முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அச்சில் ஏறாத உண்மைகள்... 5
- இரா.சரவண தீர்த்தா -
 
 
 
 

விருது, விருந்து, விரோதி

ஒவ்வொரு வருடமும் மலாக்கா ஆளுநரிடமிருந்து விருதுகளைப் பெறுவதில் பலருக்கு மகிழ்ச்சிதான். விருது பட்டியல் வந்து விட்டதா? யார் யார் பெயர் உண்டு? யாருடைய பெயர் விடுபட்டு விட்டது என்ற ஆவலில் பலர் தூக்கம் வரமாலேயே கூட மலாக்கா அராசங்க அலுவலகத்தை நோக்கி ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பர். இவர்களின் ஏக்கங்களுக்கு இடுக்கில் பத்திரிகை நிருபர்களும் பெயர் பட்டியலுக்காகத் தொங்கிக் கொண்டிருப்பர்.

விருது கிடைப்பவர்கள் எல்லாமே மாநிலத்திற்கும் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தமது அறிவின் கூர்மையை மொக்கையாக்கியவர்கள் போன்ற நினைப்பில் பத்திரிகை நிருபர்களைத் தேடத் தொடங்கி விடுவர். யார் யாரெல்லாம் பட்டம் பெற்றார்கள், அவர்களின் புகைப்படத்தோடு பத்திரிகைக்கு செய்தியை அனுப்பி விடுங்கள் என்று பத்திரிகை மேலிட கட்டளை ஒருபுறமிருந்தாலும் "அவர் நம்ம ஆள். நல்லா கவனித்துக் கொள்வார்" போன்ற போனஸ் அறிவிப்புகளும் உண்டு.

இன்னும் சிலரோ தமக்கு பட்டம் கிடைக்கபோகிறது என்ற செய்தியை மூடி மறைப்பதும் உண்டு. நல்ல செய்திதானே ஏன் மூடி மறைக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இங்கே ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். விருதுகள் கிடைப்பவர்கள் எல்லாம் விரும்பப் படுபவர்கள் அல்ல.

தமது தொகுதியில் சிபாரிசு செய்யப்பட்டவரை வேறொரு தலைவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். பிடிக்காதத் தலைவர் விருது வழங்கும் மேலிட அதிகாரத்தோடு நல்ல உறவு கொண்டிருக்கலாம். பிடிக்காத ஒருவருக்கு விருது கிடைப்பதை வாழ்த்தி விட்டு பிறகு விருது கிடைக்காமல் செய்த கழுத்தறுப்பு வேலைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதனாலோ என்னவோ இன்று விருதுகள் பெற ஒத்திகை அழைப்பு வந்தபிறகுதான் விருது கிடைத்த விவகாரத்தை வெளியிடுகிறார்கள்.

பி.ஜே.கே ஆனாலும் சரி டத்தோ ஆனாலும் சரி இப்போதெல்லாம் விருது கிடைத்தவர்கள் வீட்டில் தடால் புடால் விருந்து. இவர்களின் விருந்து நிகழ்சிகளில் ஏகப்பட்ட மாலை மரியாதையும், பாட்டிலும் கையும். இவரின் கோஷ்டி இன்னொரு கோஷ்டியைப் பற்றி பேசும். இன்னொரு கோஷ்டி இந்த கோஷ்டியைப் பற்றி பேசும்." எனக்கு விருதை வாங்கித் தரேன் என்று கூறி ஏமாற்றினான் அந்தத் தலைவன். ஆனால் இன்று இந்தத் தலைவன் எனக்கு விருதை வாங்கி கொடுத்திருக்கிறான்" என்று நன்றி கடன்களும் நன்றி கெட்ட கடன்களும் சுருண்டு கிடக்கும் நாவில் வாடையோடு வெளியாகும். இந்த வாடைகளை படம் பிடித்து பத்திரிகையில் போட நிருபர்கள் மத்தியில் நடக்கும் போட்டா போட்டிதான் சுவாரஸ்யமாக இருக்கும்.

போதையில் கொடுக்கும் பணத்தின் கனத்தை அறியாமல் கொடுப்பது நிருபர்களுக்கு விழும் லாட்டரி சீட்டல்லவா?

பட்டம�� பெற்றவர், விருந்து வைத்தவர், பிறகு விரோதியும் ஆகும் சந்தர்ப்பத்தையும் வழங்கும் சக்தி விருதுக்கு உண்டு என்பதை ஆதாரப் பூர்வமாக அறிந்த உண்மைகள் உண்டு. ஜாசின் தொகுதி தலைவருக்கு டத்தோ விருது கிடைக்கவில்லை. முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருக்கு டத்தோ வீரா பதவி கிடைக்கவில்லை.தேசிய இளைஞர் பிரிவு தலைவருக்கும் டத்தோ பதவி கிடைக்கவில்லை. இந்த மூவருக்கும் தேசியத் தலைவரின் சிபாரிசு பலமாக உள்ளது. இருந்தும் மலாக்காவில் தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் சேவை செய்து கொண்டுவரும் ஒருவருக்கு டத்தோ பட்டத்தை சிபாரிசு செய்த 'கரை' படியாத தலைவருக்கு தேசியத்திடமிருந்து அடி விழுந்துள்ளது. முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், ஜாசின் தொகுதி தலைவரும் தலைநகருக்குச் சென்று பட்டம் கிடைக்காத சோக முகத்தைக் காட்டி கருணை பிச்சை கேட்டுள்ளனர். மேலும் டத்தோ விருது கிடைத்தவர் எதோ 'சம்திங்' தலைவருக்கு தள்ளியிருப்பார் என்ற வதந்தியையும் கிளப்பி விட்டிருப்பவர்களும் உண்டு. முதன் முதலில் தகுதிக்கும் சேவைக்கு டத்தோ பட்டம் கிடைத்திருக்கிறது என்று பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களும் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இப்படியொரு குளறுபடி பட்டத்துப் பைத்தியங்களால். இந்த செய்தி மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று எழுதிய செய்தி கடுமையானதாக இருக்கிறதென்று செய்திப்பிரிவில் விமர்சனத்துக்கு உள்ளானதால் அந்தச் செய்தியை கத்தரித்து மீண்டும் அனுப்பியுள்ளேன். உண்மை சுடும், கடுமையானதாகத்தான் இருக்கும் என்று நாம் உணர்ந்திருந்தாலும் எதிர்தரப்ப்புப் பெயரைக் காப்பாற்ற சில வேளைகளில் நாம் எழுதுவது அடிப்பட்டு போய்விடுகிறது.விருந்தில் கலந்து கொண்டு, மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு செய்தியை கலரில் போடுகிறேன் என்ற நிருபரின் வாக்குறுதி சிலவேளைகளில் நிறைவேறாமல் போகும்பொழுது நிருபரையும் எதிரியாகப் பார்க்கும் சூழ்நிலையும் உண்டு.

பட்டம் பெற்றவர்களுக்கு அள்ளி வீசப்படும் விளம்பரங்களால் குளிர் காய்ச்சலே வந்துவிடும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு. பட்டம் பெற்றவர் தெரிந்தவரானால் கோடி விலை விளம்பரமும் கோச முட்டை விலைதான். விளம்பரங்களின் மூலம் கமிஷன் பெற்று வயிறு பிழைக்கும் நிருபருக்கு இது பெருத்த ஏமாற்றம்தான். அந்தந்த மாநிலங்களில் பெறப்படும் விளம்பரங்களை அந்தந்த நிருபரின் பெயருக்கு தர்மம் செய்தால்தான் என்ன? எதிர்காலத்தை செதுக்க முடியாத துறையில் அன்றாட வாழ்க்கையாவது வாழ வழி விடலாமே? இது நடக்குமா என்று கேட்டால் தெரியாது என்ற பதில்தான். ஆனால் பட்டம் யாருக்கு கிடைத்தது என்ற பட்டியலை அலசிப்பார்த்தால், இவருக்கா? இவருக்குப் போயா? குடும்பமே வரிசையாய் வாங்குது பாருயா? இவனுக்கு பட்டம் போதலையா? கெஞ்சி கூத்தாடி காலுல விழுந்தாவது வாங்கி சாதிச்சுட்டான் வெக்கம் கெட்டவன் என்று கேட்கும் அளவுக்கு நடக்கக்கூடாத, நடக்க முடியாத விசயங்கள் எல்லாம் விருது நடத்திக் காட்டியுள்ளது.

நிருபர்களுக்கு ஆசை இருந்தால் சாமரம் வீசுங்கள் கிடைக்கும். ஆனால் பாசாக்கடையில் வைக்க முடியாது.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768