வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

தொடர்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம்! - (2)

 

 

 

சுங்கைப்பட்டாணி எனுமொரு அழகிய சிற்றூரும்
நமது இழப்புகள் குறித்த துக்கமும்

சீ.முத்துசாமி

 

       
 

அலாவுதின் முனியாண்டியின் வழிகாட்டுதலில், ஏ.எம்.ராஜாவைத் தொடர்ந்து அறிமுகமானார், அவரது காதல் மனைவி ஜிக்கி.

தோட்டப்புற மாலை நேரக் காட்சி என்பது ஓர் அற்புத அகண்ட திரையில் தீட்டப்பட்ட ஓவியம். மதிய வெயிலில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த குச்சிக்காடு உயிர்த்தெழும் பொழுது அது. அதன் பின்னணியில் மெலிதாய் ஊசலாட்டம் போட்டு குச்சிக்காட்டு காற்றில் கசிந்தோடி வரும் ரேடியோவிலிருந்து `ரங்காயான் மேரா` வழங்கிய மயக்கும் மாலை கானங்கள்.

அதில் பெரும்பாலான சமயங்களில் தவறாமல் வருவார் ஜிக்கி. போதை ஏற்றும் சிருங்காரக் குரலில் வரும், `மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா...’ எங்கிருந்தாலும் பாட்டு முடியும் வரை காதைத் தீட்டி வைத்துக் கேட்க வைத்த தேவ கானம் அது. மாலைநேர மயக்கும் அழகின் சகல பரிமாணங்களும் ஒன்றுசேர காற்றில் அலைந்த குரல்.

இன்னொருவர் பாணிக்கிரகி (அல்லது வேறு ஒரு பாடகரா?) என்று நினைக்கிறேன். மிகச் சில பாடல்களையே அவர் பாடியுள்ளதாக அலாவுதின் முனியாண்டி சொன்னதாக நினைவு. அதிலும், ஒரு பாடல் என்னை முழுமையாய் ஆக்கிரமித்திருந்தது. எதிர்பாராத கணத்தில் முகத்தில் வந்து மோதிச் சிலிர்க்கச் செய்யும் குளிர் காற்று போல, இன்றும் நினைவடுக்குகளில் உறங்கிக் கிடந்து தன்னிச்சையாய் விழித்தெழுந்து மனக் கதவைத் தட்டித் திறந்து முணுமுணுக்க வைக்கும் பாடல் அது.

மூன்று வரிகளுக்கு மேல் நினைவில் இல்லை. அதிலும் கூட இரண்டாவது வரியில் வரும் ஒரு சொல் குறித்து சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனாலும், அது ஒரு குறையாகப் படவில்லை. காரணம், அரைகுறையாக நினைவிலிருக்கும், அந்த மூன்று வரிகளுக்குள்ளுமே அந்தப் பாடலின் முழு ஜீவனுமே அமுங்கி பம்மிக் கொண்டிருப்பதான ஓர் எண்ணம் எப்போதுமே உண்டு. அதிலும், அந்த மூன்றாவது வரியின் இறுதியில், ஒரு சின்ன இடைவெளியில், மனதைக் கட்டியிழுத்து சற்றே நிறுத்தி வைத்து, ஏதோ ஒரு வாத்தியக் கருவி தன்னந் தனியாய் நின்று குழைவதைக் கேட்க மனதை அந்தரத்தில் மிதக்கவிட்டு தத்தளிக்க வைத்துவிடும்.

இப்போதெல்லாம் மனம் இலவம் பஞ்சாய் லேசாகி மிதக்கும் பொழுதுகள் ரொம்பவும் அரிதாகவே நிகழ்கின்றன. அண்ணாந்து பார்க்க, ஒளிக்கீற்றுகள் விரவிப் படர்ந்த வானத்து வெளியின் வெளிர்நீல பரப்பில் அலையடித்து உருண்டோ டி வரும் ஒத்தை வெண் மேகத் துண்டைப் பார்க்க கிடைக்கும் ஒரு தருணமாக இருக்கலாம் அது.

அவ்வேளைகளில், ஒவ்வொரு முறையும் தவறாமல், உதடுகள் தன்னிச்சையாய் முணுமுணுக்கத் தொடங்கிவிடுகிறது, அந்த ஒரு பாடலை மட்டுமே...

`கண் காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ...
என் வாழ்வின் இன்ப கீத (ரூபம்?) நீயோ?
இன்பம் காண்பாயோ? காணாத இன்பம் காண்பாயோ?’

தோட்டப்புறத்தில் இரவு நேரம் என்பது ஒரு `கலைடஸ்கோப்’ கலவைக் கலர் உலகம்.

இருளும் ஒளியும் நிழலாட்டம் காட்டும் ஒருவகை `கொலாஜ்’ உலகம் அது என்று கூடச் சொல்லலாம். பகல் நேரத்தின் இரைச்சலும் ஒளியும் இரவின் நிசப்தமும் இருளும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஒரு புது உலகம். அல்லூர்க்கரையில் குத்துக்கால் போட்டு மனக்கட்டையில் உட்கார்ந்து கதை பேசியபடி தீட்டுக்கல்லை தண்ணீரில் முக்கியெடுத்து கத்தி தீட்டும் மனிதர்கள். கள்ளும், சீனனின் ஈ குச்சாய் பட்டை சாராயமும் கொடுத்த மயக்கத்தில் வெளிப் ப்ராஞ்சாவில் உட்கார்ந்து வம்பு பேசும் ஆண்கள். பிள்ளைக் குட்டிகளை வசை பாடி வம்புக்கிழுக்கும் அப்பன்கள். பொஞ்சாதியின் சிண்டுமயிரை பிடித்திழுத்து வந்து நடைபாதையில் தள்ளி, ஊரே வேடிக்கைப் பார்க்க, ’இத்தன நேரம் எவங்கூட போய் தேட்ட போட்டு ஆடிட்டு வரடி... சொல்லுடி... உங்கம்மால...’ என்று வதை படலம் தொடங்கி தாண்டவமாடும் குடிமகன்களின் ஆரவார வசை.

இது எதுவுமே தன்னைத் தொட்டுத் தீண்ட முடியாத, தனக்கு மட்டுமே உரித்தான தொலைதூர மோனப் பிரதேசத்தில் உலவியபடி, லயத்து தொங்கல் வீட்டு அஞ்சடி ப்ராஞ்சாவில் கரிய புகை உமிழும் மண்ணெண்ணெய் விளக்கின் நுனியில் காற்றில் அசைந்தாடும் தீச்சுடரில் பார்வை நிலைகுத்த, காலை நீட்டிப் போட்டு முகத்தில் மகனை இழந்த துயரம் மிதக்க உட்கார்ந்து கிடக்கும், பல் போன கெங்கம்மா கிழவியின் தாளம் பிசகாத நேரம் தவறாது வெத்தலை உரல் எழுப்பும் நங் நங் ஒப்பாரியில் அப்பிக் கிடக்கும் சோகம் மனதை உருக்கும்.

உத்திரத்திலிருந்து தொங்கும் பழைய புடவைத் தொட்டில். அல்லது கயிற்றில் சுருக்கிட்ட நிலையில் கைலித் தொட்டில். நின்றபடி, கால்நோவ கைநோவ தொட்டிலை ஆட்டிக் குழந்தைகளைத் தூங்க வைக்க படாதபாடுபடும் அம்மாமார்கள். முயற்சி தோற்றுப்போக, கால்களைத் தொட்டிலுக்கு வெளியில் தொங்கவிட்டு உதைத்து வீல் வீலென அலறும் குழந்தைகள். வீட்டு முன்பிருக்கும் உதிரி நிலம். அதில் பாக்கார் வேலி பிடித்த கொல்லைகள். கோழிக்கூண்டுகள். ஆட்டுக் கொட்டாய்கள். அதில் தொடரும் சலசலப்பு. வம்பு செய்யும் கோழிகளின் தொணதொணப்பு. பெட்டையைத் துரத்தும் கெடாக்காளின் காமக் குரல். அதன் துரத்தலில் அதிரும் கொட்டகை. அதனுடன் போட்டிக்கு நின்று, வீட்டுக் கூரைகளில் ஏறி உட்கார்ந்து பெட்டைக்கு அடிக்குரலில் விடாமல் காமக்குரல் கொடுக்கும் கெடா பூனைகள்.

பேயைக் கண்ட நாய்கள் சுடுகாட்டு முச்சந்தியில் நின்று, வானத்தைப் பார்த்து ஊளையிடும். பயங்காட்டும். ஏதோவொரு இராக் குருவியின் இடைவெளியில்லாத ஏக்கக் குரலுடன் சேர்ந்து கித்தாக்காட்டு இருளில் கரைந்தோடி வந்து லயத்துக்காட்டை வளைய வரும் சில் வண்டுகளின் இடைவெளியற்ற ரீங்காரமும். ஆந்தை ஒன்றின் யாமம் தாண்டியும் தொடரும் அலறல்.

ஏதோ ஒரு புள்ளியில் இவை அத்தனையும் சங்கமித்து ஒடுங்க, தோட்டம் நிசப்தமாகிவிடும்.

இத்தனை நேரமும் இந்த நிசப்த இடைவெளிக்காய் காத்திருந்தது போலிருக்கும் அடுத்து வருவது. அலாவுதின் முனியாண்டியின் மெல்லிய குரல் அறைக்குள் வளைய வரும். கைகள் மேசை மேல் தாளம் போடும். கண்கள் மூடிக் கிடக்கும்.

ஸ்ரீதர் என்கிற மகத்தான கலைஞர் தமிழ்த் திரையுலகைக் கோலோச்சத் தொடங்கியிருந்த காலம் அது.

கல்யாணப் பரிசு படம் வந்து ஊரையே கலக்கிக் கொண்டிருந்தது. டனால் தங்கவேலுவின் அவுட்டா தர்பாரில் தியேட்டரே கலகலத்தது. அதிலும் அந்த எழுத்தாளர் பைரவனாக அவர் பண்ணிய கலாட்டா நகைச்சுவையின் உச்சம். நல்ல நகைச்சுவைக்கான உரைகல்லாக இன்றும் பேசப்படுகிறது. இன்னொரு பக்கம் முக்கோணக் காதலின் ரணகளம். ஜெமினி இந்தப் பக்கமும் அந்தப் பக்கத்தில் அக்கா தங்கைகளான விஜயகுமாரியும் சரோஜா தேவியும். கடைசிக் காட்சியில் `காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்...’ என்கிற அசரீரி பாடல் பின்தொடர, தூரத்து ஒளியுள் மெல்ல கரைந்து மறைந்து போகும் ஜெமினியின் சோகம்... அட, இப்போது நினைத்தாலும் நெஞ்சுள் ஏதோ உருள்கிறது.

எங்கள் தோட்டத்திலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து மைல் தொலைவிலிருந்த சுங்கைப்பட்டாணிக்குப் போக வேண்டும் புதுப் படம் பார்க்க.

சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுங்கைப்பட்டாணி வேறு. இன்றிருக்கும் சுங்கைப்பட்டாணி வேறு. அன்று இன்றிருப்பது போன்ற பரபரப்போ, ஆரவாரமோ ஏதுமில்லாத மிக அமைதியான சிறிய அழகான ஊராகவே இதனை அறிந்திருந்தோம். சுற்றுவட்டாரத்தில் பசுமை நிறைந்த தோட்டப்புறங்கள். கம்பக்காடுகளில் பச்சைப் பட்டுக் கம்பளி விரவிக் கிடந்த வயல்வெளிகள். மாசுபடாத நீர்நிலைகள். அங்கிருந்து வரும் தூய்மையான காற்று. இனங்களுக்கிடையே பொய்மைக் கலவாத நிஜமான அன்பு, நல்லெண்ணம், நேசம். மேம்பாட்டுத் திட்டங்கள் என்கிற பெயரில் பூமியை மனிதர்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி சீரழிக்கத் தொடங்கியிராத பொற்காலம். மாசுபடாத இயற்கைச் சூழலில் மனிதர்கள் இயல்பான ஓர் எளிய வாழ்க்கையை வாழ்ந்தனர்.

மையப் பகுதியில், விரல் விட்டே எண்ணி விடும் அளவிலான கடைவீடுகள். வாகனங்களின் சந்தடி அதிகமில்லாத சாலைகள். நீண்ட இடைவெளியில் எப்போதேனும் சாவதானமாய் கடந்து போகும் பழைய மோரிஸ் மைனர். மோட்டார் சைக்கிள். கூட வருபவருடன் கதைபேசியபடி சைக்கிளை உருட்டிப் போகும் மனிதர்கள். பதற்றமில்லாமல் துணைக்கு வருபவருடன் ஓரிரு வார்த்தைப் பேசிச் சிரித்து நகர்ந்து போகிற இளவட்டங்கள்.

வடக்கில் அலோர்ஸ்டாரிலிருந்து புறப்பட்டு வந்து, பினாங்கு பார்த்து ஓடும் ஜாலான் இப்ராகிம் (மணிக்கூண்டு சாலை). போலீஸ் ஸ்டேசனையொட்டிய முச்சந்தியில், அதனோடு கிழக்கிலிருந்து வந்து இணையும் ஜாலான் கோலக்கெட்டில். சுப்பிரமணியர் கோயில் முச்சந்தியில் தொடங்கி எதிர்திசையில் வடக்காய் ஓடும் ஜாலான் சிகரட் அல்லது புக்கான் லாமா. அதில் இடப்புறமிருந்த பலகையால் ஆன கடைவீடுகள். அங்கே தரையில் கால்களை மடக்கிப் போட்டு மேசை முன் உட்கார்ந்து பொன் ஆபரணங்கள் செய்த ஆசாரிகள். சீனரின் கோப்பிக்கடை ஒன்று. நடுமத்தியில் இருந்தது மணியம் முடிதிருத்தும் நிலையம். அதிலிருந்து சதா கிளம்பி ரோடு வரை வரும் வெடிச் சிரிப்பும் கிண்டலும் கேலியும்.

இந்திய அரசியலும் தமிழ்ச் சினிமாவும் விரிவான அலசலுக்கு உட்படுத்தப்பட்ட இடம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். முடிவெட்டிக் கொண்டிருப்போரிடம் சன்னமான குரலில் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வேலையைப் பார்ப்பது மணியத்தின் இயல்பு. நாலடிக்கும் சற்றே கூடுதல் உயரம். சிவந்த நிறம். சற்றே தூக்கலான வெற்றிலைக் காவியேறிய பற்கள். சிரித்த முகம். அதில் அகண்ட பிரேம் கண்ணாடி. தனிப்பட்ட நல விசாரிப்பில் தொடங்கி குடும்பம் வேலை, நாட்டு நடப்பு என்றெல்லாம் பேச்சு விரிந்து கொண்டே போகும். மாதம் ஒருமுறை முடிவெட்ட போய் தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்த நாட்களில் இந்தியன் மூவி நியூஸ் கையிலிருக்கும். அடிக்கடி சினிமா கேள்விகள் கேட்ட சிலபேரை அப்போது கவனத்தில் வைத்திருந்தேன். இப்போது குறிப்பிடலாமென்று யோசித்துப்பார்க்க, அவர்களில் ஒருவர்கூட தட்டுப்படவில்லை.

இந்தக் கடைவீடுகளுக்குப் பின்புறம் சிதறிக் கிடந்தன அத்தாப்புக் குடிசைகள். உலகின் புராதன தொழிலான விபச்சாரம் மையமிட்டிருந்த இடம். எங்கப்பா போய்ட்டு வரன்னு யாராவது எதேச்சையாய்க் கேட்க, புக்கான் லாமாக்கு என்று யாதார்த்தமாய் சொல்லும் பதிலும் எதிர் தரப்பிடமிருந்து, ஒரு நமுட்டுச் சிரிப்பை இப்போதும் வரவழைத்துவிடுகிறதை பார்க்க முடிகிறது.

கோயில் வளாகத்திலிருந்து கூத்துக் கொட்டகை. தைப்பூச நாட்களில் வள்ளி தெய்வானை நாடகம் விடிய விடிய நடக்கும். மற்ற நாட்களில் அது பள்ளி. இப்போது பங்காளி கம்பத்தினருகில் இடம்பெயர்ந்துவிட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி அப்போது அந்தக் கூத்துக் கொட்டகையில்தான் முகாமிட்டிருந்தது. அதற்கும் முன்பு இப்போதைய டெலிகம்ஸ் ஆபீஸ் இருக்குமிடத்தில் ஒரு கீத்துக்கொட்டகையில் அதன் ஜாகை இருந்ததாக விபரம் அறிந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கூத்துக்கொட்டகை பள்ளி ஒரு காற்றோட்டமான திறந்தவெளி போலவே இருந்தது. பக்கவாட்டில் தடுப்புச்சுவர் ஏதுமில்லாமல் மேலே தகரக் கூரையும், தரை முடிகிற இடம் தொடங்கி ஒரு மூன்றடி உயர மேடையுடன் கூடிய அமைப்பு. தூக்கி நகர்த்தும்படியான வசதியுடன் குறுக்குத் தடுப்புகள் வகுப்பறைகளைப் பிரித்தன.

நுழைவாசலுக்கு வலதுபுறமாக இருந்தது கோயில் ஐயரின் குடியிருப்பு. அதில் எங்களில் சிலர் ஏதோ காரணத்துக்காக ஒருமுறை நுழைய முயன்று ஐயரால் வாசலுக்கு வெளியே தடுத்துநிறுத்தப்பட்ட அனுபவம் மனப்பதிவில் இன்றும் நிறம் மங்காமலிருக்கிறது. அதற்கும் சற்றே உள்வாங்கிய நிலையில் அரசமரத்தடி பிள்ளையார். அவருக்குப் பக்கமே நின்ற கூண்டுகளில் உட்கார்ந்து சதா சலசலத்துக் கொண்டிருக்கும் மாடப்புறாக்கள். உள்ளங்கை அகல வாசலில் வந்து நின்று இன்னும் முடி வளர்ந்திராத இறக்கையடித்து வாயைப் பிளந்து அம்மாவிடம் தீனி கேட்கும் குஞ்சுகள். அதற்குச் சமாதானம் சொல்லி இரையெடுத்து வர மீண்டும் கடைத்தெருவைத் தேடியோடும் அம்மாக்கள். அவை மேலே கிளம்பி கோயில் கோபுரத்தைக் கடந்து, சிறகு விரித்து நீலவானின் கீழே கூட்டமாக `ஸ்லோ மோசனில்ஒ கடைத்தெருக்களை வட்டமடித்து இரை தேடி பின் மெல்ல தரையிறங்கும் அழகு `அடடா` போட வைக்கும்.

புறாக் கூண்டருகிலிருந்து பார்க்க நீண்டு வளைந்தோடும் உப்பு ஆறு. கடல்பெருக்கின்போது நீர் பெருகவும் பின் வடிந்தும் இருநிலைகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த நீரோட்டம். அதன் கரை நெடுக கண்கள் எட்டிய தூரம் நீப்பா மரங்கள், வேர்களை நீருக்கு மேலே தூக்கிப் பிடித்து அடர்ந்த பச்சையில் நெருக்கி நின்று நிழல் பரப்பும் சதுப்புநில காண்டாக்காடு. சற்றே கீழ் நகர, நீப்பா மரங்கள். அதில் மறைந்திருந்து பாடும் பறவைகள். நீரில் குட்டி முதலை போல் நாக்கைத் துருத்தி நீந்தித் திரியும் நீர் உடும்புகள், கருநிற நீர்நாய்கள் (நீருக்குள் சரேலென மூழ்கி மறைந்து நீந்திச் சென்று வேறோரிடத்தில் நீரின் பரப்பை உடைத்து வெளிவரும் அதன் கூரிய முகமும் பெரிய கண்களும் நீண்டு துருத்தி நிற்கும் அழகிய மீசையும் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. என்ன ஆனது? நீரில் தூய்மைக்கேட்டுக்கு அவையும் பலி. வேறென்ன?)

நீர் வடிய காத்திருந்து காண்டா மரங்களுக்கிடையில் புகுந்து காண்டா நண்டுகளுக்குப் பறி வைக்கும் நண்டுக்காரர். விஷப் பாம்புகள் நிறைந்த காண்டாக்காடு. இருமுறை பாம்பு தீண்டியும், விடாப்பிடியாய் நண்டுக்கு பறி வைக்கும் தைரியம். தைரியம் என்பதைவிடவும், அவர் பாஷையில், `வேறென்ன பண்றது? எல்லாம் பொழப்புதான்’. கூத்து மேடைக்கு வெகு நெருக்கத்தில், வேலித் தடுப்புக்கு அந்தப்புறமிருந்த பன்றிக் கொட்டகை. அதிலிருந்து அவ்வப்போது வரும் படிக்கும் பிள்ளைகளின் கவனத்தைக் கலைத்த பன்றிகளின் கிரீச்சிடும் அலறல். மூக்கைச் சுழிக்க வைக்கும் கழிவுகளின் துர்நாற்றம். (நீண்ட கால போராட்டத்தின் பிறகு, மிகச் சமீபத்தில் இது அகற்றப்பட அதன் `பெருமையில்’ பங்குகொள்ள இங்கு மீண்டும் ஒரு போராட்டம் வெடித்தது.)

அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது சித்தப்பா வீடு. கம்பத்து வீடு. அப்பாவின் இரண்டாவது தம்பி. பள்ளி பக்கமே இருந்த காரணத்தை முன்னிட்டு நடந்த ஏற்பாடு. தங்கிப் படிக்க நல்ல வசதி. சுங்கைலாயாரிலிருந்த கூர்க்கா கேம்பில் வேலையிலிருந்தார் சித்தப்பா. அன்றைய பொழுதில் நம்மவர்கள் பலர் அங்கு வேலை பார்த்தனர். பெரும்பாலும் சமையல் பகுதியில் உதவியாளர்களாக. சித்தப்பாவோடு வேலை பார்த்த சந்தனம் என்பவரும் பக்கத்து வீட்டிலிருந்து நினைவுக்கு வருகிறது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் பல காலமாக சிறப்புப் பிரிவாக இருந்தது நேப்பாள கூர்க்கா படைப்பிரிவு. இன்றும் இருக்கிறது. போர்களத்தில் அவர்கள் வெளிப்படுத்திய அசாதாரண துணிச்சலைப் பார்த்த பிரிட்டிஷார் அவர்களுக்குக் கொடுத்த முன்னுரிமை அது. அதில் ஒரு படைப்பிரிவுதான் சுங்கைப்பட்டாணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்போது. இந்துக்களான அவர்கள் நம்மவர்களோடு நெருங்கி உறவாடினர். அவர்கள் அன்று எழுப்பி வழிபட்ட துர்க்கை அம்மன் கோயில் இன்றும் அந்த மிலிட்டரி கேம்ப் வளாகத்துள் உள்ளது. இன்றும், நம்மவர்களால் இரண்டுகால பூஜை, வருடாந்திர திருவிழாக்களோடு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் நினைவிலிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நீள கறுப்புநிற கால்சட்டை, வெள்ளை முழுக்கைச் சட்டை, பளபளக்கும் கருநிற கால்பூட்ஸ், கழுத்துப் பட்டை சகிதம் சைக்கிளை மிதித்து ஊருக்குள் படையெடுத்து வருவார்கள். சிறுசிறு குழுக்களாக மொட்டை வெயிலில் சுற்றித் திரிவார்கள். பொழுது சாயும் வரை அவர்கள் ராஜ்ஜியம்தான். அன்று ஒருநாள் புக்கான் லாமா அத்தாப்புக் குடிசைகள் அமர்களப்படும்.

ஐந்தாம் ஆறாம் வகுப்புகளை முடித்தது கோயில் பள்ளியில்தான். டேனியல் அம்மா வகுப்பு வாத்தியார். முகத்திலும் குரலிலும் மிகுந்த மென்மையும் வாஞ்சையும் ஒட்டுறவாடிய அற்புத ஜீவன். அவர் வெள்ளைப் புடவையைத் தவிர வேறெதும் உடுத்தி பார்த்த நினைவில்லை. பெக்கான் அத்தாப்பில் குடியிருந்தார். மேக்கடை வீடு. கறுப்பு நிறத்தில் மிக நீளமாக இருந்த நினைவு. வெள்ளைப் புடவைக்காரம்மா என்கிற ஒரு அம்மாவும் இருந்தார். அவர் வேறு . அவர் குணத்தில் டேனியல் அம்மாவுக்கு நேர் எதிர். பார்வையாலேயே மிரட்டுவார். குரலில் கடுமை தொனிக்கும். காலஞ்சென்ற அமரர் தருமலிங்கம் கட்டொழுங்கு ஆசிரியர். இன்னும் ஆசிரியர்கள் முனுசாமி, சின்னையா போன்றவர்களும் இருந்தனர்.

நடேசன் என்பவர் பெரிய வாத்தியாராக இருந்தார். பெருத்த சரீரம். அகண்ட வயிறு. இடுப்பில் நிற்க சிரமப்படும் சிலுவார். ரோத்தானை தூக்கிக்கொண்டு அவர் வகுப்புக்குள் நுழையும்போது சப்த நாடியும் அடங்கிவிடும். அவரை விடவும் அவரது வாகனம் விஷேசம். மெலிந்த தேகம். சைக்கிளைவிட கொஞ்சம் பராவாயில்லையென்று சொல்லும் ரகம். இரண்டு விதமாகவும் பயன்படும் வசதி. எண்ணெய் நிரப்பி, சாவி போட்டு ஸ்டார்ட் செய்தும் ஓடலாம். தேவையானால், சைக்கிளைப் போல் மிதித்தும் போகலாம்.

கோயில் வாசலுக்கு சற்றே தள்ளி இடதுபுறத்தில் கடைவீடுகள்.

கடைகளையொட்டி ஐஸ் ஸ்டால்கள். இருபது காசு கொடுத்தால், பத்துக் காசுக்கு அருமையான ஜஸ்கச்சானும் பத்துக் காசுக்கு பழ ரோஜாவும் கிடைக்கும். அதையடுத்து, இரண்டு வாசல் தள்ளி வீரப்பிள்ளை வங்சாகடை. ஒரு இடைவெளிவிட்டு, சுமார் பத்துக் கடைகள் தாண்டி வந்தது ராமசாமி கடை. அதன் எதிரே பழனிச்சாமி வங்சாகடை. சற்றே கீழிறங்க ராமசாமி கடையொட்டிய வரிசையில் மேட்டில் இருந்தது புக்கான் லாமா மார்க்கெட். அதன் பக்கமே தூங்குமூஞ்சி மரமொன்று. அதன் நிழலில் சுற்றுவட்டார தோட்டப்புறங்களில் பேர்போன கள்ளுக்கடை. அங்கிருந்து கீழிறங்க இரண்டு ஒட்டுக் கடைகள். அதில் ஒன்று முத்தையா கடை. இன்று அதன் எதிரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் வேர் விட்டிருக்கும் `முத்தையா அன்ட் சன்ஸ்’ அவருடைய வாரிசுகள்தான்.

நன்றாக நினைவிருக்கிறது. குட்டை உருவம், மாநிறம், அரைக்கை பனியன், மடித்துக் கட்டிய வேட்டி, வாயில் புகையும் அரைச் சுருட்டு. சாலையில் போவோர் எவரையும் இழுத்து வைத்து கதை பேசும் கலகலப்பு. வெத்தலை பாக்கு சுண்ணாம்பு கோரைச்சாப் சுருட்டுக்கு அப்பா அங்குதான் போய் நிற்பார். பேசி முடித்துக் கிளம்ப அரை மணியாகும். அங்கிருந்து மேற்கு திசை திரும்ப, தெரியும் தூங்குமூஞ்சி மரமொன்று. அதற்கு சற்றே முன்பு வலதுபுறத்தில் இன்னுமொரு மரம். அதனடியில் ஒரு மலையாள நாயரின் ஒட்டுக் கடையும் அதன் எதிரே இன்னொரு ஒட்டுக்கடைகூட இருந்த நினைவு. கோலெட் மணியம் கடை என்று சொல்வார்கள். எங்கள் தோட்டத்திற்கு ஓடிய யு.டி.சி பஸ்சில் அவர்தான் டிக்கெட் கொடுப்பார். அதனால் வந்த காரணப்பெயர். அதற்கு சற்றே உள்வாங்கிய நிலையில் கால்நடை மருத்துவமனை. அதன்பின்புறம் சிறிய சீனர் காய்கறிக் கொல்லை. அதனையொட்டி, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே, பெரிய மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் போக ஜனங்கள் புழங்கிய ஒத்தையடிப் பாதை.

ஒட்டுக்கடைகளைத் தாண்டி ரயில்வே கேட். பக்கமே நிற்கும் கேட் கீப்பருக்கான ஓட்டு வீடு. ரோட்டுக்கு அந்தப்புறம் ஒரு வரிசை ரயில்வே குவாட்டர்ஸ். அதனையொட்டி வடக்கு தெற்காய் நீண்டு ஓடும் தண்டவாளம். கேட்டுக்கு இருநூறு மீட்டர் தள்ளி இருந்தது ரயில்வே ஸ்டேசன். கேட்டைக் கடக்க இடது வாட்டத்தில் போலீஸ் ஸ்டேசன். அதனையொட்டி இடதுபுறமே நடக்க வரும் உப்புத் தண்ணி ஆறு. அதனைக் கடக்க ஒரு பாலம். ஆற்றை ஒட்டி சாலைக்கு இந்தப் புறமாகத்தான் இருந்தது அன்றைய பெரிய மார்க்கெட்.

சாலைக்கு அந்தப்புறத்தில் இருந்தது பஸ் ஸ்டாண்ட். ஆற்று ஓரமே, பினாங்குச் செல்லும் சாலையில், பாலத்தோரம் இருந்தது. குண்டும் குழியும் நிறைந்த முகத் தோற்றம். எஞ்சினை ஓடவிட்டு புகையைக் கக்கி செம்மண்ணும் புழுதியுமாய் நிற்கும் லொட லொட பஸ்கள். கூடாரத்திலிருந்து சதா ஒலிக்கும் அறிவுப்புகள். பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து ஓடும் மனிதர்கள். வெயில் காலங்களில் பஸ்கள் வருவதும் போவதுமாய் தூசு பறந்தபடி இருக்கும். மழைநாளில் நீர் தேங்கி நிற்கும். சற்று ஏமாந்தால் முடிந்தது. நீரை வாரி இறைத்துப் போகும் ஏதோ ஒரு பஸ். சுற்றுப்புறத் தோட்டங்களுக்கான அனைத்து பஸ்களும் வந்து போகுமிடம்.

காலை ஏழு மணிக்கு உயிர்தெழுந்து, பொழுது அமரும் வரை சனச் சந்தடியில் மனிதர்களின் கூச்சலும் வாகனங்களின் இரைச்சலுமாய் இயக்கம் கொண்டிருக்கும். இந்த அமைதியான பட்டணத்தில், எப்போதுமே மிகுந்த பரபரப்புடன் இயங்கியபடி இருந்த ஒரு பகுதி அதுவாகத்தானிருந்தது. இதற்கு அடுத்த நிலையில் எதிர்புறமிருந்த மார்க்கெட்டைச் சொல்லலாம்.

பிற இடங்களின் இயக்கம் ஒரு சீரான மந்தகதியில் இருந்ததாகவே நினைவிருக்கிறது.

அதிலும், மணிக்கூண்டு கடைத்தெருவில் எப்பவுமே ஓர் அலாதி அமைதியும் உயிர்ப்பும் நிலவும். தொடக்கம், சீனர் கோப்பிக்கடை. அத்தகைய கடைகளுக்கே உரித்தான அமைப்பு. பழமை மாறாத மரநாற்காலி மேசை. உட்கார்ந்தால் சற்றே ஆட்டம் கொடுக்கும். அதில் காலை எட்டுக்கெல்லாம் பேப்பரும் கையுமாக ஒரு கோப்பி” சகிதம் ஒரு கூட்டம் சேர்ந்திருக்கும். வீட்டு புரோக்கர், நில புரோக்கர்களின் தினசரி சங்கமம் நிகழும் இடம். ஈக்கான் ராமசாமிக்கு ராசியான இடம் என்று பேசப்பட்டது. நிறைய நிலப் பேரங்களை அவர் அங்கு உட்கார்ந்தபடியே வெற்றிகரமாக முடித்ததாக இன்றும் சொல்வார்கள். அடுத்து மருதன் பேப்பர் ஸ்டால். மொத்த விநியோகஸ்தர். முண்டா பனியனும், அரைக்கால் காக்கிச் சிலுவாரும், மூக்குக் கண்ணாடியும் கலகலப்பான பேச்சும் கொண்டவர். பொது விஷயங்களில் ஆர்வமுள்ளவர். அதனாலேயே அங்கு எப்போதுமே ஒரு கூட்டமிருக்கும். அதில் ஓசி பேப்பர் படிக்கும் கஞ்சப் பிரபுகளும் அடக்கம். அடுத்து ஒரு மலையாள நாயருக்குச் சொந்தமான ஒரு மருந்தகம். அதன் மேல்மாடியில் அப்போது பிரபலமாக விளங்கிய டாக்டர் மாத்தன் கிளினிக். இரண்டு கடைகள் தள்ளி இன்னுமொரு புக் ஸ்டால்.(பெயர் நினைவில்லை)

அப்போது, அந்தத் தெருவில், வட்டித் தொழில் செய்துவந்த செட்டிமார்களும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்திருந்தனர். அங்கிருந்த பெரும்பாலான கடைவீடுகளும் அவர்களின் சொத்தாகவே இருந்தன. பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது என்று கடை எண்களைக் குறிப்பிட்டே அப்போது அவற்றை அடையாளம் சொல்லும் வழக்கமிருந்தது. கிட்டங்கி என்ற சிறப்புப் பெயரும் அவற்றுக்கு இருந்தது. பிறந்த ஊரின் தொடர்பை அறுத்துக் கொள்ளாத செட்டிமார்கள். பிள்ளைக்குட்டிகள் ஊரிலிருக்க அவர்கள் இங்கே சம்பாத்தியம் பண்ணிக் கொண்டிருந்தனர். அனைவருமே காலியாட்கள். சிறு குழுவாக இந்தக் கிட்டங்கிகளில் வாழ்ந்தனர். கிட்டங்கிச் சமையலும் அப்போது பிரசித்தம். பதினேழிலோ பதினெட்டிலோ பின்புற வழியாகச் சென்று சாப்பிட்ட நினைவுண்டு.

பஸ் ஸ்டேசன் வளாகத்துடன் ஒப்பிடுகையில் இந்தக் கிட்டங்கியின் சூழல் மிகவும் வேறுபட்டதாகவே இருந்துள்ளது. அதிலும் அந்தக் கிட்டங்கிகளில் நிலவிய அமைதியும் தூய்மையும் எவரையும் பொறாமை கொள்ள வைக்கும் தரத்திலிருந்தது. குறிப்பாக, காலை நேரங்களில் இதமான வெயில் படர்ந்த சாலையில் நடந்தபடி, அதனைக் கடக்குந்தோறும் உள்ளிருந்து வரும் ஊதுவத்தி மணம் மனதை இறகால் வருடும்.

சற்றே நின்று திரும்பி நடைபாதையில் நாலடி வைத்து, உள்ளே எட்டிப் பார்த்த தருணங்கள் உண்டு.

ஒரு பக்கம் சுவருடன் அணைந்து இரண்டடி உயர சிமெண்ட் மேடை. அதில் வரிசையாய், மிகச் சரியான இடைவெளியில் இருக்கும் சிறு பெட்டி போன்ற மேசைகள். அதன் மேல் மிக நேர்த்தியாய் அடுக்கப்பட்ட தடித்த அட்டைக் கொண்ட கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் லாவகமாய் கால்களை மடக்கி சப்பலாங்கால் போட்டு உட்கார்ந்திருக்கும் தூய வெள்ளை முண்டா பனியன், வேட்டி அணிந்து , நெற்றி நிறைய திருநூறும், அதன் கீழ் பெரிய பிரேம் வெள்ளெழுத்து கண்ணாடி மூக்கு நுனியில் நிற்க, குனிந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்க்கும் உருவங்கள்.

பஸ் ஸ்டாண்டின் முனையில் இருந்தது ஒரு நீண்ட வரிசை அங்காடி கடைகள். அத்தனையும் சீனர்களின் கொய்த்தியோ சூப் கடைகள். அதில் ஒன்று எங்களிடையே மிகப் பிரசித்தம். அங்கே குடித்த சூப்புகள் மிக ருசியாய் இருந்ததாக நினைவு. அதன் பின்புறம் ஒரு வரிசை `முரா ஜூவால்’ கடைகள். அதில்தான் ஒஸ்மான் துணிக்கடையும் இருந்தது. தோட்டப்புற ஜனங்களுக்கு நியாய விலையில் துணுமணிகளை விற்ற பாகிஸ்தான் முஸ்லிம் வங்காளி.

சற்றே தள்ளி ஒதுக்கமாய் நின்றிருந்தது காதர் புக் ஸ்டால். பெயருக்குத்தான் புக் ஸ்டால். புத்தகங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. அப்போதெல்லாம் சினிமா பாடல்கள் சிறு சிறு கையேடு போல் வரும். அது அங்கே கிடைக்கும். சினிமா உலகின் ஆபாசங்களை வியாபாரச் சரக்காக்கி பிழைப்பு நடத்திய தமிழக ஏற்றுமதி, மஞ்சள் பத்திரிகைகள். சில ஆண் பெண் உறவை கொச்சைப்படுத்தி காசு பண்ணிய செக்ஸ் புத்தகங்கள்.

ஆனால் அதற்கும் நடுவே சில நல்லதும் இருந்தது என்பதுதான் விஷேசம். அங்குதான் அப்போதைய தன்முனைப்புத் தூண்டல் தளபதி தமிழ்வாணனைக் கண்டுபிடித்தேன். கருப்புக் கண்ணாடியில் வெள்ளைத் தொப்பி தலையை அலங்கரிக்க `கல்கண்டு’ இதழில் கம்பீரமாய் போஸ் கொடுத்தபடி கம்பியில் தொங்கிக் கொண்டிருப்பார். அவரைத் தொடர்ந்து அறிமுகமானவர்தான் கேள்வி பதிலின் நாயகன், துக்ளக் சோ.

மொழியின் வசிகரம் எனக்குள் வேர்பிடித்த தருணம் அது. தமிழ்வாணனின் கட்டுரைகள் மொழியின் வல்லமையை உணர்த்தின. அவரது கேள்வி பதில்கள் அப்போது மகா பிரசித்தம். மிகுந்த துணிச்சலுடன் சகலவிதமான கேள்விகளையும் கையாள்வார். அவரது சமயக் கட்டுரைகளுக்குத் தனி மதிப்பிருந்தது. `துப்பறியும் சங்கர்லால்’ என்ற தலைப்பில் ஒரு மர்ம தொடரைப் படித்த ஞாபகம்.

அடுத்து, துக்ளக் சோ. அன்று முதல் இன்று வரை, என்னை ஆக்கிரமித்திருக்கும் ஓர் ஆளுமை. அவரை ஒரு ஆணாதிக்கவாதி, பிராமண ஆதிக்க வெறியர் என முத்திரைக் குத்தி ஒதுக்கி வைப்போர் நிறைய. அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் புருவம் உயர்த்திப் பார்ப்போர் உண்டு. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அவரை விடாமல் தொடர்ந்து வரும் எனக்கு அதில் உடன்பாடில்லை.

மாற்றுக் கருத்து உண்டு. கேலியும் கிண்டலும் கொப்பளிக்கும் அவரது நடை அலாதி. அதிலும் கேள்வி பதில்கள் மூளைக்கு மிகச் சிறந்த டானிக். எந்தவொரு பிரச்சனையிலும் தர்க்க ரீதியான வாதங்களின் வழி, ஆப்ரேஷன் கத்தியின் கூர்மையோடு பாய்ந்து சென்று பிரச்சனைகளின் மூல காரணியை பிளந்தெடுத்து வந்து உள்ளங்கையில் வைத்து விடும், அவரது அறிவுக்கூர்மை ஆச்சரியப்படுத்தும்.

ஒன்று மட்டும் நிச்சயம். அவர் முன் வைக்கும் சில வாதங்களிலோ, சில பிரச்சனைகளில் அவர் எடுக்கும் நிலைப்பாடுகளிலோ... குறிப்பாக குடும்ப அமைப்பிலும் சமுதாய அமைப்பிலும் பெண்களின் இடம் குறித்த அவரது நிலைப்பாடு அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈராக் போர் என்று சில... ஒத்துப்போக இயலாத நிலையிலும் அதனைச் சொல்ல வந்த அவரது நேர்மையில் மட்டும் எப்பவுமே சந்தேகம் எழுந்ததில்லை. வெத்துப் பொய்யான சுலோகங்களை முழங்கி `பிழைப்பு’ வேட்டை நடத்தும் ஆஷாடபூதிகள் மத்தியில் இத்தகைய நேர்மை கவனத்துக்குரியது என்றே தோன்றுகிறது.

என்னுள் சில தாக்கங்களை ஏற்படுத்தியதில், மொழி சார்ந்தேனும், இந்த இருவருக்கும் கணிசமான பங்குண்டு என்றே நினைக்கிறேன்.

தோட்டத்தில் சடக்கோரம் காத்திருந்து பஸ் ஏறி, பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி, இடதுபுறும் திரும்பி ஒரு நூறு மீட்டர் நடக்க வேண்டும். எதிரில் நிற்கும் எம்பயர் தியேட்டர். இப்போதில்லை. இன்று அது இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது. இடித்து தரைமட்டமாக்கப்பட்டு கார் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இப்போது அவ்விடத்தைக் கடக்குந்தோறும் காணக் கிடைப்பது, பாக்கார் வேலி வாசலையொட்டி ஒரு வாதாமரமும், சற்று தள்ளி பெயர் தெரியாத வேறொரு மரமும், அதன் நிழலில் ஒரு மேசை நற்காலி. அதில் உட்கார்ந்து வேலை பார்க்கும் ஒரு சீனர். நிறுத்தி வைக்கப்பட்ட சில கார்கள். பாக்கார் வேலியில் தொங்கும், கட்டணத்தைக் குறிக்கும் ஒரு சிறு விளம்பர பலகை.

வாழ்வின் வசந்த கால இனிமை நினைவு ரேகைகள் பதிந்த சின்னங்கள் எல்லாமே இப்படி ஒவ்வொன்றாய் அழித்தொழிக்கப்பட, அதனை எதிர்கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும், நமது இழப்புகள் குறித்த துக்கம் புகைமூட்டமாய் மேலெழ ஏற்படும் மூச்சுத் திணறலில் உயிரின் இழைகள் நடுங்கித் திணறுவதை பலமுறை உணர்ந்துள்ளேன்.

எம்பயர் தியேட்டர் எனும் எங்களின் கனவுலோகம் காலத்தின் வலிய கரத்துள் சிக்கிச் சிதைந்து கரைந்து மண்ணோடு கலந்து காணாமல் போனதும் அத்தகையதொரு துக்க நிகழ்வே.

தமிழ்ப்படம் ஓடும் நாட்கள், எம்பயர் தியேட்டரின் திருவிழா நாட்களாக உருமாற்றம் கொண்டிருக்கும். அலங்காரம் செய்துகொண்டு கல்யாணப் பெண் போல காட்சியளிக்கும். வாசலில் இருபக்கமும் பவ்யமாய் தலைகுனிந்து நிற்கும் குலை தள்ளிய வாழை மரங்கள். உள்ளே காலடி வைக்க சந்தோஷம் பொங்கும். போதாக்குறைக்கு தலையை வருடும் தென்னங்கீற்றுத் தோரணங்களின் மங்கள அணிவகுப்பு. வெளி வாசலில் கடை விரித்திருக்கும் கச்சாங்பூத்தே ஸ்டால்கள். ஐஸ் வண்டிகள்.

ஆனால், இப்போது போல் சாவதானமாகப் படம் தொடங்கும் நேரத்தில் போய் நின்று நிதானமாய் கவுன்டரில் டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பதெல்லாம் முடியாத காரியம். அப்படி நினைத்துப் போவோர், பட மேடை வாசலில், இலவு காத்த கிளியாக நின்றுவிட்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீடு போய்ச் சேர வேண்டியதுதான்.

அதுவும் தீபாவளி தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் டிக்கெட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். மூன்று நான்கு மடங்கு விலையில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் சிண்டிகேட்டின் தயவில்தான் படம் பார்ப்பதெல்லாம் பிளாக்கில் டிக்கெட் விற்கும் சிண்டிகேட்டின் தயவில்தான் படம் பார்க்க முடியும். அப்போது அதை ஒரு தொழிலாகவே செய்து வந்தோர் உண்டு. அதற்கான விசேஷத் தகுதி உடையோர் மட்டுமே அதில் ஈடுபட முடியும் என்ற வரையறையெல்லாம் வகுக்கப்பட்டு நடைமுறையில் விசுவாசமாகப் பின்பற்றப்பட்டும் வந்த காலம் அது. அதற்கென பரிந்துரை செய்யப்பட்டிருந்த தகுதிகள்... நல்ல உடற்கட்டு, முறுக்கு மீசை, முறைப்பான முகத் தோற்றம், அதிரடிப் பேச்சு.

இந்தத் தொழிலிலும், பிற தொழில்களில் இருப்பது போலவே சிறப்புடன் செயல்பட்டு, மக்களின் அபிமானத்தைப் பெற்றோர் சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் மொட்டக்கை ராமன். சண்டையில் பறிகொடுத்த கை. மிக சமீப காலம்வரை அன்னாரின் அந்தக் காலத்திய தொழில் சார்ந்த வீரதீரச் செயல்கள் சுங்கைப்பட்டாணி டீ ஸ்டால்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்ததை ஆச்சரியத்துடன் கேட்க முடிந்திருக்கிறது.

`ராமன் இருக்கானே... அவன போல முடியாதுப்பா... இப்பெல்லாம் எவன் எவனோ மீசய முறுக்கிட்டு மார நிமித்திகிட்டு சண்டீருன்னு சொல்லிகிட்டு பூச்சாண்டி காட்டறானுங்க... இவனுங்க நம்ம ராமன் முன்னால நிக்க முடியுமா? பட மேடையில டிக்கெட் எடுக்க முன்னால அம்பது பேரு நின்னாலும், அத்தன பேரயும் ஒத்த கையால அலாக்கா வெலக்கி போட்டுட்டு முன்னால போய் கவுண்டர் சந்துல அவங் கைதான முன்னால நிக்கும்... அவன் ஒடம்புல அப்பிடி ஒரு பலம் இருந்துச்சு...’ என்கிற ரீதியில் பேச்சுப் போகும்.

ரத்தினம் டிரைவரிடம் (எங்கள் தோட்டத்துக்கான ஆஸ்தான டிரைவர் அவர்தான். டவுனிலிருக்கும் ஸ்கூலுக்குப் போக... ஆபத்து அவசரத்துக்கு டவுனுக்கு ஓட என்று...) காடி வாடகைப் பேசி வரச் சொல்லி, ஒரு மாலை நேரத்தில், குளித்து, தீபாவளிக்கு வாங்கிய புதுச் சட்டைச் சிலுவாரை உடுத்திக் கொண்டு, குடும்பத்தோடு டவுனுக்குப் போய் பார்த்த படந்தான் ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு. கல்யாணப் பரிசு கொடுத்த கிறக்கம் ரொம்ப நாள் கண்களை விட்டு அகலாமல் மப்போடு திரிந்த காலம் அது.

நாமும் காதலித்துப் பார்க்கலாமே என்கிற ஆசைக்கூட அதன் நீட்சியாய் துளிர்விட்டதுதான். அன்றைய மீசை அரும்பிய பொடிசுகளெல்லாம் கூட தங்களை ஜெமினி கணேசனாய் கற்பிதம் செய்து கொண்டு, தரையில் கால் பாவாமல் குச்சிக்காட்டில் அலைந்து, சரோஜாதேவியை விடாமுயற்சியுடன் தேடிய சுகமான காலம் அது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768