|  | சமீபத்தில் கோலாலம்பூர் வந்திருந்த டாக்டர் எம்.எஸ். 
		உதயமூர்த்தி அவர்களின் சொற்பொழிவு கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்றிருந்தேன். 
		ஆஸ்ட்ரோ வானவில்லுக்காக அவரைப் பேட்டி எடுத்தேன். எனது பள்ளி 
		நாட்களிலிருந்தே அவரது தன்னம்பிக்கை ஊட்டும் எழுத்துக்களில் எனக்கு ஒரு 
		மயக்கம் உண்டு. அந்த நாட்களில் ஆனந்த விகடனிலும், கல்கியிலும் வெளிவரும் 
		அவரது எழுத்துக்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. உயிரியல், வேதியலில் முனைவர் 
		பட்டம் பெற்று அமெரிக்காவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் 
		பேராசிரியராகவும் பணியாற்றிய அவர் தமிழகத்திற்கு திரும்பி வந்து இந்தத் 
		தள்ளாத வயதிலும், குடல் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் ஒரு முழுநேர சமூக 
		சேவையாளராகப் பணியாற்றி வருகிறார். பதினான்கு புத்தகங்கள் எழுதியுள்ள 
		அவரிடம் கேட்க என்னிடம் இருந்தது ஒரு கேள்விதான். “தன்முனைப்பை தூண்டச் 
		செய்யும் உங்களது செயல்பாடு இந்தச் சமூகத்திற்குத் தாங்கள் ஆற்றும் தொண்டா, 
		அல்லது இதுவும் ஒரு தொழிலா?”, என்பதுதான். சிரித்துக் கொண்டே அவர் தந்த 
		பதில், “இது முற்றும் முழுதுமான தொண்டு தான்”. 
 மலேசிய இந்திய சமூகம் ஒரு பின் தங்கிய, ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட ஏழைச் 
		சமூகம். இந்நாட்டு பொருளாதார மைய நீரோட்டத்திலிருந்து அது விலகி வெகு 
		காலமாகிறது. இந்தச் சமூகத்தில் அத்தனை மனிதர் உள்ளும் கல்வியில், தொழிலில், 
		பொருளாதாரத்தில், வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆசை மூச்சு முட்ட 
		நிற்கிறதுதான். ஆனால் எதார்த்த வாழ்வில் அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் 
		மிகக் குறைவாக உள்ளன என்பதுதான் உண்மை.
 
 இந்தக் கனவுகளை கண்டடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோர் 
		மனதிலும் அல்லும் பகலும் அலைபாய்ந்து கொண்டுதானிருக்கிறது. அதற்கான விடையை 
		ஒரு விடுதியின் அகன்ற அறையில் அமர வைத்து, பிரபஞ்சம், உலகம், மனிதன் என்று 
		ஆரம்பித்து ஆழ்மனம் மேல்மனம் என விரித்து “உன் குண்டலினியை தட்டி 
		எழுப்புகின்றேன்.. வா” என்று அழைத்துச் சென்று “உன்னால் எல்லாம் முடியும்!” 
		என்று நம்ப வைத்து வசூல் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம். 
		எந்தவொரு கேள்வியும் கேட்காத, முழு சரணாகதி அடைந்த மனநிலையில், அந்த 
		மனிதர்களுக்கு ஒரு தற்காலிக, அந்தக் கணத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தர 
		தெரிந்திருந்தால் போதும், அவர்கள் அதற்காக கொடுத்தக் காசுக்கான மனநிறைவும், 
		தன்முனைப்புப் பேச்சாளனுக்கு எந்த நேரத்துக்குமான பணமும் புகழும் வந்து 
		சேரும்.
 
 பயிற்சி முடிந்து கரடு முரடான வாழ்வின் பாதையில் பாதம் பதிய நடக்கையில், 
		அவனைப் பற்றி அவன் எழுப்பிக்கொண்ட அதீத நம்பிக்கையும் வாழ்வின் குரூரமான 
		எதார்த்தமும் சந்திக்கையில் தன்னைப்பற்றி அவன் கட்டி எழுப்பிக்கொண்ட 
		பிம்பங்கள் உடையும்.வாழ்வு துயரம் மிக்கது,சிக்கலானது,போராட்டம் 
		மிக்கது.அதை எதிர்கொள்வதற்கு அவனைப்பற்றியும் அவன் எதிர்கொள்ளவிருக்கும் 
		சவால்கள் பற்றியும் அவனுக்கு ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். வாழ்வை 
		அதனதன் இயல்புகளோடு எதிர்கொள்ள அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு 
		அவனை தயார் படுத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவனுடைய 
		இயல்புக்கு அறிவுத்திறனுக்கு ஆளுமைக்கு மாறான ஒன்றை காட்டி எத்தகைய 
		தன்முனைப்புத்தூண்டல் செய்தாலும் அது மன சிக்கலையே தரும். அபரிதமான 
		எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அது வெற்றி பெறாமல் போகும் பட்சத்தில் ஒரு மோசமான 
		இயலாமையை அது ஏற்படுத்தும். ஊதி பெருத்த பலூன் போன்ற அவனைப் பற்றி அவன் 
		எழுப்பிக் கொண்ட அதீத நம்பிக்கை வாழ்வின் கூரிய ஊசி முனை துளைக்க நொடியில் 
		சுருங்கிவிடும். பரமபதத்தில் பாம்புகள்தான் அதிகம்.
 
 இந்த ஊதிப்பெருத்த நம்பிக்கைகளும் எதார்த்தமும் சந்திக்கும் பொழுது இவன் 
		எதிர்ப்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லையென்றால் மன அழுத்தத்திற்கும் மன 
		உளைச்சலுக்கும் ஆளாகிறான்.சிலருக்கு இது மன நோயைக்கூட ஏற்படுத்தலாம்.வேறு 
		சிலருக்கு மயக்கம் தரும் நம்பிக்கைகள் அடுத்தக்கட்ட பயிற்சிகளுக்குப் பணம் 
		கட்டினால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.விழித்துக் கொணட வெகு சிலருக்கு 
		பிழைத்துக் கொள்ளும் வழி தெரியும்.
 
 இத்தகையப் பயிற்சிகளில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான 
		ஆளுமை, பின்புலம், கல்வி, மன அமைப்பு, அறிவாற்றல், பிரச்சனை, வாழ்வின் 
		சிக்கல்... ஆனால் அவர்கள் எல்லோருக்குமே பொதுவான பிரச்சனை 
		ஒன்றுதான்.”என்னுடைய வாழ்வில் முன்னேற்றத்திற்கான வெற்றிக்கான சூத்திரம் 
		(formula) உன்னிடம்தான் இருக்கிறது. அதை எனக்குக் கொடு”, என்று அந்தத் 
		தன்முனைப்பு தூண்டல் பேச்சாளனிடம் கையேந்தி நிற்பதுதான் அது. வாழ்வில் 
		வெற்றி கண்டவர்களெல்லாம் இத்தகையப் பயிற்சிகளுக்குச் சென்றவர்களா என்று 
		கேள்வி கேட்டுக்கொண்டவர்கள், அங்கே சொல்லப்படுகின்ற கருத்துக்கள் எல்லாம் 
		சுயமுயற்சி நூல்களில் ஏற்கனவே சொல்லப்பட்டவைதானே என்று புரிந்து 
		கொண்டவர்கள். தன்னைப் பற்றி சரியாகவே கணித்துக் கொண்டவர்கள், அங்கே 
		பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க மாட்டார்கள்.
 
 மனிதர்களின் பலவீனமான மனம்தான் இந்த வியாபாரிகளின் மூலதனம். அதனை தனக்கு 
		சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால் போதும். மனோவியல் இங்கே 
		சந்தை பொருளாகி விட்டது. கருப்பு நிறம் என்பது அசிங்கம், அழுக்கு தாழ்வு 
		என்பது திரும்ப திரும்ப வானொலியில் சொல்லப்பட்டு அது ஒரு உண்மை என்று 
		நம்பவைக்கப்படுகிறது. `சிவப்பு அழகு கிரீம்’ சந்தைக்கு வரும் முன்னரே 
		கருப்பு மனங்களை இப்படியாக அது தயார்படுத்தி விடுகிறது. நீரிழிவு 
		நோயாளிக்கு மூலிகை மருந்தை கூவிக் கூவி விற்கும் வானொலி அறிப்பாளர் தனது 
		நோய்க்கு ஆங்கில மருந்தைத் தான் உட்கொள்கிறார்கள் என்ற மிகச் சாதரண 
		விஷயத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமது நேயர்களுக்கு இல்லை என்பதை 
		வானொலி நம்புகிறது..
 
 ஜொகூர் பாருவில் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தை கண்களில் சுமந்த தாய் 
		தனியார் வானொலியின் விளம்பரத்தால் தன் இரு குழந்தைகளுக்கு ஞாபகசக்தியை 
		அதிகப்படுத்துவதாகச் சத்தியம் செய்த மூலிகை டானிக்கை வாங்கி கொடுத்தாள். 
		இயலாமையும், குற்ற உணர்வும், குழந்தைகளின் கல்விக்காக எதை செய்ய வேண்டும் 
		என்று தெரியாத அறியாமையில் ஆழ்ந்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்களின் 
		பிரதிநிதி அவள். அவளது பலகீனம்தான் வியாபாரியின் பலம். அரசு மற்றும் 
		தனியார் வானொலி நிலைய விளம்பரதாரரின் மூலதனம் இந்த ஏழைகளின் அறியாமைதான். 
		கல்விக் கண்ணை திறந்து வைக்கும் என்ற நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்ட டானிக் 
		குழந்தைகளின் கண்களை நிரந்தரமாக மூடியது. தனியார் வானொலி நிறுவனம் தன் 
		மனசாட்சியில் படிந்த ரத்தக் கறையை அகற்ற அந்த ஏழை தாய்க்கு வேலை தருவதாக 
		பசப்பியது. அந்த மூலிகை டானிக் கடை முதலாளியின் பெயரைக் கூட வெளியிடாமல் 
		நமது மீடியாக்கள் தங்களின் தார்மீக பத்திரிகா தர்மத்தை தற்காத்துக் கொண்டன. 
		அரசு வழக்கம் போல மௌன அஞ்சலி செலுத்தியது.
 
 சுரண்டலுக்கு எல்லாவிதத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட 
		சமூகம் இது. அரசியல்வாதி முதல் அழகு கிரீம் விற்பவன் வரை அத்தனை பேருக்கும் 
		மலேசிய இந்தியர்கள் அள்ளி வழங்குவார்கள். தன் முனைப்பு தூண்டல் பயிற்சியாக 
		இருக்கட்டும், தமிழுக்காக எடுக்கப்படும் எந்தவொரு இலக்கிய விழாவாக 
		இருக்கட்டும் அதை யார் எதற்காக செய்கின்றார்கள் என்பதை புரிந்து 
		கொண்டால்தான் அது தொண்டா? தொழிலா? என்பது புரியும்.
 
 தொண்டு போல தோற்றமளிக்கும், பணம் பண்ணும் பல செயல்பாடுகளை நாம் தினமும் 
		பார்க்கின்றோம். செய்பவனின் நோக்கம்தானே செய்யும் செயலின் உன்னதத்தை 
		தீர்மானிக்கும்.
 |  |