முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  காமேக் புகான் ஓராங் சிதோக்... 22
- நோவா -
 
 
 
 

ரூமா பாஞ்சாங்

கப்பிட் பலரின் கனவை நொறுக்கிய நகரம். பலரின் எண்ணங்களை சிதைத்த நகரம். இன்னும் சிலரை தனிமையில் வாட செய்த நகரம்.கை நிறைய சம்பாதித்தும் அதை அனுபவிக்க வாய்ப்பு இல்லாத நகரம். காரணம் அப்பகுதி காடும் அதை சார்ந்த இடங்களுக்கு எல்லைகளாக நதிகளும் இயற்கையாகவே அமைய பெற்றதால் நம்மை போல் அங்குள்ளவர்களால் இஷ்ட படி நினைத்த இடத்திற்கு செல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் படகையே எதிர்ப்பார்த்து வாழும் ஒரு சூழ்நிலை. இருந்தும் பணி நிமித்தம் அங்கு வாழ வேண்டிய நிர்பந்தம். இது தான் கப்பிட்டில் வாழும் வெளிநகரவாசிகளின் நிலை.

நாங்கள் ஏறிய படகு பிற்பகல் 3.00-க்கு கப்பிட் துறைமுகத்தை அடைந்ததில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி. என்னுடன் படித்த சில தோழிகளுக்கு கப்பிட் பணித்துறையாக கிடைத்திருந்தது. நாங்கள் வருவதை அவர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தோம். எனவே என் தோழி எங்களுக்காக காத்திருந்தாள். அதுவும் எங்கள் சீபூ தோழியின் வாயிலாகவே தெரிவித்திருந்தோம். சொன்ன நேரத்துக்கு சரியாக காத்திருந்தாள் எங்கள் தோழி.

பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அறிமுகமான இந்த நட்பு கூச்சிங் தாண்டி கப்பிட் வரையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு குறிப்பிட்ட பாடங்களை நாங்கள் எடுத்திருந்தாலும் அனைத்துமே அறிவியல் கிளை பாடங்களாய் இருந்ததால் அவ்வப்போது அறிவியல் கூடங்களில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பின் வாயிலாக எங்கள் நட்பு துளிர்த்திருந்தது. அந்த நட்பு கப்பிட் வந்து இன்னும் உறுதியானதாக மாறி விட்டது என தான் சொல்ல வேண்டும். அதோடு எங்கள் நண்பர் வட்டாரமும் கொஞ்சம் வளர்ந்து விட்டது எனத்தான் சொல்ல வேண்டும்.

அன்றைய பொழுது எனக்கு மறக்க முடியாத பொழுது. சில இனிமையான தருணங்களை அளித்த பொழுது. கப்பிட் சென்று சேர்ந்ததும் ஒரு வாடகை வேன்னில் ஏறி எங்கள் தோழியின் வீட்டுக்கு (வாடகை வீடு தான்) சென்றோம். செல்லும் வழியெங்கும் அழகான இயற்கை தோற்றத்தை நிரம்ப ரசிக்க முடிந்தது. அதுவும் 5 நிமிடங்கள் தான். அதாவது துறைமுகத்துக்கும் அவள் வீட்டுக்கும் வெறும் ஐந்தே நிமிடங்கள் தான் நேர வறையரை. நாசிக்குள் இழுத்த மூச்சு நல்லா கூட இன்னும் விட்டு முடிக்க வில்லை.. அதற்குள் வீட்டு வாசல்படியில் நின்றோம். நாமெல்லாம் நினைத்து கொண்டிருப்பது போல் வீடு காட்டிலும் இல்லை; மேட்டிலும் இல்லை; மரத்து மேலும் இல்லை. ஒரு சமனமான பள்ளத்தில் இருந்தது. புதிய வீடமைப்பு பகுதி. அழகான செமிடி வீடுகள். சுத்தமான சுற்றுசூழலில் கட்டப்பட்டிருப்பது போல தோற்றமளித்திருந்தது. ஏறக்குறைய ஒரு நூறு வீடுகள் அங்கே இருந்தன. இங்கே நகரங்களி இருக்கும் வீடுகள் போல தன் அவயும் இருந்தன. எந்த மாற்றமும் இல்லை.

வீட்டினுள்ளே எங்களின் வருகை மேலும் ஐவரால் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் வரவேற்கப்பட்டது. அவர்களிம் மேலும் மூவர் எங்கலுடன் படித்தவர்கள் தாம். 2 வருடங்களுக்கு அப்பால் மீண்டும் சந்தித்ததில் அனைவருக்குமே பெரிதும் மகிழ்ச்சி. எங்கள் வருகையை முன்னிட்டு சமைத்து வேறு வைத்திருந்தனர். பயணக்களைப்பு தீர குளித்து விட்டு முதலில் சாப்பிட்டோம். பின்னர் ஒரு மணி நேரம் குட்டி தூக்கம். அது கூட சரியாக இல்லை. கோழித்தூக்கம் போல பேசி கொண்டே உறங்கிவிட்டோம். உறக்கம் நீங்க மணி மூன்றாகி விட்டது. அதற்குள் அத்துண குறுகிய நேரத்தில் என் தோழி ஒரு வேன் ஓட்டுனரை அழைத்து இன்ன இன்ன இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறி ஒப்பந்தம் செய்து விட்டிருந்தாள். அவசர கதியில் எல்லருமே அதாவது எங்களுடன் சேர்ந்து அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு முக்கியமான இடத்துக்கு சென்றோம். போகும் வழி மேடும் பள்ளமுமான வழி. நிஜமாக உடலும் மனமும் விண்ணுக்கும் மண்ணுக்குமாக குதித்து குதித்து அலுத்து போனது. சரளை கற்களான சாலை. குழிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் அந்த வேன் படும் உறுதியாக இருந்தது. அதனால் தான் இங்கே நான்கு சக்கர வண்டிகள் அதிக பயன்பாட்டில் இருக்கின்றன. சாலைகள் படும் மோசமாக இருந்தன. இருந்தும் சென்று கொண்டே இருந்தோம் நிற்காமல். இடையிடையில் நாய்கள் தரிசனம் அதிகபடியாக இருந்தது. என்னை இறங்கி நடக்க சொன்னால் கண்டிப்பாக நடக்கவே மாட்டேன். காரண்ம் காரில் சென்ரால் கூட நாய்கள் விடாமல் விரட்டுகின்றன. அதுவும் பெரிய வகை காட்டு நாய்கள்.

சென்று கொண்டே இருந்தோம். எங்கு செல்கிறோம் என்பதை மட்டும் என் தோழிகள் சொல்லவில்லை. ஒரு 30 நிமிட பயணத்துக்கு அப்பால் நாங்கள் வந்து சேர்ந்த இடம் 130 வருட பாரம்பரியம் மிக்க ஈபான் இன நீண்ட வரிசை வீடுகள். ரொம்பவும் பழமையான புண்டோங் நீண்ட வீடு (Rumah Panjang Bundong). இதுவரை நீண்ட வீடுகளுக்களுக்குள்ளே செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. முன்னாள் சோகோ பிடாயூ கம்பத்துக்குள் கூட அந்த வாய்ப்பு கிட்ட வில்லை. ஆனால் இங்கே கேட்காமலேயே கிடைத்து விட்டது (அதுக்கு தான் அங்கே உள்ளவர்களின் அறிமுகம் மிக மிக அவசியம் என்று சொல்றது)

ரூமா பஞ்சாங் புண்டோங் அங்கிருந்தவர்களின் கூற்று படி 130 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது. அதன் உள்வாயிலுக்கும் வெளிவாயிலுக்குமே ஒரு 300 மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ஆனால் வேன் எங்களை கொண்டு சென்றதால் அந்த சிரமம் இல்லை. இருந்தும் உடனே அந்த வீடுகளுக்குள்ளே சென்று விட முடியாது. அந்த வீடுகளுக்கும் வாகனம் நிறுத்தும் இடத்துக்கும் ஒரு நீண்ட இடைவெளி உண்டாக்கும் வகையில் அகலமான ஆறு இருந்தது. எனவே வேனை இக்கரையில் நிறுத்திவிட்டு இனைக்க பட்டிருந்த இரும்பால் ஆன தொங்கு பாலம் மூலமாக அக்கறைக்குச் சென்றோம். அங்கேயும் மரப்படிக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் மேல்நோக்கி செங்குத்தாக அமைக்கப்ப்ட்டிருந்தன. பழமையின் வாசத்தை மிகவும் நுண்மையாக என்னால் அங்கே உணரமுடிந்தது. கோழிகளும் நாய்களும் தோழமையோடு இருப்பது போல தெரிந்தது. (ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை). எத்தனையோ தலைமுறையின் தடயங்கள் அங்கே விட்டு செல்லப்ப்ட்டிருந்தன.

படிகளின் மேலே ஏறிசென்றதும் அந்த வீட்டின் துவாய் ரூமாவின் மகன் ஜாக்கின் என்பவரோடு அறிமுகம் கிட்டியது. அவர் தான் அந்த வீட்டின் மூலை முடுக்கு எங்கும் அழைத்து சென்று பல விபரங்களை தெரிவித்தார். அங்குள்ளவர்களின் முதன்மை தொழில் பன்றி வேட்டை தான். ஒரு முறை காட்டுக்குள் சென்றால் பன்றியில்லாமல் வெளியே வரமாட்டார்களாம். அதோடு கூட காட்டு பரவைகளும் அவ்வப்போது உணவாக மாறுவதுண்டு. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்த பறவை ஹோர்ன்பில் எனப்படும் வண்ண இருவாய்ச்சி. இது கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தால் அதன் அலகை வீட்டின் விட்டத்தில் காட்சிப்பொருளாக வைத்திருப்பார்கள். இப்பறவை சரவாக் மாநிலத்தில் அடையாளப் பறவையாகும். அப்ப்டி ஒன்று ஜாக்கின் வீட்டில் இருந்தது. முதல் முறையாக அந்த பறவையின் அலகை தொட்டு பார்த்து உணர்ந்தேன். மிகவும் கடினமானதாக இருந்தது அந்த பறவையின் அலகு. அதோடு வீட்டின் பின்புறம் மீன்வலைகள் காட்டு பன்றியின் பற்கள் என வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து வீட்டின் சமையலறையில் வந்தால் பழைய அடுப்பும் கேஸ் லைட்டும் கூட இருந்தது. மேலும் தொடர்ந்து வரவேற்பு கூடத்துக்குள் சென்றதும் அங்கே நம் வீடுகளைப் போலவே தொலைக்காட்சி விடியோ ப்ளேயர் என எல்லாமே இருந்தன. ஆஸ்ட்ரோவும் பொருத்தப்பட்டிருந்தது. அதோடு கூட பழைய இரும்பு தப்படைகள் இருந்தன. இது வெறும் வீட்டின் கீழ்பகுதி தான். மேல்பகுதிக்கு செல்லும் படி குறுகலாக அமைக்கப்பட்டிருந்தது.( ஒருவேளை உடல் பருமனாக கூடாது என்பதை ஊக்குவிப்பதற்காக தான் அவ்வாறு அமைத்திருக்கிறார்களோ என்னவோ). அதற்கு தகுந்தாற் போல எல்லாரும் சிறிய உடல்வாகு கொண்டவர்களாகவே இருந்தனர். இருப்பினும் நாங்கள் யாருமே மேலே செல்ல வில்லை. செல்வதும் அவ்வளவு மரியாதையில்லை அல்லவா.

இன்னும் கொஞ்சம் வெளியே வந்தோம். அது ருவாய் தாமு எனப்படும் வெளிவரவேற்பு கூடம். இங்கே தான் எல்லா கொண்டாட்டங்களும் நடைப்பெறும். அது ஒரு திறந்த கூடம். இதைப் பற்றி ஜாக்கின் கூறுகையில் இங்கே தான் ஙாஜாட் எனபடும் பாரம்பரிய நடனம் கூட ஆடுவார்களாம். இந்த நடனத்தின் போது ஒரு ஆண் அதிகப்பட்சம் 30 கிலோ இரும்பை அல்லது மரக்கட்டையை பல்லால் இழுத்து எடுத்தது உண்டாம். அது மட்டுமல்ல. அக்காலத்தில் இங்கே தான் இறந்த ஆன்மாக்களுக்கு பூஜை நடைபெறுமாம். ஈபான் மக்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார்கள் மனித தலைகள் உட்பட. அப்படி கொய்யப்பட்ட மனித தலைகள் நடுக்கூடத்தில் பாய்களால் சுற்றப்பட்டு மேலே கட்டி வைக்க பட்டிருந்தன. ஏதோ ஒரு முக்கிய காரணம் கருதி ஜாக்கின் அவற்றை அவிழ்த்து காட்ட மறுத்து விட்டார்.

உள்ளே சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்தோம். உள்ளே வரும் போது எதுவும் சரியாக நான் கவனிக்க வில்லை. ஆனால் வெளியில் வந்து பார்த்த போது சின்னஞ்சிறு தலைகள் எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தன. அங்கே பெரும்பாலும் முதியவர்களும் சிறுவர்களும் தான் அதிகமாக இருந்தனர். இளைஞர்கள் எதிர்காலம் கருதி வெளியூர்களுக்கு சென்று விட்டதாக ஒரு குறைபாடும் நிலவியது என் காதிலும் விழுந்தது. அந்த சிறுவர்களில் என் தோழிகளின் மாணவர்களும் இருந்ததால் அவர்களுடனான உறவு மேலும் சுலபமாகி விட்டது. அவர்களுடம் பேசி விளையாடி கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் என்னவோ கூட்டமாக இருந்தது. என்ன என்று கேட்கையில் அது இன்னும் மூன்று நாட்களில் வரவிருந்த அமாவாசையன்று கொண்டாட போகும் காவாய் அந்தூ நாளுக்கான தயாரிப்பு என ஜாக்கின் சொன்னார். அது என்ன காவாய் அந்தூ? அதாவது இரந்து போன முன்னோர்களின் ஆத்துமாக்களை இளைப்பாற்றி செய்ய கோழி அல்லது பன்றிகளை பலிக்கொடுத்து பூஜை செய்வார்களாம். சரி என்ன தான் நடக்கும் என இன்னும் கொஞ்சம் நான் மட்டுமே அருகில் சென்று பார்த்தேன். ஒரு இடத்தில் மீன் ஆய்ந்து கொண்டிருந்தார் ஒரு குறுக்கு மாராப்பு மாது. இன்னொரு இடத்தில் ஒரு பானையில் மீன் குடலும் செதிலும் கொதித்து கொண்டிருந்தது, அதன் பக்கத்தில் ஐந்தாறு ஆடவர்கள் தாப்பாய் (அரிசியினாலான மது வகை) அருந்தி கொண்டிருந்தனர். எனக்கும் அளித்தனர். பழக்கம் இல்லாத காரணத்தால் மரியாதையாக தவிர்த்து விட்டேன். அப்போது தான் இங்கே மீனின் குடலையும் செதிலையும் பண்படுத்தி திண்பண்டம் செய்யும் பழக்கம் உண்டு என்பது எனக்கு தெரிந்தது. என் வாழ்நாளில் இதை நான் கேள்வி பட்டதே இல்லை. அதன் அருகாமையில் நாளை மறு நாள் கழித்து பலியிட ப��கும் கோழியை கட்டி வைத்திருந்தனர். அதோடு மட்டுமல்ல, காவாய் அந்தூ நாளை முன்னிட்டு இங்கே சேவல் சண்டையும் மிக மிக பிரசித்தி. ஆனால் எங்களால் தான் காண இயலவில்லை. காரணம் மறுநாள் காலை கப்பிட்டை விட்டு கிளம்ப போகிறோம். வீடுகளின் மரச்சட்டங்கள் பலவற்றை பறைச்சாற்றி கொண்டிருந்தன. ஈரம் படர்ந்த பாசிகள் அதன் மேல் இருந்த மழழை கலந்த எழுத்துக்கள் காயவைத்திருந்த பள்ளி காலணிகள் என எல்லாமே எனக்கும் சின்ன சிலிர்ப்பை ஏற்படுத்தி விட்டன. இவையனைத்தையும் எனக்கு ஒரே நாளில் காண கிட்டியது. இத்தனைக்கும் அங்கே நாங்கள் இருந்தது மூன்றே மணி நேரம் தான். ஆனால் கண்ணுக்கும் மனதுக்கும் நிறையவே உணவு கிடைத்தது. அங்கிருந்து வெளியேற மனது வரவே இல்லை. ஆனாலும் மனம் நிறைய நினைவுகளை நிரப்பி அங்கிருந்த சிறுவர்களிடமிருந்து விடைபெற்று சென்றோம்.

அன்றிரவு அங்கேயே ஸ்கூட்டரில் கப்பிட் நகரத்தை சுற்றி பார்த்து (நல்ல வேளை எனக்கு லைசன்ஸ் இருந்தது) அதுவும் லேசான மழையில் நனைந்தவாறு சுற்றி விட்டு நசுக்கிய கோழி சோறு (ஹா ஹா ஹா நேரடி மொழிபெயர்ப்பு) அதாவது இங்கே நாசி ஆயாம் பேஞேட் என சொல்வார்கள், அதை சாப்பிட்டு விட்டு வீடு சென்று சேர்கையில் இரவு மணி 11. அதோடு உறங்கிவிட வில்லை. கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ‘மை கெர்ல்’-யும் பார்த்தோம். 4 தொடர்களை விடாமல் இரண்டு மணி நேரம் பார்த்ததில் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் என் அன்பு தோழிகளுடமிருந்து விடைப்பெற்று படகில் மீண்டும் ஏறியபோது மனசு லேசாய் பாரமாயிருந்தது. அன்றோடு எங்களின் கப்பிட் பயணமும் சீபூ பயணமும் ஒரு முடிவுக்கு வந்தது. உடலும் மனமும் லேசான களைப்போடு உறக்கத்தையும் உடன் வாங்கி வந்ததால் கூச்சிங் வந்தடைந்த போது பாதி கிணறை தாண்டி இருந்தோம் நாங்கள் மூவரும். மீண்டும் பழைய பணி வாழ்க்கை இன்னுமொரு விடுமுறையை எதிர்ப்பார்த்த படி தொடங்கியது.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768