வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 6
செப்டம்பர்-டிசம்பர் 2008
முகப்பு  |  உள்ளடக்கம்

விமர்சனம்

 

பெண்மொழி : மனச் சிதைவுகளும் மன நெருக்கடிகளும்

ரமேஷ் டே

 

       
 

இலக்கிய படைப்புலகில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் காலமிது. ஆயினும் பெரும்பாலானவை விமர்சன தகுதிக்குக் கீழானது என்பதினால் படிப்பதோடு விட்டு விட வேண்டி வருகிறது. காலத்தை மீறும் படைப்பென்று ஒரு நிகழ்கால படைப்பினை அடையாளம் காட்டுவதற்கு பெருந்தயக்கம் நமது தமிழ்கூறும் நல்லுலகில் நெடுங்காலமாக இருந்து வருகின்றது. சிங்கப்பூர் பொறுத்தவரை அங்கு வெளிவரும் படைப்புகளுக்கான விமர்சனங்களைக் காண கிடைப்பது அரிதாகவே இருக்கின்றன.

தமிழ் பெண்களின் தனிப்பட்ட வாழ்வியலை, உள்ளத்து உணர்ச்சி வெளிப்பாட்டை, அவர்களே சொல்ல முன்வரும்போது ஓர் இயல்புத்தன்மையும் யதார்த்தமும் தெளிவாக தெரிய வருகிறது. பெண்ணைப் பற்றி ஆணோ, ஆணைப் பற்றி பெண்ணோ எழுதும்போது ஒரு கோடு போட்ட எல்லையைத் தாண்டி போக இயலாமல் திக்கித் திணரும் சூழல் ஏற்பட்டு வருகிறது. தன் கற்பனை திறன்கொண்டு அப்படியே எழுதினாலும் அதன் போலித் தன்மையினால் கவன சிதறல் அல்லது ஈர்ப்பு சிதறல் உருவாகி மேலோட்டமான வாசிப்புத்தன்மையினால் எவ்வித பயனுமின்றி புத்தகம் மூடிவைக்கப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றது.

ஆண்கதை சொல்லி மற்றும் பெண்கதை சொல்லி ஆகியோரின் எழுத்துக்களிடையே வித்தியாசங்கள் இருக்கின்றன என்றொரு கூற்றை முன் வைக்கிறேன். இதனை ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து நடையின் வழி நிரூபிக்கிறார் லதா. எல்லா சிறுகதைகளும் எளிய வாசிப்பிலேயே புரிந்துக் கொள்ள கூடியவைதான். ஒரு சில சிறுகதைகளின் கரு எங்கோ எதிலோ வாசித்திருப்பினும் இத்தொகுப்பில் சற்று வேறுபட்டு காணப்படுகின்றன. கதைசொல்லி, தன்னையே முன்வைத்து எழுதும் கதைகளே தனித்துவ அழகியலையும் தனித்துவ அடையாளத்தையும் கொண்டிருக்கின்றன. எ.கா: 'மழை-அப்பா', 'இதுவரை', 'பயணம்', 'வீடு' மற்றும் 'அறை'.

கதையினூடாகவோ எழுத்து நடையிலோ கதைசொல்லி தத்துவ விசாரணைகளை புகுத்தவில்லை. இது நவீனத்துவத்தின் அடையாளம். இவ்வடையாளம் ஒரு பலவீனம் என்று ஒரு சாராரும் பலம் என்று மற்றொரு சாராரும் சொல்ல முற்படுவர். பலம் என்று எவ்வகையில் சொல்லப்படுகின்றது என்ற கேள்விக்கு நவீன இலக்கிய சிந்தனை விடை கொடுக்கிறது:

'உனது அறிவுரைகளையும் தத்துவங்களையும் நீயே வைத்துக்கொள். உன்னிடமிருந்து நாங்கள் கற்று எங்களுக்கு வேண்டிய அல்லது கிடைக்கும் தத்துவங்களை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம் / விமர்சித்துக் கொள்கிறோம். இதுவரை படித்த புத்தகங்களில் அறிவுரைகளும் தத்துவங்களும் கொட்டி கிடக்கின்றன.'

வானத்தின் கீழ் மனித வாழ்வு முன் வைக்கும் தத்துவங்களை இச்சிறுகதைகளிலிருந்து நாமாகவே எடுத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு இத்தொகுப்பு அமைந்திருக்கின்றது. எனவே, இந்த கதையிலிருந்து கதை சொல்லி என்ன சொல்ல வருகிறார், தரும் நீதி என்ன என்ற கேள்விகளுக்குப் பதில், வாசிப்பவனிடத்திலும் விமர்சிப்பவனிடத்திலும் இருக்கின்ற உண்மையை அறிய வருகிறோம்.

இத்தொகுப்பிலிருக்கும் எல்லா சிறுகதை களுக்கும் சேர்த்து "நான் கொலை செய்யும் பெண்கள்" என்ற மிக பொருத்தமான தலைப்பினையே புத்தகத்திற்கு வைத்திருக்கிறார்.

'இதுவரை', 'முகாந்திரம்', 'படுகளம்' ஆகிய சிறுகதைகளில் வரும் பெண்கள் தற்கொலை புரிகிறார்கள். தற்கொலை பண்ணிக் கொள்ளும் பெண்களை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வ தில்லை. தற்கொலை என்பது ஓர் ஈன செயலென்றும் கோழைத்தனத்திற்குரியது என்றும் கருதுகிறோம். வினாடிகளின் அவகாசத்தில் அம்முடிவு எடுக்கப் படுகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு முன்பே தற்கொலைவாதிகள் தங்கள் மனதை தயார்படுத்தி வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை இக்கதைகளை படித்த பிறகுதான் புரிந்த கொள்ள முடிகிறது. தற்கொலைச் சிந்தனை தாக்கங்கள் எவரையும் விட்டுவைப்பதில்லை. குறிப்பாக பெண்களை. மெத்தப் படித்த பெண்ணாகட்டும், ஆயிரமாயிரம் சம்பாதிக்கும் பெண்ணாகட்டும், மதப்பற்றுள்ள பெண்ணாகட்டும், எவருக்குள்ளும் அச் சிந்தனையானது ஆட்கொண்டு தன்வசப்படுத்தும்.

தற்கொலை என்பதே தவறு என்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் போது அச்சிறுகதைகளின் தற்கொலைகள் தவறு என்றோ தவறில்லை என்றோ சொல்லப்படவில்லை. மன உளைச்சல், விரக்தி மற்றும் தன்னைத் தானே வெறுத்தல் ஆகியவையே முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. கதையின் முடிவிலிருக்கும் தெளிவின்மை நவீனத்திற்குரியதாகும். மொழிநடை என்று பார்க்கும்போது நவீனத்திற்குரிய அடையாளமேதுமில்லை என்றாலும் சொந்த நடையினை கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

இதுவரை: விமானிப் பெண்ணொருத்தியின் வாழ்க்கை ஆரம்பத்திலேயே அம்மாவும் சித்தப்பாவும் விபத்தில் இறக்கிறார்கள். விமான சாகசப்பிரிவின் நான்கு நண்பர்களின் நட்பில் சுகித்திருக்கையில் 'செத்தால் எல்லோரும் ஒன்றாக சாவோம்' என்ற நட்பின் இறுக்கத்தினால் பாராசூட்டை விரிக்காத நண்பர்களின் தற்கொலை மரணம்; அதனால் ஏற்படும் குற்றவுணர்வின் அலைக்கழிப்பு, வியாபாரத்தில் சறுக்கலான தோல்வி; அதனால் கடன்காரியான அவதி, தன்னை காதலிக்கும் மனதை அறியாததொரு அவலம். இப்படியாக, ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் விபத்தும் நண்பர்களின் அந்த தற்கொலையும் எதுவும் செய்ய இயலாத, தன்னை மீறி நடக்கும் சம்பவங்கள். ஆனால், கடைசி நிகழ்வானது தனக்கு கீழுள்ள சக விமானப் பணியாள் தன் காதலை வெளிப்படையாக சொல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை மறுத்து ரோஜா பூவை மட்டும் அருகில் வைத்துவிட்டு செல்கிறான். கதையின் கடைசி வாக்கியத்தில் '...அது என்ன...' என்ற சொற்றொடர் அதனை நிரூபிக்கிறது. தற்கொலை மரணத்திற்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்த பிறகே அந்த ரோஜாப்பூவை காண்கிறாள். It's too late என்றுதான் நம்மால் சொல்ல முடிகிறது.

முகாந்திரம்: நகர்சார்ந்த மனங்களின் மன இறுக்க பதிவுகள் இக்கதை. இக்கதையில் நிறைய கதாபாத்திரங்கள் சத்திமின்றி நகர்கின்றன. செல்லம்மாவின் நெருங்கிய தோழி செரீன். 9/11 தாக்குதலும் பாலி-மும்பை- லண்டன் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மதரீதியாக அணுகி செரீனை வெறுக்கிறாள் செல்லம்மா. ஒரு ஜெர்மன்-ஆப்பிரிக்கரை காதலித்து கலப்புத் திருமணம் புரிந்து கர்ப்பமாக இருப்பினும் தற்கொலை செய்யும் அளவுக்கு தூயநட்பை களங்கப்படுத்திய குற்றவுணர்வுக்குள்ளாகிறாள் செல்லம்மா. வெளியூர் பயணங்களின் ஆய்வுப் பணி களங்கத்திற்கான மனவோட்டங்களை உருவாக்குகிறது.

படுகளம்: சிறு வயதிலிருந்தே நாடகத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் தன் உடல்நிறம் அதற்கு தடையாக இருப்பதினால் மனவிரக்தியடை கிறாள் சண்பக லட்சுமி. தன் கணவன் நாடகத்தில் பெண்வேஷம் போடுவது இல்லற வாழ்வின் ஆரம்பத்தில் சந்தேகப்பட வில்லை. கணவனின் தோழன் வீட்டிற்குள் நுழைய, இவளை வீட்டை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்திப்படு கிறாள். சண்டை நடக்கின்றது. கணவ னின் முன்பாக தோழன் இவளை பலாத்காரம் செய்கிறான். கரு உருவாகிறது. தீமிதித் திருவிழாவில் நடக்கும் பாரதப் போர் காட்சி களமைந்த நாடகத்திற்கு ஒவ்வொரு முறையும் தவறாது பார்த்து வரும் அவளுக்கு அந்நாடகத்தில் தன் கணவனின் பங்கேற்பு எரிச்சலடையச் செய்கிறது. சாமியாடி தன் மனக்கு முறலை வெளிப் படுத்துகிறாள். ஒருவரும் கேட் பாரில்லை. பூசாரியும் பார்வையாளர்களும் அதிர்ச்சியடையும் அளவிற்கு தீமிதிக்கிறாள். இறக்கிறாள். தற்கொலையின் ரகம்தான் இது. கரு ஒரு களங்கம். தாலி ஒரு களங்கம். அக்களங்கத்தை போக்கி கொள்ளும் பொருட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

இதுபோக, மற்ற சிறுகதைகளில் முக்கிய, பிரதான பெண்கதாபாத்திரங்கள் மனச்சிதைவு அடைவதும் ஒருவித கொலைக்கான அடையாளம்தான்.

அடையாளம்: இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மருமகளாக வருபவள் ஒரு பச்சைத் தமிழ்பெண்ணாக வாழ்க்கை நடத்துகிறாள். கணவனின் கரித்துக் கொட்டும் வார்த்தைகள், மாமனாருக்கு நேரந்தவறாத சேவை, மாமியாரின் ஓயாத அலட்டல்களுக்கிடையே வளர்ந்த பெண்பிள்ளையின் கேலி மற்றும் நகர்சார்ந்த நெருக்கடி வாழ்வு யாவும் இவளை நெருக்குகிறது. சிங்கப்பூர் குடிமகள் என்ற அடையாள அட்டையின் கவுரவம் இவளுக்கு கிடைத்திருந்த போதிலும் அவ் வாழ்வு இவளை அழமட்டும்தான் வைத்திருக்கின்றது. ஒவ்வொரு திருமண வைபவத்திற்கு போகும்போதெல்லாம் குமரன் என்ற ஞாபகம் இவளுக்கு வருவது தன் இயலாமையை, தனக்கு திணிக்கப்பட்டதுதான் இந்த வாழ்வு என அப்பட்டமாக காட்டுகிறது. திணிக்கப்படுவதின் மூலம் சிதைக்கப்படுகின்றது அவளது மனமகிழ்ச்சி.

நாளை ஒரு விடுதலை: சிங்கப்பூருக்கு வந்த வீட்டு வேலைக்காரியின் கதை. எஜமானியின் ஓயாத நச்சரிப்பும் மோசமான நடத்துதலும் சித்தரிக்கப்படு கின்றது. பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் ஆண்வருகையாளர்களின் வேலைக்காரியைப் பார்த்த காம பார்வையும் மேடை பேச்சு முரணும் விவரிக்கப் படுகின்றது. அவமரியாதையும் அவமதிப்பும் கிடைக்கும் வீட்டில் எதிர்க்குரல் புரியாமல் அடிமைபோல வேலை செய்கிறாள். மிகவும் களைத்திருந்தபோதிலும் வீட்டு எஜமானனின் உடல் பசிக்கு இசைந்துப் போகிறாள். அவள் இசைந்து போவது ஒன்றும் புதிதல்லவென்று கதை சொல்லி ஒரே ஒரு வார்த்தையில் வெளிப்படுத்துகிறார். 'அன்றும்' என்ற வார்த்தையில் வரும் 'ம்' அந்த அர்த்தத்தை கொடுக்கின்றது. இப்படி தமிழின் ஓர் எழுத்து விடுபட்டாலோ சேர்த்தாலோ அல்லது இலக்கணப் பிழையோடு எழுதினாலோ அர்த்தம் வேறுபடும் அபாயம் நமக்கு தெரியாத தல்ல. இத்தொகுப்பில் ஆங்காங்கே இக்குறைபாடுகள் காணப்படுகின்றன. இப்புத்தகம் பல்கலைக்கழகங்களில் மாணவர் களால் ஆய்விற்கு எடுத்துக் கொள் ளப்படும்போது அவ்வெழுத்து பிழைகள் கதை சொல்லியின் இலக் கியத் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதனை உணர வேண்டும்.

மழை-அப்பா: அம்மாவை 'அம்மா' வென்றும் அப்பாவை 'அப்பா' என்றும் அழைக்காத மனசிதைவுக் குள்ளான மகளின் கதை இது. அப்பா வின் அழுக்கு உடல், புகையிலையும் குடிப்பழக்க மும் மகளை தூர நிற்க வைக்கிறது. அப்பாவின் தொடுதல் அருவருப்பு கொடுக்கின்றது. அப்பா குடித்துவிட்டு அம்மாவோடு போடும் சண்டையினால் பக்கத்து வீட்டில் தூங்கும் அளவுக்கு நிலைமை மோசம். மகள் வளர்ந்திருக்கையில் அம்மா வேறொருவனோடு ஓடிப்போகிறதினால் இரண்டாம் சிதைவு ஏற்படுகின்றது. இவ்விஷயம் மகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அம்மா ஓடிப்போகும் விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். அப்பாவின் மேலுள்ள வெறுப்புணர்ச்சி ஒரு மழை நாளில் மாறுகிறது. தனக்கும் அப்பாவிற்குமான இடைவெளி குறையும்போது அப்பாவோடு சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் நடக்கிறது. இது மனசிதைவின் விளைவாக கூட இருக்கலாம் அல்லது சிங்கப்பூர் தந்த நவீன நாகரீக வாழ்வின் அடையாளமாக கூட இருக்கலாம். அன்பு சார்ந்த நெருக்கடி தன் பிள்ளைகளுக்கு அப்பா கதை சொல்லும் போது முற்றாக நீங்குகிறது.

கதையில், அப்பா பீர் குடித்து குடல் வெந்துப் போனது என்ற சமாச்சாரம் தவறாக சொல்லப் பட்டிருக்கின்றது. பீர் குடித்து ஒரு போதும் குடல் வெந்து போகாது. மாறாக, உயர் இரத்த அழுத்தம் உண்டாகிமாரடைப்பு வரும். விஸ்கி மற்றும் மலிவான சாராய வகையறாக்களே குடல் வெந்துப் போக செய்யும்.

வீடு: பேச்சுவழக்கு மொழி நடை. இரண்டாம் கணவர் சந்தனசாமியோடு வீட்டை கட்டிக் காத்த குடும்பப் பெண்ணின் கதை. வீட்டோடு பேசுகிறார். வீடும் இவரோடுகூட நம்மிடம் பேசுகிறது. இவரின் மூத்த மகள் கடற்கரையோரம் வீடு வாங்கியது இப்பெண்மணிக்கு பெரிதாகப்படவில்லை. தான் வாழ்ந்து சுகித்த வீட்டை விட்டுப் போவதே மன சிதைவை உருவாக்குகிறது.

பயணம்: ஒரு டாக்ஸி ஓட்டுனரோடு ஒரு பெண்ணின் சிறுபயணம் தான் கதை. உரையாடல் களாலேயே நிரம்பிய கதை. சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுனரின் வாழ்க்கை இதில் சொல்லப்படுகின்றது. டாக்ஸி ஓட்டுனரோடு அந்தப் பெண், பேச்சு கொடுக்கிறார். பேசிக் கொண்டே போகிறார் ஓட்டுனர். இவரால் எப்படி அத்தனையும் சொல்ல முடிகிறது என்ற கேள்வி எழுகிறது. பயணிகளை வசீகரிக்கும் சொற்களோடு அவர்களின் மனத்தேவைகளையும் அறிந்து வைத்திருக்கிறார் ஓட்டுனர். ஆகவே அரசாங்கத்தின் கவுரவிப்பும் கிடைத்திருப்பதை சொல்கிறார். எல்லா விஷயங்களையும் பேசக்கூடிய அறிவு டாக்ஸி ஓட்டுனருக்கு உண்டு என்பதை நிரூபிக்கிறார். இருந்தும் கடைசியில் சில்லறை விஷயத்தில் பயணியிடம் கோபித்து மன சிதைவை உருவாக்குகிறார். ஒருவரை அடுத்த முறை சந்திக்கப்போவதில்லை என்ற நிச்சயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். நாமும்கூட ஒருவரை அடிக்கடி சந்திக்கும் பட்சத்தில் மனம்திறந்து எல்லா வற்றையும் சொல்வதில்லை. இதுவே கடைசியானது எனும்போது கொட்டித் தீர்த்துக் கொள்வோம்.

அறை: வாடகை அறையில் தங்கும் ஒருத்தியின் கதை. இவள், வேலை உண்டு தன் சிறு அறை உண்டு என்றிருப்பவள். வீட்டுக்காரரிடம் வாடகைப் பணத்தை கொடுக்கும் போது மிக சிக்கனமாக வானிலை பற்றி மட்டும் பேசுபவள். தன்னறையில் நுழைந்ததும் இசையை அல்லது டிவியை சத்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டு காலங்கழிப்பவள். அறையை விட்டு வெளியே வந்து வீட்டில் இருப்போரிடம் பழகாதவள். ஒருவேளை அவ்வீட்டின் மொழி- கலாச்சாரம் இவளுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கலாம். வீட்டுக்காரரின் இறப்பு இவளின் மனதை சத்தமில்லாமல் சிதைக்கிறது. கதையின் நடை மிக இயல்பாக ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பல வரிகள் மனதை அள்ளி கொள்கிறது.

தமிழுக்கு அமுதென்று பேர்: இது ஒரு கற்பனை கதை. 2200-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழை ஆங்கில எழுத்து வடிவத்தில் படிக்கும், கணினியில் 'டைப் அடிக்கும்' நிலை உருவாகிறது. தன் மகன் தமிழன் தமிழ்மொழியை கற்றுக் கொள்ளும்படி தாயொருத்தி இந்தியா புறப்பட முடிவு செய்கிறாள். அங்கே தமிழ்நாட்டில் தன் முன்னோர்கள் வாழ்ந்த ஒரு பகுதியில் தமிழை ஆங்கில எழுத்து மூலமாக கற்றுத் தரப்படு வதையறிந்து வருத்தப்படுகிறாள். கடைசியாக, தமிழ் எழுத்துருவை ஒரு ஜப்பானிய எழுத்தோவியர் மூலமாக கற்றுக் கொள்ளும்படி முயற்சி எடுக்கப்படுகின்றது.

இச்சிறுகதையின் இன்னொரு கிளைச் சிறுகதையும் சொல்லப்படுகின்றது. அதாவது, ஆரம்பப்பள்ளியின் பாட திட்டத்தில் பள்ளிநேரம் குறைக்கப்படுவதற்காக தமிழ்மொழி பாடம் நீக்கப்படுகின்றது. தமிழ்மொழி கட்டாயப்பாடமில்லை என்பதால் பலிக்கடாவாகிறது.

இக்கதையின் முற் பகுதியானது வெறுங்கற்பனை என்றாலும்கூட இன்றைய கற்பனைதான் மறுகால கட்டத்தில் நிஜமாகிவிடுகிறது. இக்கதை ஒரு மொழியின் அழிவைப் பற்றி சிந்திக்க வைக்கின்றது. வேறொரு இனமோ மதமோ நமது இடத்தை அல்லது நம்மை ஆக்கிரமிக்கும்போது நமது மொழி சிதைக்கப்பட்டு கலப்படமாகி காணாமல் போய்விடுகிறது. திரவியம் தேடி, புகலிடம் தேடி இடம் பெயர்ந்து போகும்போதும் மொழி சிதைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு நூறு ஆண்டோ ஓராயிரம் ஆண்டோ மொழி சிதைவின் காலகட்டத்தை அறுதியிட்டு கூற இயலாது. எபிரெயு, அராமிக், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் சிதைந்த சரித்திர பதிவு காண கிடைக்கவில்லை. ஆனால், இன்றைய காலத்தில் மொழியின் சிதைவு நம் கண் முன்னே அதன் அடையாளங்கள் காண கிடைக்கின்றன.

1) நமது நாட்டு ஆரம்பப்பள்ளி முதலாமாண்டு மாணவர்களுக்கு 'இப்படித்தான் ஆரம்பித்து முடிக்க வேண்டும்' என்ற தொடர் புள்ளிகளைக் கொண்ட தமிழ் எழுத்துருவின்மேல் எழுதும் பயிற்சி இன்றில்லை.
2) மலாக்கா மாநிலத்தில் ஒரு பகுதியில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது.
3) தமிழ்நாட்டில் தமிழ்மொழி பல கலப்படங்களுக்குள்ளாகி, கவுரவ குறைச்சலாகி, எங்கும் எதிலும் கணினிமயம் என்பதாகி இளையோரை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆங்கில கணினியின் விசைப்பலகையிலிருந்து நிரல் செயலி, மென்பொருள், வலைமனைகள் யாவும் தமிழில் காணப்பட்டாலும் கூட தமிழ் எழுத்துரு பயிற்சி மிக முக்கியமானதொன்று என கதை சொல்ல வருகிறது.

இறுதியாக, இச்சிறுகதை தொகுப்பில் 'முகாந்திரம்' மற்றும் 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற கதைகளில் இணையதளம்- வலைப்பின்னல்- வலைப்பக்கம்- வலைப்பூ- புளோக் என நவீன சாதனங்களின் பயன்பாடுகள் காண முடிகின்றன. இப்பயன்பாட்டு பகுதிகளைப் பார்க்கையில் இழுவை வார்த்தைகளில்லாத கச்சிதமான வாக்கிய அமைப்புகள், ஆரம்பித்த நேர்த்தியை பாராட்ட தோன்றுகிறது. ஆயினும் கதையில் நவீனரக சூழலை விவரிக்கும் அழகியல் காணப்படவில்லை, குறிப்பாக 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற சிறுகதையில்.

'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற இச்சிறுகதை தொகுப்பின்வழி லதா என்ற எழுத்தாளர் சிங்கப்பூரில் வாழும் மனசிதைவடைந்த, மன நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெண்களைப் பற்றி நமக்கு சொல்ல வந்ததில் வெற்றியடைந்திருக்கிறார். தமிழில் நவீன வகையிலான எழுத்து முறையில் வெளிவரும் படைப்புகள் கொஞ்சங்குறைவாகவே காண கிடைக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு சமகால எழுத்தாளரான லதா போன்றவர்கள் தொடர்ந்து தனித்துவமான வடிவங்களோடும் நடையோடும் தங்கள் எழுத்துக்களில் புத்தெழுச்சி உருவாக்கி வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768