முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  இளங்கோவன் பதில்கள்
- இளங்கோவன் -
 
 
 
 

நான் உங்களைப் பற்றி ஆனந்த விகடனின் படித்ததாக ஞாபகம். இணையத்தின் மூலம் உங்கள் ஆளுமை அறிய முடிகிறது. தாசிசியஸ் போலவோ, முத்துசாமி போலவோ நீங்கள் எங்களுக்கு அறியப்படாமல் போன காரணம் என்ன?

வசந்தமுல்லை - இலங்கை


சகோதரி, நீங்கள் குறிப்பிடும் ஆனந்த விகடனில், எவ்விதக் கடப்பாடும் இல்லாமல் என்னைப் பற்றி எழுதியவர், சாரு நிவேதிதா. முதலில் நீங்கள் குறிப்பிடும் சமரசவாதிகள் இருவரோடு என்னை ஒப்பிட்டது எனக்கும் என் படைப்புகளுக்கும் பெருத்த அவமானம். தமிழ் உலக அங்கீகாரத்துக்காக கூலிக்கு எதை எதையோ அடித்துக்கொள்ளும் தமிழ்க் கோமாளிகளின் வரிசையில் நான் அறியப்படாமல் போனதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தால் நைந்துபோவோம் என்பார்கள். எனவே, அன்புடன் வினாதொடுத்த உங்களுக்காக, கொஞ்சம் பொறை: -

[1992-ல், சிங்கப்பூரில், பேராசிரியர் சிவத்தம்பி என் ஊடாடி நாடகத்தை மூன்று மணி நேரம் அமர்ந்து பார்த்திருக்கிறார். 1993 -ல், சிங்கப்பூர் எழுத்தாளர் வார நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் சிவத்தம்பி, ஊடாடி நாடகம் உட்பட என்னுடைய வேறு சில நாடகங்களின் வீடியோக்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துக்காக எடுத்துச் சென்றிருக்கிறார். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் ஏதோவொரு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க நிகழ்வுக்கு தாசீசியசோடும், ஒரு புலி அநாமதேயத்தோடும் வந்த சிவத்தம்பி, சிங்கப்பூர்த் தமிழ்ச்சமூகத்தின் தன்மான சாமரம் வீசிகளுக்குத் தெரிந்துவிடாமல் இருக்க, தமிழ் முரசு லதா மூலம் என்னைத் தொடர்புகொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒரு வீட்டில் ரகசியமாகச் சந்தித்து உரையாடினார். அப்போது தாசீசியசும் உடனிருந்தார். "தம்பி! உன்னைச் சுற்றி தமிழ் எதிரிகள்! பார்த்துக்கொள்ளப்பா!" என்ற அவரது அன்பான சொற்கள் இன்னும் காதில் ஒலிக்கின்றன. ஆனால் 'பார்த்துக்கொள்ளப்பா' என்பதை நான் இன்றுவரை 'பார்த்துக்கொல்லப்பா' என்ற புரிதலோடு தயவு தாட்சண்யம் இல்லாமல் நிறைவேற்றி வருகிறேன்.]

[1989-ல், என் கலா மேற்பார்வையில் அரங்கேறிய தனது நாற்காலிக்காரர் நாடகத்துக்கு தலைமை தாங்க முதன்முதலில் சிங்கப்பூர் வந்த கூத்துப்பட்டறை நிறுவனர் ந .முத்துசாமி, தொடர்ந்து 1990-ல் சிங்கப்பூர் கலைவிழாவில் புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் ஒருவார தெருக்கூத்து நிகழ்வுகள், 1991-ல் அவரது உந்திச்சுழி நாடக அரங்கேற்றம், 1991-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் வாரப் பங்கேற்பு, 1998-ல் சிங்கப்பூர் கலை விழாவில் கூத்துப்பட்டறையின் இங்கிலாந்து மற்றும் மெக்பத் நாடகங்களின் அரங்கேற்றம் என்று பலமுறை வந்துபோயிருக்கிறார். 2003-ல் என் ஊடாடி நூலுக்கு ஒரு முன்னுரையும் தந்திருக்கிறார். 2002-ல் என் நூல் FLUSH -ம் 2003-ல் என் நூல் ஊடாடியும் கூத்துப்பட்டறையின் உதவியோடு சென்னையில் வெளியிடப்பட்டன. இன்று தமிழ்த் திரைப்படங்களில் வலம்வரும், களவாணி விமல், மைனா வித்தார்த், ஆரண்யகாண்டம் சோமசுந்தரம், அண்மையில் காலமான பட்டியல் திலீபன் போன்றோர் ஊடாடியின் 23 நிமிட புலிவேட்டை காட்சியில் நடித்துள்ளனர். கடந்த 23 வருடங்களாக கூத்துப்பட்டறைக்கும் எனக்கும் நல்ல பழக்கம்.]

[1990-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் வார நிகழ்வில் கலந்துகொண்ட நவீன நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதியும், 1992 முதலே சிங்கப்பூரில் அறிமுகமான நாடகப் பேராசிரியர் இராமானுஜமும் இன்றுவரை மனதுக்கினிய நண்பர்கள்தான்.]

[இன்னும் சுந்தர ராமசாமி (என் 'கோமாளி' நாடகத்தை சிங்கப்பூரில் அரங்கில் அமர்ந்துப் பார்த்திருக்கிறார்), லண்டன் பாலேந்திரா, எஸ் பொன்னுத்துரை, மங்கை, இன்குலாப் (என் Flush நாடகத்தை சிங்கப்பூரில் அரங்கில் அமர்ந்துப் பார்த்திருக்கிறார்) இத்யாதி இத்யாதி என்று நான் அடுக்கிக்கொண்டே போகலாம்.]

ஆனால் ‘சத்தியமாக’ இவர்கள் யாருக்குமே நான் யாரென்று தெரியாது. இவர்களையும் தாண்டி, என்னைத் தெரிந்துகொண்டு ஆகப் போவது என்ன? எரிமலைக் குழம்பு, ஏந்தவரும் கரங்களுக்காக சலாம் போடுவதில்லை. விடுங்கள்.


உங்கள் நேர்காணலை வல்லினத்தில் வாசித்தேன். மன்னிக்க வேண்டும் உங்கள் ஒரு நாடகம் கூட பார்க்கமால் கேள்வி எழுப்புவதற்கு. உங்கள் நாடகத்தின் தனித்துவம் என்ன?

கிம்மா – துபாய்


கும்பல், கூட்டம், கரகோஷம், மாலை, பொன்னாடை, பணமுடிப்பு, விருது போன்ற மானங்கெட்ட தமிழ் சமூகத்தின் வாந்தியை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நக்காமல், அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது. அதிகாரத்தின் கதைப்பைக் கட்டுடைப்பது. அடக்கி வாசிக்காமல் எல்லாவித அடக்குமுறைக்கும் எதிராக அறச்சீற்றத்தோடு அறைவது. என்றென்றும் தனித்திருப்பது. தைரியமாக தனியே நடப்பது.


உங்கள் சமகால எழுத்தாளர்கள் அதிகாரத்தின் முன் கூனிக்குறுகி நிர்ப்பதைப் பார்க்கும் போது எவ்வாறு உணர்கிறீர்கள்?

நரேன் – மலேசியா


ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. 96 விழுக்காடு, சூடு சுரணையற்ற சிங்கப்பூர்-மலேசிய சமகால இலக்கியவாதிகள், சிங்கை மலேசிய அதிகார பீடங்களுக்கு வாய்த்த நல்ல அடிமைகள். முதுகெலும்பற்றுப்போனாலும், சிந்தனை காயடிக்கப்பட்டிருந்தாலும், தமிழன்னையின் பாவாடை வாசத்தைச் சுவாசித்தாலே போதும், இவர்கள் பரவசமடைந்து மொண்ணைத் தமிழ் புனைவிலக்கிய வேட்டி/சேலை தூக்கிக்காட்டுவது நம் இனத்திற்கே பெருமை சேர்க்கும் விடயம். யூதப் பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. ஆட்டின் முன்னும், குதிரையின் பின்னும், அதைவிட ஒரு கேடுகெட்ட மூடனின் எல்லாப் பக்கங்களிலும் மட்டும் நெருங்கவே நெருங்காதே.

கண்ணதாசன் கவிதையும் ஆனந்தக் கண்ணீர் சுரக்க வைக்கிறது:

'சோற்றுக்கலைகின்ற நாயைப் பிடித்ததை சொர்க்கத்தில் வைத்தாலும், அது நாற்ற மலம் தின்னப் போகுமென்பதை நாமறிவோம் நெஞ்சே, நன்னெஞ்சே, நாமறிவோம் நெஞ்சே...'


உங்களைப் பற்றி உயிர்மையில் வாசித்துள்ளேன். வாழ்த்துகள் ஐயா. நீங்கள் உங்கள் நாடகங்களை நாங்கள் பார்க்கும் வகை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் எவ்விதம் உதவலாம்?

எஸ்.பாலகிருட்டிணன் – சென்னை


என் நாடக நூல்களை வாங்கி வாசித்தாலே போதும். 11 நாடகத் தொகுப்புகள், தமிழிலும், ஆங்கிலத்திலும் இணையத்தில் கிடைக்கின்றன:- www.selectbooks.com.sg/ & www.earshot.com.sg & www.booksactually.com

தொழில்நுட்ப வசதி அனுமதித்தாலும், எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காக என் நாடகங்களை இணையத்தில் பதிவேற்றும் எண்ணம் தற்போது இல்லை. இனிமேல் முயற்சிக்கலாம். பார்ப்போம்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768