முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  பயணிப்பவனின் பக்கம்... 24
- தயாஜி -
 
 
 
 

‘காரில் தொங்கிக்கொண்டிருக்கிறது பொம்மை; பொம்மை மட்டுமல்ல...'

காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். என் எதிரே ஒரு கார். வலது இடது என இஷ்டத்துக்கு போய்க்கொண்டிருந்தது. என்னால் அந்த காரை முந்திக் கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஒரு பொம்மை.

அந்த பொம்மை கையில் ‘I love u’ என இதயத்தை வைத்திருந்தது. பொம்மை என்பதே குதூகலத்தின் அடையாளம்தானே. ஆனால் அப்போது நான் முந்திப்போகாததற்கு பொம்மையின் குதூகலம் காரணமல்ல. பொம்மை கண்களில் தெரிந்த சோகம்தான். அந்த பொம்மை, காரின் உள் கண்ணாடிக்கு பின்னால் இருக்கவில்லை.

கார் சக்கரத்தின் பக்கத்தில் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கார் பெரியதாக இருந்தாலும் பொம்மையை அங்கே கட்டியவரின் மனம் எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்.

சட்டென தோன்றியது எனக்கு அப்படி.

இந்த பொம்மைக்கும் மனிதனுக்கு அப்படியென்ன தொடர்பு இருந்திருக்கும். இன்னமும் என் கார் அந்த காரை முந்தி செல்லாமல் யோசிக்கலானேன்.

யு.பி பெர்படானான் தோட்டத்தில் வசித்துக் கொண்டிருந்த காலம். அந்த தோட்டத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்கள் தங்குவதற்காக பக்கத்திலேயே வரிசையாக வீடுகளை கட்டிக் கொடுத்திருந்தார்கள். அந்த வீடுகளும் இரண்டு பிரிவாக இருந்தது. பொதுவாகவே தமிழர்கள் குழுவாக இருக்கும் இடங்களில் ஒரே குழு என்பது சாத்தியமில்லை!

ஒன்று பழைய வீடு மற்றொன்று புதிய வீடு. பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒரண்டுக்கும் நடுவில் பெரிய திடல் ஒன்று இருக்கும். பழைய வீடு என சொல்லப்படுவதை விட சில மாதங்கள் கழித்து கட்டப்பட்டதால் மட்டுமே பழைய வீடேன்றும் புதிய வீடென்றும் பெயர் கொடுத்திருந்தார்கள்.

யு.பி பழைய வீட்டில் இருப்பவர்களில் பெரும்பாலோர் கோவக்காரர்களாக இருந்தார்கள். வீட்டுக்கு ஒரு குட்டி குட்டி கோயில்களை கட்டிக்கொண்டார்கள். அதானாலேயே எங்களுக்கு பொதுவாக இருந்த கோவில் திருவிழாவின் போது, அம்மன் ஊர்வலமாக வந்தால் சண்டை சச்சரவுகளை தாண்டிதான் எங்கள் புதிய வீடுகளுக்கு வரவேண்டும்.

காலப்போக்கில் பல மாற்றங்களை எங்கள் இரு குழு வீடுகளும் சந்தித்ததன.

தோட்டத்தில் இருந்த பால்மரங்களெல்லாம் அழிக்கப்பட்ட போது, பால்மர தொழிலாளியாக இருந்தவர்கள் தொழிற்சாலை தொழிலாளியானார்கள். பழைய வீட்டுக்கு அருகில் இருந்த தோட்டம் மட்டும் கொஞ்சம் அப்படியே இருந்தது. அங்கும் சில பேர்தான் பால்மர தொழிலாளியாக இருந்தார்கள். பழைய வீடுகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் லாரி ஓட்டுகின்றவர்களாவே இருந்தார்கள். தோட்ட வேலை இல்லாத பட்சத்தில் லோரி ஓட்டுனர்களின் சிலர் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வேன் ஓட்டுனராக மாறினார்கள்.

வேன் ஓட்டுனர்களாலேயே பல குடும்பங்களில் சண்டைகளும் பிரிவுகளும் ஏற்படத்தொடங்கின. அப்போதெல்லாம் வேன் ஓட்டுகின்றவர்கள்தான் ஹீரோக்கள். நல்ல சம்பளம். நல்ல உடை. எப்போதும் �����ீவப்பட்ட தலைமுடி. காலையிலேயே வேன் முழுக்க வேனோட்டியின் வாசனை. குறிப்பாக பெண்களை மட்டுமே வேனில் ஏற்றி செல்லும் வேனோட்டிகளால்தான் பிரச்சனை என பேச்சு எழுந்தது.

முன்னேச்சரிக்கையாகவே சில வீட்டில் வட்டிக்கு கடன் வாங்கக்கூட சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். காலையிலேயெ சைக்கிளில் செல்ல வேண்டும். வேனில் வேலைக்கு போகிறவர்கள் காலை ஐந்து முப்பதுக்கு எழுந்தால், சைக்கிளில் செல்பவர்கள் காலை நான்கு மணிக்கெல்லாம் எழ வேணும். பள்ளி செல்லும் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் படும்பாடு பாவம்.

வேனோட்டிகளோடு ஓடிப்போனவர்களும் உண்டு. ஆனால்; ஒரு மாதம் கூடா ஆகியிருக்காது; அந்த பெண் திரும்பிவிடுவார். இதன் ஆதாரக் காரணம் அந்த வேனோடிதான். வேன் ஓட்டி சம்பாதித்த பணமெல்லாம் ஒரு மாதகாலம் வேலையில்லாத போது உதவும். தொடர்ந்து மற்ற எந்த வேலை செய்தாலும் அவர்களுக்கு ஒத்துவராது, பணமும் போதாது. சக வேனோட்டுகளுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. ஒருவர் இல்லாத , போக முடியாத சூழலில் மற்றொரு வேன்காரர் அங்கே செல்வார்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்தாலும், கணவன் மனைவியை ஒதுக்கி தள்ளுவதில்லை. சில வீடுகளில் மட்டும் வெட்டு குத்து வரை போய்விடும். பின் எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துவிடுவார்கள்.

ஆனால் அதன் பிறகு சைக்கிள் உறுதி.

பள்ளி மாணவிகளும் இதில் விதிவிலக்கல்ல. ஓடிப்போன இடைநிலைப்பள்ளி மாணவிகள் அதிகம். இந்த ‘ஓடிப்போன’ சொல்லுக்கு அர்த்தம் எங்கோ கண்ணுக்கு தெரியாத தூரமெல்லாம் இல்லை. தங்கள் வீட்டில் இருந்து அந்த வேனோட்டியின் வீட்டிற்குத்தான். மனைவியை ஒரு மாதம் கழித்தும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள் தங்கள் பெண்பிள்ளைகளை ஒரு வார ஆனாலும் வீட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மகளை பிரிந்து வரும் துன்பத்தைவிட மனைவியை பிரிந்து வரும் துன்பம் அதிகம் போலும்.

காலை நேர பள்ளிக்கு மாணவர்களை கொண்டு செல்லும் வேன்கள், அந்த இளம் இருட்டில் எல்லா மாணவர்களையும் இறக்கிவிடுவதில்லை. விடியும் வரை அந்த வேன் தனியே நின்றுக் கொண்டிருக்கும். வாய்ப்பு இருந்தால் ஆங்கிலப்படக் காட்சிகளையும் பார்க்கலாம். அதற்கு கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். அந்த வேன் நின்றுக் கொண்டிருக்கும் இருட்டான இடத்திற்கு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பதுங்கி பதுங்கி போகவேண்டும். முழுமையாகத் தெரியாவிட்டாலும் அரைகுறையாகவேனும் பார்த்திடலாம்.

சில சமயம் எங்களுடன் வரும் மாணவி ஒருத்தி மீண்டும் பள்ளி முடிந்து வேன் எங்களை கொண்டு செல்ல வரும் போது அதே இடத்தில் அமர்ந்திருப்பாள்.

இந்த வேனோட்டிகள் முன்னர் லோரி ஓட்டுனராக இருந்த போதும் பின்னர் வேனோட்டியாக இருக்கும் போதும் அவர்களில் வாகனங்கள் கண்டிப்பாக கழுத்தில் கம்பி அல்லது கயிறு கட்டப்பட்ட பொம்மை ஒன்று பரிதாபமாக தொங்கிக் கொண்டிருக்கும்.

இப்போது தோட்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நான் தாலைநகரில் வசித்துக் கொண்டிருக்கிறேன். என் முன்னே பொம்மைகள் இஷ்டத்துக்கு சாலையில் அங்கும் இங்கும் ஆடியபடி போய்க்கொண்டிருக்கின்றன. காரின் சக்கரத்திற்கு அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் பரிதாபமான அந்த பொம்மையை விட மக்கள் எனக்கு பரிதாபமாக இருக்கிறார்கள்.

ஏனெனில் அந்த கார் ஓர் அரசியல்வாதிக்குச் சொந்தமானது!

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768