முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  டேவிட் : தமிழ் சினிமாவில் இன்னொரு திருப்பம்
- மீனா -
 
 
 
 

நடுத்தரவர்க்க சாதிப் பெருமையும் இந்துமதச் சார்பும் தமிழ் சினிமாவில் ஊடாடிக் கொண்டிருப்பது புதிதானதல்ல. எனினும் எண்பதுகளுக்குப் பின் வெளிவந்த ஒருசில திரைப்படங்களில் இந்த சாதி, மத ஆதிக்கக் கூறுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. குறிப்பாகக் காதலை மையப்படுத்தி வந்த பல்வேறு திரைக்கதைகள் இதைச் செம்மையாய்ச் செய்தன. சாதியப் பெருமைகளைப் பின்னுக்குத் தள்ளின. ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் ஊடாடி நிற்கும் இந்துமதச் சார்பு தொடர்ந்தது. இத்தோடு தொண்ணூறுகளுக்குப் பின் தொடர்ச்சியாக இஸ்லாம் மீது தீவிரவாத முத்திரை குத்தும் நிலை ஏற்பட்டது. நான் கடவுள், விஸ்வரூபம் போன்ற படங்களின் மூலம் கட்டமைக்கப்படும் புனிதம் * தீவிரவாதம் என்ற எதிர்வுகள் ஒருபுறம் இருக்க, சமீபத்திய கடல், பரதேசி படங்களின் மூலம் அடுத்த இலக்காக கிறிஸ்துவம் நிறுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படியான சூழலில் கடல் படத்தையொட்டி வெளிவந்து விமர்சகர்களால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத ‘டேவிட்’ படம் குறித்து விவாதிக்க வேண்டியது முக்கியமாகிறது.

‘டேவிட்’ : ஒரே பெயர்கொண்ட இருவேறு நபர்களின் வாழ்க்கைப் பின்னல். ஒருவர் மும்பை. இன்னொருவர் கோவா. இசைத்துறையில் ஆர்வம் மிக்க ஒரு கிடாரிஸ்ட் கலைஞனாக வரும் மும்பை டேவிட் (ஜீவா), எப்படியேனும் இசைத்துறையில் ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்று தனது ‘மிடில் கிளாஸ்’ நிலையை உயர்த்தத் துடிப்பவன்.

திருமண நாளன்று மணப்பெண் தன்னைவிட்டு ஓடிப்போனதால் ஒரு “bad luck personality” ஆகத் தன்னை உணர்ந்து மது, போதை அவற்றிற்கே உரித்தான ஊதாரித்தனம் ஆகியவற்றோடு “கிறுக்கு சாண்டாவாக” சுற்றித் திரிபவன் ‘கோவா’ டேவிட் (விக்ரம்). இவர்கள் இருவரின் வாழ்வில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் தான் கதையின் திருப்பம்.

ஒரு பெரிய மியூசிக் டைரக்டரான திரிலோக் சாருடன் ஒரு ‘Leading Guitarist’ ஆக உலக அளவில் பயணிப்பதற்கான அரிய வாய்ப்பு ஒன்று ஜீவாவிற்குக் கிடைக்கிறது. கனவுகளெல்லாம் வசப்பட்ட மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் நுழைகிற அதேவேளை, அவர்களது வீட்டை நோக்கி, ‘மதம் மாற்றாதே மதம் மாற்றாதே எங்கள் மதத்தை மாற்றாதே’ என்கிற முழக்கத்தோடு பெரும் கும்பலொன்று கையில் கொடிகளுடன் வருகிறது. திகைத்துப் போய் வெளியே வந்தால், அந்தப் பகுதி எம்.எல்.ஏ மாலதி தாய் தனது ‘கரசேவகர்கள்’ புடைசூழ நின்றுகொண்டு, ஜீவாவின் தந்தையும் கிறித்துவப் பாதிரியாருமான ஃபாதர் நோயல், கொடிய கலாச்சாரத்தை ஆயுதமாக்கிக் கொண்டு நமது மதத்தை அழித்துக்கொண்டிருக்கிறார் என்றும் தமது இந்து, முசல்மான் சகோதரர்களைக் கட்டாயப்படுத்தி லஞ்சத்தைத் திணித்து மதம் மாற்றுகிறார் என்றும் இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டுகிறார்.

கொந்தளித்துக் கொண்டிருந்த அவரது ‘சேவக் கும்பல்’ தாயின் கட்டளையை ஏற்று, ஃபாதர் நோயலை தரதரவென இழுத்துவந்து, செருப்புக்கால்களால் எட்டி உதைத்து, தலைமயிரை இழுத்து, முகத்தில் கரியைப் பூசி தனது வெறியாட்டத்தை நிகழ்த்துகிறது. வயது வந்த இரு மகள்களுக்குத் திருமணம் செய்விப்பதைப் பற்றிய கவலை கூட இல்லாமல் அன்பு, கருணை, கர்த்தரின் வாக்குகள் ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதையும், பாதிக்கப்படுகிற மக்களுக்காக சாதி, மதம் பாராது தனது சொற்ப சம்பளத்தைக் கூட அள்ளிக்கொடுப்பதையும் வாழ்க்கையாகக் கொண்ட தனது தந்தையை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு அசிங்கப்படுத்தியது டேவிட்டையும் அவனது தங்கைகளையும் நிலைகுலையச் செய்கிறது. டேவிட்டின் ‘world tour’ கனவு தவிடுபொடியாகிறது. தந்தைக்கு நேர்ந்த அவமானத்தை ஜீரணிக்கவே முடியாமல் ஏன் அவர்மீது இந்தக் குற்றச்சாட்டு வந்தது என்கிற தலை வெடித்துப் போகிற கேள்வியைச் சுமந்து கொண்டு தவிக்கிறான் டேவிட். அடிதடி, காவல்நிலையத்தில் புகார், வழக்குரைஞரிடம் ஆலோசனை என எந்தவழியில் சென்றாலும் “அரசியலில் இதெல்லாம் சகஜம்பா” என்பது மாதிரியான பதில்தான் கிடைக்கிறது. இறுதியாக எம்.எல்.ஏ மாலதியை நேரடியாகச் சந்தித்து, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? அப்பாவை அடித்ததன் காரணம் என்ன? என்று கேட்கிறான். “உங்கள் அப்பா நிரபராதியாகவே இருந்தாலும் நாங்கள் செய்தது சரி தான். இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று மாலதி தாய் பதில் சொல்ல, கொதித்துப் போகிறான். நடுரோட்டில் நின்று தனது ஆற்றாமைகளைக் கொட்டித்தீர்க்கிறான். அப்போது, ஏற்கனவே இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட ஒருவன், இவர்களைத் திருப்பி அடிக்கவேண்டும், அவர்கள் நம்மேல் கைவைப்பதற்கு முன் நாம அவங்க மேல கைவைக்கணும் என்கிறான். டேவிட்டிற்கும் இதுதான் சரியெனப்படுகிறது. மாலதி தாயின் கட்சிக்கூட்டம் ஒன்று பிரம்மாண்ட பொதுமேடையில் நடக்கிறது.டேவிட் முதல்வரிசையில் மாலதியைக் குறிவைக்கக் கத்தியோடு காத்திருக்கிறான்.

பெண்கள் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த கோவா டேவிட் (விக்ரம்), ரோமாவை முதல்முறை தரிசிக்கும் போதே காதல்வயப்படுகிறான். ரோமா, தனது நண்பன் பீட்டரின் காதலி என்பதும் அவள் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவருகிறது. ரோமா, நட்புரீதியாக கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொள்ளும் டேவிட், பணத்துக்காக பீட்டர் ரோமாவை ஏமாற்றுவதாக நினைத்துக்கொள்வதோடு, ரோமாவைக் காப்பாற்றித் தானே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் திட்டமிடுகிறான். அதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை. இறுதியாகத் தனது தோழி ஃபெனியின் ஆலோசனைப்படி திருமண நாளன்று, இவர்களின் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லித் திருமணத்தை நிறுத்தத் தயாராகிறான். ஃபெனி ஒரு ‘மசாஜ் பார்லர்’ வைத்திருப்பவள். பாலியல் தொழில் எனக் குற்றம் சாட்டப்பட்டு அடிக்கடிச் சிறை செல்ல நேர்பவள். தோன்றும் காட்சிகள் எதிலும் வசனம் ஏதுமின்றி அவர்களின் குழந்தையைச் சுமந்து திரிவான் அவளது கணவன்.

மும்பையும் கோவாவும் மாறிமாறி காட்சியாக்கப்பட்டுள்ள போதும் இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் நடப்பவை. மும்பை 1998 லும் கோவா 2010 லும் நடக்கிறது. இறுதியாக மாலதி தாயைத் தாக்குவதற்கு டேவிட் தயாராகும் போது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த நபர் மாலதியைக் குறிவைத்துத் தோள்பட்டையில் சுடுகிறார். மாலதி தாய் ஜீவாவின் முன்பு சரிந்து விழுகிறாள்.

கோவாவில் ரோமா, பீட்டர் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்தை நிறுத்துவதற்காகச் சொல்லவேண்டிய ‘டயலாக்’ குறிப்புகளுடன் டேவிட் தயாராக இருக்கிறான். கண்களால் அவனை ஊக்குவித்தவாறே ஃபெனி அங்கே அமர்ந்திருக்கிறாள். ஆனால் மணக்கோலத்தில் இருக்கும் ரோமாவும் பீட்டரும் பார்த்ததும் ஒருவரையொருவர் மனதார நேசிப்பதை உணர்ந்து தன் முடிவைக் கைவிடுகிறான். ஃபாதர் டேவிட், ஆமாம் மும்பையில் இருந்த அதே டேவிட் இப்போது ஃபாதராகி ரோமா,பீட்டர் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இரண்டு டேவிட்களும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். தந்தையின் எந்தப் பாதிரி வாழ்வை விமர்சித்தானோ அதே வாழ்வைத் தத்துவமாக ஒருவன் புரிந்துகொள்ள இன்னொருவன் மீண்டும் “கிறுக்கு சாண்டா”வாகி தமது பயணத்தைத் தொடர்கிறான். இருவரது வாழ்விலும் ஏற்பட்ட திடீர்த் திருப்பங்களின் ஊடாக அவர்கள் எடுத்த தீவிர முடிவுகள் நேரெதிராக மாறிவிடுகின்றன. அன்பும் கருணையும் வென்றுவிடுகிறது.

ஆக மதவன்முறை, அவமதிப்புகள், காதல் தோல்வி, சமூக ஏளனம் போன்ற எல்லா வலிகளையும் அன்பு, நேசம், மன்னிப்பு, ஊதாரித்தனம் போன்ற விழுமியங்களால் கடந்துபோவதும் பழியுணர்ச்சிகளைப் புறந்தள்ளி சகமனித நேசத்தை வளர்ப்பதும் தான் படத்தின் மையக்கரு என்பதாகக் கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிடலாம். ஆனால் திரைக்கதையமைப்பும் காட்சிகளும் வசனங்களும் போகிறபோக்கில் கொட்டித்தீர்க்கும் அரசியலை சில பத்திகளுக்குள் விளக்கிவிட முடியாது.

மும்பையின் கதைக்களம் இந்திய சமூகத்தில் இந்துத்துவ வன்மத்தை ஒரு அசாத்தியத் துணிச்சலுடன் பகிரங்கப்படுத்தியிருப்பதோடு இந்திய தேசத்தின் – ஒற்றுமையின், ஆகப்பெரும் எதிரிகளாக தலிபான், முஸ்லீம் தீவிரவாதிகளை மட்டுமே முன்னிறுத்தி தேசப்பற்றைக் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அயோக்கியத்தனங்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது. பிரச்சார நெடி இல்லாமல் அரசியலைக் கலைப் படைப்பாக்குவதும் கத்தியும் இரத்தமும் இல்லாமலேயே வன்முறையின் வலிகளை உணரச்செய்வதும் நுட்பமான பணி. அந்தப் பணியை ‘டேவிட்’ திறம்பட செய்திருக்கிறது.எந்தக் குற்றமும் செய்யாதவராக இருந்தும் தனது தந்தை அவமதிக்கப்பட்ட பிறகு, மண்டையைப் பிளக்கும் கேள்விகளுடன் மாலதிதாயின் அடியாள் (குஜராத் 2002 புகழ் பாபு பஜ்ரங்கியை நினைவுபடுத்தும்) ரானடேவைச் சந்திக்கும் போது, “உங்க அப்பனை அடிச்சதுக்குக் காரணம் பிஸினஸ்..வியாபாரம். ஒரு நல்ல வியாபாரிக்கு ஸ்டாக் தீராம பாத்துக்கணும். ஒரு நல்ல அரசியல்வாதிக்கு பிரச்சினை தீராம பாத்துக்கணும். இதெல்லாம் உன்ன மாதிரி மிடில் கிளாசுக்கு தெரியாது. சொன்னாலும் புரியாது’ என்று ரானடே ‘அரசியல்’ வகுப்பெடுப்பதும் சட்டத்தை நம்பி காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றால், ஏற இறங்கப் பார்க்கும் போலிஸ்காரர், “ஒரு கன்னத்தில் அறைஞ்சா மறுகன்னத்தைக் காட்டுனு உன் சாமிதான சொல்லுச்சு.. கம்ப்ளெயிண்டா குடுக்க சொல்லுச்சி?” என்று முகத்தில் அறைவதும் இந்துத்துவத்தின் அரசியலையும் அரசு எந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இந்து மனநிலையையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

காட்சிகள் ரொம்பவும் பூடகமாக இல்லாமல் வெளிப்படையாக மத வன்முறையை அம்பலப்படுத்துவது, மாலதி தாயின் தோற்றம் ஒருவகையில் சுஷ்மா சுவராஜ் அல்லது உமாபாரதியை ஒத்திருப்பது, ஃபாதர் நோயலின் மீதான தாக்குதல் 1998 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிறித்துவப் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவது, இவையெல்லாம் டேவிட் கதைத்தளமானது ஒரு துல்லியமான வரலாற்றுப் பின்னணியை கொண்டிருப்பதை அறிவிக்கிறது.

அந்தக் கும்பலால் நடுரோட்டில் இழுத்துவைத்து உதைக்கப்பட்ட அவமானத்திற்குப் பிறகு, ஃபாதர் நோயல் (நாசர்) கூனிக்குறுகுவதும், இறுகிப்போன மவுனத்தில் கரைவதும், கரிபூசப்பட்ட முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது சவரன் செய்துகொண்டிருக்கும் பிளேடால் முகத்தைக் கிழித்து ரத்தம் கசியச் சிதைந்து போவதும், பிறகு திடீரென்று வீட்டிலிருந்து காணாம��் போய்விட பதறிப் போன பிள்ளைகள் எங்கெங்கோ தேடியலைந்த பின்பு, “அமைதியை இழந்து தவிக்கிற இந்த உலகத்துல சந்தோஷத்தைத் திரும்பக் கொண்டுவரணும்னா மன்னிக்கணும். உங்களுக்கு யார் என்ன தீங்கு செஞ்சாலும், உங்க கூட சண்டை போட்டாலும் அவங்களை மன்னிச்சி விட்ருங்க. மனித குலத்திலேயே மிகச்சிறந்த குணம் மன்னிப்பு.. கர்த்தருடைய குணம் மன்னிப்பு.. இன்றைக்கு நாம் மன்னித்தால் கர்த்தர் சரியான நேரத்தில் நம்மை மன்னிப்பார்.. ஆக மன்னிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொண்டுவரும்” என்று குழந்தைகளிடம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் தந்தையை பிள்ளைகள் ஓடிவந்து அணைத்துக் கொள்வதுமான காட்சிகளைப் பார்க்கும்போது மனித விழுமியங்கள் நிரம்பிய ஒரு அற்புதமான நாவலை வாசித்துமுடித்த அனுபவம் கிட்டுகிறது.

குவார்ட்டரும் கையுமாக இல்லையில்லை ஃபுல்லும் கையுமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் கோவா டேவிட்டிற்கு தனது காதலி ரோமாவுடன் சேர்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. ரோமா – பீட்டர் திருமணத்திற்கு முன்னாள் இரவு கடற்கரையின் உச்சிப்பாறையின் மேல் உட்கார்ந்து வழக்கம்போல தண்ணி அடித்துக்கொண்டிருக்கும் டேவிட்டைத் தேடி பீட்டர் மேலேறி வருகிறான். திடீரென்று பாறை வழுக்கி அதன் விளிம்பில் உயிருக்குப் போராடுகிறான். இங்கே இப்படியே பீட்டரை கைவிட்டுவிட்டால் ரோமாவை எளிதாகத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தாலும் அடுத்த கணம் தனது வன்மத்தை மாற்றிக்கொண்டு நண்பனைக் காப்பாற்றுகிறான். தனது வேட்கையை விடவும் சக உயிரின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. திரைக்கதை முழுக்க இப்படி மனிதத்தன்மையும் வன்முறையற்ற மனங்களும் நடமாடுகின்றன.

கதை முழுக்க முக்கியத்துவம் பெறும் பெண்களின் பாத்திரங்கள் இத்திரைப்படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ மாற்றங்களை அடைந்த போதும், பெண் பற்றிய பிம்பத்தில் அப்படியொன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை. படத்தில் வசூலை அள்ளிக்குவிக்க, குத்துப்பாட்டு வைத்து டூ- பீஸில் ஆடவிடும் சினிமாக்காரர்கள் அதே பெண்கள் நாயகிகளாக வரும்போது மட்டும் ‘வூட்டுக்காரனுக்குக் காட்ட வேண்டியதை ஊருக்கெல்லாம் காட்டாதே” என்று ‘ஹீரோயிச’ டயலாக் வைத்துக் கலாச்சாரத்தைக் கக்குகிறார்கள். இந்த ஆணாதிக்கவாதங்களைப் புறந்தள்ளி, பெண்ணுடலைக் கொண்டாடுவது, காதலைக் கொண்டாடுவது, தாய், தந்தை, தங்கை, தோழி ஆகிய உறவுகள் குறித்த புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவது என ‘டேவிட்’ பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது.

டேவிட்டின் (விக்ரம்) செத்துப்போன தந்தை ஆவியாக வந்து பெண்கள் மீது ஈர்ப்பே இல்லாமல் இருக்கும் தனது மகனிடம், “இந்த உலகத்திலயே சிறப்பான விஷயம் பொண்ணுங்க தான். பொண்ணோட குரல், பொண்ணோட சிரிப்பு, பொண்ணோட அந்த டச், அவங்க வேர்வை வாசனை...” என்று வர்ணித்துக்கொண்டே போவதும், விக்ரமின் தோழி ஃபெனி (தபு), “இங்க பாரு டேவிட், இந்த உலகத்துல லவ் என்ற பேர்ல ஒரே ஒரு ‘எமோஷன்’ தான். மத்ததெல்லாம் லூஸ்மோஷன் தான்” என்று எடுத்துரைப்பதும் தனது மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்ததும் புளகாங்கிதப்பட்டு “யாருடா அந்த பொண்ணு, விபச்சாரியா, குடிகாரியா, நெட்டை, குட்டை, அவளுக்கு மீசை இருக்கா பரவாயில்லை, நீ கல்யாணம் பண்ணிக்கோ” என்று விக்ரமின் தாய் அதிரடிப்பதும் ஜீவாவும் அவரது தங்கையும் ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றி இழுத்து ‘’தம்’ அடிப்பதும் தமிழ் சினிமா அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. முன்பின் அறியாமல், ‘டேவிட்டிற்கு’ டிக்கெட் வாங்கிவிடும் நமது கலாச்சாரவாதிகளின் கதி அதோகதி தான்.

பெண்கள் வெறும் கதாபாத்திரங்களாக இட்டு நிரப்பப்படாமல், ‘ஹீரோயினிச’ ஸ்திரத்தன்மையோடு படைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. ஜீவா, விக்ரம் ஆகிய இரண்டு டேவிட்களுக்கும் உற்ற தோழிகளாக வரும் லாரா தத்தா (காயத்ரி), தபு (ஃபெனி) இருவருமே, ஹீரோக்கள் துவண்டுபோகும் போது தோள்கொடுப்பவர்கள். கண்கலங்கும் போது கண்ணீரைத் துடைப்பவர்கள். அறிவுரை சொல்லி நெறிப்படுத்துபவர்கள். ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள். மொத்தத்தில், இவர்கள் இருவரும் (வழக்கம் போல) ஹீரோக்களுக்கு முதுகு சொரிந்து கொண்டு இருக்காமல், அவர்களின் ‘secrect of energy’ ஆக இருக்கும் ‘ஹீரோயின்கள்’. இங்கு லாரா தத்தா, தபு இருவருக்கும் உள்ள இடைவெளியின் யதார்த்தம் கவனிக்கத்தக்கது. தபு தனது நண்பனோடு குளியலறைக்கு அருகில் மட்டுமல்ல தனது படுக்கையறையிலும் கூட வைத்து உரையாடுபவள், ஆனால் லாரா தத்தா, தனது நண்பனின் சோகத்திற்கு ஆரத்தழுவி ஆறுதல் சொல்லிய கணத்தைத் தந்தை முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, டேவிட்டை மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடத் திராணியற்றவள். இது வெறுமனே இருவேறு பெண்களுக்கிடையிலான வேறுபாடு அன்று. ஒரு குடும்பப் பெண்ணிற்கும், மசாஜ் பார்லர் நடத்தும் – வெளிப்படையாகச் சொல்வதானால் பாலியல் தொழில் நடத்தும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான சுதந்திரத்தின் இடைவெளி. இந்த வகையில் தான், ஜீவா – லாரா நட்பைவிட விக்ரம் – தபுவின் நட்பு விசாலமானதாய் இருக்கிறது. லாரா தத்தாவைப் போல், தனது தந்தையின் ஓரக்கண் பார்வைக்கே நடுங்கிவிடும் பெண்ணாக இல்லாமல், தன் தொழிலை ஒட்டி கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் போது கூட, ‘சீக்கிரம் போப்பா’ என்று விரட்டும் போலிஸ்காரரிடம், “ஏ! ஃபிராடு ஓசில மசாஜ் பண்ணிட்டு ரெய்டு வேற பண்றயா? உன் பொண்டாட்டி கிட்ட சொன்னா தொலைஞ்ச நீ” என்று அதிகாரத்தை எதிர்த்துக் குரலுயர்த்த முடிகிறது.

இந்தப் படத்தின் கதை சொல்லும் உத்தி (Narrative Technic) குறித்து சில அம்சங்களைச் சொல்லவேண்டும். முற்றிலும் வன்முறையான இன்றைய இந்தியச் சூழலைப் (மும்பை) பற்றிப் பேசும் இந்தத் திரைப்படம் எந்தவகையிலும் வன்முறையின் கோரத்தாண்டவங்களைத் தத்ரூபமாக்காமல் – அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் படங்களில் வருவதைப் போல தீவிரவாதிகள் தலையை அப்படியே அரிந்து எடுப்பவர்களாகவோ மூளை சிதற தோட்டாக்களை வெடிக்க வைப்பவர்களாகவோ ரத்த ஆறை பெருக்கெடுத்து ஓடச்செய்பவர்களாகவோ இல்லாமல், இங்கு இந்துமதவாதிகள் வன்முறையை ஒரு எல்லையோடு நிறுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

ஜீவா தனியாக மாட்டிக் கொள்ளும்போது கூட அவனை கொஞ்சம் ‘தட்டிவிட்டு’, அரசியல் வகுப்பெடுத்து உயிரோடுதான் அனுப்புகிறார்கள். மனிதர்களுக்கிடையே இன்னும் கூட உரையாடலுக்கு சாத்தியம் இருக்கிறது என்பதைத்தான் அந்த மாலதி தாய் மற்றும் அவளது தளபதி (பாபு பஜ்ரங்கி) யுடனான ஜீவாவின் உரையாடல் காட்டுகிறது. படத்திலுள்ள உச்ச பட்சமான கொடும் வன்முறை மாலதி சுடப்படுவது மட்டும்தான். அது கூட கதாநாயகன் அல்லது வில்லனின் வீரச் செயல் அன்று. பாதிக்கப்பட்ட ஒருவன் ஒரே ஒருமுறை சுடுகிறான். அந்தப் பெண் ஒற்றைக் குண்டில் வீழ்கிறாள். அவளும் கூட இறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்துத்துவ வன்முறையை அதன் கொடூரங்களின் மீது கவனத்தைக் குவிக்காமல், குஜராத் படுகொலை போன்ற வன்முறை வெறியாட்டங்களைக் கண்முன் நிறுத்தி நமது நெஞ்சை உறையச் செய்யாமல், கிறிஸ்தவப் பாதிரியார் தனது குழந்தைகளோடு காரில் வைத்து உயிரோட�� எரிக்கப்பட்ட கொடூரத்தைக் காட்சியாக்காமல், மதவாதம் எப்படி இத்தகைய “வெறுப்பு அரசியல்களுக்கு” (hate politics)அடிப்படையாக இருக்கிறது என்பதையும் மதமாற்றம் குறித்த சொல்லாடல்கள் எப்படி வியாபாரியின் ஸ்டாக் போல வெறுப்பு அரசியலுக்கான ஸ்டாக்காக வைக்கப்படுகிறது என்பதையும் குறித்த சிந்தனை உசுப்பலாக இது உள்ளது. வெட்டப்பட்ட தலைகளையும் சிதறிப்போன மூளைகளையும் மட்டுமே காட்டியிருந்தால் இந்த சிந்தனை உசுப்பல்களுக்கு வாய்ப்பிருந்திருக்காது. இந்தச் சிந்தனை உசுப்பல் இந்த வெறுப்பு அரசியலின் கொடுமுடி குஜராத் 2002 ஆகத்தான் இருக்கும் என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது.

இதேபோல் கோவாவின் கதைக்களமும் ஒரு வேறுபட்ட தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே எந்த உணர்வுகளும் சீரியஸாக்கப்படுவதில்லை. தனக்கான மணப்பெண் ஓடிப்போன சோகம், காதல் தோல்வி எல்லாமே கேஷுவலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் பார்வையாளர்களை மூளை மழுங்கச் செய்யும் அபத்தங்கள் இங்கு இல்லை. கதாநாயகன் முதல் கோவாவின் கிறிஸ்துவப் பாதிரியார் வரை எல்லோருமே காமெடி பீஸ்கள் தான்.

படத்தில் விக்ரமின் இறந்துபோன தந்தை ‘ஆவி’யாக வந்து ஒரு பாத்திரம் வகிப்பது அற்புதமான கதையாடல் நுட்பம். இப்படியான கதையாடல் உத்தி ப்ரெக்டின் மாற்று நாடக உத்திகளை ஒரு வெகுஜன சினிமாத்தளத்தில் முயற்சித்ததைப் போல் இருக்கிறது. பார்வையாளரைக் காட்சியுடன் ஒன்ற வைத்துப் பாத்திரங்களுடன் அழுதுவிட்டும் சிரித்துவிட்டும் போவது ‘பழைய பாணி’ நாடகம். எனது ‘காவிய பாணி நாடகம் “ இதிலிருந்து வேறுபட்டது. அது பார்வையாளரை காட்சியிலிருந்து விலகி நின்று காட்சி குறித்து சிந்திக்க வைப்பது என்பார் ப்ரெக்ட். அது அரங்கிலும் திரையிலும் பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்படும். இங்கு ஒரு அப்பாவின் ஆவி அப்படிச் செயல்படுகிறது.

இந்த உலகின் துன்ப துயரங்களோடும் அவற்றைத் தீர்க்கிற வழிமுறைகளோடும் பார்வையாளரை உணர்வு ஒன்றவைத்து வீட்டிற்கு அனுப்பிவிடுவதால் அவர் இந்த நிலையை மாற்றுகிற மனிதராக ஆகிவிடமாட்டார். துன்பப்படுபவர்களுக்கு அனுதாபப்படுவோம், போராடுபவர்களின் வீரத்தைப் போற்றுவோம், அவர்கள் சிந்தும் ரத்தத்திற்காக நாம் இரு சொட்டு கண்ணீர் வடிப்போம் என்று எழுந்து செல்வதாக இல்லாமல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும். இந்த உலகம் இப்படியே இயங்கிக் கொண்டிருப்பதில்லை என்ற ‘இயல்புணர்வு நீக்கம்’ (Defamiliarisation) செய்யவேண்டும் என்பார் பிரெக்ட்.

இந்த ‘மாற்று நாடக’ உத்திகள் ‘டேவிட்’ போன்ற ஒரு வெகுஜன சினிமாவில் சாத்தியப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. டேவிட்டிலும் கூட, பார்வையாளர்கள் காட்சிகளுடன் ஒன்றிப்போவது, இரண்டறக் கலப்பது என்பதற்கப்பால், இந்தச் சமூகம் எல்லோருக்கும் – எல்லா மதத்தினருக்கும் ஒரேமாதிரி புலர்ந்து மறைவதில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து ‘இயல்புணர்வில்’ இருந்து நீக்கம்’ பெறுகிறார்கள். பார்வையாளர்கள் அவர்களாகவே இருந்து படத்தைச் சிந்திக்கிறார்கள். ஆம், அவர்கள் படத்தைப் பார்ப்பதில்லை சிந்திக்கிறார்கள்.

படத்தின் அத்தனை கதைப்பாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஃபாதராக வரும் நாசர், காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக வரும் இஷா செர்வானியின் மவுனமான நடிப்பு, தபு, பீட்டர் எல்லோருடையதும் கணகச்சிதமான நடிப்பு. என்ன இருந்தாலும் இப்படி ஒரு ரிஸ்க்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்காக விக்ரம், ஜீவா இருவருரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. “தீராது போகப் போக வானம்” “வருவாயோ வெண்ணிலாவே என்னோடு நீ” மனதை வருடுபவை. விக்ரம் ரோமாவைச் சந்திக்கும் போதெல்லாம் ஒளிக்கும் அற்புதமான பின்னணி இசைக்காகவே படத்திற்குக் காசைக் கொடுத்துவிட்டு வரலாம் போலிருக்கிறது. ஒரு குழுவாக சேர்ந்து இசையமைத்திருக்கும் கலைஞர்கள் பாராட்டிற்குரியவர்கள்.

படத்தில் உள்ள சில பலவீனங்களையும் சொல்லவேண்டும். மனித விழுமியங்களையும் அரசியலையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய இந்தப்படத்தின் முதல் பத்துநிமிடக் காட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் கேலிக்குள்ளாக்கப்படுவது, “உன் தங்கச்சி ஒடம்புல பதினாலு மச்சம் இருக்கு, பத்து இந்த ஊர்ல எல்லாரும் பார்த்திருக்காங்க. அதுல 3 அவளால தான் பார்க்கமுடியும்” என்று கொச்சை வசனம் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். ஒரு மாற்றுத் திறனாளியை முக்கிய பாத்திரமாக அமைத்தபோதும் படத்தில் இந்தத் தவறு நிகழ்ந்து விடுகிறது. இரண்டு டேவிட்களும் ஒருவரையொருவர் சந்தித்தே தீரவேண்டும் என்பதற்காக, மும்பை டேவிட்டைப் ஃபாதராக்கி கோவாவிற்குக் கொண்டு வந்ததும் நெருடுகிறது. அவர் ஒரு கிடாரிஸ்டாகாவே பயணத்தைத் தொடர்வது இயல்பாக இருந்திருக்கும். அந்த ‘ஃபாதர்’ என்ற தோற்றம் ஜீவாவிற்குக் கொஞ்சம் கூட பொருந்தாமல் துருத்திக்கொண்டு நிற்கிறது. ஒருவேளை விக்ரமை ஃபாதராக்கி, ஜீவாவை ‘கிறுக்கு சாண்டா’வாக்கி இருந்தால் பரவாயில்லாமல் இருந்திருக்கும்.

இந்தப் படம் ‘popular’ ஆக வெற்றியடையாமற் போனதற்கு பொதுவாக இங்குள்ள ஒரு வகையான இந்து மனப்பாங்கு காரணமாக அமையலாம். இந்த மனப்பாங்கு ஒரு அன்னை வேளாங்கண்ணியை ஏற்றுக் கொள்ளும். ஆனால் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்படும் கிறிஸ்தவச் சூழலை ஏற்காது. இன்னொன்றையும் இங்கு குறிப்ப்பிட வேண்டும். தந்தையின் ஆவி ஒரு பாத்திரமாக வருவது என்கிற அந்நியமாதல் உத்தி வெகுஜன சினிமா பார்வையாளருக்கு எளிதில் புரியும் வண்ணம் ‘narration’ ஐச் சற்று எளிமை ஆக்கியிருக்கலாம். இதுபோன்ற உத்திகள் வெகுஜன தளத்திற்குப் பொருந்தாது என எண்ணத் தேவையில்லை. நமது தெருக்கூத்துகளிலேயே கூட இத்தகைய உத்திகள் உள்ளன என அரங்க ஆய்வாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் சினிமாவின் “எதார்த்தங்களுக்குப்” பழக்கப்பட்டுப்போன நமது பார்வையாளர்களுக்கு இதைக் கதையாடலின் அழகியலைப் பாதிக்காமல் சற்று எளிமையாக்கியிருக்கலாம்.

popular இதழ்களால் இது புறக்கணிக்கப்பட்டது புரிகிறது. ஆனால் சீரியஸ் விமர்சகர்கள் கண்ணில் ‘டேவிட்’ ஏன் படவில்லை? அவர்களும் கூட கமல், பாலா,மணிரத்னத்தைத்தான் கவனம் கொள்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் பிஜோய் நம்பியாரின் இந்தப்படம் தமிழ்சினிமாவின் திசைவழியை மாற்றியிருக்கிறது என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. மணிரத்தினத்திடம் பணியாற்றிய ஒருவர் இப்படிக் குருவை ‘மிஞ்சிய’ சீடராக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ‘டேவிட்’ டீமும் பிஜோய் நம்பியாரும் பாராட்டுக்குரியவர்கள். இயக்குனர்களுக்காகவே படத்திற்குப் போவது என்ற நம்பிக்கைகளெல்லாம் தளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் சமீபகாலப் புதுமுக இயக்குனர்கள், அரசியல் பார்வைகளுக்கும் சினிமாத்தனத்திற்குமான இடைவெளியை குறைத்துக்கொண்டு வருவது அவர்கள் மீது மட்டுமல்ல தமிழ் சினிமாவின் மீதும் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்கிறது.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768