வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

சிறுகதை

 

துளிர்

யுவராஜன்

 

       
 

சங்கத்து ரூமிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுக்கும்போது, கொடியில் காயப்போட்டிருந்த முனியம்மாளின் கைலியில் முகம் மோதியது. பழைய சாமான் வாசனை நாசியைத் தாக்கியது. கூரையை ஊடுருவிய வெயிலின் வெப்பத்தை நெற்றியில் உணர முடிந்தது. மணி மூன்று இருக்கும். நாளைக்குப் போகலாமே என்று மனம் சோர்ந்தது. ஏற்கனவே சமையல் சாமான்களெல்லாம் தீர்ந்து விட்டதாக முனியம்மா நேற்றே சொன்னாள். `பெலாஞ்சா’ அதற்கு முன் தினமே வாங்கியாகிவிட்டது. தோட்டத்து சீனக்கடையில் சாமான்கள் வாங்கினால் மீத பத்து நாட்களை சமாளிக்க முடியாது. கோலகெட்டில் `தை சோங்’ கடையில் வாங்கினால் இருக்கின்ற நூறில் இருபதை சேமிக்கலாம், கைச்செலவுக்கு. ஒருமுறை மீண்டும் பணப்பை பாக்கெட்டில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன்.

நான்கு உதைகளுக்குப் பிறகு முனகி கொண்டே உயிர்த்தெழுந்தது மோட்டார்சைக்கிள் வழக்கம்போலவே. சத்தம் கேட்டு வெளியே சிரித்த முகத்தோடு வந்தாள் முனியம்மாள். கன்னத்தில் இரு பக்கமும் குழி விழுவது அழகாக இருந்தது. நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்க ஆசை முகிழ்த்தது.”சமையல் சாமான் மட்டும் வாங்குங்க போதும்” என்று சொல்லிவிட்டு `கவனம்’ என்பதைக் கண்களால் சொன்னாள்.

ஆயா கொட்டகையைத் தாண்டியது ஞாபகமில்லை. துரை ஆபிஸைத் தாண்டிக் கொண்டிருந்தேன். `ஸ்கள்புரோ தோட்ட அலுவலகம்’ என ஆங்கிலத்தில் பெயர் பலகை பச்சையும் வெள்ளையுமாய் வெயில் பட்டு மினுங்கி கொண்டிருந்தது. தோட்டத்து பால் ஏற்றும் லோரி, செம்மண் புழுதியை எழுப்பிக் கொண்டே தூரத்தில் செல்வது தெரிந்தது. தோட்டத்தை நீங்கி ரப்பர் மரக்காட்டை ஊடுருவிய சாலையில் மோட்டார் சைக்கிள் நுழைய ஆரம்பித்திருந்தது. சாலையில் இருமருங்கிலும் உள்ள ரப்பர் மரங்களின் கிளைப்பகுதிகள் இணைந்து, தங்களுக்குள் அன்பைப் பறிமாறிக்கொண்டிருந்தன.

மரங்கள் தந்த அரைகுறை நிழல், வெப்பத்தால் கனன்று கொண்டிருந்த உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருந்தன. `தட், தட்’ என்று அவ்வப்போது ரப்பர் கொட்டைகள் விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இலையுதிர் காலமாதலால், உதிர்ந்த பழுத்த இலைகள் சாலையெங்கும் பரவிக் கிடந்தன.மோட்டார் சைக்கிளைச் சற்று நிறுத்தினேன். இலைகளை இழந்து மூளியாய் நிற்கின்ற மரங்களை ஊடுருவிய வெயிலும், கிளைகளின் நிழலும் ஒன்றுடன் ஒன்றினைந்து செம்மண் சாலையில் கறுப்பும் சிவப்புமாய் கோலமிட்டதுப்போல நிழல் காட்சி, மனதுக்கு உவப்பாக இருந்தது.

நிமிர்ந்து ரப்பர் மரங்களைப் பார்த்தபோது மீண்டும் இலைகள் துளிர்விட தொடங்கியிருப்பதைக் காண முடிந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், இதேப்போன்ற ஓர் இலையுதிர் காலத்தில், தை சோங் கடைக்குச் செல்லும் வழியில், சைக்கிளை நிறுத்தி, பின்னால் அமர்ந்திருந்த என்னிடம் துளிர்க்க ஆரம்பித்த இலைகளைக் காட்டி அப்பா பரவசப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. இன்னும் ஒரு மாதத்தில் பால் பழையபடி நிறைய வடியும் என்று சொல்லிக் குதூகலப்பட்டார். இலையுதிர்கால ஆரம்பத்தில், இலைகளைப் போலவே அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியும் உதிரத் தொடங்கும்.

இலை மீண்டும் துளிர்விடும் காலங்களில், சாயந்திர வேளைகளிலும் தீம்பாருக்குச் சென்று அந்த காட்சியை ரசிப்பதைப் பொழுதுபோக்காக கொண்டிருந்தார். இவ்வருடமும் இலையுதிர்கால ஆரம்பத்தில் அப்பா இருந்தார். இலை துளிர்த்ததை ரசிக்கத்தான் அப்பா இல்லை.

மோட்டார் சைக்கிளை மீண்டும் முடுக்கினேன். `கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.’ மௌனத்தை துறந்து வாய் திடீரென்று முனகியது. அப்பா எப்பொழுதும் சொல்லும் செய்யுல்களில் ஒன்று. தோட்டத்து பெரிசுகள் எதையாவது சொல்வதற்கு முன் ஒரு பழமொழி சொல்வார்கள். `அறுக்கமாட்டாதவன் சூத்துல அம்பத்தெட்டு அருவா’, தான் சொன்ன வேலையை யாராவது ஒழுங்காக செய்யாவிட்டால் பக்கத்து வீட்டு அன்னம்மா கிழவி இந்த பழமொழி சொல்லி ஏசும்.

அப்பா இவர்களைப் போல் பழமொழி சொல்லாமல் ஏதாவது செய்யுள் சொல்வார். அப்பா இந்தியாவிலேயே ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு இராமாயணம், மகாபாரதம், திருமுறை, பாரதி, பாரதிதாசன் எல்லாம் சிறுவயதிலிருந்தே பரிச்சயம். மலாயாவிற்கு வந்த பிறகும் கூட அவர் வாசிப்பு குறையவில்லை. தமிழ் முரசு, தமிழ் நேசன் எல்லாம் வாங்கிப் படிப்பார். அப்பாவிற்கு கொஞ்சம் ஆங்கிலம் கூட தெரியும்.

அப்பாதான் தோட்டத்து யூனியன் லீடர். தோட்ட துண்டாடலின் போது, துன் சம்பந்தனை தோட்டத்திற்கு வரவழைத்து, ஆளுக்கு பத்து ரிங்கிட் திரட்டி தந்ததில் அப்பாவின் பங்கு கணிசமானது. “டேய், உங்கப்பா அற்புதமா தமிழ் பேசுவாண்டா, தோட்டத்தில யாருக்காவது ஒண்ணுன்னா அவன்தான் முன்னுக்கு நிப்பான், நீயும் இருக்கியே”, அன்னம்மா கிழவி அடிக்கடி சொல்லும்போதெல்லாம் மனம் உடைந்து ரணமாகிவிடும். நான் ஏன் அப்பாவை போல திறமைசாலியாக இல்லை என்ற கேள்வி என்னை அடிக்கடி அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.

அம்மா கட்டுவிரியன் கடித்து இறந்த போது எனக்கு மூன்று வயது இருக்குமாம். தீம்பார் பாசாவில் அவர் நீலம் பூத்து இறந்து கிடந்த காட்சியை, அன்னம்மா கிழவி அழுதுக்கொண்டே ஒப்பாரி வைக்கும்போதெல்லாம், அப்பா கேட்டால் உடனே வீட்டினுள் சென்று விடுவார். எனக்கு அம்மாவின் உடல் வாசனை என்ன, முகம் கூட ஞாபகத்தில் இல்லை. அப்பா அம்மாவின் திருமணப்படத்தை, அம்மாவின் நினைவு கிளறும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. அம்மாவின் இழப்பை நான் பெரிதாக உணராதவாறு அப்பா என்னை வளர்த்ததை இன்னும் தோட்டத்தில் உள்ளவர்கள் ஆச்சரியத்தோடு புருவமுயர்த்திச் சொல்வதுண்டு.

பலர் வற்புறுத்தியும் மறுமணம் பற்றிய பேச்சையெல்லாம் புன்னகையாலேயே புறந்தள்ளிவிடுவாராம். எனக்குஎல்லாமே அப்போது புதுமையாக இருந்தது. பக்கத்து வீட்டு ராஜம்மா அக்கா செய்யும் வேலையெல்லாம் அப்பா எங்கள் வீட்டில் செய்தார். சமைப்பது, துணிதுவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, எனக்கு சோறு ஊட்டி விடுவது, இன்னும் இன்னும் .அன்றாடம் தூங்குவதற்கு முன், அப்பா ஏதாவது செய்யுள் சொல்வார். செய்யுள் சொல்லும் போது, அப்பா ஏதோ வேற்று மொழியில் பேசுவது போலிருக்கும்.

பிறகு விளக்கம் சொல்வார். அப்பா எப்போதும் அதிகமாக உணர்வை வெளி காட்டமாட்டார். சிரிப்பு, கோபம், அழுகை என எந்த உணர்வும் அளவாகத்தான் அவரிடமிருந்து வெளிப்படும். முக்கியமாக அவர் அழுது நான் பார்த்ததில்லை.

`நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி- எனை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ....’

தொடர்ந்து பாடாமல் உடைந்து அழுதது மட்டும் பிடுங்க இயலாத அம்பாய் மனதைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. அன்றுதான் நான் எல். சி.யி. இல் தோல்வி கண்டிருந்தேன்.

`போம், போம்’ என லாரி ஹோர்ன் சத்தம் கேட்டுதான் `பத்து செம்பிலானிற்கு’ வந்து விட்டதை உணர முடிந்தது. இனி இங்கிருந்து கோலா கெட்டிலுக்கு தார் ரோடுதான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் கோலா கெட்டிலை அடைந்து விடலாம். அப்பாவால் எனக்கு எத்தனை பெருமை. பெரியண்ணன் மகன் என்றாலே என் முதுகில் தட்டிக் கொடுத்து மரியாதையாகப் பேசுவார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் கூட சிறப்பாக கவனிப்பார்கள். அப்பா சொல்லும் செய்யுளையெல்லாம் மனனம் செய்ய முடிந்த எனக்கு, பள்ளிப் பாடங்கள் உவர்ப்பாக மாறியது ஏனோ..?

சமத்தரை நதியாய், இயல்பான ஓட்டத்தோடு தமிழ் என்னில் நிறைந்தது. ஆங்கிலமும், மலாயும் எனக்கு எட்டா கனியாகவே இருந்தன. எல்.சி.யி. இல் பல முறை முயன்றும் மலாய் மொழியில் தேர்ச்சி பெறவே முடியவில்லை. எல்லா அப்பாமார்களைப்போல், அப்பாவும் நான் தவறு செய்யும் போதெல்லாம் என்னைக் கண்டித்திருக்கலாம்; தண்டித்திருக்லாம்.. ஏதாவது தவறு செய்துவிட்டால் என்னை ஆழமாக ஊடுருவி பார்ப்பார். அதில் ஆழ்ந்த ஏமாற்றம் தெரியும். மனதளவில் மிகவும் நெருங்கியிருந்தாலும், பேச்சளவில் எதிர் எதிர் துருவமாய் நகர ஆரம்பித்திருந்தோம்.

ஒன்றிரண்டு சொல்லும் முனியம்மாவைத் திருமணம் செய்த பிறகு அறவே இல்லாமல் போய்விட்டது. அப்பாவிடம் எவ்வளவோ பேச மனது துடிக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் பேசுகின்ற ஆவல், மனக்கடல் அலையாய் எழும்பி, தொண்டையில் வேகமாய் பயணித்து, நாக்கின் நுனியை அடையும் போது உலர்ந்து விடும். அப்பா இப்படி செய்திருக்கவேண்டாம்.

தை சோங் கடைக்கு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் கடையின் முன்புறத்திலேயே சாமான் கட்டிக் கொண்டிருந்த `தை சிங்’ “வாங்கண்ணே” என்று சிரித்த முகத்தோடு வரவேற்றான். அவன் கையில் பெரிய வெங்காயம் ஒரு சிவப்பு பையில். முன்பெல்லாம் அப்பாவோடு வரும் போது தை சிங்கின் அப்பா தை சோங் கல்லாவில் இருப்பார். இப்போது நான் வருகிறேன், தை சிங் கல்லாவில் இருக்கிறான். தமிழர்களோடு பழகிப் பழகி அவன் அருமையாகத் தமிழ் பேசுகிறான்.

“என்னாண்ணே, இன்னும் வருத்தமாத்தான் இருக்கீங்களா, பிறந்தா ஒரு நாள் எல்லாரும் போய்த்தான் ஆகணும்!” நான் லேசாக சிரித்ததில் விரக்தி இருந்தது. சாமான் பட்டியலைத் தந்தேன். இலையுதிர்கால தேவைக்கென்று எப்போதும் முன்கூட்டியே பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வதுண்டு. இம்முறையும் சேர்த்து வைத்திருந்தேன். எப்போதும் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து குளித்து விடும் அப்பா, அன்று இன்னும் எழுந்திருக்கவில்லை என்று மரம் சீவிவிட்டு வீட்டுக்கு வந்த என்னிடம் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கும் போதே அன்னம்மா கிழவி சொன்னார். “அப்பா, அப்பா” என்று கூப்பிட்டு எழுந்திருக்காத போதே மனம் துணுக்குற்றது. இடது தோளைத் தொட்டு எழுப்பியபோது தலை வலது புறமாக சாய்ந்தது. முகம் வெளிரியிருந்தது.

அப்பாவின் சவ அடக்கத்தின்போது “இந்த நேரத்துல போய்ட்டாரே” என்று மக்கள் பேசிக்கொண்டது என் மனதின் பிரதிபலிப்பாக இருந்ததை எண்ணி, இன்னும் என்னாலேயே என்னை மன்னிக்க முடியவில்லை. அப்பாவுக்கு நான் எப்போதும் நல்ல மகனாக இருந்ததில்லை, அவரது சவ அடக்கத்திலும் கூட. “எல்லா சாமான்களையும் கட்டிட்டேண்ண! ரொம்ப குறைவா சாமான் எடுக்கறீங்க, வேணும்னா கூட எடுத்துகுங்க, பணம் பிறகு தாங்கண்ணே!” தை சிங்கை நினைத்தால் பெருமையாக இருந்தது. “பரவால சிங், சமாளிச்சிடுவேன், அடுத்த மாதம் பார்ப்போம்”. “அண்ணே, நீங்களும் உங்கப்பா மாதிரிதான், கடன் வாங்க மாட்றீங்க,” சிங் சொன்னான். விம்மி வந்த பூரிப்பின் போது, மனக்கண்ணில் துளிர்த்த ரப்பர் இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768