முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  சுவடுகள் பதியுமொரு பாதை... 20
- பூங்குழலி வீரன் -
 
 
 
 

உரத்துப் பேச - ஆழியாள் கவிதைகள்

ஆழியாள் என்ற புனைப் பெயரில் எழுதிவரும் மதுபாஷினி ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் 1968-ஆம் ஆண்டு இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தவர். இலங்கையின் புனித சவேரியார் வித்தியாலயத்தில் தொடக்கக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக பணிபுரிந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய ஆழியாளின் இரு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். துவிதம், உரத்துப் பேச என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஈழத்துக் கவிதைகள், கவிதைகள் என்று கவனத்தில் எடுத்துக் கொண்டால் ஆழியாளுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. புலம்பெயர்தல், அடையாளச் சிக்கல், அந்நியக் கலாச்சாரத் தாக்கம் தொடர்பில் வலிமையாக கவிதைகளை ஆழியாள் எழுதியுள்ளார். இம்மாத வல்லினத்தில் ஆழியாளின் கவிதைகளோடு பயணிப்போம்.

வழக்கமான ஒய்யாரத்துடன்
வேர்விட்ட களைகளின் பெயர்கள்
எனக்குத் தெரிந்திருக்கவில்லை

தனது வேர் பிடுங்கி இன்னொரு நாட்டில் நட்டுவைத்து விட்டு அதை மரத்துப் போய்விடாமல் பாதுகாக்கும் உயிர் காக்கும் வலி இக்கவிதையில் தெரிகிறது. புலம்பெயர்தல், புலம்பெயர்ந்த நாட்டில் தம்மையும் ஓர் உயிராய், மனிதனாய் அடையாளப்படுத்திக் கொள்ளுதலில் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்படும் கோபம், சோகம் என இன்னபிற மனப்பிறழ்வுகள், குழப்பங்கள் என ஆழியாள் தான் அனுபவித்தவற்றை எந்தவொரு புனைவுமின்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு
இங்கு சுவருக்குச் செவிகள் உண்டு
இருளுக்குக் கூர் விழிகளும்
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவளுக்கு.

ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு தனக்கென தன் மொழியில் பேசும் பெண்மொழிக் கவிதை இது. தமிழ்க் கவிதைச் சூழலில் அம்பை, மாலதி மைத்திரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா போன்றோரின் கவிதைகளில் இதே போன்றதொரு வீரியத்தை அவதானிக்க முடியும்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் அதற்கெதிராக பெண்களின் எழுச்சியும் - அதை பெண் தன் சுய அடையாளத்தோடு வெளிப்படுத்துதலும் தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. ஒரு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் இன்றைய சூழலில் வரவேற்கப்பபடுகின்றன. சிலவேளைகளில் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. காலங் காலமாய் பெண்ணை எழுத்துகள் வெளிப்படுத்திய தடத்தை முற்றாக மறுத்து புதியதொரு மொழியை எந்தவொரு சமரமுமின்றி முன்வைக்கும் தைரியம் ஆழியாளுக்குக் இருக்கிறது என்பதை அவரது கவிதைகள் முன்மொழிகின்றன.

“கலங்கரை விளக்கத்து
இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள்
மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும்
தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்”.

ஆழ்நிலை தனிமையைப் பேசும் கவிதை இது. பல நிலைகளில் நமக்கு பயத்தை அளிக்கும் தனிமை சில நிலைகளில் மிகுந்த தேவையுடன் நாம் தேடித் திரியும் ஒன்றாக இருக்கின்றது. சொந்த நாட்டில் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஏன் மெளனித்துக் கிடப்பதற்குக் கூட சக உயிர்கள் இருக்கும். ஆனால் மொழிபுரியாததொரு அந்நிய நாட்டில் பழகுவதற்கு ஆளின்றி பரிதவித்துக் கிடக்கும் நிலை உயிர் கொல்லும் தன்மையிலானது.

தன்னோடு ஒட்டி உறவாடிய உறவுகள், மண்வாசனை, மரங்களின் வாசனை, மீன்பாடும் மொழிகள் போன்றவற்றை இழந்த இழப்பு – புலம்பெயர் நாடொன்றுக்குச் சிதறிச் செல்ல நேர்ந்த துயரம் என எல்லா ஈழக்கவிஞர்களும் பேசும் பொது மொழியை ஆழியாளின் கவிதைகளும் பேசுகின்றன.

ஊறி வெடிப்புற்றுச் சிதிலமாய்த் தொங்கும் தசைகளை
ஒட்டவைத்து
அடையாளம் காண்பதற்குள்
தலை கிறுகிறுக்கும்.

குருதிக் கறை படிந்த வலியோடு படைக்கப்பட்டுள்ளது இக்கவிதை. இன்றுவரை தொடரும் ஈழத்து உறவுகள் அனுபவிக்கும் உயிர் கருக்கும் கொடுமைகள் தொடர்ந்து பல கவிஞர்களால் பதிவாக்கப்பட்டு வருகின்றன. ஆழியாளும் ஈழத் துயரினைத் தொடர்ந்து தனது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். ஈழதேசப் போராட்டத்தையும் அதன் உடன்நிகழ்வுகளையும் பாடுபொருளாக்கி அரசியல் சமூக போராட்டக் களங்களில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தி நிற்கிறார்.

“மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி
சம்மதமின்மைக்கும் அறிகுறி
அது எதிர்ப்புணர்வின் அநிகுறி
எதற்காக அறிகுறியுமே அல்ல
மெளனம் சினத்தின் இறுக்கம்
இயலாமையின் துயரம்
மெளனம் ஒரு பாவனை
கூர்ந்து கவனித்தலின் குணாம்சம்
அல்லது
ஒட்டாமலிருத்தலின் வெளிப்பாடு
அனுபவம் கற்றுத் தந்த மந்திரச் சொல்
பேரமைதியின் மகத்தான இசைக்குறிப்பு”

மெளனம் ஓரிடத்தில் உக்ரம் தணிக்கும் அரு மருந்தாய் இருக்கிறது. அதே மெளனம் வேறொரு இடத்தில் சிலருக்குப் பெருநோயாய் இருக்கிறது. மிகுந்த துயர நினைவுகளையும் மெளனம்தான் அடைகாத்து வைத்திருக்கிறது. சிலருக்கு அடுத்த கட்ட நகர்விற்கான இடைவெளியாகவும் மெளனம் விளங்குகிறது.

“சிதறும் அதிர்வுத் துகள்கள்
நரம்பெங்கும் பரவிப் பெருக்கெடுக்க
உடலசைத்து ஆடவும்
அபிநயிக்கவும் முயல்கிறேன் - எனினும்
காலுறைகளைத் தாண்டி அசைவுகள்
வெளிப்பரவாது போயின - “

ஆழியாள் தனது கவிதைகளில் சுட்டி நிற்கும் பொருட்பரப்பு கவனத்திற்குறியது. தமது இளமை வாழ்வின் நினைவுப் படிமங்களாகவும் தான் இப்போது வாழ்கின்ற வாழ்வின் அனுபவப் படிவங்களையும் அவரது கவிதைகள் பேசுகின்றன. தான் வாழ்வு குறித்த ஏக்கம், தன்னோடு ஒட்டி வராத அந்த சூழல் குறித்த விவாதம், தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதல், தன் தனித்துவத்தைக் கட்டமைத்தல் என இவரது கவிதைகள் பல நிலைகளில் பயணிக்கின்றன.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768