வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 6
செப்டம்பர்-டிசம்பர் 2008
முகப்பு  |  உள்ளடக்கம்

விமர்சனம்

 

தமிழுக்கு அமுதென்று பேர்

மா. இராமையா

 

       
 

எழுத்தாளர் திரு ஏ.தேவராசன் அவர்கள் ஒரு சிறுகதைத் தொகுப்பை என்னிடம் கொடுத்து 'இது சிங்கப்பூர் எழுத்தாளரின் படைப்பு. படித்துப் பாருங்கள்' என்று கொடுத்தார். 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்பது தொகுப்பின் தலைப்பு.

பத்துகசி சிறுகதைகளை உள்ளடக்கி இருக்கிறது. சிங்கப்பூர் எழுத்தாளரின் தொகுப்பு என்பதால் ஒரே மூச்சில் படித்துவிட வேண்டுமென்று ஒவ்வொரு கதையாகப் படித்துக் கொண்டு வரும்போது 'தமிழுக்கும் அமுதென்று பேர்...' எனும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளில் ஒரு பகுதி தலைப்பாக இருப்பதைக் காண, அதனைப் படிப்பதில் தனி ஆர்வம் உண்டாயிற்று.

கதையைப் படித்துக் கொண்டு வரும்போதே ஒருவித பயம், திகில், எதையோ இழந்துவிட்ட பரிதவிப்பு, கவலை மனத்திற்குள் பதிந்துவிட்டது. கதையை முடிக்கும் போது இவையனைத்தும் ஒன்று திரண்டு ஓர் ஏக்கத்தை, தவிப்பை உருவாக்கிவிட்டன.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், அந்தக் கதையைத் தாண்டி அடுத்த கதைக்குப் போகவில்லை; போகமுடியவில்லை. 'தமிழுக்கு அமுதென்று பேர்..., கதை ஏற்படுத்திய பயத்தில் உறைந்து போனேன்.

அந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். அது பேய் கதையும் இல்லை, பிசாசு கதையும் இல்லை.

உங்கள் உணர்வோடு கலந்த தாயோ தந்தையோ உடன் பிறப்புகளோ உங்களை விட்டுப் பிரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? 2200ஆம் ஆண்டிற்குள் தமிழ் அழிந்துவிட்டது என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சி, பயம், கவலை ஏற்படாது?

சிங்கப்பூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் பெண் தன் மகனை இந்தியாவுக்கு (தமிழ் நாடு அப்போது இல்லை போலும்) தமிழ் படிக்க வைக்க அழைத்துப் போகவிருப்பதாக வேற்றூரில் இருக்கும் தன் கணவனிடம் சொல்கிறாள், கணினி வழி.

இந்தியா தன் முன்னோர்கள் வாழ்ந்த ஊர். அங்கே உள்ளவர்களுக்குத் தமிழ் பேசமட்டுந்தான் தெரியும். எழுத வராது.

'இப்ப யாரு மொழி படிக்கிறாங்க. படித்தே ஆகணும்னு கட்டாயம் இருக்கிறதாலதான் இங்கிலீசு படிக்கிறாங்க'.

' அவுங்களும் நம்ம மாதிரிதான் தமிழ் இங்கிலீசிலே எழுதுறாங்க' என்று சொல்லும் அவள், 'ஏன் உலகம் இப்படி மாறிப் போச்சு. நான் ஒரு இருநாறு ஆண்டுகளுக்கு முன்னாடி பிறந்து இருக்கக் கூடாதா' என்று ஏங்குகிறாள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அவள் தாத்தா கணினியில் தோன்றித் தன் கதையைச் சொல்கிறார். அவர் தன் மகளை தமிழ்ப் பள்ளியில் சேர்க்கிறார். மகளுக்குத் தமிழ்ப் பள்ளிக்குப் போக விருப்பமில்லை. மூன்றாம் நாள் அவள் தமிழ்ப் பள்ளியில் படிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்துகிறாள்.

ஆனால், காலையில் எசம்பிளியில் தலைமை ஆசிரியர் செய்யும் அறிவிப்பு அவள் மனத்தை மாற்றி விடுகிறது. இனி பள்ளி நான்கு மணி நேரமே நடக்கவிருப்பதால் பாடங்களும் குறைக்கப்படும் என்கிறார். குறைக்கப்படும் பாடம் எது? ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி இல்லை, தமிழன். தமிழன்தானே ஏமாளி, இளிச்சவாயன். 'தமிழ் கட்டாயப் பாடம் இல்லை என்பதால் தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடலாம் என்று குழு முடிவு செய்திருக்கிறது' என்று தலைமை ஆசிரியர் அறிவித்ததும் மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். தமிழ் போதிக்கப் படாத பள்ளியில் தன் மகளைச் சேர்க்க வேண்டாமென்று தந்தை நினைக்கிறார். ஆனால், மகள் 'நான் பள்ளிக்குப் போறேன். இங்கதான் இனி தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க' என்கிறார்.

தன் மகள் தமிழ் படிக்க வேண்டும் என்பதற் காகவே ஊர் மாறிவந்து, ஒன்றுக்கு இரண்டாகக் கொடுத்து வீடு வாங்கியது குழந்தைக்குத் தெரியாது.

தன் தாத்தாவின் கதையைக் கேட்ட பிறகு தன் மகனுக்குத் தமிழ் போதிக்கும் ஆசை வருகிறது. தன் மகனை இந்தியாவில் ஒரு குழுவாக முன்னூறு பேர் வாழும் ஊருக்கு அழைத்துப் போக எண்ணும் தன் மனைவியை திசை திருப்புகிறார் அவள் கணவர். நம்மை போலவே ஆங்கில எழுத்து மூலந்தானே தமிழை எழுதுறாங்க, அங்கு போய் எப்படித் தமிழைப் படிக்க முடியும் என்பதுதான் குறுக்கீடு.

அழிந்து போன சப்பான் மொழியை உயிர்ப்பிக்க ஹசி என்பவர் தம் மொழியைச் சிலருக்குப் போதித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த எழுத்தோவியர். அவள் கணினி வழி தொடர்பு கொண்டு அவரிடம் உதவி கேட்கிறார்.

'என் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவப் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. என்னால் அவற்றை ஓரளவு வாசிக்க முடியும். நீங்கள் அதைப் பழகிக் கொண்டு எனக்கும் என் மகனுக்கும் எழுதச் சொல்லித் தரவேண்டும்,

கேட்பது யாரிடம், ஒரு சப்பான்காரரிடம்? 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி' எனப் புகழ்பெற்ற மொழிக்குச் சொந்தக்காரி சப்பான்காரரிடம் தமிழைச் சொல்லிக்கொடு என்று கேட்பது, இப்போதைக்கு கேவலமாகத் தோன்றினாலும் 2200ஆம் ஆண்டில், தமிழின் நிலை அது தான்என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர் லதா.

இந்தக் கதையைப் படிக்கும்போது நமக்கு மலாக்கா செட்டிகளும், மொரிசீயசு, சீசெல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சுற்றியிருக்கும் தீவுகளில் வாழும் தமிழர்களுந்தான் நினைவுக்கு வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு பயமும் மனத்தை நெருடுகிறது.

அன்று தமிழ் மொழியை மறந்து விட்டு, இன்று தமிழ் படிக்க ஆசை கொள்ளும் மலாக்கா செட்டிகளின் நிலைக்கு வந்து விடுவோம் என்பதைச் சொல்லாமற் சொல்கிறது இந்தக் கதை.

எழுத்தாளரைப் படைப்பாளர்கள் என்பார்கள். அதற்கு மேலும் அவர்களைத் 'தீர்க்கத்தரிசி' என்றும் சொல்வதுண்டு.

அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் தம் நாவலின் கதாபாத்திரத்தை நிலவுக்குச் சென்று வருவதுபோல் படைத்திருந்தாராம். அமெரிக்க மக்கள் 'இவன் ஒரு பைத்தியக்காரன், மனிதர்களாவது நிலவுக்குப் போகப் போவதாவது' என்று கேலி செய்திருக்கிறார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதிக்கவில்லையா?

இந்தக் கதையைப் படிக்கும் போது நம் தமிழ் மொழிக்கு இப்படி நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற தவிப்பு, பயம், கவலை நமக்கு உண்டாகிறது. இவற்றை உண்டாக்குவது எழுத்தாளரின் நோக்கமாக இருக்காது. இது நமக்கொரு எச்சரிக்கை.

இப்போதைய சூழ்நிலையை ஊன்றிக் கவனித்தால் நாம் அந்தத் தடையத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது தெளிவாகத் தெரியும். ஐம்பது ஆண்டுகளில் நாம் ஆயிரம் பள்ளிகளில் பாதியை இழந்துவிட்டிருக்கிறோம். தமிழ்ப் பள்ளிகளும் இப்போது தம் தோற்றத்தை இழந்துக்கொண்டு வருகின்றன. பெயர்தான் தமிழ்ப்பள்ளி. ஆளுமை வேற்று மொழிகளில் இருக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளின் நினைவே இல்லாமல் 'கும்பகர்ண' தூக்கம் போட்டுவிட்டு, இப்போது தமிழ்ப் பள்ளிகளை வைத்து 'அரசியல்' பண்ண நினைப்பதை விட்டுவிட்டு இருக்கும் பள்ளிகளாவது நிலைத்திருக்க வழிகாணுவதுதான் அறிவுடமையாகும்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768