|  | அது ஒன்றும் மேல்நாட்டு நாயல்ல. சாதாரண 
				தெருநாய்தான். தெருவிலேயே வளர்ந்து, சந்தைப் பகுதியில் குப்பைத் 
				தொட்டிகள் நிறைந்திருக்கும் வட்டாரத்தையே சுற்றி சுற்றி வரும் 
				நாய்தான். தெருநாய்களுடன் சண்டையிட்டே வளர்ந்து வந்ததால், 
				உடலெங்கும் அதற்கான அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தக் கடைத் 
				தெருவின் கிழக்குச் சந்தை முகப்பில்தான் அது பெரும்பாலும் 
				சுருட்டிக் கொண்டு படுத்திருக்கும். மாலை வேளைகளில் மறுபடியும் 
				தெருக்களைச் சுற்றிவிட்டு அதே இடத்துக்கு அது திரும்பிவிடும். 
				இப்படியாக மூன்று ஆண்டை அது கழித்திருந்தபோது தான், அந்தத் 
				தெருநாயின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் நேர்ந்தது. இரு கண்ணும் 
				தெரியாத பிச்சைக்காரன் ஒருவனை ஒரு மூதாட்டி, அந்த நாய் 
				படுத்திருந்த பகுதிக்கு அழைத்து வரத் தொடங்கினாள். அவன் அமர ஒரு 
				பெரிய துண்டை போட்டு விடுவாள். அங்கு அதன் பக்கத்தில் அவனுக்குரிய 
				வெள்ளைநிறக் கம்பு இருக்கும். காசு போட இன்னுமொரு துண்டு 
				இருக்கும். தினமும் அவனை அங்குக் கொண்டு வரும் அவள், பகலில் அவன் 
				சாப்பிடுவதற்கு ஏதேனும் கொடுத்து விட்டுப் போவாள். மாலை மறையும் 
				வேளையில் மீண்டும் வந்து, அவனுக்குப் போடப்பட்டிருக்கும் பணத்தை 
				எடுத்துக் கொண்டு அவனையும் பத்திரமாக அழைத்துப் போய்விடுவாள்.
				
 நாள்தோறும் நடந்து கொண்டிருந்த அந்தக் காட்சியை அந்த நாய் 
				கவனித்துக் கொண்டே வந்தது. அங்கே ஒரு மூலையில் படுத்துக் கொண்டே 
				பிச்சைக்காரனுக்குக் கொண்டுவரப் படும் உணவை அது மோப்பம் பிடிக்கத் 
				தொடங்கியது. ஒருநாள் மெது மெதுவாக வாலை ஆட்டிக் கொண்டு, அந்தப் 
				பார்வையற்ற பிச்சைக்காரன் பக்கம் சென்றது. நாயின் பார்வையெல்லாம் 
				அங்கிருந்த சாப்பாட்டுக் கிண்ணத்தின் மீதுதான் இருந்தது. 
				பிச்சைக்காரன் உணவைச் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டுக் 
				கொண்டிருந்தான். அந்த நாய் அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. 
				பிச்சைக்காரன், தன் அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து கொண்டான். தன் 
				கைகளை அங்குமிங்கும் வீசி, யாரது, யார் என்று அதட்டினான். அவன் 
				அருகில் சென்ற நாய், அவன் கைகளை மெதுவாக நக்கத் தொடங்கியது.
 
 பிச்சைக்காரன், அது ஒரு நாய் என்பதைத் தெரிந்து கொண்டான். அதன் 
				காது தொடங்கி வால் வரை அவனும் அதைத் தொட்டுப் பார்த்துத் தடவிக் 
				கொடுத்தான்.
 
 "எத்தனை அழகாக இருக்கிறாய், வா... என்னு டன் வந்துவிடு" என்று 
				பிச்சைக்காரன் அந்த நாய்க்கு அழைப்பு விடுத்தான். தடவித் தடவி தன் 
				கிண்ணத் திலிருந்த உணவை, அதற்கு எடுத்து எடுத்து வைத்தான். நாய் 
				நன்றியுடன் அந்தக் கவளங்களை உண்டு மகிழ்ந்தது.
 
 அப்போது முதல் அந்த நாய்க்கும் அந்தப் பிச்சைக்காரனுக்கும் இடையில் 
				ஓர் அன்பு மலர்ந்தது. அவர்களுக்கிடையே ஒரு புதிய உறவு ஏற்படத் 
				தொடங்கியது.
 
 சந்தைக் கடைத் தெருவில் தொடர்ந்து அந்தப் பிச்சைக் காரனும் நாயும் 
				சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பு வலுப்பட வலுப்பட அந்த 
				நாய், தெருக்களையும் சந்தையின் மற்றப் பகுதிகளையும் சுற்றுவதை 
				படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. அதன்பின், அந்தப் 
				பிச்சைக்காரனின் பக்கத்திலேயே படுத்துக் கொள்ள ஆரம்பித்தது. 
				காலையிலும் மாலையிலும் அவனுக்கு விழும் காசுகளை அது கண்காணித்து 
				வந்தது. அந்தப் பக்கமாக வருவோரும் போவோரும் கண்டிப்பாகக் காசு போட 
				வேண்டும் போலுமென்று அது எண்ணிக் கொண்டது.
 
 யாராவது காசு போடாமல் போனால், அவர்களை அது விரட்டத் தொடங்கியது. 
				அவர்களின் ஆடைகளைக் கவ்வி காசு போடும் இடத்துக்கு இழுத்து வரவும் 
				ஆரம்பித்தது. பிச்சைக்காரனுக்கு ஏதேனும் காசு போட்ட பிறகுதான், 
				அவர்களை அது விடுவித்து வந்தது.
 
 இதற்கிடையில், வியாழக்கிழமைதோறும் வெள்ளரிக்காய், வாழைப்பழம் 
				ஆகியவற்றை விற்று வந்த ஒருவன், பிச்சைக்காரனுக்கு விழுந்து வந்த 
				காசின்மேல் ஆசை வைக்க ஆரம்பித்தான், அது மட்டுமன்றி, பார்வையற்ற 
				அந்தப் பிச்சைக்காரனை கண்டமாதிரிப் பேசவும் தொடங்கினான். வாட்ட 
				சாட்டமாக இருந்த அவனைப் பார்த்து மற்றவர்கள் பயந்தார்கள். 
				அங்கிருந்த காசுகளையும் அவன் சுருட்டத் தொடங்கினான்.
 
 அதே சந்தைத் தெருவில், சக்கர வண்டியில் ஒருவன் அழகு சாதனப் 
				பொருட்களை விற்று வந்தான்; இன்னொருவன் குறைந்த விலையில் கதைப் 
				புத்தகங்களை வியாபாரம் செய்து வந்தான். இன்னொருவன், கயிறுகளையும் 
				ரிப்பன் வகைகளையும் விற்று வந்தான்.
 
 அவர்களுக்கெல்லாம், வியாழக்கிழமை பிற்பகல் வந்தால், அந்தக் 
				குருட்டுப் பிச்சைக்காரனின் காசுகளைத் தாராளமாக அள்ளிக் கொள்ளும் 
				'வெள்ளரிக்காய் இளைஞன்தான்', நினைவுக்கு வருவான். அவனைச் சற்று 
				தூரத்தில் கண்டவுடனே, "பார்வையற்றவனே, அந்தப் பாதகன் வந்து 
				கொண்டிருக்கிறான்" என்று அவர்களில் யாராவது ஒருவன் முன்னெச்சரிக்கை 
				செய்துவிடுவான். "ஓ! இன்று வியாழக்கிழமையா" என்று அந்தப் 
				பிச்சைக்காரன் புலம்ப ஆரம்பித்து விடுவான்.
 திடீரென ஒரு நாள் அவனுக்குத் துணிவு வந்துவிட்டது. "நாயே! நாயே! 
				எங்கிருக்கிறாய், உடனே இங்கே வா" என்று தன் புதிய சிநேகிதனை, அவன் 
				சத்தம் போட்டு விளித்தான்.
 
 ஓடோடி அவனருகில் வந்த நாயிடம் "அவனை என் அருகில் வரவிடாதே" என்று 
				கட்டளையிட்டான். புதிய நட்பல்லவா? அந்த இளைஞன் சற்றும் எதிர்பாரா 
				வகையில், நாய் அவன்மீது பாய்ந்தது. அவன் கையை நன்றாகக் கடித்துக் 
				குதறியது. அவனை அந்தச் சந்தைப் பகுதியிலிருந்து துரத்தியடித்தது.
 
 அழகு சாதன வியாபாரி வியந்து போனார். "பிச்சைக்காரன் மீது அந்த 
				நாய்க்குத்தான் எத்தனை வாஞ்சை"? என்று அவர் உருகிப் போனார். அதைப் 
				பற்றி மற்றவர்களிடமும் எடுத்துச் சொன்னார்.
 
 இதற்கிடையே, மாலை நேரங்களில் வழக்கமாக,பிச்சைக்காரனை அழைத்துச் 
				செல்ல வரும் மூதாட்டி அன்று வெகு நேரம் ஆகியும் வரவேயில்லை. அவன் 
				கதிகலங்கிப் போனான். நேரம் ஆக ஆகப் பிச்சைக் காரனின் மனதில் பயம் 
				கவ்வ ஆரம்பித்தது. அப்போது அவனை நோக்கி ஒருவன் ஓடி வந்தான்.
 
 "ராமசாமி, இனிமேல் அந்தக் கிழவிக்காகக் காத்திருக்க வேண்டாம். அவள் 
				வரமாட்டாள், இன்று பிற்பகலில் அவள் மாண்டு விட்டாள்" என்று 
				கூறியவாறு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
 பிச்சைக்காரனுக்கு என்றிருந்த ஒரே வீடும் போய்விட்டது, அவனைப் 
				பற்றி அக்கறை செலுத்தி வந்த மூதாட்டியும் போய்விட்டாள். அவன் பாடு 
				இனிமேல் திண்டாட்டம் தானோ?
 
 அந்தச் சந்தைக் கடைத் தெருவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 
				அனைத்தையும் பார்த்துக் கொண்டி ருந்தார், கயிறு விற்கும் ஒருவர்.
 
 "இந்தா, இந்தக் கயிற்றை உனக்கு இனாமாகத் தருகிறேன்; நாயின் 
				கழுத்தில் இதைக் கட்டிவிடு, அதன் மறுமுனையை நீ பிடித்துக் கொள். 
				நாய் உன்னைப் பத்திரமாக அழைத்துச் செல்லும் அதற்குத்தான் உன்மேல் 
				எத்தனை அன்பு" என்று பிச்சைக்காரனுக்கு ஒரு புதுப் பாதையைக் 
				காட்டினார்.
 
 அன்றுமுதல், அந்த நாயின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் 
				பூத்தது. மாண்டுபோன மூதாட்டியின் பொறுப்புகள், அந்தத் தெரு 
				நாய்க்கு வந்து சேர்ந்தன. நாயின் சுதந்திரம் அப்போதே பறிபோயிற்று. 
				அதன் கழுத்தில் கட்டப்பட்ட அந்த இலவசக் கயிற்றின் சுற்றளவுக்கு 
				அதன் சுதந்திரமும் உலகமும் சுருங்க ஆரம்பித்தன. சந்தை களைச் 
				சுற்றுவதும், சுவைபட விரும்பிய உணவு வகைகளை உண்பதையும் அது மறக்க 
				வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
 நாயின் புது வாழ்வில், மற்ற நாய்களைக் கண்டபோது அது குரைக்கும். 
				ஏதோ என்னவோ என்று பிச்சைக்காரன் அதை உதைப்பான். கையில் உள்ள 
				கம்பால் அடிப்பான்.
 
 "தெருநாயே! என்னைத் தடுமாறச் செய்கிறாயா?" என்று அவன் அதைத் 
				திட்டுவான்.
 
 நாளாக நாளாக அந்த நாய், தன் பிச்சைக்கார எஜமானனின் விருப்பங்களை 
				உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ள தலைப்பட்டது.
 
 பிச்சைக்காரனும் இப்போது அறவே மாறி விட்டான். இதற்கு முன் 
				சென்றிராத இடங்களுக் கெல்லாம், அவனை அந்த நாய் அழைத்துச் செல்லத் 
				தொடங்கியது.
 
 ஒரு கையில் கயிறு மறுகையில் தன் கம்பு. இவற்றைப் பிடித்துக் கொண்டே 
				அந்தப் பிச்சைக்காரன் நாயைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
 
 கையில் பணம் திரண்டதால் கடைத் தெருவுக்கு வெளியில் அவன் படுக்க ஓர் 
				இடத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டான். உறங்கும் போது, நாயின் 
				கழுத்தில் பிணைக்கப்பட்ட கயிற்றைத் தன் கையில் கட்டிக் கொண்டு 
				தூங்குவான்.
 
 பொழுது புலர்ந்ததும், மீண்டும் அதே நாய்ப் பயணம் தான். பேச்சுக் 
				குரல் கேட்கும் இடத்தில் எல்லாம் கையேந்துவான். கடைகள், பள்ளிகள், 
				மருத்துவ மனைகள், உணவகங்கள் இப்படி, ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் 
				நாய் அவனை நாள்தோறும் அழைத்துச் செல்லும். அவன் வருமானம் பெருக 
				ஆரம்பித்தது. பிச்சைக்காரன் பள்ளத்தில் விழுந்துவிடக் கூடாது 
				என்பதற்காக அவனை மிகுந்த கவனத்துடன் நாய் அழைத்துச் சென்று 
				கொண்டிருந்தது.
 
 நாயின் திறமையைக் கண்டவர்கள், அதற்கு 'டைகர்' என்று பெயர் வைத்து, 
				அதைப் பாராட்டி னார்கள். ஆனால் அந்தப் பிச்சைக்காரனுக்குப் 
				பாடுபடத் தொடங்கியதுமுதல் அதன் சுதந்திரம் பறிபோய்விட்டதை எத்தனை 
				பேர் நினைத்துப் பார்த்தார்கள்? களைப்பு மிகுதியால் அதன் நடை 
				தளர்ந்தால், அந்தப் பிச்சைக் காரன் அதைக் கம்பால் நையப் 
				புடைத்துவிடுவான்.
 
 "நீ என்ன சாப்பிடாத நாயைப் போல நடக் கிறாய், ம்... வேகம். வேகம்" 
				என்று அதை விரைவு படுத்துவான், அவன். வலி பொறுக்க முடியாத நாய் 
				முனக ஆரம்பித்துவிடும்.
 
 இப்போதெல்லாம் கடைத் தெருவில் வியாபாரம் செய்து வந்தவர்கள், இந்தக் 
				காட்சி மாற்றங்களைக் கண்டு வாயடைத்துப் போனார்கள். நாய்க்குப் 
				பெயர்தான் டைகரே தவிர, அது மெலிந்து கொண்டே போயிற்று.
 
 கயிறு விற்பவர், புத்தகக் கடைக்காரர், அழகு சாதன வியாபாரி ஆகிய 
				மூவரும் நாய்க்கு எப்படியும் சுதந்திரம் தர வேண்டும், 
				பிச்சைக்காரனின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, 
				முடிவெடுத்தனர்.
 
 "குருட்டுப் பிச்சைக்காரன், இப்போது வட்டிக் குப் பணம் 
				தருகிறானாம், பழ வியாபாரி பரந்தாமன் பார்த்திருக்கிறான்" என்றார் 
				கயிறு விற்றவர். "தேவைக்கு அதிகமாய் சம்பாதிக்கிறான்" 
				"பணத்துக்குப் பேயாய் அலைகிறானாம்" இது புத்தக வியாபாரி.
 
 "பாவம் அந்த நாய்" என்றார் இன் னொருவர்.
 
 அப்போது நாயும் பிச்சைக்காரனும் வழக்கம்போல சந்தையில் நடமாடிக் 
				கொண்டிருந்ததை அவர்கள் பார்த் தார்கள்.
 
 அழகு சாதனப் பொருட் களை விற்றவர் நாய்க்கு இழைக்கப் பட்ட 
				கொடுமையைத் தாங்க முடியாமல் கொதித்தெழுந்தார். கையில் ஒரு 
				கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டார். மெதுவாக நடந்து செல்லத் 
				தொடங்கினார். அப்போது அங்கே பிச்சைக்காரனின் ஏவலில் திக்கித் 
				திணறியவாறு அந்த நாய் வந்து கொண்டிருந்தது. இறைச் சிக் 
				கடையிலிருந்து சாலையில் விழுந்துகிடந்த ஒரு துண்டை பார்த்ததும், 
				அதை எடுக்க அது தாவியது. அதனால் அதைப் பிடித்துக் கொண்டு வந்த 
				பிச்சைக்காரனின் கை இறுகியது. கோபம் கொண்ட அவன், அந்த வாயில்லா 
				ஜீவனை நன்றாக அடித்தான். நாய் வலி பொறுக்காமல் அலறியது. அது எட்ட 
				நினைத்த இறைச்சித் துண்டை மற்றொரு தெருநாய் ஆனந்தமாய்க் கவ்விச் 
				சென்றது.
 
 இந்தக் கொடுமைகள் அந்தத் தெருவில் சென்றோரையும் வேதனைப்படுத்தின. 
				அதற்குள் அங்கு சென்றுவிட்ட அழகு சாதனக் கடைக்காரர், தம் 
				கையிலிருந்த கத்தரிக்கோலால், நாயின் கழுத்திலிருந்த கயிற்றைக் 
				கத்தரித்துவிட்டு; அந்த நாய்க்கு சுதந்திரத்தைக் கொடுத்து 
				விட்டார்.
 
 திடீரென சுதந்திரம் பெற்ற நாய் அங்குமிங்கும் ஆனந்தக் களிப்பில் 
				ஓடியது. மீண்டும் தன் குரலை சரி செய்துக் கொள்ள 'லொள் லொள்' என்று 
				நிறைவாகக் குறைந்தது.
 
 பிச்சைக்காரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "ஏய் டைகர், தெரு நாயே! 
				எங்கே போய்விட்டாய்?" என்று கத்தினான். அவன் கையில் பாதி கயிறு 
				மட்டுமே இருந்தது. சந்தைக் கடையில் இருந்தவர்கள், அங்கு 
				நடைபெற்றுக் கொண்டிருந்த நாடகத்தை ரசித்துக் கொண்டிருந் தார்கள்.
 
 "எங்கே என் நாய்? அதை, யாராவது என்னிடம் பிடித்துக் கொடுங்கள்" 
				என்று பிச்சைக்காரன் வேகமாகக் கத்த ஆரம்பித்தான். அடுத்த விநாடி, 
				மிகுந்த கோபங் கொண்டவனாக, "அந்த நாய் என் கையில் கிடைக் கட்டும், 
				அதைக் கொன்று விடுகிறேன்" என்று ஆவேச மாகக் கிளம்பினான். அந்தக் 
				குமுறலில் சாலையைக் கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
 
 "அவன் அந்த நாய்க்கு செஞ்ச பாவத்துக்கு கார்ல அடிபட்டு செத்தாலும் 
				தப்பில்லை" என்று பாதசாரிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படியும் 
				ஒருவன் அவன் மீது இரக்கப்பட்டு சாலையைக் கடக்க உதவியதோடு அவன் 
				இருக்கும் இடத்திலும் கொண்டுபோய் விட்டுச் சென்றான்.
 
 அதன்பின், பல நாட்கள் அந்தப் பிச்சைக் காரனை அந்த வட்டாரத்தில் 
				யாருமே பார்க்கவில்லை. அந்த நாயையும் யாரும் பார்க்கவில்லை. 
				கடைத்தெருவில் பேசிக்கொண்டார்கள். "அந்த நாய் இப்போது 
				சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும்..... அப்பப்பா 
				எப்படியெல்லாம் அந்த எம காதகன் அதைச் சித்திரவதைப் படுத்தினான்" 
				என்று அவர்கள் பேசிமுடிக்கவில்லை. அடுத்த விநாடி "அதோ பாருங்கள்" 
				எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அதே பிச்சைக்காரன், அதே நாய் 
				ஆனால் அதன் கழுத்தில் கம்பிச் சங்கிலி கட்டப்பட்டிருந்தது. 
				பிச்சைக்காரன் ஏற்கெனவே இருந்ததைவிட இப்போது அதிக அதிகாரத்துடன் 
				நாயைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
 
 யாராலும் அந்தக் காட்சியை நம்பமுடியவில்லை. தாங்கள் காண்பது கனவா 
				நனவா என்பதை அறிய கண்களை கசக்கிக் கொண்டிருந்தார்கள். 
				பிச்சைக்காரன், தன் வீர பிரதாபங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.
 
 "எங்கெங்கோ திரிந்துவிட்டு, சாப்பாட்டுக்காக என் இடத்துக்கு நேற்று 
				நள்ளிரவு டைகர் வந்தது. அது இல்லாமல் காய்ச்சலில் எப்படியெல்லாம் 
				நான் தவித்திருப்பேன். ஓங்கி ஓர் அறை கொடுத்ததில் சுருண்டுபோய் 
				விழுந்தது. அடுத்த விநாடி என் அருகில் வந்தது. விடுவேனா நான் 
				அதற்காக வாங்கி வைத்திருந்த கம்பிச் சங்கிலியை அதன் கழுத்தில் 
				கட்டி விட்டேன் . நான் கொடுத்த அறையை அது ஜன்மத்துக்கும் இனி மறக்க 
				முடியாது" என்று பிச்சைக்காரன் பெருமை பேசினான். அதனுடன் அவன் 
				நிறுத்தியதாகத் தெரிய வில்லை. பிச்சைக்காரனின் வீர வசனங்கள் 
				சந்தைக் கடைக்காரர்களை மேலும் கோபமடையச் செய்தது.
 
 அவர்களால் இந்த முறை ஒன்றுமே செய்ய முடியவில்லை. "சீ! இப்படியும் 
				ஒரு நாயா? சுதந்திரத்தின் அருமை தெரியாத குருட்டு நாய்! சாவு 
				ஒன்றுதான், அந்த அடிமைக்கு விடுதலை தர முடியும் போலும்!" என்றார், 
				சந்தையில் கயிறு விற்றுவந்த மூத்த வியாபாரி. அந்தக் கடைத்தெருவில், 
				மீண்டும் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரனும் அந்த அடிமை நாயும் 
				பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
 |  |