கு முன் நிறைய போதனைகள் 
		இருப்பதாகவும் அந்தப் போதனைகள் இரண்டாவது வாரத்தில் முடிவுரும் எனவும் 
		கூறியதால் போதனைகள் கேட்க செல்லத்தொடங்கினேன்.
 “பெற்றோர்கள் உங்களை உலகிற்கு எடுத்துவந்த கருவிகள். அவ்வளவுதான். உண்மை 
		பெற்றோர் கடவுள்தான்” என ஆரம்பமானது அவர்களின் பிரச்சாரம். யார் கொடுக்கும் 
		உணவையும் நீரையும் அருந்தாமல் தனியே சமைத்து உண்ணவேண்டும் என்ற 
		கோட்பாட்டுடன் அவர்கள் இருந்தனர். அன்பென்றும் கருணையென்றும் எல்லாம் ஒரே 
		ஆத்மா என்றும் பேசிய அவர்கள் தங்களை தனி தீவுகளாகப் பிரித்துக்கொண்டு 
		செயல்பட்டது பெரிய முரணாக இருந்தது. மேலும் இவ்வியக்கத்தில் சேர்பவர்கள் 
		இறந்ததும் சொர்க்கத்திற்குச் சென்றுவிடுவர் என்றும் இராமர் காலம் கிருஷ்ணர் 
		காலம் மீண்டும் தோன்றும் எனவும் நிறைய கதைகளை சளைக்காமல் திறம்பட 
		கூறுபவர்களாக இருந்தனர். எனக்கு அவர்களிடம் கேட்க நிறைய கேள்விகள் 
		இருந்தன.எல்லா கேள்விகளுக்கும் அவர்களின் பதிலாக “இதை நாங்கள் கூறவில்லை. 
		இறைவன் கூறினார். அதனால் சந்தேகம் கொள்ள ஒன்றும் இல்லை” என்றே வந்தது. 
		மேலும் இதற்கு முன் உலகில் இருந்த ஏமாற்றுப் பேர்வழிகள் கண்டுபிடித்த 
		`விதி’ என்ற சொல்லை மிகத்திறம்படவே இவர்கள் பயன்படுத்தக் கற்றிருந்தனர். 
		நான் சுமந்து கொண்டு திரிந்த எளிய கேள்விகளுக்குக் கூட இவர்களிடம் பதில் 
		இல்லாததால் மிக கண்ணியமான முறையில் இயக்கத்திலிருந்து வெளியேறினேன்.
 * * * குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதும் போது நான் 
		மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதே `வார்ட்டில்’ 
		அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு தமிழ் இளைஞர் படுக்கையில் இருக்காமல் எந்த 
		நேரமும் சக்கர நாற்காலியில் சுற்றிக்கொண்டிருந்தார். தனது காலில் நடந்து 
		முடிந்த அறுவை சிகிச்சைப்பற்றி கவலைப்படாதவராக எல்லோரையும் அணுகி அன்புடன் 
		பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்த அனைவரின் சிரமமும் அறிந்தவராக இருந்தார். 
		தாதிகளின் `தூக்கம்’ கெடுக்காமல், இரவில் ரொப்பிக்கிடக்கும் நடக்கமுடியாத 
		நோயாளிகளின் சிறுநீர் குடுவைகளை மலக்கூடத்தில் ஊற்றி காலி செய்து மீண்டும் 
		உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதையெல்லாம் கண்டபிறகு மனம் ஏதோ செய்தது. உடனே 
		அமர்ந்து இந்தக் கட்டுரையை எழுதினேன். இந்தக்கட்டுரைக்கும் இவருக்கும் 
		ஏதேனும் தொடர்புண்டா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நான் 
		சுமந்து திரியும் கேள்விகளுக்கு சில பதில்கள் கிடைத்தது போல்தான் 
		இருக்கிறது. |