வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

படைப்புக்குள்ளான வாழ்வு

சீ.முத்துசாமி

 

       
 

ஒரு படைப்பாளன் தனது படைப்பு குறித்த தன்னிலை விளக்கத்தை அவ்வப்போது முன் வைப்பது இலக்கிய உலகின் ஒரு பொதுவான நடைமுறைதான். பலரும் இதை மேற்கொண்டுள்ளனர். ஒரு படைப்பை, படைப்பாளனின் கோணத்திலிருந்து அணுகி, தனது சுய அணுகளோடு அதனை ஒரு ஒப்பீடு செய்துகொள்ள அது உதவலாம். படைப்புக்குள் நுழைந்து வெளிவருவதற்கான ஒரு புது வாசலை அது திறந்து விடலாம் என்பதால் அதன் தேவை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனினும், இதுநாள்வரை எனது எந்தவொரு படைப்புக்கும் அத்தகையதொரு `வியாக்கியானத்தை’ முன் வந்து வழங்கியதில்லை என்பதோடு `குழப்புகிறது’ என்கிற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய எனது படைப்புக்கள் குறித்துகூட எத்தகைய எதிர்வினையும் நான் புரிந்ததில்லை என்பதால் எனக்கு இது புதுசுதான்.

அந்த வகையில், எனது சமீபத்திய படைப்பான `மண்புழுக்கள்’ என்னும் எனது நாவல் குறித்து கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். உண்மையில், அத்தகையதொரு எண்ணம் வர காரணமானவராக இருந்தவர் ரெ.கார்த்திகேசு அவர்கள்தான். அவர்தான் ஓரிரு முறை “நாவல் எழுதிய அனுபவத்தை எழுதுங்கேன்.. “ என்று வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சிறிய நாவல் எழுதியது பெரியதொரு அனுபவத்தை வழங்கியிராத பட்சத்தில் எதை எழுதுவது என்கிற குழப்பமும் இருந்ததால் அது குறித்து சிரத்தை எடுக்கவில்லை.

பின் ஒரு காலக்கெடுவுடன் கூடிய வேண்டுகோள். கார்த்திகேசு சார் சொன்னது மறுபடியும் எதிரில் வந்து நின்றது. `சரி, ஏன் எழுதிப் பார்க்கக் கூடாது..’என்கிற எண்ணத்தைக் கிளறிவிட்டது. எப்படி தொடங்குவது என்கிற தயக்கம் காரணமாக தள்ளிப்போட்டு வந்ததை இப்போதும் அதே தயக்கத்துடன் முயல்கிறேன்.

இதில் எனது அணுகுமுறை என்னவாக இருத்தல் வேண்டும் என்கிற கேள்வியே என்னை முதலில் எதிர்கொண்டது. தெளிவான பதில் ஏதும் இல்லாத நிலையில், அந்த பயண வழியில் ஒரு பயணியாக நான் எதிர்கொண்ட ஓரிரு அனுபவங்கள், வழிமறித்து பயணத்தை தடை செய்ய முன்னின்ற பிரச்சனைகள், அதனைக் களைய மேற்கொண்ட யத்தனங்கள் நமது நாவல் உலகம் குறித்த பொதுவான பகிர்வுகள் என வரையறுத்துக்கொண்டு, ஒரு வரைபட சிறு விவரிப்பாக முன்வைக்கிறேன்.

ஒருவகையில் பார்த்தால் அத்தகையதொரு அணுகுமுறை இன்றைய தேவையும் கூட எனத் தோன்றுகிறது. நமது இலக்கிய உலகின் கவனம் `நாவல்’என்கிற இந்த வடிவத்தின் பக்கம் திரும்பியிருப்பதற்கான அறிகுறிகள் துலக்கமாய் தெரிகிற ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம். ஓரளவேனும், ஒரு ஆரோக்கியமான இலக்கியச் சூழல் இங்கே உருவாகத் தொடங்கிவிட்டது என்பதையே இது பறைசாற்றுகிறது. குறுநாவல், நாவல் போட்டிகள் அறிவிக்கப்பட்டு, நிறைய எழுத்தாளர்கள், `மாஜி’யாகிவிட்ட பல மூத்த எழுத்தாளர்கள் உட்பட, வரிந்துகட்டி களமிறங்கி வேர்க்க விறுவிறுக்க வேலை செய்துகொண்டிருக்கும் தருணம் இது.

குறிப்பாக எழுத்தாளர் சங்கமும், ஆஸ்ட்ரோவும் கைகோர்த்து நடத்தும் நாவல் போட்டியும், தமிழ் நேசன் நாளிதழ் நடத்தும் குறுநாவல் போட்டியும் குறிப்பிடத்தக்கன. இப்போது அவர்களுடன் தோட்டத்தொழிலாளர் மலேசிய பல்கலைக்கழக இணைகளும் சேர்ந்துகொண்டுள்ளன.

அதிலும், ஆஸ்ட்ரோ வானவில்லின் `அவதாரம் ஆரம்பம்’ என்கிற மகத்தானதொரு கலாச்சார நிகழ்வு ஏக தடபுடலுடன் நடந்து முடிந்த தருணத்தில் தொடர்ச்சியாக வந்து நமது இலக்கிய உலகை கலக்கிக் கொண்டிருக்கும் அறிவிப்புக்கள். ஆஸ்ட்ரோ தெரிவு செய்த `அவதார புருஷர்களுக்கு’அது வாரி வழங்கிய தொகை மிகப் பெரியது அதனோடு ஒப்பிட இப்போது நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொகை சிறியதே. எனினும் `சாதா’ எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது, அங்கே தெரிவு செய்யப்பட்டவர்கள் `அவதார புருஷர்கள்’ என்பதை நினைவில் கொள்ள, அக்குறை முற்றிலும் விலகி ஆனந்தக் கண்ணீரில் கண்களெனும் குளங்கள் நிரம்பி வழிவதை தடுக்க இயலவில்லைதான்.

இந்நேரத்தில் நாம் பிறிதொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. `பூமிக்குச் சென்று மலேசிய தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு வாழ்நாள் முழுக்க இலவச ஊழியம் செய்யக் கடவே..’என பிரம்மனின் சாபம் பெற்று வந்த இழிபிறவிகள் இந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் என்கிற இறுமாப்போடு செயல்படும் தமிழ்ப்பத்திரிக்கைகளின் எதிர்மறை சுரண்டல் சூழலில், வேறு எத்திசையிலிருந்தும் வரும் சாதகமான சிறு செயல்பாடுகளும் திறந்த கரங்களுடன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

அதனாலேயேகூட, இது போன்ற ஊக்குவிப்புகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதும் கண்கூடு. நாவல் இலக்கிய வடிவம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு நெகிழ்வான கலை வடிவம். படைப்பாளன் கையை வீசி நாலாபுறமும் நடைபோடவும் ஆழ மூழ்கவும் விரும்பினால் எம்பிக் குதித்து தாவி ஓடவும் வகை செய்து கொடுக்கும் நுண்ணிய வகைமாதிரி இது.

ஓளரவு சிறுகதை வடிவத்துடன் அடையாளப்படுத்தப்படும் எனது இலக்கியச் செயல்பாடு எனதளவில் எனக்கு இரண்டாம்பட்சமே. எனது இயல்புக்கான வடிவமாதிரி நாவல்தான் என்பதை ஒரு காலக்கட்டத்தில் உணரமுடிந்திருக்கிறது. அதிவும் இந்த மண்புழுக்களை ஆறு மாதக் காலம் உட்கார்ந்து கிளறி கொண்டுவந்து கையில் வைத்துப் பார்த்த போது, எனது எண்ணம் சரிதான் என்பது புரிந்தது. இதனாலேயேகூட எனது சில சிறுகதைகள், ஒரு ஆழ்மன வெளிப்பாடாக, கூடுதல் சூழல் வர்ணிப்புகளுக்கு இடம் தந்திருக்கலாமோ என்கிற ஐயப்பாடும் எழுகிறது.

ஒரு நீண்ட பயணத்தில் முதலடி வைக்க, எவ்வித `அவசர’ நிர்பந்தங்களும் சூழ நின்று நெருக்காமல், ஆறு தனக்கான வழியை ஒரு இயல்பான கதியில் அமைத்துக் கொண்டு விச்ராந்தியாய் நகர்ந்து போவது போன்ற சுகம் தருவது நாவல் வடிவம் மட்டுமே என்பதை, இந்த மண்புழுக்களோடு வாழ்ந்த போதும் அனுபவப்பூர்வமாய் என்னால் உணர முடிந்திருக்கிறது. சிறுகதையிலோ, கவிதையிலோ நாம் காணும் இறுக்கம் அதில் இறுப்பதில்லை. ஒரு அகண்ட திரையை வழங்குவதன் வழி ஒரு படைப்பாளனின் கலைச் சுதந்திரத்திற்கு அது பெரிதும் ஒத்துழைப்பு நல்குகிறது என்பது உண்மையே.

வாழ்வியலின் சகல கூறுகளையும் ஒரு படைப்புக்குள் கொணர சாத்தியப்பாடு கொண்டிருப்பது அதன் கூடுதல் பலம். பல்வேறு உணர்வு தளங்களுக்கு இட்டுச் சென்று ஒரு அடர்த்திமிகுந்த அனுபவச் செறிவையும் வழங்கிவிடுவது அதன் கூடுதல் சிறப்பு எனலாம். நடைமுறையிலுள்ள, வேறெந்த இலக்கிய வடிவத்திலும் இத்தைதொரு பரிமாணம் சாத்தியப்படுமா? நாவல் வடிவத்தை நவயுக `காவியங்கள்’ என தாராளமாக வரையறுக்கலாம் என தோன்றுகிறது. அதனால்தான் என்னவோ கவியரசு வைரமுத்துவும் கள்ளிகாட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என்றெல்லாம் நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்.

எனவேதான், நம் மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் தீவிர ஈடுபாட்டை எதிர்பார்த்து அது இன்னமும் கால்கடுக்க நமது வாசலில் காத்துக் கிடக்கிறது. நமது சூழலில் இன்று வெடிப்புற பேச இயலாத பல விஷயங்களை அதன் மௌன வெளிகளில் ஒளித்து வைக்க இயலும். நாவல் வடிவத்தின் மேல் காதலும் ருசியும் கொண்டவர்கள் அநேகர் உண்டு. அவர்கள், இன்னும் தீவிர உத்வேகத்துடன் அதில் ஈடுபட வேண்டும். ஏழெட்டு பக்கங்களை இட்டு நிரப்பி, அது கதையா சிறுகதையா என்கிற வேறுபாட்டைக் கூட உணர முடியாதவர்களுக்கு இதை நான் முன்வைக்கவில்லை (அவர்கள் `பேர்’ போட்டு காலத்தை ஓட்டட்டும்..) உழைப்பின் மேல் நம்பிக்கையும், நமது இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி சார்ந்த பிரக்ஞையும் அக்கறையும் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள் உரித்தானது.

இந்த இடத்தில் , நமது இளைய தலைமுறையின் பங்களிப்பு என்னவாக இருத்தல் வேண்டும் என்கிற கேள்வியும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெரும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை ஒரு பெரும் ஆதங்கமாகவே குறிப்பிடலாம். அதிலும் குறிப்பாக நவீன இலக்கியம் குறித்த தேடலும் தீவிரமும் உடைய ஒருசிலரேனும் நாவல் வடிவம் கோறும் நேரத்தையும் உழைப்பையும் வழங்க தங்களை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இளைய தலைமுறையிடம் நான் காணும் குறைபாடு என்னவெனில் கவிதை அல்லது சிறுகதை என்கிற வடிவங்களோடு மட்டுமே தங்களை இறுகப் பிணைத்துக் கட்டிக் கொண்டு அதற்கு அப்பாலும் இயங்கும் பிற வெளிப்பாட்டு வடிவங்களில் தங்களின் படைப்பாற்றலை ஒரு பரீட்சார்த்த அடிப்படையிலேனும் முயன்று பார்க்கும் முனைப்பு இல்லாமை. அக்கறையற்ற போக்கு (இங்கே நான் விதிவிலக்குகளைப் பேசவில்லை).

ஒரு முழுமைப்பெற்ற படைப்பாளன் என்பவன் அனைத்து வடிவங்களையும் அவதானித்து உள்வாங்கும் அதே பொழுதில் அந்த வடிவங்களில் தனது படைப்பாற்றலின் எடை என்ன என்பதை ஒரு பரிட்சார்ந்த ரீதியிலேனும் முயன்று பார்த்தல் அவசியம் என நம்புகிறேன். மேலைநாடுகளில்கூட இன்று நாவல் வடிவம் பிற வடிவங்களைப் பின் தள்ளி கோலோச்ச தொடங்கிவிட்டது என்கிற உண்மையை நாமும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அங்கே சிறுகதைகளும், கவிதைகளும் இரண்டாம்பட்சமாகிவிட்டதான ஒரு நிலை. நோபல் பரிசு, பூக்கர் பரிசு போன்ற பெரிய பரிசுகளுக்கு நாவல்களே பரிசீலிக்கப்படுகின்றன என்பதை நாம் சற்றே ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

எனவே நாமும் அந்நீரோட்டத்தில் கலப்பதற்கு தயாராவோம். சரி, இனி எனது மண்புழுக்களுக்கு வருவோம். முதலில் இந்த தலைப்புக்கான பின்னணியை சொல்லிவிடுகிறேன். நாவல் முழுமைப்பெற்ற பல நாட்களுக்குப் பின்பும் அதற்கு பொருத்தமான தலைப்பு வசப்படாமல் ஏமாற்றித் திரிந்தது. ஒரு சில தலைப்புகள் பொருந்துவதாக இருந்தன. அதில் ஒன்று பிடித்தும் இருந்தது... `இனியொரு விதி செய்வோம்..’ சரி வேலை முடிந்தது என்று இருந்த வேளையில் ஒருநாள் மதியம் என்று நினைவு. வானவில்லில் ஏதோவொரு விவசாயம் சம்பந்தமான நிகழ்ச்சி. தமிழக விவசாய விஞ்ஞானி ஒருவர் உரம் தயாரிப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தார். அதில் மண்புழுக்களைப் பற்றி அவர் கூறிய ஒரு செய்தி சுவாரஸ்யமாக இருந்தது.

மண்புழுக்கள் மண்ணை உணவாகக் கொண்டு உயிர் வாழ்பவை என்கிற செய்தி எனக்குப் புதுசு. மேலும் அவை உண்டதை உரமாக மாற்றி வெளியேற்றி, அந்த மண்ணை மேலும் வளப்படுத்துகின்றன என்பதும் கூடுதலான செய்தி. மண்ணைக் கிளறி வேர்களுக்கான காற்றோட்டம் அதிகரிக்க உதவுகின்றன. இது ஒரு பக்கம். அவர் சொல்லாத செய்தியாக நான் பொருத்திப் பார்த்தது. தங்கள் பணியின் மேன்மை குறித்து பெருங்குரலில் பேசி பிறர் முன் நிற்காதவை. எவர் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்து பிற வாழ்வை வளப்படுத்துபவை. இதில் என்னை கூடுதலாய் யோசிக்க வைத்த விஷயம் அவை `வாயில்லா பூச்சிகள்.’ வலியது கையில் சிக்கி வதைபடுபவை. எதிர்த்து நின்று தாக்கி தன் இருப்பை தற்காத்துக்கொள்ளும் திராணியற்றவை.

இந்த மண்ணுக்காக உழைத்து பிறரை வளப்படுத்தி தன்னை இழந்த ஒரு சமூகத்தின் வாழ்வியலுக்கு பொருந்தி வந்த குறியீடு. 50களில் நமது தோட்டப்புற `வாழ்வியலின்’ தொகுப்பு இந்த மண்புழுக்கள் என சொல்வது பொருந்தும். வாழ்வியல் என நான் இங்கே குறிப்பது அந்த மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த அசல் விவரணைகள். அவர்களது இயலாமையின் மேல் அதிகார வர்க்கம் அன்று களிப்புடன் ஆடிய ருத்ரதாண்டவம். அது விளைவித்த வலி, துயரம். அதனைப் புரிந்துகொள்ளவோ எதிர்கொள்ளவோ திராணியற்று நொந்து நொறுங்கிப்போன எளிய மனிதர்கள். அதன் நீட்சியாய் `வலியது வாழும்’ எனும் காட்டுயிர்களின் வாழ்வியல் நெறிமுறையை அடியொட்டிய சுயநலமும் சூழ்ச்சியும் துணை சேர்த்துக் கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொண்ட ஒருசாரார். மனித உன்னதத்திற்கு சவால்விட்ட இந்த எதிர்மறை சூழலிலும், தங்களது மன ஈரத்தின் துணை கொண்டு அதனை வென்றெடுத்து மனிதநேயம் காத்த ஒருசிலர்.

இந்தக் களத்தை எனது நாவலுக்கான மையமாக தேர்வு செய்ய ஏதும் விஷேசக் காரணம் உண்டா? உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். எனது இளமைக்காலம் தொட்டு என்னுள் ஒரு கனவு போல் தொடரும் வாழ்க்கை அது. ஒவ்வொருவருக்கும் தங்களது இளமைக்கால நிகழ்வுகளின் தொகுப்பு என்பது முதல் காதலின் அழியாத பதிவுகளை ஒத்தது என்கிற ஒப்பீடுகூட பொருத்தமாகவே இருக்கும். காலத்தின் சுழற்சியில் அதன் மேல் படியும் பல்வேறு அனுபவ வண்டல்களைப் புறந்தள்ளி அது தனது இருப்பை அழியாத காட்சிப் படிமங்களாக விரித்துக் கொண்டிருக்கும்.

அந்த வாழ்வு குறித்து எனக்குள் நிகழ்ந்த அந்த `உள்வாங்கல்’ எந்த நொடியில் விழிப்புற்று இயங்கத் தொடங்கியிருக்கலாம் என்பதை பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. அந்த விதை மனசுள் விழுந்து வேர்பிடிக்கத் தொடங்கிய அந்த நொடிப்பொழுது எதுவாக இருக்கலாம்? தனது எட்டாவது வயது முதல் ஒரு மனிதன் தனது ஆளுமைக்கான அடிப்படைகளை சேகரம் செய்யத் தொடங்கி விடுகிறான் என்கிறது உளவியல். அது உண்மையெனில், எனது எட்டு வயதில் கித்தாகாட்டு வெளிகளில் ஓடியாடி சுற்றித் திரிந்த வேளையில் அந்த `சேகரம்’ தொடங்கியிருக்க வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக அந்த ஒரு கணத்தை இப்போது நினைவுகூற வைக்கிறது.

கித்தாகாடுகளின் விஷேசம் அது. வெயில் உச்சந்தலை பிளக்கும். மேகங்களற்ற வானம் வெறிச்சிட்டு விரிந்து கிடக்கும். மழை காணாத பூமி வறண்டிருக்கும். வருடத்தில் ஒருமுறை தை மாத வாக்கில் தொடங்கும் கோடைக்காலம் என்று கூட சொல்லலாம். கித்தாகாடு தனித்து தெரியும்.. ஆடைகள் ஏதுமின்றி, வெயில் கால தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க இயற்கை மேற்கொள்ளும் உத்தி என்பது புரிய நாளானது. பிறகு இலை துளிர்த்து பூத்து நிற்கும். கித்தாக்காடு தரையெங்கும் உதிர்ந்த பூக்கள் மஞ்சள் கம்பளம் விரித்திருக்கும். மணம், உயிரின் வேர்களில் அலையாய் படரும். பின் காய்த்துக் கிடக்கும். அதன் காய்களுக்குப் பிற காய்களுக்கு இல்லாத ஒரு விஷேசம் உண்டு. அது முற்றிப் பழுத்து பெரும் வெடிப்புடன் சிதறி தன் விதைகளைப் பரப்பி இனவிருத்தி செய்யும் இயல்புடையது.

அன்று நீண்ட நேரம் கித்தாகாடு நடத்திய வாண வேடிக்கையைப் பார்த்திருந்தேன். அது முதல் புள்ளி. அது முதல் எனது கண்ணும் காதும் மனதும் விழிப்புற்று இயங்கத் தொடங்கியிருக்கலாம். சூழலை உன்னிப்புடன் கவனித்து உள்வாங்கத் தொடங்கியிருக்கலாம். பன்முகப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களின் கோர்வை மனசுள் பதிவு பெற தொடங்கிவிட்ட காலகட்டம் அது எனலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு தனித்த வாழ்வியலை அமுலில் வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட சிறு சமூகத்தின் `வாழ்வியல்’ நகலெடுப்பே இந்த நாவல். அதன் பக்கங்களுள் நுழையும் எவரும் அதில் விரவிக் கிடக்கும் அந்த மண் சார்ந்த வாழ்வின் பல்வேறு இழைகளை பொறுக்கி மனசுள் பின்னலிட்டபடியே வெளியே வருவது சாத்தியமே.

ஒரு நாவலைத் தொடங்க முன்னேற்பாடாக இருக்க வேண்டியது கதைத் திட்டமும் பாத்திர வார்ப்புகளும் என்பது பொது விதி. ஆனால், இந்த நாவலை எழுதத் தொடங்கு முன் அத்தகையதான எந்தவொரு தீர்க்கமான ஏற்பாடும் என் மன வரைப்படத்தில் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், அது குறித்து நான் கவலைப்படவுமில்லை. அப்போது என் கைவசம் இருந்தது என்னவோ அந்த மண்வாழ் மனிதர்களின் துண்டுபட்ட பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமே.

அது தவிர்த்து ஒரு மரபார்ந்த நாவலுக்கான பிரதான கதைமாந்தரோ, ஓரிழையில் நகரும் `தெளிவான’ கதைப்பின்னலோ ஏதுமில்லாமல் ஒரு நாவலை எழுதி முடித்த அசட்டுத்தனம் இப்போதும் நினைக்க ஒரு விளையாட்டுபோல் தெரிகிறது. எந்தத் துணிச்சலில் மரபார்ந்த அடிப்படைக் கூற்றை புறக்கணித்து ஒரு படைப்பை முன்வைக்க இயன்றது என்பது ஒரு புதிராகவே உள்ளது. அந்தப் பிரதியை வாசித்த ஒரு நண்பரின் கூற்று இது..”இத படிக்கும்போது நாப்பது வருஷம் பின்னால போயி வீடியோ காமிராவ தூக்கிட்டு தோட்டக்காட்ல ஓடி அங்கங்க நின்னு படம் புடிச்ச மாதிரி துண்டு துண்டா இருக்கு..”

படைப்பு என்பது தனக்கான வடிவை தானே நிர்ணயம் செய்துகொள்கிறது என்பதான ஒரு கருத்து பேசப்படுவதுண்டு. இது குறித்த ஐயப்பாடுகள் நிலவியபோதிலும், அனுபவம் சார்ந்து சில தரிசனங்களைப் பெறுவது சாத்தியமே. அவ்வகையில் இந்த நாவலின் உருவாக்கத்தில், அந்தக் கூற்றில் ஏதோவொரு உண்மை இருப்பதாகவே அனுபவம் உணர்த்தியது. நாவலின் உருவாக்கத்தின் போது பிரதான பாத்திரங்கள், அவர்களை அரவணைத்துச் செல்லும் ஒரு கதைப்பின்னல் இல்லாமல் நாவலை உருவாக்குவது குறித்த ஒரு பயம் மனதில் தொடர்ந்து வந்து `நிறுத்து.. நிறுத்து’, என்று கூக்குரலிட்டபடி தொடர்ந்தது. இது சரிதானா என்கிற ஐயம் விலகாமலேயே நிழலைப் போல் தொடர்ந்தது. பலமுறையும், `இது சரிப்படாது... மாத்து...’ என்று காதில் முணுமுணுத்து தொல்லைப்படுத்தியது. ஆனாலும், அவற்றைப் புறந்தள்ளி நாவல் தான் வகுத்துக்கொண்ட பாதையை விட்டு விலகாமல் தொடர்ந்து பயணித்தது என்பதை ஒரு `தற்செயல்’ என்று என்னால் ஒதுக்க இயலவில்லை.

புத்தக உரு கொண்டிருக்கும் இந்த `மண்புழுக்கள்’ பிரதியில் ஏதேனும் மாற்றம் உண்டா என்கிற வினா எழுவது இயல்பு. நிச்சயம் உண்டு. நாவல் புத்தக உரு கொள்ளப்போகிறது என்பதை அறிந்தவுடன், மரபார்ந்த வாசகர்களை மனதில் கொண்டு ஆட்டுக்காரன் எனும் பாத்திரத்தைஓரளவு வளப்படுத்த முயன்றேன். அந்தப் பாத்திரத்துடன் ஒட்டி நகர்ந்து கதைப்பின்னலுக்கு ஒத்திசைவு தரும் துணைப்பாத்திரங்களின் வார்ப்புக்கும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டேன். அனுபவத்தில் இது சிரமமானதொரு வேலையாகவே இருந்தது. படைப்பின் தொடக்கத்திலிருந்து ஒன்றை வளர்த்தெடுத்து செல்வதற்கும் கிடைத்தது என்றே நம்புகிறேன். கதைக்குள் நுழையும் வாசகன் பிடித்துக்கொண்டு முன்னகர ஏதுவாய் ஒரு `நூலிழை’ போன்ற கதைப்பின்னல் இப்போது அதில் வந்துள்ளதாகவே படுகிறது.

நூலுரு பெறும்பொழுது, ஏற்பட்ட மற்றமோர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. `கால அமைதி’ என்பது ஒரு நாவலில் ஒரு முக்கிய கூறு. அதனிலும் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கொண்டிருக்கும் கதைக்களத்திற்குள், `காலம்’ எத்துணை விழிப்புடன் படைப்புக்குள் கையாளப்பட வேண்டும் என்பதை தெளிவாக அறிவுறுத்திய நிகழ்வு அது.

நாவலில் ஓர் இடம் வரும். அன்று தோட்டத்தில் ஒரு திருமணம். தோட்டப்புறங்களில் அப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் கிராமபோன் ரிகார்டுகளில் பாட்டு ஒலியேறும். பந்தலுக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து விடிய விடிய பாட்டு ஒலியேறும். அன்றும் பாட்டு ஒலியேறியது. அது பாலும் பழமும் படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் ஒரு பாடல். இந்த இடத்தில் காலக் குழப்பம் நிகழ்ந்துள்ளதாக நாவலை பதிப்பித்த தமிழினி நிறுவனர் திரு வசந்தகுமார் கருதினார். அதற்கு அவர் முன்னிறுத்திய காரணம், கதை நிகழும் காலமான ஐம்பதுகளில் அப்படம் வந்திருக்கவில்லை என்பதே. எனவே, சிவாஜி பாடல் நீக்கப்பட்டு பாகவதர் பாடல் உள் நுழைந்தது. ஒவ்வொரு சிறு தகவலும் நாவலின் ஆக்கத்தில் எத்தனை பெரிய பங்காற்றுகிறது என்பதை உணர வைத்த இடம் அது.

மனம் மொழியை ஊடகமாக கொள்ளும்போது இலக்கியம் பிறக்கிறது என்பதாக ஒருமுறை படித்த நினைவு. இது இலக்கியத்தின் ஊற்றுகண் எங்கிருந்து புறப்படுகிறது என்பதைச் சுட்டுவதாக இருப்பினும், ஒரு படைப்பை அதன் `மொழி’ எந்தளவு தீர்மானிக்கிறது என்பதையும் உணர்த்துவதாகக் கொள்ளலாம். மண்புழுக்கள் தனக்கான வெளிப்பாட்டு மொழியை தெரிவு செய்வதில் என்னைக் கூடுதலாகவே சிரமப்படுத்திவிட்டது எனலாம். எனக்கான ஒரு மொழியில், எனது பார்வாயின் வழியான வெளிப்பாடாக அதைத் தொடக்கி சில பக்கங்கள் எழுதி முடித்து மீள் பார்வைக்கு உட்படுத்த அதிலிருந்த நெருடல் புரிந்தது. அந்த மண்ணில் ஒட்டாத மொழியாக தன்னைத் தனிமாப்படுத்திக் கொண்டிருந்தது அது. பின் , மேலும் சில முயற்சிகள். அவையும் திருப்திபடாமல் நிகாரிப்புக்குள்ளாகின.

ஒரு கட்டத்தில் மண்டைக்குள் ஒரு தெறிப்பு. `ஒரு தோட்டப்புறத்தான் வாழ்வைச் சொல்ல நீங்களெல்லாம் யாரடா?’ என்கிற குரல். சற்று நின்று நிதானித்து யோசிக்க அதிலுள்ள நியாயம் புரிந்தது. அவர்களின் வாழ்வை அவர்களது மொழியில் முன்னிறுத்துவதே அந்த வாழ்வுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும் என பட்டது. எது நியாயம் என்பது புரிந்தாலும், அதனோடு தொடர்புடைய பிற விஷயங்களை புறந்தள்ளி முடிவெடுக்க தைரியமில்லாமல் பலநாள் குழம்ப வேண்டியதாய் ஆனது. குழப்பத்திற்கான அடிப்படை வலுவானதாக இருந்ததால், அது என்னை சாமான்யத்தில் விடுவதாகவும் இல்லை.

தோட்டப்புறத்தான் மொழி என்பது முற்றிலும் பாமர ஐனங்களின் `கொச்சை’ மொழி. அது பாசாங்கோ மேல்பூச்சோ முகமூடியோ ஏதுமற்று நம்முன் அம்மணமாய் நிற்கும். `மொழி புனிதர்களின்’ கண்களை கூச வைக்கும் இயல்பு கொண்டது. அதனை ஒரு நாவலுக்கான படைப்பு மொழியாக முன்னிறுத்துவதென்பது, வேலியில் கிடக்கும் ஓணானை பிடித்து விட்டுக் கொண்ட கதைதான். அதற்கான துணிச்சல் இல்லாத நிலை. வேறு வழியும் தெரியாத நிலையில், உள்ளுணர்வை நம்பி படைப்பை அதன் போக்குக்கு விட்டு தயக்கத்துடன் பின்தொடர்ந்தேன்.

ஒரு தோட்டப்புறத்தான் வழிநடத்த கதை அவனது மொழிக்குள் தன்னை வளர்த்துப் போனதை ஒரு வழிப்போக்கனாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தேன். இடையிடையே நின்று திரும்பிப் பார்த்தபடி தொடர்ந்தேன். பயணத்தில், ஓரிரு அத்தியாயங்கள் கடந்த நிலையில் என்று நினைக்கிறேன், தயக்கம் பறந்து போனது. மொழித் தேர்வு சரிதான் என்பதை உணர முடிந்தது. ஆனாலும் பொதுநிலையில் அதற்கான அங்கீகாரம் குறித்த பயம் தொடர்ந்தது.

இந்தக் கட்டத்தில், வேறொரு பயம் நிழலாய் தொத்திக் கொண்டது. ஒரு முழு நாவலையும் அந்த மொழியின் வளமை (கொச்சை) குறையாமல் செழுமையுடன் படைக்க இயலுமா என்கிற ஐயப்பாடு எழுந்தது. அந்த மண்ணுக்கே உரிய வட்டாரச் சொற்களை நினைவு அடுக்குகளிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். எந்த அளவு அது வசப்படும் என்பதெல்லாம் கேள்விக்குரியதாக இருந்த நிலை. அவர்களின் இயல்பான பேச்சு மொழிக்குள் லாவகமாய் அமிழ்ந்து கையகப்படுத்த வேண்டும். நல்ல வேளையாக துணைக்கு அம்மா அப்பா இருவரும் வந்தனர். கூடவே அந்த மண்ணின் மனிதர்களும் வந்தனர்.

அவர்களிடம் அந்த `கொச்சை’ மொழியின் வீச்சு கலா நேர்த்தியுடன் வெளிப்படுவதை கூடவே இருந்து ரசித்து மகிழ்ந்த தருணங்கள் அநேகம். அதிலும் அந்தத் தலைமுறை மனிதர்கள் தமிழக மண்ணிலிருந்து அவர்களின் பால்ய வயதில் தங்களது உறவுகளோடு இங்கு காலடி வைத்த கடைசி தலைமுறை எனலாம். அவர்கள் தங்கள் இளமையோடு அந்த கிராமங்களின் புழங்குச் சொற்களையும் இங்கு கொண்டு வந்திருந்தனர். அதிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் ஓரிடத்தில் கூடி உறவுகொண்டு உறவாடியபோது அவை மேலும் வளமைப் பெற்றது உண்மைதான். அவையும் எனக்கு கைகொடுத்தன.

ஒரு நாற்பதாண்டு கால இடைவெளி அதற்குண்டு. ஆனாலும் அந்தக் கால அகழ்வையும் உடைத்துக் கொண்டு அது என்னுள் அதிக பிரயாசை ஏதும் மேற்கொள்ளாமலேயே இயல்பாய் வெளிப்பட்டது ஒருவித வியப்பையும் தந்தது. சுருங்கச் சொன்னால், எனது அனுபவத்தின் சாரத்தை இப்படிச் சொல்லலாம். படைப்பின் `உள்ளுணர்வுக்கு’ வழிவிட்டு, படைப்பாளன் ஒதுங்கி அதனைப் பின்தொடர்வது ஒன்று மட்டுமே அவன் செய்யக்கூடிய உருப்படியான காரியமாக இருக்கலாம்.

இந்த நாவல் குறித்து இதுவரையிலும் எனக்கு கிடைத்த சில எதிர்வினைகளிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. இன்றைய தலைமுறை சற்றே சிரமப்பட்டே உள்வாங்க வேண்டிய படைப்புக்கான வெளிப்பாட்டு மொழியாக இருந்தாலும், இந்தப் படைப்புக்கு இயல்பாய் பொருந்தும் மொழி அதுதான் என்கிற கூற்று. நாவல் என்கிற அகண்ட பரப்பளவு கொண்ட வேற்று கிரகத்துள் குடிபெயர்ந்து ஒரு குறிப்பிட்ட காலமெனும் உடலும் உயிரும் உணர்வுமாக அதில் வாழ்ந்து மீள்வது என்பது வார்த்தைகளுக்குள் வசப்பட இயலாத ஒரு உன்னத அனுபவம்.

இதற்கு சமீபத்திய ஓர் உதாரணம் ஏர்ரி போட்டர் என்கிற மாபெரும் மாயாஜால நாவலை எழுதிய ஜே.கே.ரொவ்லிங். அவரது அனுபவம் இக்கூற்றுக்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது. அந்த தொடர் நாவல்களின் இறுதிப் பகுதியை அவர் சமீபத்தில் ஒரு ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். இறுதி வார்த்தையை நெருங்க அவருள் விவரிக்க இயலாத உணர்வு பெருக்கு ஏற்பட்டதாம். கடைசி வார்த்தையைப் பூர்த்திசெய்து முடித்த அடுத்த கணத்தில் அவை பெரு வெள்ளமாய் உடைப்பெடுத்து ஓட, அவர் உடைந்து ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதிருக்கிறார். ஒரு படைப்புக்குள்ளான வாழ்வென்பது அதுதான். அதனை முழுமையாய் விவரிக்க இயலாது. அங்கங்கு சிலதை தொட்டுப் பார்க்கலாம். அவ்வளவே அதற்குரிய சாத்தியப்பாடு.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768