முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை... 4
- அ. பாண்டியன் -
 
 
 
 

மனிதனின் வேர்கள்

இடமாற்றம் என்பது பலரது வாழ்வில் மறக்கவியலா நிகழ்வாகவே அமைந்து விடுகிறது. ஓரிடத்தில் சில காலம் வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு திடீர் என்று வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர வேண்டிய நிலையில் ஏற்படும் அசெளகரியங்களும் ஏக்கங்களும் எண்ணிலடங்கா. அதிலும் இளம் வயதில் ஏற்படும் இட மாற்றங்களைக் காட்டிலும் முதுமையில் ஏற்படும் இடமாற்றங்கள் பல்வேறு உளவியல் பாதிப்புகளைக் கொடுக்கக்கூடியதாகும்.

கல்வியின் பொருட்டும் பொருள் ஈட்டும் பொருட்டும் இடம் விட்டு இடம் தாவும் இளையோரைவிட (வேறு வழியில்லாமல்) அவர்களை பின்தொடரும் முதியவர்கள் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனக்கு தெரிந்து, கம்பத்தில் சுதந்திரமாக சைக்கில் ஓட்டிக்கொண்டிருந்த சீனக்கிழவி ஒருத்தி, அவள் மகனுடன் கோலாலம்பூரில் குடியேரிய ஒரு வருடத்திலேயே மனநிலை பாதிக்கப்பட்டு இறந்து போனாள்.

நவீன மயம் ஆதலாலும் போரினாலும் இயற்கை மாற்றங்களினாலும் மனிதர்கள் தொடர்ந்து புலம் பெயர்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் ஒரு இடத்தில் பிறந்து வளரும் மனிதன் தன் கால்களின் வழி கண்ணுக்குத் தெரியாத வேர்களை பூமியில் பாய்ச்சி விடுகிறான். புலம் பெயர்தலில் வேர்கள் அறுந்து போவதை நின்று கவனிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை.

தமிழர்களுக்கு புலம் பெயர்தல் என்பது மிகவும் நெருக்கமான ஒரு சொல்லாகி விட்டது. இந்நாட்டிற்கு (பெரும்பான்மை) இந்தியர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டனர். அன்று அவர்கள் குடும்பம் குடும்பமாக இங்கு பிழைப்பு தேடி வந்தனர். தொப்புள் கொடி உறவுகளை அறுத்துக் கொண்டு அவர்கள் இங்கு வந்து எண்ணில் அடங்கா துன்பங்களை சுமக்க வேண்டியிருந்தது. ஆண்டு கணக்கில் உறவுகளைப் பிரிந்து வாழ தலைப்பட்ட அவர்களின் இக்கட்டான சூழ்நிலையின் துன்ப அனலை இன்றும் உணர முடிகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியாலும் பேரினவாத போக்காலும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் நிலை உலகம் அறிந்த ஒன்று. தாய் மண்ணில் சுதந்திரம் மலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும் இலங்கை தமிழர்களும் தங்கள் வேர்களைச் சொந்த மண்ணில் விட்டு விட்டு கண்ணீர் வாழ்க்கை வாழ்வது கண்கூடு. இலங்கையிலேயே மறு குடியேற்றம் என்கிற பெயரில் முள்கம்பிக்குள் அடைக்கப்பட்டு வாழும் மக்களும் தங்கள் சொந்த மண்ணில் விதைத்து வந்த கனவுகளின் மிச்சத்தை கண்ணில் தேக்கி படும் துயரம் இன்றும் தொடர்கிறது.

அண்மையில் பினாங்கு தீவில் நூறு ஆண்டு பழைமை வாய்ந்த கம்போங் புவ பாலா (ஜாதிக்காய் கிராமம்) வாசிகளின் மண் அபகரிக்கப்பட்டதும் அதன் பின் நிகழ்ந்த அரசியல் நாடகங்களும் தேசிய புகழ் பெற்றவை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய வம்சாவளியினருக்கு என்று கொடுக்கப்பட்ட அந்த நி���ப்பகுதி, இந்த 21-நூற்றாண்டில் அரசாங்க அனுமதியோடு சாமர்த்தியமாக தனியார் கைக்கு போனது. குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் சில அற்ப சலுகைகளைக் காட்டி பெரிய அனுகூலத்தை அடைய ஒரு தரப்பு போட்ட திட்டம் மக்கள் கொந்தளிப்பால் வெளிச்சத்திற்கு வந்தது. தன் மண்ணை விட்டு விரட்டப்படும் ஒரு மனிதனின் கண்ணீர் எவ்வளவு பலமுள்ளது என்பதை அச்சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியது. ஆயினும் இன்றும் கூட நாட்டின் பல இடங்களில் (உதாரணம்: புக்கிட் ஜாலில் தோட்டம்) மக்கள் கட்டாயத்தின் பேரில் புலம் பெயரும் துயரங்கள் நடந்தபடிதான் இருக்கிறது.

அண்மையில் நான் வாசித்த, பஹருடின் கஹார் (Baharuddin Kahar) என்னும் மலாய் எழுத்தாளர் எழுதிய ‘பா உரே’ (Bah Urei) என்னும் மலாய் சிறுகதை மனிதனின் வேர்கள் மண்ணோடு பின்னிக்கிடப்பதை அழுத்தமாகச் சொல்கிறது. இவர் 70-ஆம் ஆண்டுகளில் எழுதத்துவங்கியவர். கவிதை, சிறுகதை நாவல் என்று பல துறைகளில் இயங்கினாலும் இவரது சிறுகதைகளும் நாவல்களும் அழியப் புகழ் பெற்றவை. அந்தி நேரம் (Senjakala) என்கிற இவரது நாவல் மிகவும் புகழ் பெற்றது. வனத்தையும் வனம் சார்ந்த பகுதியையும் அங்கு வாழும் மக்களையும் இவரது படைப்புகள் மிகுந்த யதார்த்ததோடு காட்டுகின்றன. பா உரேயும் காட்டையே களமாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

பா உரே ஒரு செமாய் ஆதிகுடியினன். வயோதிகன். தன் மனைவி சீரேயின் மரணத்திற்கு பிறகு தன் மகளை வளர்த்து திருமணம் செய்விக்க காத்திருக்கிறான். ஒரு நாள் அவன் வசிக்கும் பூர்வ குடி கிராமம் அரசாங்க அனுமதியுடன் மேம்பாட்டாளர் வசமாகிறது. செமாய் இன ஆதிகுடிகள் அனைவரும் வேறு ஒரு மாற்று இடத்தில் குடியமர்த்த முடிவு செய்யப்படுகிறது. இம்முடிவை செமாய் இனத்தலைவரும் மற்றவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். எவ்வளவு காலத்திற்கு இப்படி காட்டில், மின்சாரமும் தண்ணீரும் அற்ற பழங்கால வாழ்க்கை வாழ்வது. அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் வசதியாக வாழட்டுமே என்பது அவர்கள் தரப்பு கருத்து. ஆனால் பா உரேயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், அவன் காதல் மனைவி சீரே.

சீரேயை அவன் ஒரு சடங்கு பூர்வமான வைபவத்தில் மணந்து கொள்கிறான். தானே வேட்டையாடி கொன்ற புலியின் பல்லையும் நகத்தையும் மாலையாக கோர்த்து அவள் கழுத்தில் போடுகிறான். அவர்கள் இன முறைப்படி தம்பதிகள் இருவரும் திருமணச் சடங்காக புற்றை சுற்றி வந்து தங்களுக்குப் பிடித்த மரக்கன்று ஒன்றை நடவேண்டும். பா உரே பழ மரம் ஒன்றை (pokok keledang) நடுகிறான். தங்கள் அன்பின் அடையாளமாக அந்த மரத்தை காத்து வளர்ப்பது என்று இருவரும் முடிவெடுக்கிறனர்.

சில ஆண்டுகளில், துரதிஸ்டவசமாக அவன் மனைவி நோயின் காரணமாக இறந்து போகிறாள். தன் மரணத்திறகுப் பிறகும் அந்த பழ மரத்தை நன்முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதே அவளின் இறுதி ஆசையாக இருக்கிறது. பா உரே தன் மனைவின் சடலத்தை அந்தப் பழ மரத்தின் அருகிலேயே புதைக்கிறான்.

அன்று முதல் அவன் வாழ்க்கை அந்த பழமரத்தோடும் மனைவியின் கல்லறையோடும் ஒன்றிப்போகிறது. காட்டு மல்லிகையை தலையில் சூடிய சீரேயின் அழகிய முகம் அவன் கண்முன் எப்போதும் நிழலாடுகிறது. தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட பழமரத்தையும் மனைவியின் கல்லரையையும் விட்டு வேறு எங்கும் செல்ல அவனுக்கு விருப்பம் இல்லை. தீடீர் என்று அந்த பழங்குடி கிராமம் அழிக்கப்படும் என்னும் தகவல் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. கெலேடாங் மரத்தையும் தன் மனைவியின் கல்லறையையும் பாதுகாக்க வழிதேடி தவிக்கிறான்.
நாட்கள் செல்லச் செல்ல பா உரேயின் மன குழப்பம் உச்சத்தை அடைகிறது. ஊண் உறக்கம் அற்று போகிறான். பலர் நவீன இயந்திரங்களோடு காட்டுக்குள் நுழைந்து மரங்களையும் தன் மனைவியின் கல்லரையையும் முரட்டுத்தனமாக அழிப்பதுபோலும் அவர்களோடு தான் பாரம்பரிய போர்வீரனாக நின்று போர் புரிவது போலும் பயங்கர கனவுகள் காண்கிறான். வீறுகொண்டு எழுகிறான். தன் கோடரியை தீட்டிக் கொண்டு காட்டுக்குள் ஓடுகிறான்.

யாரும் உன்னை அழிப்பதற்கு முன் நானே உன்னை அழித்து விடுகிறேன்.... என்று புலம்பியபடி அந்த பழமரத்தில் தன் கோடரியை வீசுகிறான். ‘ மரத்தை பாதுகாப்பதாக சொன்னாயே!’ என்று அவன் மனைவியின் குரல் அவனை தடுக்கிறது.

தன் இயலாமையை அவன் ஒப்புக்கொள்கிறான். இது என் தவறு அல்ல... என்று தன் மனைவியிடம் மானசீகமாக இறைஞ்சுகிறான். தொடர்ந்து கோடரியை மரத்தை நோக்கி வீசுகிறான். ஆனால் அவனால் அந்த பெரிய மரத்தை வெட்டிச் சாய்க்க முடியாது போகிறது. வயோதிகத்தினால் உடல் பலமற்று தல்லாட கால்கள் குலைந்து மண்ணில் சரிகிறான். அவன் மகள் அவனை தேடி காட்டுக்குள் வருகிறாள். அரை மயக்கத்தில் கிடக்கும் அவன் தன் மகளிடம் “புதிய இடத்திற்கு உன் அம்மாவின் எலும்புகளையும் சேகரித்து எடுத்துச் சென்று பத்திரமாக புதைக்க வேண்டும்” என்று இயலாமையோடும் ஏக்கத்தோடும் கூறுகிறான்.

‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்!’ என்று கனியன் பூங்குன்றனார் பாடினாலும், ‘சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா?’ என்னும் கேள்வியில் வெளிப்படும் தனிமனித உரிமை உணர்வும் மதிக்கப்பட வேண்டியது அவசியமே. பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளி சென்ற பின்பும் வாழ்ந்த மண்ணின் வாசனையை மூக்கு என்றும் மறக்காதிருக்கக் காரணம் பூமிக்குள் புதைந்து கிடக்கும் கண்ணுக்கு தெரியாத மனிதனின் வேர்கள்தான் போலும்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768