|  | “நான் இங்கே இருக்கிறேன்” 
		என்றேன். எந்தவொரு ஒளிவு மறைவுமில்லை. பிறந்த மேனி. என்னைப் போல 
		பேரியற்கையும் நிர்வாணம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும். 
		துணிந்துவிட்டேன்.
 சுற்றிலும் சுடுமணல். அனல்காற்று. யாரோ கூப்பிட்டதைப்போல அவசரமாய் 
		போய்க்கொண்டிருந்தன வெண்மேகங்கள். எனக்குள் கட்டுக்கடங்காத சீற்றம். இறங்க 
		வேண்டிய மேகம் இறங்காமல் போகிறது. என்ன எகத்தாளம் ? மனம் 
		பெருங்குரலெடுத்துப் பேசியது.
 
 “இதோ, மனிதனே இல்லாத இடம் பார்த்து வந்திருக்கிறேன். படைப்பு நான். 
		படைத்தவர் நீர். இங்கு வந்தே ஆக வேண்டும். சாக்குப் போக்குக்கூடாது. 
		போக்குக்காட்டுவதும் கூடாது. காட்டினால், பிறகு என் புத்தியைக் காட்டுவேன். 
		உம்மை நம்பவே முடியாது; அதனால்தான் கோயில்களை விட்டு வந்திருக்கிறேன்..
 
 அது என்ன, என்னை கடந்து போகும்போது மட்டும் பார்த்தும் பார்க்காத பார்வை?! 
		ஊரே மழையில் நனையும்போது நட்ட நடுவில் எனக்கு மட்டும் உஷ்ணத் தகிப்பு. 
		உம்மோடு விளையாடுவதற்கு நான்தான் கிடைத்தேனா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்? 
		என்னோடு நீர் ஆடுகின்ற தொடக்க ஆட்டத்திலேயே சூது தெரிகிறது. சூழ்ச்சி மிகை. 
		வேண்டுமென்றே கவிழ்க்கிறீர். ஒரு காலை தடுக்கலாக வைத்து விழவைக்கிறீர். என் 
		தள்ளாட்டத்தை போதையேறியவனுக்கொப்பாக நையாண்டிச் செய்கிறீர். கைக்கொட்டிச் 
		சிரிக்கிறீர். சகிக்கவில்லை!
 
 உம்மைப் போல என்னையும் படைத்துவிட்டு, ஏனிப்படி வாழ்கிறாய் என்கிறீர். வேறு 
		எப்படி வாழ்வது இவ்வுலகில்? உமது விருப்பத்தின்படி வாழும்படியா 
		வைத்திருக்கிறீர் இவ்வுலகை.. புல்லோடு கூட முட்களையும் 
		வளரவிட்டிருக்கிறீர். சிற்றெறும்பை கடிக்க வைத்து தோலை வீங்கச் செய்கிறீர். 
		அட்டையை விட்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்கிறீர். சுற்றிலும் கல் வைத்து வீடு 
		கட்டிடினும் பூகம்பத்தை உருவாக்கி உடைத்து இரண்டாய் நான்காய் பிளக்கிறீர். 
		ஆழிப்பேரலையை எழும்பப் பண்ணி கோயிலை மட்டும் விட்டுவைத்து மற்ற 
		எல்லாவற்றையும் எல்லோரையும் வாரிச் சுருட்டிக்கொண்டு ஏப்பம் விட 
		வைக்கிறீர். உம்முடைய அனுமதியின்றியா இவையெல்லாம் நடக்கின்றன? என்ன ஆளய்யா 
		நீர்? மனதுருக்கத்தின் சிகரமாம், கருணையின் வடிவமாம்..ச்சே!
 
 எமக்குத் தெரிந்து உமக்கு ஏழு உலகங்கள். உமக்கே அந்த ஆசை இருப்பதனால்தானே 
		இங்கே எம்மைப்போலிருக்கும் எமகாதகர்களுக்கும் இருக்கும். தலை எப்படியோ 
		வாலும் அப்படிதானே... ஆக, இவர்களைச் சொல்லி குற்றமேயில்லை. நீர் 
		தலைவிரித்தாடுவதால் தானே இங்கேயும் தலைவிரி கோலம். உம்மிடத்தில் தான் முதல் 
		குற்றமுண்டு; எனை கூண்டிலேற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர். முதல் 
		குற்றவாளிதான் கூண்டில் நிற்கவேண்டும் என்பதுகூடவா தெரியாது உமக்கு... 
		நடிக்கிறீர், மிக நன்றாகவே நடிக்கிறீர். என் வலி, என் வேதனை, உமக்கும் 
		ஏற்பட வேண்டும். நீர் கட்டியதை உடைத்தால் உமக்கு வலிக்குமோ..சொல்லும் 
		கோனாரே சொல்லும். அதையாவது செய்கிறேன். சரி. அதைத்தான் செய்ய வேண்டும் 
		இனி...” என்றேன்.
 
 சாப்பிடாமல் கிடந்தேன் படுத்தபடி. மனதில் எவ்வித உணர்ச்சியுமற்று 
		ஞாபகங்களுமற்றிருக்க முயற்சித்தேன். சில மணி நேரங்களுக்கு மட்டும் 
		முடிந்தது. சூரியனின் நேர் பார்வையில் முதுகுத்தண்டு சுளீர் சுளீரென 
		நிமிண்டியது. வெய்யிலின் கடுமை. குப்புறப்படுத்து இரு கரங்களையும் 
		கட்டிக்கொண்டு நெற்றிக்குக் கீழே வைத்தேன். மொத்த உயிரையும் சுண்டிவிட்டது 
		போல விதைப்பையிற்குள் விண்விண்ணென்று வேதனை அதிகரிக்க திடுதிப்பென்று 
		எழுந்துக்கொண்டேன். என் உடலை வருத்திக்க என்னால் இயலவில்லை. மற்றவர்களால் 
		முடிகிறதே எப்படி?! மலைப்படிகளில் தலைகீழாக நின்றேறுவது, முதுகெங்கும் 
		கொக்கிகளைப் பதித்து தேரைக் கொண்டிழுப்பது, சிலுவையில் ஆணிகளால் 
		அறையப்படுவது எல்லாம் இயல்பாகி விட்டது எப்படி? ஒரு வேளை, நான் தவறான 
		இடத்தில் தவறான காரியத்தைச் செய்துக்கொண்டிருக்கிறேனோ...
 
 இடம் மாற்ற வேண்டும்.
 
 மிகவும் முன் எச்சரிக்கையாக நடந்தேன். மனிதர்கள் என்னை பார்த்துவிடக் 
		கூடாது. பார்த்தால் அவ்வளவுதான். சாம்பாரை சுடவைத்து 
		சட்னியாக்கிவிடுவார்கள்.சங்கிலிகளே கதியாக்கிவிடுவார்கள். துரிதமாய் 
		இயங்கினேன். கண்களுக்கெட்டிய தூரத்தில் காடு தெரிந்தது. காடுதான் உகந்தது 
		என மனதுக்குப் பட்டது. மனிதர்கள் பதித்த மண்சுவடுகள் இருந்தன. குறுகலான 
		ஒற்றையடிப் பாதை. முன்னால் கோடுபோட்டதுபோல பாதையில் நான்குசக்கரவண்டியின் 
		பதிப்பு அடையாளங்கள். அப்பாதையைவிட்டு விலகி புதர் மண்டிக் கிடந்த 
		இடங்களில் கால்வைத்து நடந்தேன். `பாம்போ, நரியோ புலியோ, சிங்கமோ யானையோ 
		வந்து என்னை விழுங்கட்டும்; சாகடிக்கட்டும். இப்படித்தான் சாகவேண்டுமென்று 
		தலையில் எந்தப் பகுதியிலாவது எழுதப்பட்டிருந்தால் அப்படியே ஆகட்டும். 
		தொலைந்துப் போகிறேன். வாழ்க்கையாம் வாழ்க்கை’ புலம்பியது மனம்.
 
 உடல் உஷ்ணம் குறைய ஆரம்பித்தது. கொளுத்தும் வெய்யிலை நெடுமரங்களும் பரந்து 
		விரிந்த கிளைகளும் மறைத்திருந்தது. எங்கெல்லாம் மேடினைப் பார்க்கின்றேனோ 
		அங்கெல்லாம் ஏறத்தொடங்கினேன். முட்செடிகள் பாதங்களையும் தொடைகளையும் பதம் 
		பார்த்ததன. ஓரிடம் வந்ததும் சகதிச்சேறு தென்பட்டது. “ஆஹ்... சகதியாவது, 
		சொதியாவது” என்றவாறே காலை ஒன்றன்பின் ஒன்றாக வைத்ததுமே `சொதக்’ கென்று 
		உள்ளிளுத்துக் கொண்டது. இடுப்பிற்குக் கீழுள்ள பாகத்தை அசைக்கக்கூட 
		முடியவில்லை.
 
 `ஓ..மாட்டிக்கொண்டேனோ..’ என்ற உணர்வை பெற்றேன். யாரையாவது கூப்பாடுப்போட்டு 
		அழைக்கலாமா என்ற எண்ணம் முளைத்ததும் வெட்டிவிட்டேன். நான் ஏன் அழைக்க 
		வேண்டும்? இதுவல்லவோ சரியான இடம். இதுதானே தக்க சமயம். வரவேண்டியவர் வர 
		வேண்டும். திட்டமிட்டு திட்டமிட்டு சதி செய்து அலைக்கழித்து சிக்க வைத்தவர் 
		வர வேண்டும். எனக்கான எல்லா கதவுகளையும் அடைத்து கண்ணா மூச்சு ஆடியவர் வர 
		வேண்டும். மனதை சுக்குநூறாக உடைத்து அழவைத்து வேடிக்கைப் பார்த்தவர் வர 
		வேண்டும். இனி ஒரு சொட்டு கண்ணீரைக்கூட விடுவதாகயில்லை. மேல் நோக்கிப் 
		பார்த்தேன். உடைப்பட்ட கண்ணாடிச் சில்லுகளாய் வானம் தெரிந்தது. 
		அடக்கமாட்டாமல் வார்த்தைகள் பொசுக்கென்று வெளிப்பட்டன.
 
 ‘கருவாய் வளர்த்தீர். உருவம் கொடுத்தீர். தாயின் வயிற்றிலிருந்து 
		வெளிப்பட்டவுடன் தலைக்கீழாய் தொங்கவைத்து அழவைத்தீர். பெயர் வைத்து 
		அழைத்தீர். அதற்குச் சம்பந்தமில்லாமலாக்கினீர். எழுத்தை அறிவித்தீர். 
		வேதங்களைத் தந்தீர். தூதர்களைக் காண்பித்தீர். அவதாரங்களை அனுப்பிவைத்தீர். 
		ஒளிவீசும் தரிசனத்தில் வந்தீர். உமது வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்களை ஒரு 
		நிமிஷத்தில் அதம் பண்ணினீர். இஷ்டம் போல எதையும் செய்வேன் என்றீர். யார் 
		என்னை கேள்வி கேட்பது என்றீர்...’
 
 உமதிஷ்டம் என்றால் இயந்திரங்களை உருவாக்கி உருட்ட வேண்டியதுதானே, ஏன் 
		இதயங்களை உருவாக்கினீர்? விசைகளை வைத்துக் கொள்வதுதானே, ஏன் மூளையையும் 
		நாவையும் வைத்தீர்? விண்கற்களோடும் கிரகங்களோடும் உமது இருப்பை 
		வைத்துக்கொள்வதுதானே, ஏன் என்னிடம் வருகிறீர்..?” மேற்கொண்டு 
		பேசமுடியாதபடிக்கு நாக்கு குழறியது. நெஞ்சுவரை அமிழ்ந்துப்போனேன்.
 
 “செத்தேனடா சாமி..” என்றபோது முன்மேட்டில் காட்டுப்பன்றி ஒன்று 
		தின்றுவிடுவதைப்போல என்னையே பார்ப்பதைக் கண்டேன். “போயும் போயும் இந்தப் 
		பன்றிக்கா இரையாகவேண்டும்..ச்சே! கேவலம் மகா கேவலம். மகா மகா கேவலம்” 
		என்றேன் தலையை ஆட்டியபடி. பன்றியும் ஆட்டியது தன் தலையை. சிரித்தேன். எல்லா 
		பற்களையும் காட்டியவாறு சத்தமிட்டு சிரித்தேன். கிளைகளில் காதலித்துக் 
		கொண்டிருந்த பறவைகள் பறந்தோடின. பன்றியிடம் என் செய்கை எடுபடவில்லை. எனை 
		சுற்றிச் சுற்றி வந்து `உர்ர்...உஸ்ஸ்..உர்ர்ர்...ஸ்ஸுஸு...’ என்றது. 
		மெதுவாக அடியெடுத்து இறங்கியது.
 
 தன்னிச்சையாக சேற்றுக்குள்ளிருந்த என் கால்கள் பின் நகர்ந்தன. “அட, இப்போது 
		முடிகிறதே..” என்றதோடு கால்களை வேகத்தோடு பின்னுக்கிழுத்து மரத்தினடி 
		தடிவேரைப் பற்றி பின்னேறினேன். பன்றி தலையைத் தூக்கிப் பார்த்து இலேசாக 
		தலையை ஆட்டியபடி வந்த வழியே போனது. வந்த வழியே நானும் போகக்கூடாது என 
		முடிவெடுத்தேன். காட்டுச்செடிகளைப் பார்த்தேன். என் ஜாதியைக் கண்ட 
		பரவசமுண்டானது. என் உயரம் வரை வளர்ந்திருந்த இலைதழைகளை விலக்கிக்கொண்டு 
		நடந்தேன். பாதைகளே காணப்படவில்லை. இருள் சூழ்ந்திருந்தது. இருட்டு ஒருவித 
		பயத்தைக் கொடுத்தது. சிறு நீரோடை ஓடும் சத்தம் கேட்டது. கண்டுபிடிக்க 
		கஷ்டப்படவில்லை. தெளிந்த நீர். மனதுக்கு இதம் கொடுத்தது. 
		முழங்கால்படியிட்டு கைகளை ஊன்றி வாய்வைத்துக் குடித்தேன். வயிறு முட்டக் 
		குடித்தேன். ஏப்பமிட்டேன். உடலை கழுவிக்கொள்ள மனம் வரவில்லை. ஓடை 
		அழுக்காகிவிடும்.
 
 நீரோடையை ஒரு தாண்டுத் தாண்டிச் சென்றேன். இருட்டு, கண்களுக்கு ஒளியைத் 
		தரவில்லை. ஓசைகள் யாவும் பறவைகளுடையதாக மட்டும் இருந்தன. சோம்பல் ஏற்பட்டு 
		மயக்கம் போல் வந்தது. பிடித்துக்கொண்டிருந்த மரத்தின் கீழுள்ள 
		தடிவேரின்மேல் தலைவைத்து படுத்தேன்.
 
 நன்றாக தூங்கிப் போனேன்.
 
 இங்கே விடியலும் இல்லை. சூரிய ஒளிக்கீற்றுமில்லை. யாருடைய தொந்தரவுமில்லை. 
		எழுப்புதல், ஏசுதல் ஏதுமில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது கால் 
		தொடையில்மேல் ஏதோ ஒன்று ஊர்ந்து வரும் சுரணை உணர்ந்தேன். கால் கங்கண்டையில் 
		வந்து ஆண்குறியின் சிறு துவாரத்திற்குள் புக முயற்சித்தது. ` அப்படியே 
		விட்டுவிடுவோமா...இப்படியே செத்துப்போவோமே. வாழ்ந்து என்ன இருக்கிறது.. 
		என்று வியாகுலத்துடன் சொன்னது மனம். `ச்சே.. ஒரு சிற்றுயுரிடமா என்னைப் 
		பலிக்கொடுப்பது..’ என்ற தொனி கேட்டதும் உதறிக்கொண்டெழுந்தேன். நாலைந்து 
		முறை குதித்து குதித்து ஒரே ஓட்டமாய் ஓடினேன். ஓடும்போது முகத்திலும் 
		கைகளிலும் முட்களின் கோரக்கீறல்கள். பொருட்படுத்தாதபடிக்கு ஓடினேன்.
 
 கல்லோ கட்டையோ, தடுக்கிவிழும் தருணத்தில் வைத்த அடி மண்ணில் பதியவில்லை. 
		“என்னடா இது..” என்ற வார்த்தை முடியுமுன்னே பொத்தென்று விழுந்து உருண்டுப் 
		புரண்டேன். எதுயெதுவோ என்னை அடித்தது, கிழித்தது, குத்தியது. எதனையும் 
		பிடிப்பதற்கு அவகாசமே இல்லாதிருந்தது. பிருஷ்டமும் குண்டிக்காய்களும் 
		இடிவாங்கியது போல விழிகள் பிதுங்கின. “முட்டாள், முட்டாள்..” என்று என் 
		மனமே என்னை ஏசியது. நான் பூண்ட நிர்வாணமே எனை நிர்கதிக்குள்ளாக்கியது. எழ 
		முற்படுகையில் கால்கள் ஆட்டங் கண்டு மீண்டும் விழ, பின் மண்டையும் 
		பிடரியும் கல்லில் மோதியபோது, “யம்மா..” என்று அலறினேன்.
 
 உடல் அங்கம் அத்தனையும் அதிர்ந்து அடங்கியது. மூச்சுப் பிடித்துக் கொண்டது. 
		ஒன்றையும் அசைக்க முடியவில்லை. இடது புருவத்திலிருந்து வடியும் இரத்தத் 
		துளிகளை துடைக்க வேண்டும் போலிருந்தது. வலது கன்னம் கிழிபட்டு 
		எரிச்சலூட்டியது. மேலுதடு சில்லு முட்களால் குத்தப்பட்டிருந்ததால் `விண் 
		விண்’ னென்று வலி கொடுத்தது. தொப்புளுக்கு மேல் சிறு குச்சி போல ஒன்று 
		பாதியாக நீட்டிக் கொண்டிருந்தது, தெரிந்தது. மற்ற இடங்களை பார்க்கும்படி 
		தலையைத் திருப்ப எத்தனித்தேன், முடியவில்லை. எங்கேயோ இரத்தம் கசிவதை 
		மட்டும் தெளிவாய் உணர முடிந்தது. உயிர் ஊசலாடுவதை நம்பத் தொடங்கினேன்.
 மனம் கடைசி கடைசியாய் என் வாழ்க்கையின் இறந்தகாலக் கட்டங்கள் சிலவற்றை 
		அவசரகதியில் காண்பிக்கத் தொடங்கியது. ஏழாவது வயதில் மரத்திலிருந்து 
		விழுந்து ஆணி புகுந்த பாதத்தை, சுருட்டை பற்ற வைத்து சூடுபோட்டு உரசவிட்ட 
		தாத்தா; பதின்ம வயதில் விபத்தில் முதுகெலும்பு உடைந்த என்னை தோளில் 
		சுமந்தோடிய அப்பா; ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு வரும் தோல் வியாதியின் போது 
		மடி தந்து தேற்றியாற்றிய அம்மா; என்னை விடுவிக்க தன் வாழ்வை பணையம் வைத்த 
		உடன்பிறப்பு; ஒன்றுமில்லாத போதும் அரவணைக்கத் துடித்த காதலி... இப்படி 
		ஒருவர் பின் ஒருவராக நிழலாட்டங்களாய் கருப்பு வெள்ளையில் வந்து சென்றனர்.
 
 வீசிய காற்றின் குளிர், நரகத் தொடுதலாய் இருந்தது. சாவின் வாடை. ஒரு மனிதனை 
		ஒரு முறை மட்டுமே வாழ அனுமதித்திருக்கும் படைத்தவனை உடனே பார்க்க வேண்டும் 
		போலிருந்தது. இரக்கம் முடிவில்லாதது; ஒவ்வொரு நாளும் கிருபை புதியதானது 
		என்றெல்லாம் வாக்குக் கொடுத்தவரின் முகத்தை பார்க்க வேண்டும். அவருக்கு 
		வேண்டாதவர்களுக்கு மட்டும் அவைகளை அள்ளி கொடுப்பார் போலிருக்கிறது. எனக்கு 
		அள்ளி கொடுக்க வேண்டாம். கிள்ளி கொடுக்கலாமே! ஒரு சொட்டு போல கருணை 
		காட்டலாமே! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பெருங்குரலெடுத்து 
		பிரசங்கிப்பேனே... தீண்டத்தகாதவனா நான்... படைத்தவனிடமேவா..!
 
 இமைகள் பாரமாய் இருந்தன, திறக்க முடியாதபடிக்கு. விழிப்பு வந்ததும் 
		கருங்குரங்கொன்று எனை எட்டி எட்டிப் பார்த்தது. தன் குரலால் `கிரீச் 
		கிரீச்’ சென்று கத்தி ஆர்ப்பரித்தது. சில நிமிடங்களுக்குள்ளாக குரங்குகளின் 
		சிறு கூட்டம் என்னைச் சுற்றி குழுமியது. குட்டிக் குரங்கொன்று என் 
		காலண்டையில் அமர்ந்து தன் கை விரலால் என் கால் பெரு விரலை அசைத்து ஆட்டிப் 
		பார்த்தது. இன்னொரு குரங்கு பழக்கொட்டையை என் தாடையில் படும்படி வீசியது. 
		அது பாறாங்கல் தாக்குதலாய் வலித்தது.
 
 அவை ஒன்றாகச் சேர்ந்து வினோத ஒலியெழுப்பிய விதம் என்னை ஆத்திரங்கொள்ளச் 
		செய்தது. என் மூளைக்கு மணி அடித்தது. துள்ளியெழுந்து ஒரு கட்டையை எடுத்து 
		சாத்து சாத்தென்று சாத்தவேண்டுமென்று தோன்றியது. பாதி திறந்திருந்த கண்களை 
		மூடிக்கொண்டேன். விழிக்கவே கூடாது என முடிவு செய்தேன். பகல் இரவாவதும் இரவு 
		பகலாவதும் அறியாதிருந்தேன்.
 
 அறியாதிருக்கும் அக்கணங்கள் மனிதனுக்கு இன்பமானவை என்று சொல்வதற்கில்லை. 
		செயலற்றிருப்பது மூளையெனில் அவன் என்பதற்குப் பதிலாக அது என்றழைப்பர். 
		முடிந்தது, இனி ஒன்றுமில்லை என்றான பின் நான் யார்? எனக்குள்ளிருந்து 
		இன்னொரு உருவம் எழும்புமா? அது என் அசலான ஆவி உடலா? அதற்கும் என் 
		மூளைக்கும் சம்பந்தம் இருக்கிறதா, இல்லையா..? போலியான இவ்வுடல் போனவுடன் 
		அசலான ஆவியுடலுக்கென்று ஒரு உலகம் படைக்கப்பட்டிருக்கின்றதா? ஆம் எனில் 
		இரண்டாம் ஜென்மத்திற்குரிய அந்த உன்னத நல்வாழ்விற்கு நான் பாத்திரக்காரனா. 
		அவ்வுலகம் எனை ஏற்கும்படி சரியானபடிக்கு இதுவரை வாழ்ந்திருக்கின்றேனா...?
 
 இதுவரையில் வாழ்ந்தோர் ஒருவராகிலும் ஒரு பாவமும் செய்யாமல் 
		ஜீவித்திருக்கிறார்களா... ஒரு பெண்ணை மனதளவில் இச்சையோடு பார்ப்பதே பாவம் 
		என்கிறதே வேதங்கள். தடினமான, கடினமான கோட்பாட்டின் போதனைகளை மனித குலம் 
		பின்பற்றக் கூடுமோ.. ஞானியும் முனிவனும் தடுமாறுகிறார்கள் எனில் நான், ஒரு 
		சாதாரணமான,ஆசாபாசங்களுள்ள வாலிபன் எம்மாத்திரம்? பத்தில் ஒன்று கோட்டை 
		விட்டால் பரவாயில்லை என்ற சலுகை விபரம் உண்டா படைத்தவனிடம்?! இருக்காது; 
		இருக்க முடியாது என்று யாராகிலும் சொல்வார்களா என மனம் ஏங்கியது. தானாய் 
		விழிப்பு உண்டானது.
 
 அடர்ந்துக் கிடந்த தலைமயிர்களுக்குள்ளே எதுவோ ஒன்று நெளிகிறது. காதுக்குள் 
		நுழைய முடியாமல் நுழையப் பார்க்கின்றது வேறொன்று. பூராணாக இருக்குமோ, 
		சந்தேகம் வலுத்தது. கண்களை திறக்க முயன்று தோல்வியுற்றேன். பசைபோல் ஒட்டிக் 
		கிடந்தன கண்ணிமைகள். இங்கேயே செத்து நாறி எலும்புக்கூடாக எஞ்சிக் கிடப்போம் 
		போல. மனக்குரல் ஒலித்தது, பலவீனமாய்.
 
 “வீடு, குடும்பம், உறவு யாவையும் விட்டு வந்தேனே. நான் காடு வந்தது 
		பயந்தாங்கொள்ளியின் அடையாளமோ.. முதிர்வயது தாய் தகப்பனை `அம்போ` வென்று 
		விட்டுவந்தது அகந்தைக்குரியதோ... பீதியில் அவர்கள் தவித்துப் போவார்களே. 
		அவர்களின் சொற்கள் நுனி முறிந்துக் கிடக்குமே... துயரத்தின் அடுக்குகளை 
		கனவு திரட்டிக் கொடுக்குமே... கீழே விழும் அவர்களின் கண்ணீர் துளிகள் 
		திரண்டு வந்து எனை சபித்திடுமோ..ஐயோ! மா பாதகனானேனே..!” குமுறல் பீறிட்டு 
		வர ஆரம்பித்தது. சிறு பிள்ளையைப் போல அழ எத்தனிக்கும்போது கன்னங்கள் 
		குண்டுக் கற்களாய் உணர்வற்றிருந்தன. கைகளும் கால்களும் மரத்துப் 
		போயிருந்தன. ஒரு கண் மூடியிருக்க ஒரு கண்ணை மட்டும் இலேசாய் திறக்க 
		முடிந்தது.
 
 சூரிய ஒளிக்கீற்றை கண்டேன். “ஆஹா..ஆஹா..” என்றது மனம். உடலுக்குள் மெல்லிய 
		சிலிர்ப்பு உண்டானது. கைவிரல்களை மட்டும் மெதுவாய் அசைக்க முடிந்தது. 
		மூத்திர வாடையடித்தது. காற்றில் சருகுகள் சில பறந்து என் மீது விழுந்தன. 
		வானத்தையே மூடும் அளவிற்கு மரங்களின் கிளைப்படரல் அதிசயம் கொடுத்தது. விலா 
		எழும்புகள் கொடுத்த வலியின் வேதனை மரண வேதனை. சித்ரவதை. கீழுதடு வறண்டு 
		தொண்டை உலர்ந்திர்ந்தது.
 
 குற்றுருயிராய் இப்படிக்கிடப்பது அவரின் திட்டமிட்டச் செயலா அல்லது நானே 
		தேடிக்கொண்டதா? அவருடைய கண்கள் இரவும் பகலுமாய் பார்த்துக் 
		கொண்டேயிருக்கும்தானே. என்னை பார்க்காதபடிக்கு முகத்தை திருபிக் கொண்டாரா 
		என்ன..? அவர் வருவதாக இல்லையா...
 
 தலை வலித்தது. நரம்புகள் படீர் படீரென்று இழுத்துவிட்டது போன்றதொரு வலி. 
		இருபக்க நெற்றியிலும் டிங் டிங் டிங் கென்று தெறிக்கும் நரம்போசை. 
		சருகுகளினூடே சலசலப்புச் சத்தத்தை செவி கேட்டது. கண்களை வலுக்கட்டாயத்தோடு 
		திறக்க, திறந்து கொண்டது திருப்தியளித்தது. காட்டினை இருள் கவ்வியிருந்தது. 
		பத்தடி தூரத்தில் பாம்புகள் இரண்டு பிண்ணிப் பிணைந்து உருண்டன. பிண்ணிப் 
		பிணைந்தவாறே மெதுவாக மேலெலும்பின. குச்சிபோல நின்று பிறகு பொத்தென்று 
		விழுந்தன. ஒன்று வேகமாக ஓடுவதுபோல பாவனைக்காட்டி ஊர்ந்தது. இன்னொன்று 
		வெகுசுலபமாய் அதனை அடைந்து தன்னோடு பிணைத்துக்கொண்டது. அதன் உருவ 
		நீளத்தைக்கண்டு குலை நடுங்கியது. இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. 
		என்னிடம் வந்தால் நான் `அபேஸ்’ தான். பாம்புகள் கலவிக்கொள்ளும் 
		இந்நேரத்தில் நான் தப்பிப்பதே உசிதம் என்றெண்ணினேன்.
 
 இடது செவிப்பறையினுள் குடைந்துச்செல்லும் வலியுண்டானது. வலி கொடுக்கும் 
		ஒவ்வொரு உடலுறுப்புகளையும் வெட்டி வீச வேண்டும் போலிருந்தது. இனியும் 
		தாங்காது என முடிவெடுத்து உடலை ஒரு பக்கமாக சாய்த்தேன். முடிந்தது. உடலை 
		நகர்த்தினேன். கால் பெருவிரலிரண்டும் மண்ணைத் தள்ளின. திரும்பி 
		பாம்புகளையும் பார்த்துக்கொண்டேன். அவை கலவியின் கிறக்கத்தில் கிடந்தன.
 
 வயிற்றில் நீட்டிக்கொண்டிருந்த குச்சியைப் பிடுங்கி எறிந்து மன வெறிக் 
		கொண்டு வேக வேகமாய் உடலை நகர்த்தி முன்னேறினேன். மண் பாதை ஒன்று 
		தென்பட்டது, மங்கலான நிலவொளியில். அதனை அடைந்ததும் நிலவை மேகத்திரள் 
		மூடிக்கொண்டது. ஒருக்களித்துக் கொண்டேன். “இங்கேயும் வந்துவிட்டால் என்ன 
		செய்வது..” மனம் அலட்டிக் கொண்டது. உடலை நகர்த்த சுலபமாய் இருந்தது. ஈரமான 
		சேறான களிமண்பாதை. கைகளுக்கு அசதி ஏற்படும்வரை உடலை நகர்த்தி ஊர்ந்தேன். 
		களைப்படைந்த நிலையில், மல்லாக்க உடலை திருப்பிக் கொண்டேன்.
 
 அந்த நேரத்திற்காக காத்திருந்ததுபோல நெற்றியைக் குறிப்பார்த்து `பொட்’ 
		டென்று போட்டது ஆலங்கட்டி. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல 
		திடப்பொருள் உடனே திரவமானது. `இதுதானே கூடாதுங்கிறது...’ என்று முணு 
		முணுத்தவாறே முதுகுப்புறத்தைக் காட்டினேன் வானத்திற்கு. “இனி என்ன வேணாலும் 
		செய்துக்கோ..” என்றேன். பின்பக்கம், வானத்து அடிகளை தாறுமாறாக 
		வாங்கிக்கட்டிக் கொண்டது. வானம் சோர்ந்து போய் துளிகளைத் தந்து நின்றது.
 
 இருட்டுக் காடு மெல்ல மெல்ல விடியலை உள் அனுமதித்தது. ஏதோ எனை நோக்கி 
		வருவதைப் போன்று மனதிற்குள் அருவிக்கொண்டிருந்தது. ஒன்றும் காணோம். உச்சி 
		வெயில் வந்து மண்ணையும் என்னையும் வாட்டி வதக்கி விட்டுச் சென்றது. ஆவி 
		மேலெலும்பும் பிரம்மை. பாதி வரை உயர எழும்பி தடாலென்று விழுவது 
		போன்றிருந்தது.
 
 நாயொன்று குறைக்கும் ஓசை வர வர அருகில் கேட்டது. கழுத்தை திருப்பிப் 
		பார்த்தேன். வந்தடைந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டே குரைப்பதை 
		அதிகப்படுத்தியது. என் தொண்டைக்குழலை நக்கியது. மீண்டும் குரைத்தது. மனித 
		உருவம் ஒன்று ஓடி வருவதைக் கண்டேன். தன் தோளில் வைத்திருந்த மூங்கில்களை 
		கீழே போட்டுவிட்டு என் தலையை ஏந்திக் கொண்டபோது உற்றுப்பார்த்தேன்.
 
 என்னைப் போன்று மாநிறமுள்ளவள். சீவாத காய்ந்த கூந்தல். சப்பை மூக்குக்காரி. 
		என் கன்னங்களிலும் மற்ற இடங்களிலும் குத்தப்பட்டிருந்தவைகளையும், 
		ஒட்டிக் கொண்டிருந்தவைகளையும், ஊர்ந்துக் கொண்டிருந்தவைகளையும் பரிவின்றிப் 
		பிடுங்கி எடுத்து எறிந்துக்கொண்டிருந்தாள். குழிவிழுந்திருந்த அவள் 
		கண்களில் இரக்கமில்லை. “இவள் எதற்காக மெனக்கெட்டு எனக்கு உதவி செய்கிறாள்” 
		என்ற கேள்வி உதித்தது. சில வார்த்தைகளைப் பேசியவளின் மொழி, எனக்கு 
		புரியவில்லை. தொள தொளவென்றிருந்த அவளின் ஆடை உடலுக்கேற்றதாகயில்லை. 
		கிழிசலும், பொத்தலுமான அழுக்கேறிய ஆடையினூடே முலைகளிரெண்டும் தெரிந்தன. 
		இடது தோளில் காயங்களின் தழும்புகள். தன் வலது முலைக்கருகே என் முகத்தை 
		கொண்டு வந்து அதன் காம்பைப் பிடித்து பாலை பீய்ச்சியடித்தாள், என் 
		கண்களுக்கு நேராக.
 
 வடிந்த பாலை தன் விரல்களால் கன்னமிரண்டிலும் அழுந்தத் தடவினாள். பிறகு, 
		அனாயசமாக எனை இடது தோளில் தூக்கிச் சுமந்துக் கொண்டாள். காத்திருந்தாற்போல 
		நாய் முன்னோடியது. மூங்கில்களை சுமந்தோடுவதுபோல கண்டபடி ஓடினாள். மெல்லிய 
		வெண்ணிறாடை தரித்த, இரக்கம் நிறைந்த, வலிக்காமல் ஏந்திச் செல்லும் ஒரு 
		தேவதையை எதிர்ப்பார்த்திருந்தேன்...
 |  |