முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை... 8
- அ. பாண்டியன் -
 
 
 
 

மாயங்களின் புனைவுகள்

பின்நவீன மலாய் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் வேகமாக பரவி பல இளம் எழுத்தாளர்களால் எழுதப்படுவதைக் காணமுடிகிறது. கதை சொல்லும் உத்தி முறையினில்லாது கதைக் கரு, களம் ஆகியவற்றிலும் யதார்த்தவியல் கதைகளில் இல்லாத புதுமைகள் காணப்படுகின்றன.

மானா சீக்கானாவிற்குப் பிறகு புது வேகம் கொண்டு எழுதி வரும் மூன்றாம் தலைமுறை படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸைன் கஸ்தூரியாவார் (Zaen Kasturi). அடிப்படையில் ஒரு கவிஞராக எழுத்துலகில் அறிமுகமான இவர் சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் இருக்கிறார். இலக்கியதுறையிலும் இதழியல் துறையிலும் பட்டபடிப்பை பெற்றவரான ஸைன் கஸ்தூரி மலாக்கா மாநிலத்தில் பிறந்தவராவார். PENA (தேசிய எழுத்தாளர் சங்கம்), GAPENA (தேசிய எழுத்தாளர் சம்மேளனம்) போன்ற பல்வேறு இலக்கிய இயக்கங்களில் பொறுப்பு வகிக்கும் இவர் கடந்த 2010 ஆண்டு SEA WRITE எனப்படும் தென்கிழக்காசியாவின் உயர்ந்த இலகிய விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்.

சிறந்த கதை சொல்லியான ஸைன் கஸ்தூரியின் சிறுகதைகள் பல தத்துவ விசாரணைகளாகவும் மாய உலக அவதானிப்புகளாகவும் இருப்பது குறிப்பிட தக்கது. கதைக் கரு பெரும்பாலும் மனித வாழ்க்கைத் தத்துவங்களை விமர்சிப்பதாகவோ சமூக அரசியல் சார்த்த அலசலாகவோ இருகின்றன. கதை சொல்லும் பாணியை முன்னைய நிலையில் இருந்து வெகுவாக மாற்றியமைத்து பெரும்பாலும் மாயவாத எதார்த்த கதைகளாக படைப்பது கவனிக்கத்தக்கது. இவரது கதைகளில் தொன்மை கதைமாந்தர்கள் மீண்டு வருவதும் அழிந்த பண்டைய நகரங்களுக்குப் பயணம் செய்வதுமான மாய நிகழ்வுகள் வாசகனை கவரக்கூடிய அம்சங்களாகும். இவரது புனைவு மொழி கொஞ்சம் சிக்கலானது என்பதால் கவனமான வாசிப்பு நிச்சயம் தேவை.

‘ரப்சோடி’ (Rapsodi) என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் கதைகள் மலாய் சிறுகதை உலகின் புது பாணியை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் ‘ஹாங் நாடிமின் வேறு கதை’(Kisah Lain Tentang Nadim) என்னும் சிறுகதை குறிப்பிட தக்கது. இக்கதையின் நாயகன் ஹாங் நாடிம் மலாய் செவ்வியல் இலக்கியத்தில் மிக முக்கிய கதை மாந்தனாவான். மேற்கண்ட சிறுகதை மலாய் பண்டைய இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கதையின் நீட்சியாக அமைந்துள்ளது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’ என்னும் நீதியை மலாய் இலக்கிய உலகம் இக்கதையின் வழி வழியுறுத்தி வருகிறது. சிறுகதையைப் புரிந்து கொள்ள வாசகனுக்கு மூலக்கதை தெரிந்திருக்க வேண்டும். ஆகவே அந்த பண்டைய கதையின் சுறுக்கத்தை முதலில் பார்த்துவிடுவோம்.....

முன்னொரு காலத்தில் சிங்கப்பூரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காலத்தில் சிங்கப்பூருக்குப் பேராபத்து வந்தது. கடலில் இருந்து கூட்டம் கூட்டமாக புறப்பட்ட ‘தோடாக்’ மீன்கள் (கூரிய அலகுடைய மீன்கள்) மக்களை தாக்கி கொல்லத்தொடங்கின. தோடாக் மீன்களின் தாக்குதலுக்கு இலக்கான மக்கள் தங்கள் நிலையை அரசனிடம் தெரிவித்தனர். அரசன் யானையில் பவனி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தான். கடற்கரை எங்கும் மனித பிணங்கள் சிதரிகிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். உடனே மக்களை தங்கள் கெண்டங்கால்களை மீன்களுக்குக் காட்டி (வரிசையாக அரண் போல் நின்று) நாட்டை காக்கும் படி உத்தரவிடுகிறான். மன்னன் சொல் மீறாத மக்களும் அப்படியே செய்கின்றனர். ஆனாலும் மீன்களின் தாக்குதலை சமாளிக்க முடியாது பலர் மாண்டு போகின்றனர். அரசன் செய்வதறியாது விழிக்கும் வேளையில் ஏழு வயது ஹாங் நாடிம் என்னும் சிறுவன் அரசனிடம் மீன்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற கடற்கரை நெடுகிலும் வாழை மரங்களை நடுமாறு ஆலோசனை கூறுகிறான். அரசனும் மக்களை அவ்வாரே செய்ய பணிக்கவும் நாடு காப்பாற்றப்படுகிறது. மக்கள் ஹாங் நாடிமின் அறிவாற்றலை புகழ்கின்றனர். அரசனும் அச்சிறுவனை பாராட்டகருதி தன் அரண்மனைக்கு அழைகிறான். ஆனால் இச்செய்தி அரண்மனை அதிகாரிகள் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரிடையே அச்சத்தை மூட்டுகிறது. அரசனிடம் நல்ல பெயர் பெற்றுவிட்ட ஹாங் நாடிம் வளர்ந்த பிறகு தங்கள் பதவிக்கு போட்டியாக வந்து ஆட்சியை கைப்பற்றி விட்டால் தங்கள் நிலமை மோசமாகி விடும் என்று அஞ்சுகின்றனர். உடனே, அச்சிறுவனைப் பற்றி பல்வேறு அரச நிந்தனை குற்றச்சாட்டுகளை அரசனிடம் கூறி, ஹாங் நாடிமை இப்போது ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் திட்டம் வெல்கிறது. அரசன் அச்சிறுவனை கடலில் வீசி மரண தண்டனையை கொடுக்கிறான். தன் தாயிடம் அரசனின் விருதை வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புரப்படும் ஹாங் நாடிம் அதே அரசனால் கொடிய சதியின் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு கடலில் பிணமாகிறான். பிறகு, நீதி மறந்த அந்த அரசனின் ஆட்சி கவிழ்ந்தது வேறு கதை.

ஸைன் கஸ்தூரி, ஹாங் நாடிம் கடலில் வீசப்பட்டதில் இருந்து தன் ‘ஹாங் நாடிமின் வேறு கதையைத்’ தொடங்குகிறார். அவர் தன் சிறுகதையில் ஹாங் நாடிமை கடலில் மூழ்கி இறக்க விட வில்லை. மாறாக ஒரு வயோதிக மீனவனால் காப்பாற்றப்பட்டு ஒரு சிறு தீவில் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார். வளர்ந்து இளைஞனாகி விட்ட அவன் அழகும் திறனும் ஒருங்கே வாய்ந்தவனாக இருக்கிறான். பல பெண்களும் பெண்னைப் பெற்றவர்களும் அவனை உரிமை கொண்டா காத்திருக்கின்றனர்.

நல்ல சிந்தனையாளனாக வளர்ந்திருக்கும் அவனை அவன் வளர்ப்பு தந்தை அங்கேயே தங்கி விடும் படி வலியுறுத்துகிறார். ஆனால் ஹாங் நாடிமின் மனம் இன்னும் அவனுடைய சொந்த ஊரான சிங்கப்பூரையே நினைக்கிறது. அதோடு அச்சிறு தீவிற்கு வரும் கடலோடிகள் சிங்கப்பூரின் இன்றைய நிலையை விளக்கி கூறுகின்றனர். சிங்கப்பூர் செல்வம் கொழிக்கும் நாடாக இருப்பதாகவும் அங்கு பல அறிஞர்கள் இருந்தாலும் யாரும் அரசனை விஞ்சி எந்த கருத்தும் சொல்வதில்லை என்பதனையும் விளக்குகின்றனர். அரசனை விட மக்கள் யாரும் கொஞ்சமும் சிறப்புடன் வாழ்வதை அவ்வரசன் விரும்புவதில்லை என்பதையும் கூறுகின்றனர்.

இச்சூழலில் ஹாங் நாடிம் தன் சொந்த ஊருக்கு சென்று வாழ்வதா அல்லது தன்னை காப்பாற்றி வளர்த்து விட்ட மண்ணிலேயே இருப்பதா என்னும் குழப்பத்திற்கு ஆளாகிறான். அவன் மனமும் அறிவும் நடத்தும் போராட்டம் கதையில் அழகிய கவிநயத்துடன் சொல்லப்படுகிறது. ஆனால் ஹாங் நாடிம் என்ன முடிவு எடுத்தான் என்பது சொல்லப்படாமலேயே கதை முடிந்து விடுகிறது.

கதையின் முடிவு இப்படி அமைகிறது. ஒரு நாள் நல்லிரவில் கடற்கரைக்கு செல்லும் ஹாங் நாடிம் பல்வேறு சிந்தனைகளுடன் உலவுகிறான். அங்கிருக்கும் ஒரு படகை அணுகி நின்று “ நான் இப்படகில் இருக்கும் துடுப்பை எடுத்தேனென்றால் என் பிறந்த ஊருக்குப் பயணமாக வேண்டும்; அன்றி படகில் இருக்கும் கோடரியை எடுப்பேன் என்றால் படகை உடைத்துப் போட்டு விட்டு இந்த மண்ணிலேயே இருந்து விட வேண்டும். ஏதாவது ஒன்றை இன்று செய்தே ஆக வேண்டும்...

கால எல்லைகளைத் தாண்டி தாண்டி கதை சொல்லும் போக்கும், கடினமான புனைவு மொழியும் கொண்ட இவரது கதைகள் முதல் வாசிப்பில் பிடிபடாதவையாக இருக்கின்றன. தொடர்ந்து வாசிக்கும் போது கதைக்குள் மறைந்து கிடக்கும் தத்துவ அலசலும் அரசியல் பார்வையும் இவர் கதைகளுக்குத் தனித்துவம் கொடுக்கின்றன. சமகால மலாய் இலக்கிய உலகில் ஸைன் கஸ்தூரி கவனிக்கப் படவேண்டிய எழுத்தாளுமையோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768