வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

மலேசியத் தமிழர்களின் வரலாற்று மையம்
அ.ரெங்கசாமி

 

       
 

இந்து, அராபி, சீனக் கடல்களில் தமிழ்க் கொடி பறக்க ஆயிரக்கணக்கான கால்வாய்கள் வலம் வந்து கொண்டிருந்தன. முன்னீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் ஆண்டு கொண்டிருந்தான் தமிழன். அது தமிழனின் பொற்காலம்.

காலம் செய்த கோலத்தால் தமிழினம் அரசிழந்து கவிழ்ந்து போக, தமிழகம் வேற்று நாட்டவரின் கூடார மாகி போனது.

பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்து வந்த போர்த்துக்கீசியர்கள், பிரான்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் நம் தமிழகத்தைக் கூறுபோட்டுக் கொண்டனர். இம்மூவரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே தமிழினத்தை அடிமைப்படுத்தி அவ்வினத்தின் இரத்தத்தை உறிஞ்சு வதில் முதன்மை பெற்றிருந்தது என்றால் அது மிகையல்ல.

"ஆங்கிலேயரின் ஆட்சியில் ஆதவன் மறைவதே இல்லை" என்று ஆணவம் பேசும் அளவுக்கு ஆங்கிலேயப் பேரரசு உலகெங்கும் பரந்து விரிந்து கிடந்த காலக்கட்டம் அது.

ஆங்கிலேயப் பேரரசின் ஆட்சிக்குள் சிக்குண்ட மலாயா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ், பிஜி போன்ற நாடுகளில் பெரும் நிலபரப்பும் பயனின்றிக் காடாய்க் கிடந்தன.

இங்கிலாந்து என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு இப்பரந்த நிலபரப்புகள், கேட்பதெல்லாம் தருகின்ற கற்பகத் தருவாக, காமதேனுவாகத் தோன்றின. இக்காடுகளை எல்லாம் விளை நிலமாக்கத் தீர்மானித்தனர் அவர்கள்.

இதனைச் செயல்படுத்துவதற்கு மிகுதியான ஆள் பலம் தேவைப்பட்டது. ஆங்காங்கே இருந்த உள்ளூர் வாசிகள் இம்முயற்சிக்குக் கைக்கொடுக்கவில்லை. எனவே, தங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இதர நாடு களில் இருந்து பாட்டாளிகளை இறக்குமதி செய்ய விரும் பினர்.

இடுப்பில் ஒற்றை உளியுடன், வேகா வெயிலில் நாளெல்லாம் வயலில் உழைப்பவர்கள் தமிழக விவசாயிகள் என்பதை நேரில் கண்டறிந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதுமட்டுமல்ல, தமிழினத்தின் ஆழமான, எசமான விசுவாசத்தையும் அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஆகவே, ஆங்கிலேயரின் பார்வை சட்டென்று தமிழகப் பாட்டாளிகளின் மீது விழுந்தது.

இந்திய உபகண்டத்தையே சுரண்டி எடுத்து இங்கிலாந்து நாட்டைக் குபேர நாடாக்கும் முயற்சியில் தங்களின் முழு ஆற்றலையும் ஆங்கிலேயர் பயன்படுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது.

இந்திய கிராம மக்கள் பஞ்சம் பட்டினியால் வற்றி வரண்டு கொண்டிருந்தது பற்றி அவர்கள் கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக, "நாங்கள் அழைக்கின்ற வெளிநாடுகளுக்கு நீங்கள் வந்தால் குபேர வாழ்க்கை வாழலாம்" என்ற பொய் மூட்டையைத் தாராளமாக அவிழ்த்துவிட்டு ஏழை மக்களுக்கு வஞ்சகவினை விரித்தனர்.

வறுமையின் பிடியில் இருந்து விடுபட இது ஒரு விடியலாய் இருக்கும் என்று நம்பினர் ஏழைமக்கள். எனவே, ஆங்கிலேயர் விரித்த வலையில் மிக எளிதாக வீழ்ந்தனர்.

விளைவு - ஏழை விவசாயிகளை ஆடுமாடு களைப் போன்று கப்பல் கப்பலாய் வெளிநாடுகளுக்கு அள்ளிச் சென்று குவித்துக் கொண்டனர். அந்த முறையில்தான் மலாயாவுக்கும் நம் மூதாதையர்கள் கொண்டுவரப்பட்டனர்.

நம்மவர்கள் கொத்தடிமைகளாய் மலாயா வுக்குக் கொண்டு வரத்தொடங்கியக் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று சொல்லப்படுகிறது. பரிதாபத்திற்குரிய அந்த நம்மவர்கள் நீராவிக் கப்பலில் பயணித்தபோது பட்ட இன்னல் களையும் கொடுமைகளையும் ஆராயப் புகின் அதுவே நீண்ட பாரதமாகிவிடும்.

அக்காலக் கட்டத்தில் மலாயாவில் நல்ல துறை முகங்கள் கிடையா. எனவே கப்பல்கள் கரையில் இருந்து தொலைவிலேயே கடலில் நின்றிருக்கும். நாட்டுப் படகுகள் மூலம் பாட்டாளிகள் கரைக்குக் கொண்டுவரப் படுவர்.

பெரும்பாலும் பினாங்கு, தெலுக்கான்சன், கோலா, மலாக்கா, சிங்கப்பூர் போன்ற துறைமுகங் களில்தான் நம்மவர்கள் இறக்கப்பட்டதாகச் சொல்லப் படுகின்றது.

செம்படவர்களின் படகுத் துறையே அன்று துறைமுகம் என்று சொல்லப்பட்டது. இத்துறையில் நூற்றுக்கணக்கான படகுகள் நின்றிருக்கும். மரத்தாலும் அத்தாப்புப் பனையாலும் ஆன மீனவக் குடிசைகள் அங்கே சூழ்ந்திருக்கும்.

ஒவ்வொரு குடிசையும் சுமார் நான்கடி உயரத்தில் மரத்தூண்களில் நின்றிருக்கும். சில குடிசைகள் நீரில் பாதியும் நிலத்திலுமாக நின்றிருப்பதைக் காணலாம்.

இங்கு மலாய்க்காரர்களே வாழ்ந்திருந்தனர். மீன் பிடித்தல், காட்டுமரம் வெட்டுதல், அத்தாப்பு மட்டை வெட்டுதல், காட்டிற்குள் சென்று 'ரோத்தான்' எனப்படும் பிரம்பு கொண்டு வருதல் போன்ற செயல்களை ஆண்கள் செயல்படுத்தினர்.

தாழமட்டையால் கூடை, பாய், அத்தாப்புக் கூரை முடைதல் போன்ற தொழில்களைப் பெண்கள் செய்துவந்தனர்.

விளை நிலங்கள் என்று சொல்லப்படும் தோட்டங்கள் கிடையா. பழமரங்களும் சிறு தென்னந் தோப்புகளுமே அங்கே நின்றிருந்தன. இவற்றிற்குப் பின்னால் அடர்ந்த பெருங்காடுகளே கண்களுக்கு தெரிந்தன.

மலாயா மண்ணில் நம் மூதாதையர்கள் கால் பதித்த போது அவர்கள் கண்ட மலாயா இதுதான்!

ஆறு, கடல் ஓரங்களில் நீண்ட சதுப்புநிலக் காடுகளும் உள்பகுதியில் நெடிந்து வளர்ந்து வானளவில் உயர்ந்து நின்ற 'கருங்காடு' எனப்படும் அடர்ந்த காடும் மலாயா முழுமையும் பரந்து கிடந்தது.

ஆங்கிலேய நிறுவனங்கள் இக்காடுகளைக்கூறுபோட்டுக்கொண்டு தோட்டங்கள் ஆக்கும் முயற்சியில் இறங்கின.

புலி, கரடி, யானை போன்ற காட்டு விலங்குகள்; பாம்பு, பூரான், குளவி போன்ற நச்சுப் பிராணிகள்; வித விதமான கொசுக்கள்; இரத்தம் குடிக்கும் அட்டைப் பூச்சிகள் இக்காட்டுக்குள் மலிந்து கிடந்தன.

வடக்கே பெர்லிசு தொட்டுத் தெற்கே ஜொகூர்வரை நம்மவர்களின் வாழ்க்கை இத்தகைய கொடிய காட்டுக்குள் தான் தொடங்கியது.

மனித இனத்தின் காலடிபடாத இக்காடுகளில் தமிழனின் காலடிதான் முதன் முதலில் பதிந்தது. காட்டு மரங்களைக் கொண்டே பாட்டாளிகளின் 'வயல்' என்று சொல்லப்பட்ட குடியிருப்புகளை அமைக்கச் செய்தனர் ஆங்கிலேயத்துரைகள்.

நீள்வாட்டில் சுமார் எட்டடி உயரத்தில் பரண் போன்று நீண்டு கிடந்தன இக்குடிசைகள். கூரையும் பக்கச் சுவர்களும் அத்தாப்பு மட்டையால் ஆகி நிற்க படுக்கும் இடம் காட்டுக் குச்சிகளால் பரப்பப் பட்டிருந்தது. ஒவ்வொரு நீண்ட குடில் வரிசையிலும் பத்துக்கு எட்டு என்ற அளவில் பத்துக்கும் மேற்பட்ட் அறைகள் தடுக்கப் பட்டிருக்கும். ஓர் அறைக்கும் அடுத்த அறைக்கும் இடையில் உள்ள தடுப்பு அத்தாப்பு மட்டையினாலேயே அமைக்கப் பட்டிருக்கும். இந்த ஒவ்வோர் அறைக்கும் மரத்தால் ஏணிப்படி உண்டு. (1949- ஆம் ஆண்டில் கூட இத்தகைய குடில்கள் இருந்தன. அக்குடிலில் வாழ்ந்த அனுபவம் அடியேனுக்கும் உண்டு).

குடிலுக்கு அடியில் திறப்பாக நீண்டு கிடந்த கீழ்த்தளமே பாட்டாளிகளின் சமையல் கட்டாக விளங்கியது.

இருட்டுவதற்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மேல்தளத்திற்குச் சென்று வர வேண்டும். இரவில் ஒன்று இரண்டுக்கு கூட கீழே இறங்க முடியாத ஒரு நிலை. காரணம் புலி, பன்றி, கரடி, போன்ற காட்டு மிருகங்கள் சர்வசாதாரணமாகக் கீழ்த்தளத்தில் அலைந்து கொண்டிருக்குமாம்.

இரவில் வெளிச்சத்திற்குத் தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப் படுகின்றது.

ஆறு, கிணறு, மழைநீர் ஆகியவற்றையே அன்றாட பயனீட்டுக்குப் பயன்படுத்தினர் பாட்டாளிகள். மருத்துவ வசதி என்பதே கிடையாதாம்.

காட்டுக்குள் வணிக நிலையங்கள் இல்லாத ஒரு சூழல்; இந்த நிலையில் அந்தந்தத் தோட்ட நிர்வாகமே மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு போன்ற பொருள்களைக் கொண்டு வந்து பங்கீடு செய்து வந்ததாம். இப்பொருள்களுக்கான விலையைப், பாட்டாளிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்துக் கொள்ளுமாம் நிர்வாகம். (இப்படிப் பங்கீடு செய்யும் முறை 1960 வரை கேரித்தீவு தோட்டத்தில் நடப்பில் இருந்ததை அடியேன் அறிவேன்)

இந்த முறையில்தான் ஆங்கிலேயத் துரைகளின் தோட்டங்களில் நம்மவர்களின் அவல வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆரம்பக்காலத்தில் தோட்டங்களில் கரும்பு, தென்னை, காப்பி, அன்னாசி போன்ற பயிர்களே முக்கிய விளை பொருள்களாகத் துறை முகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நிர்வாகத்திற்கு. எனவே தோட்டங்களையும் துறை முகங்களையும் இணைக்கின்ற சாலைகளை அமைக்கும் முயற்சியில் இறங்கின தோட்ட நிர்வாகங்கள்.

மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா பூமியைச் செம்மைப்படுத்தி சாலைகளையும் தொடர் வண்டிகளையும் அமைத்துக் கொடுத்தது தமிழ்ப்பாட்டாளிகளின் வலிய கரங்களே என்பதை எவர் மறுத்துல் இயலும்?

காலப் போக்கில் செம்பனை, இரப்பர், தேயிலை போன்ற பயிர்கள் அறிமுகமாயின.

இரப்பரின் வருகைக்குப் பிறகு 'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் தமிழகப் பாட்டாளிகள் அசுர வேகத்தில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தனர்.

தங்களைக் குபேரர்களாக்கிக் கொள்வதிலேயே தோட்டத்துரைமார்கள் குறியாய் இருந்தனர். ஏழை பாட்டளிகளின் நலனில் சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அப்பாட்டாளிகளை மேலும் மேலும் வருத்தி, கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர் அவர்கள்.

தமிழ்ப்பாட்டாளிகளுக்கு இப்பரங்கியர் இழைத்த கொடுமைகள் இந்திய நாட்டினருக்கும் எட்டியிருக்கின்றது. இதனை, பாரதியாரின் பாடல்களில் இருந்து நாம் அறிய முடிகின்றது.

"கரும்புத்தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி"

"தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!.........."

அடியேன் அறிந்த மட்டில் வேற்று நாடுகளில் வேதனைப்பட்ட தமிழ்ப்பாட்டாளிகளுக்குக் கண்ணீர் விட்டழுத ஒரே தமிழ்கவிஞர் இந்த மகாகவி பாரதியார் மட்டுமே!

இக்கால கட்டத்தில் இந்திய விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த இந்தியக் காங்கிரசு சபையும் "சஞ்சிக்கூலிகள்" என்ற போர்வையில் இந்தியப் பாட்டாளிகள் கடத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து இதன் விளைவாக 1937ல் "சஞ்சிக்கூலி" முறை தடை செய்யப்பட்டு ஒழிக்கப் பட்டது.

மலாயா நாட்டில் நம்மவர்களின் கண்ணீர்க்கதை சுமார் இரண்டரை நூற்றாண்டுக்குள் தொடர்கதையாய் இருந்திருக்கின்றது. அந்த நீண்ட காலத்தில் நம்மினத்தினர் இந்திய இரத்தத்திலும் வியர்வையிலும் தியாகத்திலும் தான் இன்றைய நவீன மலேசியா எழுந்து நிற்கின்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. இவ்வரலாறு என்றென்றும் காக்கப்பட வேண்டும். இவ்வரலாற்று அடிப்படையில்தான் நமது உரிமைகள் காக்கப்படும் என்பதைத் தமிழினம் நினைவில் கொள்ள வேண்டும்.

மலாயாவில் நம்மவர்கள் ஏறத்தாழ ஒரே வகையான அடிமைத்தனத்தில்தான் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது மலாயா பாட்டாளிகளின் பொதுவான வரலாறு.

இதனைத் தவிர்த்து நம்மவர்களுக்குச், சிறப்பான மூன்று சோக வரலாறுகளும் மூன்று வீர வரலாறுகளும் உண்டு என்பதையும் நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

"கடித்தாலும் பாம்பு காலை விட்டுப் போகாது" என்ற முதுமொழிக்கேற்ப சுமார் இரண்டரை நூற்றாண்டுக்குள் ஆங்கிலேயரின் தயவிலேயே வாழ்ந்து பழகிவிட்டோம் நாம்.

இரண்டாவதாக யுத்தம் வந்தது. மலாயாவைச் சப்பானியர் பிடித்துக் கொண்டனர். ஆங்கிலேயன் ஓடி விட்டான். நாம் அநாதையாகிப் போனோம். 1942- முதல் 1945 ஆகஸ்டு வரை நம்மவர்கள் வாழ்ந்திருந்த நிலை - முதலாவது சோகக் கதை!

இக்காலக் கட்டத்தில்தான் சப்பானிய அரசு சயாம்- பர்மா மரண இரயில் பாதை அமைத்தது. நாதியற்றுக் கிடந்த நம்மவர்களை வண்டி வண்டியாய் அள்ளிக் கொண்டு போய் சயாமியக் காட்டில் கொட்டி வேலை வாங்கியது சப்பானிய அரசு. இம்முயற்சியில் லட்சத்துக்கும் மேலான நம்மவர்கள் சயாமியக் காடுகளில் புதையுண்டு போயினர். இது இரண்டாவது சோகக் கதை!

1945 ஆகஸ்டில் சப்பான் சரணடைந்து, வெள்ளைக்காரன் படை இன்னும் வந்து சேரவில்லை. இடைப்பட்ட காலம் இன்னும் இரண்டு வாரம். காட்டுக்குள் இருந்த கம்யூனிஸ்ட் படைகள் நாட்டுக்குள் வந்து ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டனர். இவர்களின் ஆட்சியில் நம்மவர்கள் பட்ட துன்பம் முதற்கட்டம்.

இரண்டாவது கட்டம் 1948ல் கம்யூனிஸ்டு கலகத்தில் தொடங்கியது. 1960 வரை இக்கலகம் தொடர்ந்தது. இக்காலக் கட்டத்தில்தான் பாட்டாளிகளின் தோழர்களான சூரசேனன், கணபதி போன்ற தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர். இது நமது மூன்றாவது சோகக் கதை!

நீண்ட நெடுங்காலம் ஆங்கிலேயரின் இரும்புப் பிடியில் சிக்குண்டு கிடந்த தமிழ்ப் பாட்டாளிகளுக்கு ஆர். எச். நாதன் என்பவர் ஒரு விடி வெள்ளியாகக் தோன்றி, தட்டி எழுப்பினார். பாட்டாளிகள் பொங்கி எழுந்தனர். 1941 பிப்ரவரியில் "நாங்களும் மனிதர்களே! எங்களுக்கும் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் வேண்டும்" என்று துரைமார்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர் பாட்டாளிகள்.

விளைவு, அசுர பலம்கொண்ட ஆங்கிலேயத் துரைகள் இராணுவத்தைக் கொண்டு நிராயுதப் பாணிகளான பாட்டாளிகளைச் சுட்டுத் தள்ளினர். மலாயா- பஞ்சாப் படுகொலை என்று வர்ணிக்கப்படும் இப்படுகொலை காப்பார், புக்கிட் பாஞ்சாங் புருக்லண்ட் ஆகிய இடங்களில் அரங்கேற்றம் கண்டது. இது நம்மவர்களின் முதலாவது வீர வரலாறு.

1944ல் நேதாஜியின் தலைமையில் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகளான ஆண்களும் பெண்களும் இந்திய விடுதலைக்காக 'இம்பால்' வரை சென்று வீரப்போரிட்டனர்.இது இரண்டாவது வீரவரலாறாகும்.

ஆங்கிலேயரின் இரும்புப் பிடியில் நீண்ட காலம் சிக்குண்டு அடிமைத்தனத்தில் உழன்று கிடந்த மலாயாத் தமிழ்ப் பாட்டாளிகள், மலாயா சுதந்திரம் பெற்றதும் பூரித்துப் போயினர். சுதந்திர மலாயாவில் இனி நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்களாக வாழப்போகிறோம் என்று நம்பினர். ஆனால், வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிக் கொண்டது.

சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்தும் நம்மினத்திற்கு விடியல் வரவில்லை. அந்த விஷயத்தில் தமிழினம் ஒன்றுபட்டது. 2007-நவம்பர் 25-ல் தலைநகரில் உரிமைப் பேரணி நடத்தியது.

மலேசியத் தமிழர்களின் இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியைக் கண்டு உலகமே வியந்தது! இது நம்மினத்தின் மூன்றாவது வீரவரலாறு.

மலேசியத் தமிழர்களின் இவ்வரலாறுகள் அனைத்தும் அகச்சான்று புறச்சான்றுகளுடன் ஆவணப்படுத்தல் வேண்டும். நமது உரிமைகள் பற்றிப் பேசவும் தட்டிக் கேட்கவும் நமக்குப் பின்பலமாக இருப்பவை இவ்வரலாறுகளே என்பதை நம்மினம் மறத்தல் கூடாது.

ஆகவே, இவ்வரலாறுகளைத் திரட்டி, ஆவணப்படுத்தி வைப்பதற்குத் த குந்த இடத்தில் "மலேசியத் தமிழர்களின் வரலாற்று மையம்" அமைக்கப்பட வேண்டும்.

இப்பணியை அவர் செய்வார் இவர் செய்வார் என்று எதிர்ப்பார்த்துக் காத்து இருந்தால் தவறு.

"எண்ணிய எண்ணியாங் கெய்தும் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்" என்று வள்ளுவர் நமக்கு வழிகாட்டுகிறார்.

அலை ஓய்ந்து கடலாடுவது என்பது இயலாத ஒன்று. எனவே, தமிழன் என்ற ஒரே சொல்லுக்குக் கட்டுப்பட்டு இன்றே செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் நாம்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768