முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கட்டுரை  
  கலை என்பது...
- ம. நவீன் -
 
 
 
 

வழக்கறிஞர் பசுபதியும், மருத்துவர் சண்முகசிவாவும் பலமுறை 'ஃபிரிமுஸ்' கல்லூரி குறித்து கூறியுள்ளனர். அவர்கள் நோக்கம் மிக உயர்வானதாக இருந்தது. முறையான வழிகாட்டிகள் இல்லாமல், கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கல்லூரியாக 'ஃபிரிமூஸ்' விளங்குகிறது. இவ்வாறு இணையும் மாணவர்கள், தினக்கூலிக்காக உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும், வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும், அதன் பொருட்டு சிறைக்குச் சென்று வந்தவர்களாகவும், உளவியல் சிக்கல்களில் மாட்டிக்கொண்டவர்களாகவும் உள்ளனர். 'இனி இவர்கள் சமூகத்துக்குப் பகை. இவர்கள் செல்ல வேண்டிய இடம் சிறைச்சாலைதான்' என முத்திரைக்குத்தப்பட்ட நிலையில் இவர்களின் மனதை மறு சீரமைத்து தொழிற்சாலைக்கு அனுப்புகின்றது இக்கால்லூரி.

கல்வியில் பின் தங்கியவர்களாகக் கருதப்பட்ட இம்மாணவர்களும் ஃபிரிமூஸ் கல்லூரியில் படித்து தங்கள் மேற்கல்வியை முடித்து இவ்வாரம் (10.11.2012) காலை மணி ஒன்பதுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெருகின்றனர். வாழ்வில் அவர்களுக்கு இது இரண்டாவது சந்தர்ப்பம். இதை அமைத்துக்கொடுத்த 'மை ஸ்கீல் அறவாரியம்' பாராட்டுக்குறியது.

பூச்சோங்கில் மிக வசதி குறைந்த நிலையில் தொடக்கப்பட்ட இக்கல்லூரி இப்போது தனது இடத்தை கிள்ளானின் மாற்றியுள்ளது. இந்த புதிய கல்லூரியின் திறப்புவிழாவிற்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. மருத்துவர் சண்முகசிவாவுடன்தான் சென்றேன். முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சூழ்ந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியில் பின் தங்கியவர்கள். அவ்வாறு பின் தங்கிச் செல்ல நிச்சயம் அவர்கள் மட்டும் காரணிகளாக இருக்க வாய்ப்பில்லை. இந்தக் கல்வி அமைப்பு, அதை பின் பற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல குற்றவாளிகள் நிம்மதியாக வெளியே இருக்க எளிதாக அவர்களைப் பின் தங்கியவர்கள் எனச் சொல்வது சங்கடத்தைத் தருகிறது.

ஒரு மாணவனிடம் உள்ள எல்லா திறனையும் சோதித்தறிய முடியாத கல்வி சூழல்தான் இங்கே பின் தங்கியிருக்கிறது. இசையால், ஓவியத்தால், நடனத்தால், நாடகத்தால், விளையாட்டுத்திறனால் நாம் ஒரு மாணவனை அடையாளம் காண முயல்வதே இல்லை. நம்மிடம் இருக்கும் மிகக் குறுகலான வரையரையில் ஒருவனின் திறனை சோதித்து அவனை கெட்டிக்காரன் - பின் தங்கியவன் என அடையாளப்படுத்தும் போக்கு மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் நடந்தேறியே வருகிறது. அந்நிலையினால் ஏற்படும் பாதிப்பின் சாட்சியாக பிரிமூஸ் கல்லூரி மாணவர்கள் நிர்க்கிறார்கள்.

அக்கல்லூரியை பொறுப்பெடுத்து இயக்கும் குமாரி செல்வமலர் விரிவாகக் கல்லூரியின் வரலாறை விளக்கினார். குளிர்சாதன வசதி குறைந்த பழைய கட்டடம் தொடர்பான காட்சி மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஓரளவு மாணவர்களின் பின் புலம் தெரிந்தது. அவர்களில் பெரும்பாலும் எதிர்காலம் குறித்த அச்சம் அற்றவர்கள். ஒரு பாதுகாப்பு வளையத்தைத் தேடிப் போகாதவர்கள். இந்த நிலை கலைக்கா�� சாதகத் தன்மையாகவே எனக்குத் தோன்றியது. ஒருவன் கலைத்துறையில் தீவிரமாக ஈடுபட இந்த மனநிலையே அவசியமாகிறது. பாதுகாப்பு வளையத்தைத் தேடுபவர்கள் காலையில் வேலைக்குச் சென்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்குள் புகுந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, கலைஞன் மட்டுமே நாளைய பொருளாதார வசதிகள் குறித்த கவலைகள் இல்லாமல் தான் சார்ந்த கலையில் நுழைத்து திளைக்கிறான். அம்மனநிலை இயல்பாக அவர்களுக்கு இருக்க கலைத்துறை சார்ந்த அறிமுகங்களை அவர்களுக்கு ஏற்படுத்தினால் என்ன என்று தோன்றியது.

மொழி சிக்கல் இல்லாமல் அனைவருக்கும் புரியும் கலை வடிவங்கள் குறித்து யோசித்தபோது ஸ்டார் கணேசன் நினைவுக்கு வந்தார். புகைப்படத்துறையில் உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்தவர். வாழும் வரை தமிழ்ச் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். குறிப்பாக விளம்பரங்களைத் தேடாதவர். புகைப்படம் குறித்த ஒரு பட்டறைய அக்கல்லூரியில் ஏற்பாடு செய்யலாமா எனக்கேட்டபோது உடனே சம்மதித்தார். மறுநாளே பயணித்தோம்.

ஒரு மாணவன் கலையில் ஈடுபடும் முன்னர் ஆளுமைகளைச் சந்திப்பது அவசியம். நூறு பேரில் யாராவது சிலருக்காவது அக்கலையில் ஆர்வம் பற்றிக்கொள்ளாதா என்ற நம்பிக்கையில் அவரை அறிமுகம் செய்து வைத்தேன். கணேசன் பேசத்தொடங்கினார். 'நான் பேசும்போது யாருக்காவது சோர்வு தட்டினால் கைகளை உயர்த்துங்கள்' என ஆரம்பித்தபோதே சில கைகள் உயர்ந்தன. நிச்சயமாக இவர்களுக்குள் கலைக்கான மனம் இருக்கிறது என உறுதி செய்துக்கொண்டேன். அம்மனம் யாருக்காகவும் தயங்காது. போலி இருக்காது. விருப்பம் இல்லாததை விருப்பம் இல்லை எனச்சொல்லும். எத்தனை நேர்மை.

கணேசன் அனைவரையும் அரவணைத்துப் பேசினார். அவரால் அவ்வாறு பேச முடிவதை நான் அறிவேன். அன்பின் மூலமாக அவரால் யாரையும் தன்வசம் கவர முடியும். சுமார் இரண்டு மணி நேரம் பேசி முடித்தார். மாணவர்கள் தொடர்ந்து அவரைப் பேச வற்புறுத்தினர். சில மாணவர்கள் தாங்கள் பிடித்தப் படங்களை கணேசனிடம் ஆர்வத்துடன் காட்டினர். சிலர் மௌனமாக கடந்து சென்றனர். யாரோ சிலருக்காவது உள்ளுக்கும் ஒரு ஆர்வம் தோன்றியிருக்கலாம் எனப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு மட்டும் மீண்டும் ஆரம்ப பயிற்சிகள் வழங்க வர வேண்டும் என கேட்டுக்கொண்டபோது கணேசன் மகிழ்ச்சியாகச் சம்மதித்தார்.

நாம் நமது சமூக அவலங்களைப் பார்த்து கண்ணீர் சிந்த வேண்டியதில்லை. தலைவர்களைக் குறைச்சொல்லி இன்னமும் காலம் கடத்த வேண்டியதில்லை. கவிதை எழுதி கலங்க வேண்டியதில்லை. இதுபோன்ற திட்டங்களில் நம்மால் இயன்ற ஒன்றை செய்ய முன்வந்தாலே குற்ற உணர்ச்சி இல்லாமல் சில இரவுகள் தூங்கலாம்.

ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் தனது கலைப்படைப்புகளை மட்டுமே விட்டுச் செல்வதால் சமூக மாற்றம் சாத்தியமா என்ன? தன் கலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். அதுவே ஒரு கலைஞனை எப்போதும் வாழ்பவனாக மாற்றுகிறது. கணேசன் என்றும் வாழ்வார்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768