முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  சுவடுகள் பதியுமொரு பாதை... 22
-  பூங்குழலி வீரன் -
 

 

ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது - ராணி திலக் கவிதைகள்

கடந்த 2012 முழுவதும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் குறித்த பகிர்வினை சுவடுகள் பதியுமொரு பாதையில் பகிர்ந்துவந்தேன். 2013 தொடங்கி இணையத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் தனித்துவமிக்க சில கவிதைகள் குறித்த பகிர்வினைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தோடு இம்மாத பதிவினைத் தொடங்குகின்றேன். இணையத்தளத்தில் வாசிக்கக் கிடைத்த ராணி திலக்கின் “ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது” என்ற கவிதைக் குறித்த பகிர்தலோடு இம்மாத கவிதைச் சுவடுகள் தொடங்குகின்றது.

ஆர். தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராணிதிலக், 1972-ல் வேலூரில் பிறந்தவர். 90-களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கவிதைத் தொகுப்பான நாகதிசை 2004-லிலும் இரண்டாவது தொகுப்பான காகத்தின் சொற்கள் என்ற உரைநடைக் கவிதை தொகுதி 2006-லிலும், அதன்பின் விதி என்பது இலைதான் என்ற தொகுப்பும் வெளிவந்தன. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர், ஸங்க்ராந்த், தனுஷ் என்ற பெயர்களிலும் கவிதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் பாலி என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார். (ராணி திலக் நேர்க்காணல் - தக்கை காலாண்டிதழ்)

ஜவுளி நிறுவனம் என்ற உடனே எனக்கு இப்பொழுதெல்லாம் நினைவிற்கு வருவது அங்காடித் தெரு சரவணா ஸ்டோரும் அண்ணாச்சியும்தான். வண்ண வண்ண ஜவுளிகளைத் தாண்டி - அதை அழகழகாக எடுத்துக் காட்டி நம்மை வாங்க வைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை வெளிக்கொணர்ந்து அதிர்வினை ஏற்படுத்திய படம்தான் அங்காடித் தெரு. ஒரு சேலை எடுக்க எத்தனை சேலையைப் பிரித்துப் பார்ப்போம் - அதை மீண்டும் மடித்து வைக்க தானே வேலைக்கு ஆட்கள் என்று வசனம் பேசுபவர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். அப்படியான ஒரு ஜவுளி நிறுவனம் குறித்ததுதான் ‘ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது’ என்ற கவிதை.

ஆம் ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது
அந்த இரவில் யாரும் அதைப் பார்க்கவில்லை
கனவில் மட்டும் யாருக்கும் ஒலித்தது அதன் அகவல்தான்

மிக எளிமையாக தோற்றமளிக்கும் வரிகளிலான கவிதை. ஆனால், இந்த கவிதை சொல்லப்போகும் செய்தி அவ்வளவ எளிமையானதன்று. ராணி திலக்கின் கவிதைகளின் பலமே இந்த எளிமையில்தான் நிகழ்கிறது என்பேன் நான். ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது அதில் என்ன இருக்கிறது எனக் கேட்கலாம். மனிதர்களைக் கொல்கிற போதே கேள்வி கேட்காத நாம் மயில்களைக் கொல்கிற போது மட்டும் என்ன ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் ஆகிவிடவா’ போகிறோம். கவிதையின் அடுத்த கட்ட பரிமாணம் இது. எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் தன்னை எப்போதுமே புதுப்பித்துக் கொள்ளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் கவிதையின் கவிஞனின் அடையாளம்தான் இந்த கவிதை.

அவர்கள் தமது பேராலயத்தை விரிவாக்க எண்ணி
ஒரு தெருவை விலைக்கு வாங்கினர் பிறகு வீடுகளை

மிக சிறியதாய் ஒரு தோட்டத்திற்கு பக்கத்திலோ அல்லது ஏழைகள் பரம்பரை பரம்பரையாய் குடியிருக்கும் பகுதிகளின் பக்கத்திலோ தொடங்கப்படும் நிறுவனங்களின் அளப்பரிய வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். சிறியளவில் தொடங்கப்படும் அதன் வளர்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க காலக்கட்டத்தில் கிளை பரப்பி வேர் பரப்பி ஒரு பெரும் பரப்பளவையே விழுங்கி ஏப்பம் விடும் நிலையே நம்மைச் சுற்றி நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவர்களால் எப்போதும் வாங்கி விட முடிகிறது தான் நிலைக்கொண்டிருக்கும் இடத்தில் சுற்றுவட்டாரங்களை. தொடக்கத்தில் முரண்டுபிடித்தாலும் ஏதோ ஒரு புள்ளியில் நாம் விற்றுவிடுகிறோம் நமது அடையாளங்களை.

விரிந்த மைதானத்தில் ஓர் அரச மரம்
அதன் வயோதிகமே அதன் சாபமாக இருக்கக்கூடும்
ஆனால் அது அனுமதித்திருக்கிறது ஓரே ஒரு மயிலை
நிச்சயம் அந்த மயிலும் ஒரு அரச இலைதான்

இந்த கவிதையை நான் பலமுறை வாசித்தேன். ஏதோ ஒன்று இந்த கவிதையின் வசம் என்னை இழுத்திருந்தது. வாழ்வின் பெரும்பாலான சம்பவங்களோடு இக்கவிதையை நாம் தொடர்புபடுத்தலாம். இந்த கவிதையால் என்ன சொல்ல முடியும் என்ன செய்து விட முடியும் என்று எண்ணுபவர்கள் அப்படியே எண்ணிக் கொள்ளலாம். இந்த எழுத்தினால் பயனொன்றும் இல்லை எண்கின்றவர்கள் கூட அப்படியே இருக்கலாம். இக்கவிதை என்னை பத்துமலை அருகில் அடுக்குமாடி கட்ட முனைந்தவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. சிறுபான்மை இனத்திற்கெதிரான பெரும்பான்மை சமூகங்களில் எழுத்தில் கொண்டு வராத எண்ணற்ற அவலங்களைப் படம்பிடித்துக் காட்டியது. மேம்பாடு என்ற பெயரில் இயற்கையை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் பண முதலைகளில் முகமூடி கிழித்துக் காட்டியது.

அரசமரத்திற்கும் பழமைக்கும் எப்போதுமே தொடர்புண்டு. அதன் புனிதத்தன்மை குறித்தும் நிறைய கதைகள் கூறப்படும். ஆனால், பணத்திற்கும் விரிவாக்கத்திற்கும் முன்னாள் எதுவுமே கணக்கில் எடுக்கப்படுவதில்லை. ‘நிச்சயம் அந்த மயிலும் ஒரு அரச இலைதான்’ என்ற வரிகள் நிகழ்காலத்தை மிக அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.

அது வனமாக இருக்கும்போது ஒரு மயில் போராடியது
அவர்கள் அதன் தோகையைப் பிய்த்து எறிந்தனர்
அது ஆண்மகனின் ஆண்மையை அழிப்பதற்கு
ஒத்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
பிறகு கழுத்தை நெருக்கிக் கொன்றனர்

ஒரு தேர்ந்த கவிஞனால் மட்டுமே எழுத்தில் கொண்டு வர முடிந்த விசயம் இது. ஆபாசம் என்று கூட பட்டிமன்றம் நடத்துவர் சிலர். இங்கு அதுவல்ல செய்தி. கவிஞரின் தீர்க்கமான கருத்து அது. “அது ஆண்மகனின் ஆண்மையை அழிப்பதற்கு ஒத்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்” என மிக நுணுக்கமான ஒரு விசயத்தை முன் வைக்கிறார் ராணி திலக்.

ஆடைகளின் பேராலாயத்தின்
கட்டிடம் அரச மரத்தை விட இப்போது உயர்ந்திருக்கிறது

எல்லா நிகழ்வுகளும் அதனதன் போக்கில் நடந்தபடியே தான் இருக்கின்றன. ஒரு மயிலைக் கொன்று தடம் தெரியாமல் புதைத்து விட்டு எழுந்துவிட்டது ஓர் ஆடைகளின் பேராலயம். இங்கு மயில் என்று ஓர் அடையாளம். எண்ணற்ற உயிர்களை, உணர்வுகளை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் ஒற்றை அடையாளம்.

அந்த பேரழிவுமிக்க ஆலயத்தின்
உள்ளே எப்போதும் ஓர் அகவல் ஒலித்துக்கொண்டிருப்பதும்
கட்டிடத்தின் எல்லா தளங்களும் நீலநிறமாகிக்கொண்டிருப்பதும்
ஜவுளி நிறுவனத்திற்கு அல்லாதவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்
எனவே ஒரு மயில்
அந்த நிறுவனத்தை இப்போது கொன்றுகொண்டிருப்பது
நிச்சயம் பகலில்தான்.

நடந்துமுடிந்துவிடுகிற ஓர் நிகழ்வென்பது, அதோடு முடிந்து விடுவதில்லை. நிகழ்ந்துவிட்ட அந்த நிகழ்வின் எதிர்வினையாக இன்னொரு நிகழ்வும் நடந்தபடியேதான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அந்த எதிர்வினை நிகழ்வு முக்கியத்துவம் பெருவதில்லை. அந்த எதிர்வினைச் சார்ந்ததுதான் மேற்காணும் வரிகள். மிக நுணுக்கமாக அரிதான எதிர்வினை இது. தான் சொல்ல நினைத்ததை எந்தவொரு சமரசமுன்றி சொல்லிச் செல்கிறார் ராணி திலக. இதனாலேயே இக்கவிதை முக்கியத்துவம் பெருவதாக நான் நினைக்கிறேன்.
அந்த முழுக்கவிதை இதுதான்:-

ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது

ஆம் ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது
அந்த இரவில் யாரும் அதைப் பார்க்கவில்லை
கனவில் மட்டும் யாருக்கும் ஒலித்தது அதன் அகவல்தான்
அவர்கள் தமது பேராலயத்தை விரிவாக்க எண்ணி
ஒரு தெருவை விலைக்கு வாங்கினர் பிறகு வீடுகளை
மீனாட்சியம்மை எதிரில் அவளின் பரந்த இதயம்போல்
விரிந்த மைதானத்தில் ஓர் அரச மரம்
அதன் வயோதிகமே அதன் சாபமாக இருக்கக்கூடும்
ஆனால் அது அனுமதித்திருக்கிறது ஓரே ஒரு மயிலை
நிச்சயம் அந்த மயிலும் ஒரு அரச இலைதான்
எனவே அவர்கள் அந்த மைதானத்தை வளைத்துப்போட்டார்கள்
பிறகு அரச மரத்தினை வெட்டத் துவங்கினார்கள்
அரச மரம் விழும்போது அது அந்தியாகியிருந்தது
அது வனமாக இருக்கும்போது ஒரு மயில் போராடியது
அவர்கள் அதன் தோகையைப் பிய்த்து எறிந்தனர்
அது ஆண்மகனின் ஆண்மையை அழிப்பதற்கு
ஒத்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
பிறகு கழுத்தை நெருக்கிக் கொன்றனர்
அதன் இரத்தம் தரையில் பரவியபோது இரவாகிவிட்டிருந்தது
ஆடைகளின் பேராலாயத்தின்
கட்டிடம் அரச மரத்தை விட இப்போது உயர்ந்திருக்கிறது
பல கிளைகள் அழிக்கப்பட்டு
பல தளங்கள் உருவாக்கப்பட்டன
பல இலைகள் கழிக்கப்பட்டு
பல அறைகள் உருவாக்கப்பட்டன
என்றாலும்
அந்த பேரழிவுமிக்க ஆலயத்தின்
உள்ளே எப்போதும் ஓர் அகவல் ஒலித்துக்கொண்டிருப்பதும்
கட்டிடத்தின் எல்லா தளங்களும் நீலநிறமாகிக்கொண்டிருப்பதும்
ஜவுளி நிறுவனத்திற்கு அல்லாதவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்
எனவே ஒரு மயில்
அந்த நிறுவனத்தை இப்போது கொன்றுகொண்டிருப்பது
நிச்சயம் பகலில்தான்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768