வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

ஒரு கண்ணோட்டம் : ரெ.கார்த்திகேசுவின் சில நாவல்கள்

த.குமாரசாமி

 

       
 

மலேசிய தமிழ் எழுத்துலகில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் மலேசிய நாவல் உலகத்திற்கு வளம் சேர்த்துள்ளது எனில் மறுக்கவியலாது. இவர் இதுவரை ஐந்து நாவல்களைப் படைத்துள்ளார். 1981ல் `வானத்து வேலிகள்’ அவருடைய முதல் நாவலாக வெளிவந்தது. தொடர்ந்து 1993ல் `தேடியிருக்கும் தருணங்கள்’ , 1998ல் `அந்திமக் காலம்’ 1997ல் `காதலினால் அல்ல’ இறுதியாக 2007ல் `சூதாட்டம் ஆடும் காலம்’ ஆகியவைகள் வெளிவந்து மலேசிய நாவல் உலகை அலங்கரித்தன எனலாம்.

ரெ.காவின் `வானத்து வேலிகள்’ குண்டான் என்ற டத்தோ குணசேகரரின் வாழ்க்கையைப் பற்றிய கதை. கருப்பண்ணன், வேலம்மா தம்பதியரின் மூத்த மகன். தோட்டக் கிராணி ஆபிரஹமைக் கொல்ல முயன்று, தப்பித்து ஒரு வழியாக முதலாளி விஸ்வலிங்கத்திடம் வேலைக்குச் சேர்கிறான். பகுதி நேரக் கல்வியும் கற்கிறான். முதலாளியின் மகள் கமலாவைக் கர்பவதியாக்கி, அடிவாங்கி திருமணம் செய்கிறான். திருமணத்திற்கு முன் சில நிபந்தனைகள் விதிக்கிறான். நிபந்தனையின் மூலம் வெளிநாட்டில் வக்கிலுக்குப் பயில்கிறான். பிறந்த தன் குழந்தைக்கு ஆனந்தன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாலும், மனைவி இல்லறத்தில் துறவரம் பூண்கிறாள்.

டத்தோ குணசேகரன் `விஸ்மா குணா` கட்டி மகிழும் வேளையில் மகன் ஆனந்தன் அமெரிக்காவிலிருந்து புற்று நோயோடு மலேசியா திரும்புகிறான். மரணத்தின் எல்லையில் இருக்கும் தருணத்தில் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்க்கிறான் . இதுதான் கதையின் சுருக்கம். இந்த நாவலில் குண்டான் என்ற டத்தோ குணசேகரன் சிறுவயதிலிருந்து பல இன்னல்களை அனுபவிக்கிறார். ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, நண்பராக எப்படி பரிணமக்கிறார் என்று கதை செல்கிறது.

நாவல் என்பது யதார்த்த உலகைச் சொல்ல வேண்டும் என்பார். மக்களுக்கு உலகில் சிறந்ததை நாவலாகத் தர வேண்டும். எனவே வாழ்க்கையின் சிறந்த பக்கங்களை இவர் மிகச் சிறப்பாக இந்நாவலில் காட்டியுள்ளார். இரண்டாவது நாவலான `தேடியிருக்கும் தருணங்கள்’ அண்மையில் மலேசியத் தொலைக்காட்சியில் `ஒட்டாத உறவுகள்’ என்ற தலைப்பில் ஒளியேறியது. முனைவர் பட்டத்திற்குப் பயிலும் சூரியமூர்த்தி அயல் நாட்டிலிருந்து மரணத்தருவாயில் இருக்கும் தன் தந்தை சாமிநாதனைக் காண வருகிறான்.

“யார் என்ன சொன்னாலும் நீ என் பிள்ளைதான்” என்று கூறி சாமிநாதன் உயிர் விடுகிறார். வீட்டில் அந்நியனாகி, தனக்குரிதானச் சொத்தும் மறுக்கப்படுகிறது. தந்தை விட்டு சென்ற கடிதம் மூலம் தான் சாமிநாதனுக்கும் செல்லம்மா என்ற பெண்மணிக்கும் பிறந்தவன் என்று அறிகிறான். ஈன்ற தாயைத் தேடிச் சென்று உண்மையை அறியும் தருணங்களே அவனுக்கு நிம்மதியளிக்கிறது; தேவையும் ஆகிறது. ரஷ்ய எழுத்தாளர் Ivan Turgenav, புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் பலர் கதைக் கருவிலிருந்து நாவலைத் தொடங்காமல் கதாபாத்திரங்களிலிருந்தே தொடங்குகிறார்கள் என்கிறார்.

இந்த `தேடியிருக்கும் தருணங்கள்’ என்ற நாவல் மேற்கண்ட கூற்றின் அமைப்பில் அமைந்துள்ளது. காதல், மனப்போராட்டம், பாசம், கடமையுணர்வு என்ற வாழ்க்கையின் கூறுகள் இந்நாவலில் உள்ளன. `அந்திம காலம்’ இவருடைய படைப்புகளில் கொஞ்சம் வசீகரம் கொண்டது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுந்தரம் தான் புற்று நோயாளி என்று அறியும் வேளையில் பெருந்துன்பமடைகிறார். யாருக்கும் தெரியாமல் தன் நோயை மறைக்க முயன்று தோல்வியடைகிறார். நோய்க்கு மருந்தாக பேரன் பரந்தாமன் வருகிறான். ஆனால் இவனும் புற்று நோய்க்கு பலியாவது சுந்தரத்தைக் குற்றுயிராக்குகிறது. மகள் ராதாவுக்கும் மருமகன் சிவமணிக்கும் ஏற்படும் குடும்பத் தகராறு, தான் இறப்பதே மேல் என்று எண்ண வைக்கிறது. நாவலின் இறுதியில் நோயிலிருந்து மீளும் வேளையில் மனைவி ஜானகி இறந்துவிடுகிறாள். நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு தனிமனிதன் தன் அந்திமக் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும், போராட்டத்தையும் மிக அழகாக சொல்கிறது கதை.

இவரது நான்காவது நாவல் `காதலினால் அல்ல’. உயர்க்கல்விக் கூடங்களில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டது. கணேசன் , அகிலா ஜோடியின் காதல் வெற்றியா, தோல்வியா என்று சொல்லிச் செல்வதே கதை. கணேசனின் அத்தை மகள் மல்லிகா, அவன் காதல் கிட்டாததால் விஷம் அருந்துகிறாள். அகிலாவின் தாய் மகளின் காதலை வெறுக்கிறாள். கல்விக்கூடத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை எப்படி தீர்கிறது? கணேசனின் இரண்டுங்கெட்டான் நிலையைக் கூறுவதே நாவலின் நோக்கமாக அமைகிறது. இந்த நான்கு நாவல்களும் பினாங்கு தீவைக் களமாகக் கொண்டு இயங்குகின்றன எனலாம். இவருடைய நாவல்கள் பினாங்குத் தீவைச் சுற்றிக் காட்டும்.

நாவல் எதற்காக என்ற கேள்வி நம்முன் எழும். இவரின் எழுத்துக்கள் போன்று மற்றவர்களின் படைப்புகளால் என்ன பயன்கள்? நாவல் என்ற படைப்புகளில் கலையுள்ளது. வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் கூறும் ஆற்றல் இந்நாவல் கலைக்கு உள்ளது. எனவே கலையின் ஒரு கூறு நாவல் எனலாம். ஒரு நாவலாசிரியர் தன் அனுபவத்தை நாவலாகக் கூறுகிறார். தன் நாவலின் வழி தத்துவம் தருவதாகவும் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறுகிறார்.

ஓர் எழுத்தாளன் சமுதாயத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கிறான், சலனங்களை ஏற்படுத்துகிறான் என்றும் மலேசிய மலாய் எழுத்தாளர் சானோன் அகமட் (Shanon Ahmad) உரைக்கிறார். ஆக, ஒரு சிறந்த நாவல் என்பது ஒரு சிறந்த தத்துவமாகும். ரெ.கா வின் அனுபவம் சமூகத்தில் தென்படும் நிறைகளையும் குறைகளையும் காட்டுகிறது. எனவே, இவருடைய நாவல்கள் காட்டும் சமூகக் கூறுகள் யாவை? குடும்பப் பிரச்சனை இவருடைய நாவல்களில் அதிகம் தென்படுகிறது. `அந்திமக் காலம்’ நாவல் குடும்ப வன்முறையைப் பிரதிபலிக்கிறது.
சுந்தரம் தன் மருமகன் சிவமணியைப் பார்த்து:

“பணம் தரவில்லைன்னு ராதாவை அடிச்சியா?”
“இல்லை கோவத்திலே அடிச்சிருப்பேன்.”
“சிகரேட் துண்டாலே சுட்டியா?”
“இல்லை தவறுதலா சுட்டிருப்பேன்.”
“இது நாகரிகமான செயலா?”

`தேடியிருக்கும் தருணத்தில்’ மகன் தாயைப் பணத்திற்காக கொல்ல முயல்வதும், `வானத்து வேலியில்’ கருப்பண்ணன் தன் மனைவி வேலம்மாவைப் பணத்திற்காக அடி வயிற்றில் உதைப்பதும், அதைக் கண்டு மகன் குண்டான் கலங்குவதும் குடும்ப வன்முறையைக் காட்டுவதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

மது, குறிப்பாக சம்சுவின் அரக்கக் கை, குடும்பங்களை வறுத்தெடுக்கும் நிலையை ரெ.கா தன் நாவல்களில் காட்டியுள்ளார். `வானத்து வேலியில்’ கருப்பண்ணன், `காதலினால் அல்ல’ கணேசனின் தந்தையும், `தேடியிருக்கும் தருணங்களில்’ செல்லம்மாவின் கணவனும் மப்புள்ள பாத்திரங்களாக வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் நம் இனத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தினாலும் கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறார்கள். போதைப் பொருளின் விளைவு பற்றி சந்திரன் கதாபாத்திரம் `தேடியிருக்கும் தருணங்கள்’ மூலம் வருகிறது.

ரெ.கா தன் கவனத்தை ஈர்த்த சம்பவங்களையெல்லாம் தேர்ந்த கதாபாத்திரங்களின் வழி உலாவ விட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கும் போலி கௌரவம், உயர்த்தர மது அருந்தும் பழக்கம், சாதியுணர்வு எல்லாம் இந்த நான்கு நாவல்களிலும் உள்ளன.

`தேடியிருக்கும் தருணங்களில்’ ஒரு பகுதி:

“இப்ப உங்க ஜாதி என்னன்னு சரியாத் தெரியாததால நான் உங்களோட நெருங்கிப் பழகுறது அப்பாவுக்கு அவ்வளவு பிடிக்கலையாம்”

“ இது ரொம்ப முட்டாள் தனமில்லையா பூங்கொடி?”

“... நீ என்ன நினைக்கிற பூங்கொடி? நான் என்ன சாதிங்கிறது உனக்கு முக்கியமா?”

“ஆமாம்” என்றாள்.

காதல் மனித வாழ்வில் இன்றியமையாதது. காதலின்றி மனித வாழ்வு அர்த்தமற்றது என்பதனைத் தெளிவு செய்ய ரெ.கா தன் நான்கு நாவல்களிலும் கையாண்டுள்ளார். `வானத்து வேலியில்’ குணசேகரன், கமலா, `தேடியிருக்கும் தருணங்களில்’ சூரியமூர்த்தி, பூங்கொடி, `காதலினால் அல்ல’ கணேசன் என்பவனை அகிலா, மல்லிகா, ஜெசிக்கா காதல்கள் விவரித்துக் கூறப்பட்டுள்ளன. காதல் செய்யும் விளைவைப் பற்றி `காதலினால் அல்ல’ நாவலில் கூறுகையில் :

“உலகத்தில் எல்லாரும் காதலிக்ககிறதல்ல! எவ்வளவு பேறு ஒழுங்கா முறையா அப்பா அம்மா பார்த்து குடுக்குற வாழ்க்கைத் துணையைக் கட்டிக்கிட்டு இருக்காங்க! அப்படி இல்லாம நமக்கு நாமே ஜோடியைத் தேடிக்கிறது கொஞ்சம் தறுதலைத் தனந்தானே!” என்று அறிவுரை தருகிறார்.

`இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதற்கொப்ப நட்பின் சிறப்பை வலியுறுத்த `வானத்து வேலிகளில்’ டத்தோ குணசேகரனுக்கு, டாக்டர் சுந்தரம், `தேடியிருக்கும் தருணத்தில்’ சூரியமூர்த்திக்கு, கிருஷ்ணன், `அந்திமக் காலத்தில்’ சுந்தரத்திற்கு, ராமா போன்றோர் நல்ல எடுத்துக்காட்டுகளாகும். `காதலினால் அல்ல’ நாவலில் கணேசனுக்குச் சீனப் பெண் ஜெசிக்கா நல்ல தோழியாகிறாள்.

நம் மலேசிய நாட்டில் ஒரு லட்சம் பேரில் முப்பத்தைந்து இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது செய்தி. தற்கொலையைப் பற்றி கூறுகையில் `காதலினால் அல்ல’ நாவலில் உள்ள மல்லிகா நல்ல உதாரணம் எனலாம். மனிதனை நல்லவனாக்குவது இலக்கியம் என்பது டால்ஸ்டாய் கூற்று. எழுத்தாளன் என்பவன் நல்ல மனோபாவத்தை உருவாக்கவும், வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் ஆற்றலும் உள்ளவன்.

காலத்தோடு இலக்கியம் மாறுகிறது. மதிப்பீடு செய்வது சிரமம். எனினும் நாவலுக்கு சில தன்மைகள் உள. இதனை எழுத்தாளர் திலீப்குமார் இவ்வாறு வகைப்படுத்துகிறார்.

அ) தீவிர அனுபவத்தைத் தத்துவமாக மாற்றுதல்
ஆ) வாழ்ந்தவர்கள் எழுதவேண்டும்.
இ) ஒவ்வொரு அத்தியாயம் ஒரு விஷயம், எல்லா அத்தியாயம் ஒரு நாவல்.
ஈ) நாவலாசிரியர் சமகாலத்தைப் பதிவு செய்வதால் வாழ்க்கையை முன் நகர்த்த வேண்டும்

மேற்கண்ட கூறுகள் யாவும் ரெ.காவின் நாவல்களில் உள; மேலும் இவருடைய நாவல்கள் வாசகனுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன எனக் கூறலாம். மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்பாக சிறுகதை, நாவல், திறனாய்வு துறைக்கு இவருடைய பங்கு அளப்பரியது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768