முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  காவியத் தமிழே கணினியில் பேசவா... 2
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் -
 
 
 
 

ஆமைக் கணினிகளின் ஊமை நயனங்கள்

கணினிகளில் மேசைக் கணினி இருக்கிறது. மடிக் கணினி இருக்கிறது. பரிமாறிக் கணினி இருக்கிறது. மிகைவேக கணினி இருக்கிறது. தத்தல் கணினி இருக்கிறது. இப்போது கைப்பேசிக் கணினியும் வந்துவிட்டது. இது என்ன ஆமைக் கணினி. இப்படி ஒரு கணினி இருக்கிறதா? அந்த ஆமைக் கணினிகள் நயனங்கள் பேசுமா? நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது. கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

இந்த ஆமைக் கணினி இருக்கிறதே, இதை எல்லோருமே பார்த்து இருக்கலாம். பழகி இருக்கலாம். தொட்டுத் தடவியும் இருக்கலாம். அதுதான் ஆமைக் கணினி என்று தெரியாமலேயே, அதன்மீது அதிமதுர மொழிகளை அள்ளி வீசி அர்ச்சனைகளையும் செய்து இருக்கலாம்.

ரொம்பவும் அறுக்காமல் விசயத்திற்கு வருகிறேன். மன்னிக்கவும். அதற்கு முன்னால் இன்னும் ஒரு சின்ன அறுவை. என்ன செய்வது. எல்லாமே அறுவையாகிப் போய் வரும் காலத்தில், அவ்வப்போது சின்னச் சின்ன அறுவைகளைப் போடவில்லை என்றால் அப்புறம் அந்த அறுவைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இப்போது இல்லை என்றால் அடுத்து ஒரு ’சான்ஸ்’ கிடைக்குமா, தெரியவில்லை. கணினி தொடர்பு உடையது. சுயபுராண சுப்ரபாதம் இல்லை. என் வீட்டு மெல்லிய காதல் கதை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்தது. இரண்டு வருட இறுக்கமான காதல் 18 வயதில் தொடங்கியது. அப்புறம் அந்தக் காலத்து வழக்கப்படி, கல்யாணத்தில் போய் முடிந்தது. இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போய் அமேசான் காட்டில் விட்டது மாதிரி இருந்தது. இருவருக்குமே இருபது வயது. என் கையிலே ஒரு சொர்க்கத்தின் தேவதையைக் கொடுத்துவிட்டு போய்ட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய காலம் அது. இந்திர புராணம் எழுதிய காலச் சுவடுகள் இன்னும் மறையவில்லை. இன்னும் அடித்து வைத்து ஆலாபனைகள் செய்கின்றன.

இப்போது எட்டு பேரப் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியாகி நிற்கிறோம். இரண்டு பேருக்கும் வயதாகி விட்டது என்று சொல்லவில்லை. வயதாகி விட்டது என்று சொன்னால், அப்புறம் என் வீட்டுக்காரியின் முகத்தில் சுருக்கம் விழும். ஆக வேண்டாமே.

சரி. அப்போது நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்த அதே அமேசான் காட்டுச் சொர்க்க தேவதையை மறுபடியும் இப்போது பார்க்க முடியுமா. முடியாது என்று நீங்கள் சொல்கிறீர்களா. முடியும் என்று நான் சொல்கிறேன். மனது வைத்தால் முடியும். செய்ய வேண்டிய பரிகாரங்களை ஒழுங்காக, முறையாகச் செய்தால், எல்லாம் சரியாகவே அமையும்.

அறுபது வயது கிழவியை இப்போதும் சரி எப்போதும் சரி, இருபது வயதிலேயே பார்க்கலாம். பார்க்க முடியும். நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பழகிக் கொண்டும் இருக்கிறேன் இல்லையா. அந்த அமேசான் காட்டுத் தேவதை, அ���ே அழகு கோலத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலான வசீகரத்துடன் இன்றும் சுற்றி சுற்றி வருகிறது. ஆனால் என்ன, இந்திர புராணம் பாடுவதோடு கந்த புராணத்தையும் சேர்த்துக் கொள்கிறது. ரொம்ப மாற்றம் இல்லை. வயதையும் பார்க்க வேண்டும் இல்லையா.

அதே மாதிரிதான் இங்கே இந்த ஆமைக் கணினியும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய கணினி, இப்போது அடுப்பாங்கரை பக்கம் பாய் விரித்துப் படுக்கிறது என்றால் என்ன பொருள். ஆமை வேகத்தில் நகர்வதால் அதை ஆமைக் கணினி என்கிறோம். அவ்வளவுதான். சரி. ஒரு நடனப் பேரொளியாக இருந்தது, ஏன் எப்படி நத்தையின் சித்தியானது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நன்றாக ஆடிக் கொண்டு இருந்தவள் ஏன் இப்படிச் சொத்தையாகச் சிணுங்குகிறாள் என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து, அதையே சால்சாப்பு காட்டி, ஒரு சின்ன வீட்டைச் ’செட்டப்’ செய்யவது என்பது எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை.

உங்கள் கணினியை ஒரு பெண்ணாக, ஒரு பூவாக நினைத்துப் பழகுங்கள். காட்டுமிராண்டித் தனத்தை அங்கே காட்ட வேண்டாம். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். கணினியின் முன் உட்காருவதற்கு முன்னால், அதை கை எடுத்து கும்பிட்டுவிட்டு, அப்புறம்தான் தட்டச்சுப் பலகையையே தொடுவேன். அதை சரஸ்வதியின் நிலையில் வைத்துப் பார்க்கிறேன். துதிக்கிறேன்.

வேகம் வேகமாக இருந்த கணினி ஏன் இப்படி ஆமை மாதிரி நகர்கிறது என்றால், அதன் உள்ளே அடைந்து கிடக்கும் குப்பைகள்தான் காரணம். இட்லர் காலத்து இடியப்பக் கத்தையில் இருந்து, இடி அமீன் சுட்ட இட்லி வரையிலான படங்களைச் எல்லாம் சுருட்டி சுருட்டிக் கணினிக்குள் வைத்து திணித்தால், பாவம் அந்த கணினிதான் என்ன செய்யும். வாயில்லா ஜீவன்.

மூச்சு முட்டி செத்துக் கொண்டு இருக்கும் அந்தக் கணினியின் மீது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்ப்பதில் அர்த்தமே இல்லை. முதலில் அந்த குப்பைகளை அகற்றி விடுங்கள். அதற்கு உயிர்க் காற்றைக் கொடுங்கள். அப்படியே செத்தாலும் நல்லபடியாக, கொஞ்சம் சந்தோஷமாகச் சாகட்டும்.

C Cleaner Free எனும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, கணினியை முதலில் சுத்தம் செய்து விடுங்கள். அந்த நிரலி கிடைக்கும் இடம்: http://www.piriform.com/ccleaner/download

அதே இடத்தில் Defraggler எனும் இன்னொரு நிரலியும் கிடைக்கும். இந்த நிரலி கணினியின் வன்தட்டில் உடைந்துபோன தரவுகளை அடுக்கிக் கொடுக்கும் வல்லமை கொண்டது. இதற்கு ஓர் உவமையைச் சொல்கிறேன்.

ஒரு நூல்நிலையத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள். அடுக்கி வைக்க இடம் இல்லை என்று, அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஒரு திடலில் கொட்டிவிட்டார்கள். நூல்கள் அங்கோர்வாட் கணக்கில் மலை மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. அந்த இமயக் குவியல்களில் ‘நூறு வயது வரை வாழ்வது எப்படி’ எனும் தமிழ்வாணன் எழுதிய நூலை மட்டும் எடுத்துவா… அஞ்சே அஞ்சு நிமிசம்… என்று ஒரு வேலைக்காரனிடம் சொல்கிறீர்கள்.

போன வருசம் போனவன் இன்றுவரை திரும்பவில்லை. அதே மாதிரி நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று எழுதிய தமிழ்வாணனே ஐம்பது வயதில் போய்விட்டார். அந்த மாதிரி வேலைக்காரனும் போய் இருப்பானா என்று கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை.

அந்த நூல்களை எல்லாம் முறையாக அடுக்கி வைத்து இருந்தால் பிரச்னையே வந்து இருக்காது. ஐந்தே நிமிடங்களில் அழகாக எடுத்து வந்து கொடுத்து இருப்பான் இல்லையா. அவனுக்கும் வேலை எளிது. உங்களுக்கும் மனதில் நிறைவு.

கணினிக்கும் அதே மாதிரியான நிலைதான். இன்னும் ஒரு விசயம். உள்ளே இருக்கும் தரவுகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும். Defraggler என்றால் நொறுங்கிப் போனதை ஒட்டி வைத்தல் அல்லது சேர்த்து வைத்தல் என்று பொருள். அதாவது உடைந்து போன தரவுகளை, ஆவணங்களைச் சீர்படுத்துதல் என்பதைத்தான் Defragmentation என்று சொல்வார்கள்.

http://www.piriform.com/defraggler/download எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. அதையும் பதிவிறக்கம் செய்து கணினியின் ஆவணங்களைச் சீர் செய்து அடுக்கிவிடுங்கள். கணினிக்குப் பத்து வயது குறைந்து போய் இருக்கும். அதாவது ஐம்பது வயது கிழவியை நாற்பது வயது நயன்தாராவாக மாற்றி இருக்கிறோம். இந்த வயது போதுமா. இன்னும் வேண்டுமா. குறைக்க வேண்டும் என்றால், அதற்கும் வழிகள் உள்ளன.

இப்போது சொல்லப் போவதுதான் மிகவும் முக்கியமான விசயம். கணினியைச் சுத்தம் செய்துவிட்டோம். கணினியின் கோப்புகளை நல்லபடியாக அடுக்கி வைத்துவிட்டோம். ஆனால், கணினியின் பதிவகத்தில் நிறைந்து போய்க் கிடக்கும் அசடு அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டாமா.

இலையைப் போட்டு, சாதத்தைப் போட்டு, சாம்பாரையும் ஊற்றியாகிவிட்டது. அங்கே கொஞ்சம் தயிர், ஊறுகாய், ரசம், கீரைப் பச்சடி, வெங்காயச் சட்ணி, வெந்தய குழம்பு என்று வைத்தால் எப்படி இருக்கும். சும்மா சொல்லக்கூடாது. கடைசியில் வாழை இலையே வயிற்றுக்குள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

கணினியின் பதிவகத்தில் கணினியின் ரகசியங்கள் அனைத்தும் பதிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும். அதாவது கணினியின் C Drive, Windows இல் கணினியின் ரகசியங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். கணினியில் இருந்து ஒரு நிரலியை (Program) அப்புறப்படுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலி மட்டும்தான் அழிந்து போய் இருக்கும். ஆனால், அந்த நிரலியின் பதிவுகள் கணினிக்குள் உள்ளேயே இருக்கும்.

அடுத்து அடுத்து நிரலிகளை நிறுவதல் செய்வதும் நீக்கல் செய்வதுமாக இருந்தால், கணக்கு வழக்கு இல்லாமல் நிரலியின் பதிவுகள், கணினியின் பதிவகத்தில் அடைந்து போய்க் கிடக்கும். அவற்றை சுத்தமாக அழித்துவிட வேண்டும். இல்லை என்றால் கணினியை ஐஸ்வரியாக மாற்றி அழகு பார்க்கும் உங்கள் எண்ணம் உஹூம்… நடக்காது. இருந்தாலும் பரவாயில்லை. ஔவையாரின் தனித்தன்மைகள் அப்படியே பழையபடி இருக்கும்

இதற்கும் ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் Glary Utilities. நல்ல ஒரு நிரலி. அதை http://www.filepuma.com/download_glary_utilities_254/ எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் கொள்ளளவு 9.8 MB. நீங்கள் நிறுவல் செய்யும் போது The Glarysoft Toolbar எனும் இணைப்பைச் சேர்க்கலாமா என்று கேட்கப்படும். வேண்டாம் என்று தவிர்த்துவிடுங்கள். இந்த நிரலி உங்கள் கணினியில், பழைய தேவை இல்லாத பதிவுகளை எல்லாம் சுத்தமாகக் களைந்துவிடும். அதன் பின்னர் பாருங்கள். உங்கள் கணினியின் வயது 30க்குள் நளினம் பேசும். இன்னும் அழகு சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி கணினியை இருபது வயசு இடுப்பழகியாகப் பார்க்கலாம். அந்த இரகசியங்களை அடுத்த முறை பார்ப்போம்.

சரி. அமேசான் காட்டு நினைவுகள் வந்துவிட்டன. அந்த கிரக்கத்தில் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன். அதுவரை அழகான எண்ணங்களும் அழகான சிந்தனைகளும் நளினமான ஆழ்கடலில் உண்மையான நயனங்களைப் பேசட்டும். (குறிப்பு: மேலே சொல்லப்பட்ட நிரலிகளை நிறுவல் செய்யும் போது சிக்கல்கள் வரலாம். அப்படி ஏற்பட்டால் என்னுடைய 012-4347462 எனும் கைப்பேசிக்கு அழையுங்கள். உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.)

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768