முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  பதிவு  
  தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் வெளியீட்டு விழா  
 
 
 

கடந்த 07.10.2012 ஆம் நாள் சுங்கை பட்டாணியில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் மலேசியாவின் முதல் சிறுவர் சிறுகதை நூலான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ சிறப்பான முறையில் வெளியீடு கண்டது. கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு வருகையளித்து நூலை வெளியீடு செய்தார். எழுத்தாளர் அமரர் எம்.ஏ. இளஞ்செல்வனின் மாணவரான திரு. இராமகிருஷ்ணன் அதனை நினைவுக்கூர்ந்து இதுபோன்ற முயற்சிகள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் திருமதி. க. பாக்கியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் மலேசியச் சிறுவர் இலக்கியம் குறித்த பல்வேறான குறிப்புகளை ஆய்வுப்பூர்வமாக வழங்கினார். அரசியல்வாதிகளை அழைத்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிப் பணம் சம்பாரிக்கும் எவ்வித முயற்சியும் இல்லாத மாற்றுச் சிந்தனைமிக்க இந்த நூல் வெளியீட்டு விழாவை மிகவும் பாராட்டிப் பேசினார்.

நிகழ்ச்சியில் அடுத்ததாக, கூலில் தியான ஆசிரமத்தின் ஸ்தாபகரும் இலக்கிய வாசகருமான சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகள் உளவியல் குறித்து பேசிய அவர் சிறுகதை நூலிலுள்ள சில கதைகளை மேற்கோள் காட்டினார். சிறுவர்களின் மன அழுத்தங்களை விடுவிக்கக்கூடிய வகையிலான கதைகளை எழுதிய ஆசிரியரைப் பாராட்டிப் பேசினார்.

தொடர்ந்து, பினாங்கு ஆசிரியர் பயிற்சி வளாகத்தின் தமிழ் விரிவுரைஞரான திரு.த. குமாரசாமி அவர்கள் நூல் விமர்சன உரையாற்றினார். அவருடைய விமர்சனம் அனைத்துக் கதைகளையும் அதன் பலவகையான பின்னணிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. சிறுவர்களின் உலகையும் அவர்களின் மனத்தையும் நன்குணர்ந்து ஆசிரியர் இக்கதைகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார். மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதோடு அதையும் மீறி நல்ல வாசகர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுகதை நூலில் இடம்பெற்றிருப்பதைப் பாராட்டினார்.

இளம் எழுத்தாளரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியருமான குமாரி வெ.தனலட்சுமி அவர்கள் ஆசிரியர் பார்வையில் நூல் என்ற தலைப்பில் விமர்சன உரையாற்றினார். ஒவ்வொரு கதை குறித்தான அவருடைய ஆய்வு மிகவும் விமர்சனத்தன்மையுடன் இருந்தது. கதைக்களம் குறித்துப் பேசுகையில் ஒரு சில சிறுவர் சிறுகதைகள் மலேசியாவில் வாழக்கூடிய பலவகையான வாழும் சூழலை உள்ளடக்கியிருப்பதைக் குறிப்பிட்டார். இந்த நூலை வாசிக்கும் சிறுவர்களும் பல்வேறான வாழ்க்கை சூழலிலிருந்து வந்திருப்பார்கள், ஆகவே கட்டாயம் இக்கதைகள் அவர்களின் வாழ்க்கையையும் பேசியிருக்கிறது எனக் கூறினார்.

அடுத்ததாக, மாணவர் விமர்சன அரங்கில், இரண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களான மு. பவித்திரா மற்றும் ரெ. சஞ்சய் தங்களின் புத்தக விமர்சனத்தைப் படைத்தார்கள். மாணவர்கள் ஒரு சில கதைகளைத் தேர்ந்தெடுத்து அதன் சிறுவர் தன்மைகளைப் பற்றியும் கதைகள் எழுதப்பட்டிருக்க���ம் விதம் குறித்தும் விமர்சித்தார்கள். இதுபோன்ற நூல் வெளியீட்டில் மாணவர்கள் விமர்சிப்பது இதுவே முதன்முறையாக அமைந்திருந்தது. இருப்பினும், மாணவர்கள் மிகச் சிறப்பாக விமர்சனத்தை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு நூலைப் பெற்ற குமாரி கலைவாணி அவர்கள் குறிப்பிடத்தக்க தமிழ் வாசிப்புலகின் மிகச் சிறந்த உதாரணமாகும். பள்ளிக்குச் சென்று பயிலாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு தமிழ் படித்து இன்று நல்ல இலக்கிய வாசகர்களாக திகழ்கிறார்கள். உடல் அங்கவீனங்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சித்து நூல்களைச் சுயமாக வாங்கிப் படித்து வருகிறார்கள். வாசிக்க முடியாமைக்குப் பல காரணங்களை அள்ளி வீசும் சூழலில் இவர்கள் வாழும் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதும் குறிப்பிட்டதக்கது. அவருடன் அவருடைய அக்காவான குமாரி.புனிதா அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். புனிதா வளர்ந்து வரும் இளம் கவிஞர். விரைவில் தமிழ் எழுத்துலகில் பதிவுகளைக் கொடுப்பார்.

மலாயாப்பலகலைக்கழகத்தின் நூலகப் பொறுப்பாளர் குமாரி. விஜயலெட்சுமி அவர்கள் அவர் படித்த ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேவதைகளின் காகிதக் கப்பல் நூலை 50 பிரதிகள் இலவசமாக வழங்கியுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் நூலை கொண்டுச்செல்ல விரும்புபவர்கள் அதன் விநியோகஸ்தர்களான பாரதி பதிப்பகத்தை 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768