வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

நீரின்றி அமையாது உலகு
சந்துரு

 

       
 

பூமிக்குத் தண்ணீர் வந்தது எப்படி? சூரியனிலிருந்து வெடித்து உருவான பூமியில் சில நூற்றாண்டுகள் நிற்காமல் தொடர்ந்து பெய்த அடைமழையினால் பூமியில் தண்ணீர் தேங்கி கடல் உருவானது என்று கூறப்படுகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த சிறிய ஆற்றிலும் அதனருகிலிருந்த கிணற்றிலிருந்தும்தான் பூமிக்குத் தண்ணீர் வந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய வயதில் கிணறு பெரும் ஆச்சரியம் எனக்கு. எங்கிருந்தோ வந்து எங்கோ போய்க் கொண்டிருக்கிறது என்று ஆற்றுக்கு எனக்குள் ஒரு விளக்கம் இருந்தது. ஆனால், கிணற்றுக்குள் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதற்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை; யாரிடமும் கேட்கவுமில்லை.

எங்கள் வீட்டுத் தண்ணீர் தேவைகள் அனைத் தும் அந்தக் கிணற்றிலிருந்துதான் நிறைவுபெற்றன. ஒரு முறை அவ்வழியே போன 'புள்டோசர்' ஒன்று தவறுதலாகக் கிணற்றின் மேல் மோதிவிட்டது. அப்போது கிணற்றின் ஒரு சிறிய பகுதி உடைந்து கிணற்றினுள் விழுந்து விட்டது. "மிந்தா மஹாப்லா" என்று சொல்லி விட்டுப் 'புள்டோசரை' ஓட்டி வந்த சீனன் போய் விட் டான். அப்பாவும் அண்ணனும் கிணற்றைச் சுத்தம் செய் யும் வேலையில் இறங்கினார்கள். அது ஒரு கட்டிடம் கட்டும் பணியைப்போல் பிரமாண்டமாக இருந்தது எனக்கு. முதலில் கிணற்றிலிருந்த தண்ணீரை வாளியால் அள்ளி வெளியில் இறைத்தார்கள். பிறகு, அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி உள்ளே விழுந்த கற்களை வெளியில் எடுத்து வீசிக்கொண்டிருந்தபோது ஆவலாகப் போய் எட்டிப் பார்த்தேன். கிணற்றுக்குள் ஒரு மூலையில் சின்னதாய் ஒரு நீரூற்று கிணற்றை நிரப்பிக்கொண்டி ருந்தது. அதைப்பார்த்ததும் ஆனந்தமாகிவிட்டேன். கிணற்றுக்கு நீர் இந்தத் துவாரத்திலிருந்துதான் வருகிறது. ஆற்று நீரைப்போல் கிணற்று நீருக்கும் எனக்கு ஒரு விளக்கம் கிடைத்துவிட்ட ஆனந்தம்தான் அது. அன்று முழுவதும் அந்தச் சின்ன நீரூற்று எனக்குள்ளும் தண்ணீரை நிரப்பிக்கொண்டி ருந்தது.

ஒரு நாள் அண்ணன் என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார். நானும் ஆவலுடன் அவருடன் சென்றேன். ஆற் றோரத்திலிருந்த மண்ணைக் கொத்தி ஆற்றில் கொட்டி அணை கட்டினார். தடை பட்ட தண்ணீர் தேங்கித் தேங்கி ஒரு சிறிய குளமாக மாறியது. அப்புற மென்ன ஒரே கொண்டாட்டம் தான். குதித்துக் குளித்துச் சில நாட்களுக்கு அந்த அணையே கதியென்று கிடந்தோம். கிணறு மறந்து போயிருந்தது.

கொஞ்ச நாள் கழித்து மண் கரைந்து அணை உடைந்துபோனது. எத்தனையோ முறை கேட்டும் இன்னோர் அணையைக் கட்டும் ஆர்வம் அண்ணனுக்கில்லை. நாமே கட்டிவிடலாம் என்று முயற் சித்து மண்வெட்டியைத் தூக்க முடியாததால் அணையை மறக்க வேண்டியதாய்ப்போனது. மீண்டும் குளம் சிறிய ஆறாய் மாறிப்போனது.

பிறகொரு மழை நாளில் எனக்கும் தண்ணீருக்கு மான நெருக்கம் மீண்டும் உருவானது. எங்கள் வீட்டைச் சுற்றி பச்சைப் பசேலென்று புற்கள் மண்டிக் கிடக்கும். ஓர் அடை மழை பெய்து நின்றால் போதும். உடனே, வெறும் காலுடன் வெளியே ஓடிவிடுவேன். புற்களில் தேங்கியிருந்த தெளிந்த மழை நீரில் கால் நனைத்து விளை யாடுவதும் மழையினால் ஏற்பட்ட திடீர் சின்ன நீரோட் டங்களை வேடிக்கை பார்ப்பதும் அலாதிப்பிரியம் எனக்கு. புற்களின் மீதும் செடிகளின் மீதும் பசும்பச்சை வாசம் வீசும். நுரையீரல் சில்லிட்டுவிடும். ஆற்று நீர் பெருக் கெடுத்துப் பெரும் சலசலப்புச் சத்தத்துடன் ஓடிக்கொண் டிருக்கும். இவையனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் நானும் என் தம்பி தங்கையும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு மழையில் நனையும் சிறப்பு அனுமதி அப்பா அம்மாவிடமிருந்து கிடைத்து மழைகால மகிழ்ச்சிகள் இரட்டிப்பாகிப்போயின. அந்தக் கொட்டும் மழை நாட்கள்தான் சந்தோச நாட்கள் எங்களுக்கு. தொப்பையாய் நனைந்து வெறும் காலில் ஓடித்திரிந்து கும்மாளமாக இருப்போம். இந்த நாட்களில் கிணற்று நீரும் தொட்டு விடும் அளவுக்கு மேலே நிரம்பியிருக்கும். அந்தத் தண்ணீரை அள்ளி வீசி விளை யாடிக் கொண்டிருப்போம்.

வெயில் காலங்களில் கதை வேறாக இருக்கும். கிணற்றில் தண்ணீர் ஆழத்தில் கிடக்கும். ஆறு ஆர்ப் பாட்டமில்லாமல் சிறியதாய் ஓடிக்கொண்டிருக்கும். இந்தக் காலங்களில் அம்மா வேலைபார்க்கும் பால் மரக்காட்டிற்குப் போய் விடுவேன். அந்தப் பால்மரக்காட்டில் இந்த ஆற்றை விடச் சற்றே பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். இப்போதிருக்கும் தண்ணீர் ஃபில்டர் கருவிக்குள் கிடக்குமே, கூழாங்கற்கள் அவை அந்த ஆறு முழுக்க கொட்டிக் கிடக்கும். அந்த நீரைக் குடித்தால் தேனாக இனிக்கும். அந்த ஆற்றில் குதித்து விளையாடுவது குறைவுதான் ஏன் என்றால் அங்கே எங்களுக்கு வெள்ளை ஊடான்கள் பிடிப்பதுதான் பிரதான விளையாட்டு. அந்த ஊடான்களைப் பிடிப்பது லேசான காரியமல்ல. அதற்கு நிறைய உத்திகள் இருக்கின்றன. தண்ணீர் சலசலக்காமல், மிக மெதுவாக ஆற்றுக்குள் இறங்கி அசையாமல் அமர்ந்து கொள்ள வேண்டும். வெள்ளை ஊடான்கள் மிகச் சிறியதாக இருக்கும். நம் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுதான். கைத்தட்ட காத்திருக்கும் பாணியில் சிறிய இடைவெளிவிட்டுக் கைகளை வைத் துக் கொண்டு மெதுவாக அவற்றின் அருகில் சென்று பட்டென்று பிடித்து விட வேண்டும். பெரும்பாலும் அகப் படாமல் தப்பித்தோடிவிடும். கையில் சிக்கினால் அதன் தலையைப் பிய்த்து வீசிவிட்டு வாயில் போட்டுத் தின்று விடுவேன். 'ஃபிரஷ்' என்றெல்லாம் இப்போது சொல்லி சாப்பிடுகிறோமே, அதையெல்லாம் தாண்டிய ருசி அது. அந்த வயதில் சாப்பிடத்தான் பிடித் தேன். ஆனால், இப்போது அது தவறோ என்று தோன்றுகிறது. கண்ணாடியைப் போல் மிகத் தெளிவான நீர். வெள்ளை ஊடான்களுக்குத் தோல் மெல்லியதாய் இருக்கும். உள்ளே சதை நரம்புகளை யெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். உச்சி வெயில் நேரங்களில் அவற்றைப் பார்க்கும்போது சிறிய நட்சத்திரங்களைப் போல் மின்னும். இப்போதெல்லாம் இந்தக் காட்சிகளை டிஸ்கவரி, எனிமல் பிளானெட் சேனல்களில் தான் பார்க்க முடிகிறது.

பால் மரக்காட்டு நடுவில் இருந்ததால் ஆற்று நீர் எப்போதும் ஜில்லென்றிருக்கும். ஆற்றைச் சுற்றி சின்னச் சின்ன மிருகங்கள், பூச்சிகள் எப்போதாவது கண்ணில் படும் பச்சைப் பாம்பு என்று அலங்காரமாய் ஓடிக்கொண்டிக்கும். ஆற்றையும் கிணற்றையும் ஒரு நாள் பிரிய நேர்ந் தது. அப்பா கையில் பணம் புரள, குடி யிருந்த பழைய பலகை வீட்டை விட் டுத் தூரமாய் இருக்கும் வேறு மாநிலத்திற்கு வந்து விட்டோம். பெற்றோரையும் நாட்டையும் மறந்து வெளிநாட்டுக்குச் சந்தோசமாய்ச் சென்றுவிடும் பிள்ளையைப் போல் ஆற்றையும் கிணற்றையும் மறந்து சந்தோசமாய் வந்துவிட்டேன்.

நாகரீகமான சிறிய பட்டணத்தில் சீனர்கள் அதிகம் வசிக்கும் தாமானில் இருந்தது எங்களின் புதிய கல் வீடு. அப்போது கல் வீடு என்பது பெரிய விஷயம் எங்களுக்கு. மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு. அதில் ஓர் அறை பையன்களுக்கு (நான், தம்பி, அண்ணன்). அந்த அறையில் பஞ்சு மெத்தையுடன் கட்டில் இருந்தது. தரையில் பாய் விரித்துக் குப்புறடித்துத் தூங்கிய எங்களுக்குக் கட்டில் சொர்க்கமாகத் தெரிந்தது. இவையெல்லாவற்றையும் விட எங்களுக்குப் பெரிய விஷ யமாக இருந்தது அந்த வீட்டில் கழிப்பறை இருந்ததுதான்.

முழுக்கால் சிலுவார், சைக்கிள், ஐஸ் கச்சான், ஹார்லிக்ஸ், மைலோ, பசார் மாலாம், ஆங்கிலப்படங்கள், மைக்கல் ஜாக்சன், ஜாக்கிசான், வீடியோ கேம்ஸ் என்று ஒரு மசாலா இந்திப்படம்போல் நான்கரை வருடங்கள் ஓடி முடிந்தன.

அப்பாவுக்குப் பெரிய சறுக்கல் ஏற்பட்டுப் பணத் தட்டுப்பாடாகி கல் வீட்டிலிருந்து வெளியேற நேர்ந்தது. அந்தத் தாமானை ஒட்டி ஒரு கைவிடப்பட்ட பால் மரக்காடு இருந்தது. அதில் சுற்றி காடு மண்டிய ஒரு பழைய பலகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். தாமானில் இருப்பவர்கள் அதைப் பேய் வீடு என்பார்கள். தாமானை விட உயரமான நிலத்தில் வீடு இருந்ததால் இரவில் வீட்டைப் பார்ப்பதற்குப் பயமாகத்தான் இருக்கும். அந்த வீட்டிற்குக் குடிபோனதே ஆங்கில பேய் படத்தின் துவக்கம் போல் சுவாரஸ்யமாக இருந்தது. வீட்டைச் சுத்தம் செய்வதற்கே ஒரு வாரம் பிடித்தது. வீட்டின் பிரதான பிரச்சனை தண்ணீர் வசதியில்லாமல் இருந்தது தான். வீட்டிற்குப் பின்புற பால் மரக்காட்டிலிருந்து வெளிப்பட்ட பழைய குழாயில் கொஞ்சமாய்த் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எங்கிருந்து வருகிறது இந்தக் குழாய் என்று அப்பாவும் அண்ணனும் தேட, குழாய் பால் மரக்காட்டைத் தாண்டி மலைமேல் இருந்த பெரிய டுரியான் தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறியஆற்றில் தொடங்கியிருந்தது. ஆற்றில் ஒரு சிறிய அணை போட்டு சிறிய குளம் கட்டி குழாய் பொருத்தி அந்த வீட்டிற்குத் தண்ணீர் வசதி பண்ணியிருந்தார்கள். குழாயின் மேல் இலைகள் கொட்டி தண்ணீர் தடைபட்டுக் கிடந்தது. புதிய குழாய்கள் பொருத்திச் சீர் செய்து வாரத்தில் இரண்டு முறை குளத்தைச் சுத்தம் செய்யும் பொறுப்பு எனக்கும் அண்ணனுக்கும் கொடுக் கப்பட்டது. மீண்டும் எனக்குள் தண்ணீரை நிரப்பியது அந்த நாட்கள்தான்.

மேடு பள்ளமாக இருந்த அந்தத் தோட்டத்தில் டுரியானைத் தவிர்த்து வேறு பழ மரங்களும் இருந்தன. டுரியான் சீசனைத் தவிர்த்து மற்ற நாட்களில் தோட் டத்திற்குத் தோட்டக்காரன் வரமாட்டான். அப்போ தெல்லாம் எங்கள் ராஜ்ஜியம்தான். மீண்டும் மழைக்கால குதூகலங்கள் எனக்குள் புதுப்பிக்கப்பட்டன. மழை நாட் களில் டுரியான் தோட்டத்திற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை தற்காலிக நீரோடையாக மாறியிருக்கும். அதில் கால் நனைக்கும் அலாதி வேறெங்கிலும் கிடைக்காது.

குழாய் பொருத்தியிருந்த குளத்தைத் தாண்டி சற்றே கீழே இறங்கி வந்தால் பாறைகளாக இருக்கும். அதன்மேல் விழுந்திறங்கி கொஞ்சமாய்த் தேங்கி அடுத்த பெரும் பள்ளத்தில் விழும் தண்ணீர். அப்படித் தேங்கி யிருக்கும் தண்ணீரின் இரு புறமும் ஜம்புக்காய் மரம் இருந்தது. மழைக்காலங்களில் பெரும் சலசலப்புடன் பள்ளம் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர். அப் போது அந்த ஜம்புக்காய் மரத்தின் மேல் வசதியான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு ஜம்புக்காய் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டே நீரின் சலசலப்பு ஓசையைக் கேட்பது டீடிஎஸ் டிஜிடன் சவுண்டில் இளையராஜாவின் மெல்லிசையைக் கேட்பதைப் போன்று மிக ரம்மியமாய், நிம்மதியாய் இருக்கும். (இன்று இந்தப் பழத்தை பிளாஸ் டிக் பையில் கட்டி வைத்து "அபாங் இனி புவாஹ் ஃபி ரெஷ் அபாங்... ஃபிரெஷ்" எனும் கடைக்காரனைப் பிடித்து அந்தப் பெரும் பள்ளத்தில் தள்ளிவிடலாம் போலி ருக்கிறது)

ஒரு முறை இந்த நீர் எங்கிருந்து துவங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க மலை உச்சிக்கு ஏறினோம் நானும் அண்ணனும். செங்குத்தான சரிவான மலை. தவறினால் பள்ளம்தான். மரங்கள் அருகருகே இருந்த தால் பயம் இல்லை. (மரத்தை வெட்டுபவர்கள் கவனிக் கவும்) மலை உச்சியில் மண்ணிலிருந்து நீரூற்றாய்ப் பொங்கி புதிதாய்ப் பிறந்து கொண்டிருந்தது நீர். சூரிய ஒளிப்பட்டு பொன்னைப்போல் மின்னிக் கொண்டி ருந்தது. முதன் முதலாய்க் கிணற்றுக்குள் பார்த்த நீரூற்று ஞாபகத்திற்கு வந்தது. புதையலைக் கண்டுபிடித்து விட்டவன் போல் பெரும் திருப்தியோடு கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கடைசியாகப் பார்த்த நீரூற்று அதுதான்.

இன்று மழையில் நனைவதற்குப் பணப்பை, அடையாள அட்டை, பேங் அட்டைகள், கைத்தொலை பேசி, ஜலதோசம் என்று எத்தனையோ தடைகள். தலை நகரில் எந்த ஆறும் சுத்தமாக இருப்பதாகத் தெரிய வில்லை. ஆறுகளைக் காப்பாற்றுங்கள் என்று வானொலி, தொலைக்காட்சியில் அழுது கொண்டிருக் கிறது நாடு. ஆறுகளில் குப்பைகளை வீசிக்கொண்டிருக் கிறார்கள் மக்கள். எத்தனையோ ஆறுகள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன. நாம் தொலைத்துக் கொண்டி ருக்கும் எத்தனையோ விஷயங்களில் ஆறுகளும் ஒன்றாகி விட்டன.

இன்று திருமணமாகித் தனிக்குடித்தனமிருக்கும் என் ஃபிளாட் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலிருக்கும் வீடமைப்புப் பகுதியைத் தாண்டிதான் செல்ல வேண்டும். மழை நாட்களில் அந்த வீடமைப்புப் பகுதி சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும். சில நேரங்களில் காலணியைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு தண்ணீரில் கால் நனைத்துக் கொண்டே மெதுவாக நடந்து விட்டு வருவேன்.

என் மழைக்கால நினைவுகளைப் போல் அந்தச் சாலையெங்கும் தேங்கிக் கிடக்கின்றது மழைத் தண்ணீர்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768