முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை
- அ. மார்க்ஸ் -
 
 
 
 

காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெரிகிறது.

காந்தியின் பல கொள்கைகள் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. தண்டனைகளே கூடாது என்றால் எப்படி? அதனால்தான் அவரது கொள்கைகளை இன்று யாருமே பொருட்படுத்துவது இல்லை. அவர் உயிருடன் இருந்தபோது அவர் கட்சிக்காரர்களே அவரது பேச்சைக் கேட்டதில்லை. அவர் இறந்த பின் அவரது ‘வாரிசு’களாகக் கருதப்பட்டவர்கள் புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் உதாசீனப் படுத்தியது முதலில் அவரது கொள்கைகளைத்தான். நாம் உட்பட யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்போம்.

ஏன்? இன்றைய சமூக நடைமுறைகளுக்கு அவை பொருந்தாது என்பதுதான்.

ஆனால் இந்தப் பிரச்சினையை இப்படி உடனடி நடைமுறை சார்ந்து பார்க்காமல் தர்க்க பூர்வமாகப் பார்த்தால் என்ன ஆகும்? “இன்றைய நடைமுறைக்கு ஒன்று பொருந்தாது” என்கிற எடுகோளை எடுத்துக் கொள்வோம். அப்படியானால் “இன்றைய நடைமுறையை”ச் சரி என ஏற்றுக் கோள்கிறோமா? நமது நோக்கம் இன்றைய நடைமுறைகளை, இன்றைய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வதுதானா? நிச்சயமாக இல்லை. இன்றைய நடைமுறையும் அமைப்பும் மாற்றப்பட வேண்டியவை என்கிறபோது, இன்றைய நடைமுறைக்கும் அமைப்பிற்கும் பொருந்தாது என்பதற்காக ஏதொன்றையும் கைவிடுவது என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

இந்த எளிதில் விடை கூற இயலாத கேள்வியை நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நடைமுறையில் இருப்பவர்கள் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

குற்றம், சட்டம், தண்டனை ஆகியவற்றிலும் நாம் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சட்டங்கள் இல்லாவிட்டால் சமூக ஒழுங்கு சிதையும். வலுவானவர்களிடமிருந்து எளியவர்களைக் காக்க சட்டங்கள் தேவை என்பதுதான் சட்ட ஒழுங்கு நிறுவனங்கள் முன்வைக்கும் நியாயம். ஆனால் சமூக மாற்றம் என்கிற நோக்கில் இயங்குபவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். சட்டங்களின் நோக்கம் என அவர்கள் நேரெதிரான ஒரு கருத்தை முன் வைப்பார்கள். அவர்களின் கருத்துப்படி சட்டங்கள் என்பன எளியவர்களிடமிருந்து வலியவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களாலேயே உருவாக்கப்பட்டவை. உண்மைதான். சொத்துரிமை என்கிற சட்டத்தை எடுத்துக் கொள்வோமே. ஏராளமான நிலங்களையும், மூலதனத்தையும் வைத்துக் கொண்டு சுரண்டிக் கொழுப்பவர்களைச் சுரண்டப்படுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் சொத்துரிமை குறித்த சட்டங்களின் நோக்கம்.

சரி, சட்டங்களே வேண்டாம் என ஒதுக்கினால் என்ன ஆகும்? அது எளியவர்களை இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளாதா? நூறு ஏக்கர் நில��ுள்ள ஒருவன் அருகிலுள்ள இரண்டு ஏக்கர் நிலமுடைய ஒருவனது நிலத்தை ஆக்ரமித்துக் கொள்வதையும், ஒரு கார்பொரேட் நிறுவனம் தனது தேவைகளுக்காக விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொள்வதையும் சொத்துரிமை என்கிற சட்டம் இல்லாத சூழல் எளிதாக்கிவிடாதா? இன்னொரு எடுத்துக்காட்டு இந்த நிலையை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது தலித் மக்களை அதிகாரத்திலும் எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக உள்ள உயர் சாதியினரிடமிருந்து தலித் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்க நமக்குத் தேவையாக இருக்கிறது. இதை வேண்டாம் எனச் சொல்லிவிட இயலுமா?

இதுபோன்ற சிலவற்றைச் சுட்டிக்காட்டித்தான் சட்டங்கள் எல்லாமே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே உள்ளன என்கிற கருத்து மிக எளிதாகப் பொதுப்புத்தியில் பதிக்கப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் என்ன பார்வையைக் கொண்டிருக்க முடியும்? எவ்வளவுதான் சட்டங்கள் ஊறுமிக்கவையாக இருந்தபோதிலும், வலியவர்களைப் பாதுகாப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தபோதும், சட்டங்கள் இல்லாத நிலை எளியவர்களைப் பொருத்தமட்டில் இன்னும் மோசமானதாக இருக்கும். எனவே சட்டங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அவற்றின் சமூக உள்ளடக்கங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான சட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்த கடும் விமர்சனச் செயற்பாடுகளை நாம் எந்நாளும் கைவிட்டுவிட முடியாது.

அதேபோல ஒரு சமூக அமைப்பிற்குள் சட்டம் வன்மையாகச் செயல்பட வேண்டுமானால் அது அச்சமூகம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் சட்டங்கள், குற்ற வரையறைகள் என்பன பல்வேறு வேறுபாடுகள் நிறந்த ஒரு சமூக முழுமைக்கும் ஒரேபோல இருக்க இயலாது. ஒரு சமூகப் பிரிவினரது அற மதிப்பீட்டில் குற்றமாகக் கருதப்படுவது இன்னொரு சமூகப் பிரிவினரில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். எனினும் ஒரே சீரான சட்டத்தொகுதியும் நமக்குத் தேவைப்படுகிறது. எனவே இந்தச் சீரான சட்டத் தொகுதி எல்லோருக்கும் நியாயம் செய்வது இல்லை, அப்படி இல்லாதவரைக்கும் அது குறைபாடுடைய சட்டத் தொகுப்புதான் என்கிற புரிதலும் குற்ற உணர்ச்சியும் சட்டத்தைக் கையாள்பவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் சிந்திக்கிற, நீதி வழங்கு அனுபவமிக்க மனங்களிடமும் கூட அந்தப் புரிதல் இருக்காது என்பதுதான் பிரச்சினை. இச்சூழலில் நமது பணி அத்தகைய குற்ற உணர்வைத் திரும்பத் திரும்பச் சமூகத்தின் முன் வைத்துக் கொண்டே இருப்பதுதான்.

சட்டம் உருவாக்கும் தடைகளும் தண்டனைகளும் மட்டுமல்ல அது வழங்கும் தடையற்ற உரிமைகளும் கூட ஒரு ஏற்றத்தாழ்வான சமூகங்களில் வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம்கூட இப்படி வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். ஆக சட்டங்கள் எப்போதும் முழுமையற்றவை, குறைபாடுடையவை என்கிற உணர்வுடன் அவற்றைக் கையாளும்போதுதான் குற்ற விசாரணை நடைமுறையும் அது சார்ந்த நீதி மற்றும் தண்டனை வழங்கலும் மனிதாயப்படும்.

சில நேரங்களில் இது போன்ற தொடர்ச்சியான விமர்சனங்கள் விவாதங்கள், முன்னோடி முயற்சிகளின் ஊடாகவும் விளைவாகவும் சட்டங்கள் மேலும் மனிதாயப் படுதலை நோக்கி நகரும்; அதாவது திருத்தப்படும். சிலநேரங்களில் இத்தகைய மாற்றங்கள் நீதியியல் அடிப்படையிலான கொள்கை உருவாக்கங்களுக்கு (judicially evolved principles) இட்டுச் செல்லும். முன்னதற்கு எடுத்துக்காட்டாக இந்தியக் குற்ற நடைமுறைச்சட்டத்தில் 1973ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைச் சொன்னால், இரண்டாவதற்கு எடுத்துக்காட்டாக பச்சன் சிங் வழக்குத் தீர்ப்பைச் சொல்லலாம். கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை கட்டாயம் எனவும் அதற்குக் குறைவாக, அதாவது ஆயுள் தண்டனை கொடுத்தால் அதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டும் என்பது பிரிட்டிஷ் காலச் சட்டம். அதாவது மரண தண்டனை விதி, ஆயுள் தண்டனை விதி விலக்கு. 1973ல் இது தலை கீழாக மாற்றப்பட்டது. அதாவது ஆயுள் தண்டனை விதி, மரண தண்டனை விதி விலக்கு. எனவே மரண தண்டனை கொடுத்தால் காரணங்கள் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு என்கிற வழக்கில் இந்திய உச்ச நீதி மன்றம் “அரிதினும் அரிதான வழக்குகளில்” மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனவும், அப்படி அளிக்க நேரும்போது அதற்கான சிறப்புக் காரணங்களைச் சொல்லவேண்டும் எனவும் புதிய நீதியியல் கொள்கையை உருவாக்கியது.

எனவே “சட்ட வழமை” (legal order) என்பது சமூக வளர்ச்சியினூடாக வளர்சியுற்று வருகிறது. ஆனால் அது தன்னிச்சையாக வளர்ச்சி பெறுவதில்லை. “சமூக அற ஒழுங்கின்” (normative order) எதிரொளிப்பாகவே அது நடைபெறுகிறது. நடைமுறையில் குறைபாடுகள் இருந்தபோதும் சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரியான விழுமியங்களையே ‘சமூக அற ஒழுங்கு’ அல்லது ‘சமூக விழுமியத் தொகுதி’ என்கிறோம். சட்ட வழமைக்குப் பின்னால் இந்த சமூக அற வழமைத் தொகுதி உள்ளது. காலப்போக்கில் சமூக விழுமியங்கள் மேலுயர்கின்றன, மனிதாயமடைகின்றன, ஜனநாயகப்படுகின்றன. அதற்குத் தக சட்ட வழமையும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

ஒன்றை மனங்கொள்ளவேண்டும். இவ்வாறு சமூகத்தில் வளர்ந்து வரும் அற ஒழுங்கு அல்லது விழுமியத் தொகுப்பு என்பது பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களின் தொகுப்பு அல்ல. பெரும்பான்மையான மக்களின் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இன்னும் ஒரு உயர் தளத்தில் அற ஒழுங்கு (Normative Order) உருப்பெறுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்று. சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடு என்பது சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு வழமை. இங்குள்ள ஒரு பெரும்பான்மை மதத்தால் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் நமது சமூக அற ஒழுங்கில் (Normative Order) அதற்கு இடம் கிடையாது; அது ஏற்கத் தகாத ஒன்று. இந்த அடிப்படை நமது சட்ட வழமையிலும் ஏற்கப்பட்டு தீண்டாமை மற்றும் சாதி வேறுபாடு ஒரு குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம். இந்தச் சட்ட ஒழுங்கின் வலிமையும் நியாயப்பாடும் சமூக அற ஒழுங்கின் அடிப்படையிலேயே பெறப்படுகிறது. சட்ட விதிக்கு வேறென்ன மகத்துவம் இருக்க இயலும். அச்சில் எழுதப்பட்ட சட்ட விதியை மீறினால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? உண்மையில் குற்றச் செயல் என்பது சட்டத்தை மீறுவதல்ல. சமூக ஒழுங்கைச் சிதைப்பதாலேயே ஒன்றைக் குற்றம் என்கிறோம். அது சமூக விழுமியத் தொகுதியில் ஒரு கிழிசலை ஏற்படுத்துகிறது.

மேலே செல்வதற்கு முன் ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இந்தச் சமூக அற ஒழுங்கு என்பது சராசரியாகச் சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் இன்னொரு உயர்ந்த தளத்தில் இயங்கினாலும் இதுவும் கூட முழுமையானதோ குறைபாடற்றதோ அல்ல.

(1) மிக்க ஏற்றத் தாழ்வுகளும் குறைபாடுகளும் உள்ள ஒரு சமூகம்
(2) அதனினும் மேம்பட்ட விழுமிய வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் குறைபாடுகள் நிறைந்த ஒரு சமூக அற ஒழுங்கு,
(3) இதனடியாக வெளிப்படுகிற ஒரு சட்ட வழமை

ஆகியவற்றினூடே இங்கு குற்ற விசாரணை நடைமுறையும் தண்டனை வழங்கலும் செயல்படுகின்றன.

ஆக ஒரு குற்றச் செயல் என்பது இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அற ஒழுங்கு வரையறுத்துள்ள எல்லையை மீறுவது என்பதாகிறது. இந்தக் குற்ற நடவடிக்கையின் மூலம் யாரோ ஒருவர் அல்லது சிலர் பாதிக்கப்படுவது என்பதைக்காட்டிலும் இதன் மூலம் சமூக அற ஒழுங்கில் ஏற்படும் கிழிசலே கவலைக்குரிய.து உடனடியாகச் சரிசெய்யப்பட வேன்டியது. எந்தக் குற்றமும் அது திருடு, வன்புணர்ச்சி அல்லது கொலை எதுவாக இருந்தாலும் அது முதலில் சமூகத்திற்கு எதிரானது; இரண்டாவதாகத்தான் அது பாதிக்கப்பட்டவருக்கு எதிரானது என்பதை உலக அளவில் இன்றைய சட்டவியலும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தக் கருத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். சமூகத்தின் பிரதிநிதி என்பதாக அறிவித்துக் கொண்டு நீதி தேடும் முகமையாக அரசு இடைபுக இது வழிவகுக்கிறது என்பது இக் குறைபாடுகளில் ஒன்று. வன்முறையே வடிவமாக உள்ள ஒரு அரசு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் அப்பாவித்தனத்தின் பின் ஒளிந்துகொண்டு மேலும் ஒரு வன்முறைஐச் செய்ய இது வழிவகுக்கிறது. எனினும் இது பழிக்குப் பழி, இன்னொரு கொலை என்பதாகவெல்லாம் அமையாமல் நடந்த குற்றச் செயலின் மூலம் கிழிந்த அல்லது பாதிக்கப்பட்ட சமூக அற ஒழுங்கைச் சரிசெய்தல் என்பதை நோக்கி நீதி வழங்கலின் தளத்தை விரிவுபடுத்துகிறது.

ஒரு சிவில் குற்றத்திற்கும் (எ.கா: மோசடி) கிரிமினல் குற்றத்திற்கும் நீதி வழங்கலில் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. சிவில் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வது. கிரிமினல் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது சமூகத்திற்கு ஏற்பட்ட ஊறைச் சரிசெய்வது. கிரிமினல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்துவிடவும் முடியாது.

இந்த இடத்தில் பொது நீதிவழங்கல் (public justice) என்பதற்கும் பழிவாங்கு நீதி (retributive justice) என்பதற்கும் உள்ள வேறுபாடு கருதத் தக்கது. பொது நீதி வழங்கலில் பழி வாங்கலுக்கு இடமில்லை. குற்றச் செயலுக்குக் குற்றம் புரிகிறவன் மட்டுமே பொறுப்பல்ல; சமூகத்திற்கும் அதில் சம அளவு அல்லது சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்பதையும், அதேபோல குற்றச் செயலின் பாதிப்பு என்பது அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கே அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் பொது நீதிவழங்கல் ஏற்றுக் கொள்கிறது. எனவே அது குற்றச் செயலுக்குத் தனிமனிதனை மட்டும் பொறுப்பாக்குவதில்லை. எனவே அது அந்தத் தனி மனிதனுக்குத் தண்டனை வழங்குவதை மட்டுமே நீதி வழங்கலாக நினைப்பதில்லை. பொது நீதி அமைப்பு என்பது சமூகத்தின் பிரதிநிதியாக நின்று சமூகத்தின் அற ஒழுங்கில் ஏற்பட்டுள்ள ஊறைச் சரி செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. தான் பிரதிநிதிதுவப்படுத்தும் சமூகம் முழுமையானதல்ல. அது குறைபாடுகள் நிறைந்தது என்பதை உணர்ந்து செயல்படுகிறது. தனது பக்கம் குறைபாட்டை வைத்துக் கொண்டு அது எவ்வாறு மரண தண்டனை போன்ற ஒரு கொடுந்தண்டனையை வழங்க இயலும்?

நீதி வழங்கு முறையின் குறைபாடு அல்லது போதாமை (imperfection) என்பதை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் தமது முக்கிய வாதங்களில் ஒன்றாக முன் வைப்பர். எந்த நீதி வழங்கு முறையும் தவறுதலுக்கு அப்பாற்பட்டவை அல்ல, சட்டங்களுக்கு விளக்கமளிப்பது, தவறான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வது, தனிமனித விருப்பு வெறுப்புகளின் அடியாகச் செயல்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் தவறுதலாக மரண தண்டனை வழங்கப்பட்ட நிகழ்வுகளை இந்திய அநுபவங்களின் அடிப்படையிலும், உலக அளவு எடுத்துக்காட்டுகளின் மூலமும் நிறுவுவர். நாமும் சிலவற்றை முந்திய கட்டுரைகளில் பார்த்தோம். இந்த அடிப்படையில் திருப்பித் திருத்த இயலாத மரண தண்டனையை ஒருவருக்கு அளிப்பது என்ன நியாயம் என்கிற கேள்வியை அவர்கள் முன்வைப்பர். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் சமூக அற ஒழுங்குக் குறைபாடு என்பது இதிலிருந்து முற்றிலும் வேறானது என்பதை விளக்கத் தேவையில்லை.

வாய்ப்பு மறுக்கப்படுதல், மனித கண்ணியம் இழிவுக்குள்ளாதல், நீதி, சுதந்திரம் முதலியன பொருளற்றுப் போதல் என ஒரு சமூக மனிதன் அச் சமூகத்திலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் அந்நியப்பட்டுப் போவதற்குப் பல காரணிகள் உண்டு. ஆல்பர்ட் காமூ சொல்வதுபோல எல்லா மனிதர்களும் அடிப்படையில் சமூக ஒழுங்குகளை மீறக் கூடியவர்களாகவே உள்ளனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் positive law எனச் சொல்லும் கருத்தாக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். காமூவைப் பொருத்த மட்டில் சமூக அற ஒழுங்கிற்குப் பொறுப்பாக ஒரு குடிமகனை வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. மனிதனைச் ‘சமூக மிருகம்’ (social animal) என்னும் ஸ்பினோசாவின் கருத்துக்கு இது எதிரானது. சமூகத்துடன் ஒத்திசைந்து வாழ்தலே நல்லது என மனிதனின் பகுத்தறிவு அவனுக்குச் சொல்கிறது. எனவே அவன் சமூகச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் ஆகிறான் என்பது ஸ்பினோசாவின் கருத்தினடியாக வந்தடையும் முடிவு. காமூவின் கருத்துப்படி மனிதன் சமூக மிருகமல்ல. சமூக விதிகளை மீறுவதே அவனது இயல்பு. எனவே அவ்வாறு மீறாமல் வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. சமூகம் தன்னைக் குறைபாடற்றதாகவும் நீதியாகவும் அமைத்துக் கொள்ளாதபோது அவன் அதன் விதிகளிலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் பிறழ்வானேயானால் தவறு யார் பக்கம் இருக்கிறது? மனிதர் மீது பகுத்தறிவு ஒரு கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்றே கொன்டாலும் சமூக அநீதிகள் அந்தக் கட்டுப்பாடுகளை வலுவிழக்கச் செய்யக் கூடியவையாக உள்ளன.

ஆக,

(1) சமூக அற ஒழுங்கில் உள்ள குறைபாடு,
(2) சமூக அற ஒழுங்கிற்கும் எதார்த்தமாக உள்ள சமூக நிலைகளுக்கும் உள்ள முரண்பாடு,
(3) குற்றவாளியின் குறை

எனப் பல காரணிகள் குற்றச் செயலுக்குக் காரணமாகின்றன.

சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறையை எடுத்துக் கொள்வோம். ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணுடல் மீது செலுத்திய வன்கொடுமை அது. அதில் ஒரு சிறுவனின் பங்கு ரொம்பக் கொடூரமாக இருந்தது என்கிறார்கள். ஒரு சிறுவனுடைய உள்ளத்தில் இத்தனைக் கொடூரம் குடிபுகுந்தது எங்ஙனம்? அந்தச் சிறுவன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து நகரத்தில் வாழ நேரிட்டவன். அதன் மூலம் அவன் தனது சிறு பிராயத்தையும், குழந்தைமையையும், கல்வியையும் இழந்தவன். பள்ளி சென்று சக குழந்தைகளோடு வளர வேண்டிய சூழலில் பெரு நகரமொன்றில் அவனது வயதுக்கு மீறியவர்களோடு தனது சிறார் பருவத்தைக் கழிக்க நேர்ந்தவன். இத்தகையவன் இப்படி ஆனதன் பொறுப்பை அவன் தலை மீதே சுமத்துவது எப்படிச் சரியாகும்?

ஆனால் அதுதான் இப்போது நடக்கிறது. எப்படியும் அவனைத் தூக்கில் தொங்கவிட்டே ஆக வேண்டும் என்கிற திசையில் இன்று அரசு நகர்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை கூடாது என்கிற சட்ட விதியையும் மாற்றி அவனுக்கு மரண தண்டனை வழங்க முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் சமூக அற ஒழுங்கையும் அடு வளர்ந்து வந்த திசையிலிருந்து பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கிறது.

டெல்லி பாலியல் கொடுமையில் இன்னும் பல்வேறு அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேன்டும். ஒரு பெண் இப்படித் தன் காதலனோடு முன்னிரவு வரை சுற்றித் திரியலாமா என்கிற ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்து, இன்றைய சூழலில் ஒரு பெண் தன்னை ஒரு ஆளுமை மிக்க சமூக உயிரியாக முன்நிறுத்திக் கொள்வதைக் கண்ட மரபு வழிப்பட்ட ஆண் மனது துணுக்குறுவதிலிருந்து, சமூக ரீதியாக இன்று பெரு நகரங்கள் பிளவுற்றுக் கிடக்கும் சூழல் உட்பட டெல்லி வன்முறையின் காரணிகள் பல உண்டு. அதில் ஒரு காரணி மட்டுமே குற்றவாளிகளில் குவிந்திருந்ததாகக் கருதப்படும் வக்கிரம். சமூகம் தன்னிடம் இத்தனை குறைபாடுகளை வைத்துக் கொண்டு கொடுந்தண்டனை ஒன்றை எப்படிக் குற்றவாளிகளுக்குத் தர இயலும்?

சமூகம் குறைபாடுடையதாக இருக்கும் வரை அதில் கொடுந் தண்டனைக்கு இடமில்லை.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768