முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அச்சில் ஏறாத உண்மைகள்... 5
- இரா. சரவண தீர்த்தா -
 
 
 
 

ஒரு மரணம் தலைப்புச் செய்தியானது : அமைச்சருக்காகவா? சிவத்திற்காகவா?

பத்திரிகைகளில் வரும் செய்திகள் தலைப்புச் செய்திகளாவது, அந்தச் செய்திக்கு ஆசிரியர் குழு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்துள்ளது. செய்தி முன் பக்கச் செய்தியாகவோ அல்லது பெட்டி செய்தியாகவோ பத்திரிகையில் இடம்பிடிப்பது தலைமை ஆசிரியரின் பார்வையில் அடங்கியுள்ளது. மேலும் செய்தியைச் சேகரிக்கும் நிருபரின் எழுத்தாண்மையும் செய்தியின் முக்கியதுவதிற்கு வலு சேர்க்க முடியும்.

இதனால் எல்லாப் பத்திரிகையின் தலைப்புச் செய்திகள் வெவ்வேறாக இருப்பதைக் காணமுடிகிறது. சில வேளைகளில் ஒரே செய்தி எல்லாப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு லஹாட் டத்து சம்பவம் குறித்தச் செய்திகளைச் சொல்லலாம். நாட்டின் பாதுகாப்பு அதி முக்கியமாகக் கருதப்படுவதால் இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் முன்பக்கத்தில் இடம் பிடித்தது.

இனம்,மொழி, உரிமை ஆகியவைகளுக்கு இடர் வரும் பொழுதெல்லாம் அது குறித்து நடத்தப்படும் போராட்டங்களைக் குறித்து வரும் செய்திகள் தலைப்புச் செய்தியாகவோ அல்லது முதல் பக்கச் செய்தியாகவோ அச்சில் ஏற்றபடுகின்றன. இந்தியாவை பின்புலமாக வைத்து இயங்கும் நமது பத்திரிகை செய்திகளில் சம்பந்தமே இல்லாமல் இந்தியா செய்திகளும் தலைப்புச் செய்திகளாக நாடு விட்டு நாடு வந்து முந்திக் கொள்வதும் உண்டு. போலிவூட், கோலிவூட் செய்திகளும் முதல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிரிப்பாய் சிரிக்கவும் செய்கிறது. மந்திரியின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கி செய்திகள் சிலவேளைகளில் பாதாளம் வரை பாய்வதுமுண்டு.

வாழ்வைவிட, சாவுக்குத்தான் பத்திரிகைகள் முதலிடம் கொடுக்கின்றன. வெட்டிக் கொலை, தலை நசுங்கி மரணம், கழுத்து அறுக்கப்பட்டு மாது கொலை, போன்ற கொலை வெறி செய்திகளை பத்திரிகைகள் முரண்படாமல் முன் பக்கங்களில் செய்தியை பிரசுரித்து வருகின்றனர். தமிழ் நேசன், மலேசிய நண்பன்,மக்கள் ஓசை ஆகிய தமிழ்ப் பத்திரிகைகள் குற்றச் செயல்கள் தாங்கிய செய்திகளுக்கு முதலிடம் கொடுப்பதைக் காணலாம். தினக்குரல் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகளுக்கு முதல் பக்கத்தில் இடம் கொடுப்பதில்லை.

நான் தினக்குரல் நிருபர் என்பதினால் இதனைச் சொல்லவில்லை. ஆசிரியரின் நிலைப்பாடும் இதுவே.

1.03.2013 திகதியில், மனிதவள அமைச்சரின் பத்திரிகை செயலாளர் பா.அ சிவம் கார் விபத்தில் இறந்து விட்டார் எனும் செய்தி தினக்குரல் உட்பட எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது.

சிறந்த ஆளுமை கொண்ட படைப்பாளனான சிவத்தின் இறப்பு தலைப்புச் செய்தியில் இடம் பிடித்திருக்கக் காரணமாக இருந்தது அவர் அமைச்சரின் பத்திரிகை செயலாளராக இருந்த ஒரே காரணம் மட்டுமே.

ஒரு தனிப்பட்ட மனிதனுக்குப் பத்திரிகைச் செயலாளராகப் பணிபுரிந்து வந்த சிவத்தின் படைப்புகளைப் பற்றியோ அவருக்குள் இருந்த படைப்பாளனைப் பற்றியோ எழுதுவதற்குத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடமில்லாமல் இருந்திருக்கிறது. அமைச்சரிடம் பணிபுரிவதற்கு முன், ஒரு படைப்பாளனாக இருந்த சிவத்தை யாருக்கும் அடையாளம் தெரியாமலேயே இருந்தது. அவரின் படைப்புகளை, கவிதைகளை எத்தனைபேர் வாங்கிப் படித்திருப்பர்? அவரின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தவர்கள், அவருக்காக கவிதைகளை தமிழ்ப் பத்திரிகையில் எழுதி அனுப்பியவர்கள், இறப்பு வீட்டில் ஓடி வந்து குவிந்தவர்கள், இவர்களில் எத்தனைப்பேர் அவரின் படைப்பிலக்கியத்தை புரட்டிப் பார்த்திருப்பார்கள்?

சிவம் ஒரு அமைச்சருக்கு பத்திரிகை செயலாளராக இல்லாவிட்டால், அவரின் இறப்புச் செய்தி தலைப்புச் செய்தியாக வந்திருக்குமா? ஒரு படைப்பாளனாக மட்டுமே சிவம் வாழ்ந்திருந்தால் அவரின் இறப்பு வீட்டிற்கு டத்தோக்கள் பட்டாளம் வந்திறங்கி இருக்குமா? மின்னல் பண்பலையில் சிவத்தின் இறப்பு குறித்து அறிவிக்கப் பட்டிருக்குமா? ஆர்.டி.எம் தமிழ்ச் செய்தியில் வாசிக்கப்பட்டுத்தான் இருக்குமா?

தமிழ்ப் பத்திரிகைகளும் சரி, மனிதர்களும் சரி, இறந்த சிவத்தின் இறவா படைப்புகளைவிட அவர் அமைச்சரின் பத்திரிகைச் செய்தியாளர் என்ற பதவியை மட்டுமே உயர்ந்ததாகக் கருதினர்.

ஆனால் சிவம் அப்படி கருதவில்லை. இது நாய் படும் பாடு என்று என்னிடமே ஒருமுறை கூறியிருந்தார். தமிழர்கள் முதலாளிகளாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்களின் பனி நிமித்த வளர்ச்சியில் யாரும் அக்கறை காட்டுவதில்லை என்று நான் சிவத்திடம் ஒரு முறை கூறி இருந்தபோது, இங்கு மட்டும் என்ன? அப்படிதான். நம்மை கவனிப்பதற்கு யாரும் இல்லை. நம்ம பொழப்பு நாய் பொழப்புதான் என்று சிவம் கூறியபோது, அவரின் நிலையை உணர முடிந்தது. அவர் பணி புரிந்த அமைச்சில், அமைச்சர் உட்பட எத்தனைபேர் சிவத்தை படைப்பாளனாக நோக்கியிருப்பர்?

சிங்கப்பூரில் ரயில் பெட்டியில் படைப்பாளர்களின் கவிதை வரிகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக பயணம் செய்த ம.நவீன் என்னிடம் கூறினார். பல அயல் நாடுகளில் படைப்பாளர்களுக்குத் தனி இடம் உண்டு என்றும் நவீன் கூறினார். மலேசியாவில் மலாய் படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய ரீதியிலான அங்கீகாரம் தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் கிடையாது. உலகத் தரம் வாய்ந்த பல படைப்புகளை மலேசிய படைப்பாளர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தாலும் அவர்களின் படைப்புகளை வாசிக்கும் பழக்கமும் அரசன் முதல் ஆண்டி வரையிலும் கிடையாது.

செத்துப் போன செய்திகளை வாசிக்கும் கூட்டங்களை வளர்க்கும் பத்திரிகைகளின் குணத்தை கொஞ்சம் மாற்றி அமைத்து, சிறுகதை போட்டி, கவிதை போட்டி என்று படைப்புகளை பாசார் மாலாமில் தேடாமால், தரமான வாசகர்களை உருவாக்குவதில் சிரத்தை எடுக்கும் வல்லினம், மௌனம் போன்றவர்களின் இலக்கிய ஈடுபாட்டுக்கு உறுதுணையாக நின்று செயல்பட்டாலே பா.அ. சிவம் போன்ற படைப்பாளிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768