வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

குரலற்றவர்களின் குரல்
சை. பீர் முகம்மது

 

       
 

ஓபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் உலகம் ஒரு முறை பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சூரிய வெடிப்பைப் போல (நெபுலா) மீண்டுமொரு புத்துலகம் பிறந்து விட்டதாகவே ஆர்ப்பரிக்கிறது.

ஓபாமா 100 சதவிகிதம் அமெரிக்க வாக்காளர் களின் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து விட வில்லை! இவரை எதிர்த்தவருக்கு வெள்ளை அமெரிக் கர்கள் முழுதும் தங்களின் வாக்கைப் போட்டுள்ளார்கள்.

ஆப்பிரிக்க வாரிசுகள், ஆசிரியர்கள், மற்றும் வாக்குரிமை பெற்ற பிற நிறத்தவர்களின் வாக்கே அவரை வெற்றியடைய வைத்துள்ளது.

கறுப்பினத்தின் குரலாக ஓபாமா செயல்படு வாரா? நூற்றாண்டு காலமாக இன ஒதுக்கல் நடந்து வரும் அமெரிக்க- ஆப்பிரிக்க மக்களின் குரலற்றவர்களின் குரலாக இவர் செயல்படுவாரா?

அவரால் நிச்சயம் அப்படிச் செயல்படமுடியாது என்பது மிக உறுதி!

கறுப்பராக இருந்தாலும்- வெள்ளையனாக இருந் தாலும் உலகில் அரசியல் வாதிகளுக்கு 'நிறங்கள்' முக்கியமில்லை. ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம். அரசியல்வாதிகள் தங்களின் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள எதையும் அடமானம் வைக்கத் தயங்க மாட் டார்கள்.

ஓபாமா வெற்றி பெற்றதும் முதலில் சொன்னது "எதிர்க்கட்சியிலுள்ள திறமைசாலிகளை எனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வேன்".

இதை அனைவரும் வரவேற்றார்கள். இன்னும் அதிகாரப்பூர்வமாக அவர் பதவி ஏற்கவில்லை. ஆனால் வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டனை நியமிப்பதுதான் முதல் வேலையாக நடந்துள்ளது. அவரும் கடந்த வாரம் வெளியுறவு அமைச்சுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் பிரதம நாற்காலி அப்படியொன்றும் கறுப்பர்களின் எண்ணப்படி 'சுழலாது' என்பதையே ஹிலாரி கிளிண்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி நியமனம் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

ஏற்கனவே, புஷ்ஷின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றும் கொண்டலிசா ஒரு கறுப்பினத்தவர். அண்மைக்காலமாக மிகத்திறமையாகச் செயல்பட்டுக் கறுப் பினத்தவருக்கும் 'மூளை' உண்டு என்று நிரூபித்தவர்.

எதிர்க்கட்சியில் உள்ள திறமையான வர்களை நான் எனது நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்பது ஓபா மாவைப் பொறுத்தமட்டில் ஒரு கண் துடைப்பு என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அதிபர் நாற்காலியின் சுழல் தன்மை வெள்ளையர்களிடத்தில் உள்ள ரீமோட் கண்ட்ரோலர் மூலமே செயல்படுகிறது என் பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

சீனர்களின் புத்தாண்டின் பொழுது யாழி (Dragon) நடனம் மிகவும் பிரசித்திப் பெற்றது. முன்னே செல்லும் பந்தைக் கவ்வி விழுங்க அது படாதபாடுபடும்.

ஓபாமாவின் வருகையும் அப்படித்தான் கணிக்கப்பட்டது. ஆனால் இந்த 'ஓபாமா யாழி' அப்படியொன்றும் 'நிறவெறி' பந்தை விழுங்கி புதுமைகள் செய்து விடாது என்ப தற்குக் கொண்டலிசா மாற்றமே தக்கச் சான்று.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆப்பிரிக்க இலக் கியம், வரலாறு, போராட்டம் போன்றவற்றில் நான் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளேன்.

'மனித தொட்டில்' என்று சொல்லப்படும் அந்த இருண்ட கண்டத்தில் கறுப்பின மக்கள் பட்ட துன்பங்கள்- காலனித்துவ ஆட்சியில் அடிமை வியாபாரம்- ஒடுக்கு முறைகள் எல்லாம் எப்படி மறைத்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கோகினூர் வைரத்துக்குப் பின்னே இன்னமும் கறையாகவே இருக்கிறது.

இன்றைய ஓபாமா எப்படி ஆட்சி செய்வார் என்பதற்குப் பல உதாரணங்கள் ஆப்பிரிக்க நாட்டில் நடந்துள்ளன. எல்லாவற்றையும் எழுதினால் குறைந்தபட்சம் 750 பக்க நூலாகி விடும்.

ஆப்பிரிக்கக் கொடுமைகள் முழுதுமே இன்னும் வெளிச்சத்திற்கு வந்துவிடவில்லைதான். அதே போல, அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு நடந்த கொடு மைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு வெள்ளையன் கூட கறுப்பினத்துக்கு ஆதர வாக இயங்கமுடியாத சூழலும் வெறியும் அமெரிக்காவில் இருந்தன.

அடிமை வியாபாரத்தை ஒழித்த ஆப்ரஹாம் லிங்கனைச் சுட்டுக் கொன்ற நிற வெறித் துப்பாக்கிகளில் இன்னும் பல குண்டுகள் மிச்சமுள்ளன.

Alex Haley எழுதிய Roots (வேர்கள்) என்ற நூல் அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் தனது வேர்களைத் தேடி ஆப்பிரிக்க நாடான காம்பியா நாட்டுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து எழுதிய நூலாகும். உலகில் எந்த நிறத்தவனும் அவன் மனிதனாக இருந்தால் இந்த நூலைப் படித்துவிட்டுக் கண்ணீர் விடாமல் இருக்க மாட்டான்.

இந்த நூலைப் படித்த பிறகே ஆப்பிரிக்க மக்கள் மீது எனக்கு எப்பொழுதும் அளவுக்கதிகமான அனுதாபமும் பாசமும் கனிவான அன்பும் ஏற்பட்டன.

நியூ யார்க் டைம்ஸ் இந்த வேர்கள் பற்றி மிக நேர்த்தியான விமர்சனத்தை வைத்தது.

"By tracing his heritage back to its African roots, He has done something extraordinary. ...He speaks not only for America's black people, but for all of us everywhere."

இன்று அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் வேர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏதாவது ஒரு நாட்டில் தான் இருக்கின்றன.

ஓபாமாவின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களே.

ஆப்பிரிக்காவின் பல நாடுகள் காலனித்துவ வாதி களின் பிடியிலிருந்து விடுதலையடைந்ததும் அதன் பின் நடந்தவை முன்பு நான் சொன்னது போல் பெரும் நூலுக்கான செய்திகளாகும். அதை எழுதும் முயற்சியில் குறிப்புகள் சேகரித்தேன். ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணிக்க எண்ணினேன். ஓர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உலகுக்குக் காட்ட வேண்டுமென்ற பிடிவாதம் தமிழ்ப் பெருங்குடி மக்களின் ''நாக்கமுக்க'க் கலாச் சாரத்தில் அமுங்கிப் போய் விட்டது.

பல நாடுகளில் நடந்ததைவிட கென்யாவில் நடந் தவை இப்போதைய ஓபாமா ஆட்சிக்குப் பொறுத்தமாக அமையுமென்று நம்புகிறேன்.

1930 களில் 'எரியும் ஈட்டி' என்றும் 'மீட்க வந்த ரட்சகர்' என்றும் கென்ய மக்களால் போற்றித் துதி பாடப்பட்டவர் ஜோமோ கென்யாட்டா. கென்ய மக்களுக்கு மட்டுமல்லாது மொத்த ஆப்பிரிக்க மக்களின் விடிவெள்ளியாகக் கருதப்பட்டவர்.

அடிமைப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக் குரலாக நெருப்புக் கக்கும் எரிமலையாக வெடித்தார் ஜோமோ கென்யாட்டா. 1933ல் 'சுதந்திர ஆப்பிரிக்கா' என்று அறிவித்து ஒட்டு மொத்த 40 கோடி ஆப்பிரிக்க மக்களின் தலைவராக அப்போது திகழ்ந்தார். உலக பத்திரிகைகள் அனைத்தும் அவரின் படத்துடன் கூடிய செய்திகளை அன்றாடம் வெளியிட்டன. அன்றைய காலக்கட்டத்தில் அவரே ஆப்பிரிக்கக் கதாநாயகன்.

1963 டிசம்பர் 12 இல் கென்யா பல போராட் டங்களுக்குப் பிறகு சுதந்திரமடைந்தது. ஜோமோ கென்யாட்டா பிரதமரானார்.

இதற்குமுன் 1961ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தபொழுது இவரின் குரலில் முந்தைய உக்கிரம் காணாமல் போய்விட்டது. உண்மையில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே 'காலனித்துவ அரசின்' கறுப்புப் பிரதிநிதியாகவே இவர் உருவாக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டார்.

இனி கென்ய மக்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்ற சூழலில்தான் தங்களின் பிரதிநிதியாகக் கென்யாட்டாவையே கறுப்பினத் தலைவராக உருவாக்கினார்கள்.

பிரதமர் ஆனதும் அதுவரை தனது போராட்டங் களுக்காக ஏகாதிபத்தியவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டார்.

'மறப்பதும் மன்னிப்பதும்' அதிக தேவையானது என்று மேடைதோறும் முழங்கினார். அதுவரை கென்ய மக்களின் மிகப்பெரிய தலைவனாக இருந்த அவர் காமன்வெல்த் நாடுகளின் 'சூப்பர் ஸ்டார்' போல் பவனி வர ஆரம்பித்தார். பிரிட்டிஸ் அரசு அவருக்கு ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்தது.

'என்னடா எலி அம்மணமாக ஓடுகிறதே' என்று பார்த்தால் அதன் பின்புலம் பிறகே தெரிய ஆரம்பித்தது.

மாபெரும் சுதந்திரப் போராளியாகவும் தன்னி கரில்லாத் தலைவராகவும் நாட்டு மக்களின் அன்பிற்கும் பேராதரவுக்கும் பாத்திரமாகி ஆட்சியைக் கைப்பற்றிய ஜோமோ கென்யாட்டா இடைத்தரகர்களைக் கொண்டு நாட்டைச் சுரண்ட அனுமதியளித்து விட்டார். சுதந்திரம் பெற்றும் கென்யா மக்கள் மீண்டும் மறைமுகமாகவே வாழ்க்கையை இழந்தார்கள்.

1978ல் ஜனாதிபதியாகவே இருந்து அவர் இறந்த பொழுது ஓர் உலகத் தலைவருக்குக் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் இன்று வரை கிடைக்கவில்லை.

கென்ய எழுத்தாளர் கூ கி வா தியாங்கோ இவரைப் பற்றி எழுதும் பொழுது "ஒரு மா சே துங் போல, ஒரு ஹோ சி மின் போல வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டிய கென்யாட்டா, நம்பிக்கைத் துரோகத்துக்கும் கொடுங்கோன்மைக்கும் சர்வாதிகாரத்துக்கும் உதாரணமாக ஹிட்லரைப் பின்பற்றியவராக அறியப் படுகிறார்".

ஓபாமா சர்வதிகாரியாக மாற மாட்டார் என்பது மிக நிச்சயம். ஆனால், வெள்ளையர் அல்லாத சமூகத் துக்கு இவரால் என்ன செய்ய இயலும்? இந்தக் கேள்வியை அனைவரும் ஒரு முறை கேட்டுக் கொள்வதோடு கடந்த காலங்களில் கறுப்பினத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிய வேண்டும்.

எந்தச் செயல்பாடும் பொறுப்புடன் செயல் வடிவம் பெற வேண்டும். அப்படிப் பொறுப்புடன் செயல்படும் பொழுது 'ஆபத்தான - கூர்மையான' கத்தியொன்று தலைக்கு மேல் தொங்குகிறது என்பது பொருள்.

அமெரிக்கக் கறுப்பினத்தின் மாபெரும் தலைவர் மால்கம் X. அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் மிக ஆழமான ஆழியிலிருந்து கறுப்பின வரலாற்றை வெளிக் கொண்டு வந்தவர்.

எதற்கும் பணிய மறுத்தும் நிமர்ந்து நிற்கும் தலையது. அடங்காத ஆவேசக் குரல் மால்கம் எக்ஸின் குரல். 16 குண்டுகள் துளைத்து உடலைச் சல்லடையாக் கிக் கொன்றார்கள்!

இதே போல மார்டின் லூதர் கிங் கொல் லப்பட்டார்.

இந்தப் பட்டியல் மிக நீண்டது.

தனியாகச் செயல்படுவதும் சமூகமாகச் செயல் படுவதும் கறுப்பினத்திற்கு மிக அவசியமான காலக்கட்டம் இது. ஆப்பிரிக்க பழமொழி ஒன்று "நான் என்பது நாம்தான்!" ஆம், ஒவ்வொரு விளிம்பு நிலை மனிதனும் தன்னை "நாம்" என்ற பெரிய எல்லைக்குள் கொண்டு வந்து விடவேண்டும்.

கறுப்பர்கள் இயல்பிலேயே அறிவுத்திறன் அற்றவர்கள் என்று காலம் காலமாக வெள்ளைக்காரர்கள் கூறி வருகிறார்கள். ஓபாமாவின் வெற்றியை இத்தாலிய அதிபர் தனது வாழ்த்தின் ஒரு பகுதியாக "அவர் (ஓபாமா) சற்று அதிகமாக வெயிலில் இருந்துள்ளார்" என்று கிண்டலடித்துள்ளார்.

உண்மையில் ஓபாமா- பாதி வெள்ளையர். அவரின் தகப்பனார் கறுப்பர். தாய் வெள்ளையர். இதனால், அவர் ஆபத்தின் பாதிக் கிணறைத் தாண்டிய வராகக் கூட கருதப்படலாம்.

ஓபாமாவின் முதல் அடியைச் சரியாகவே வெள் ளையர்கள் மனம் குளிரும்படி எடுத்து வைத்துள்ளார். கொண்டலிசாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஹிலாரி யைக் கொண்டு வந்து நடுக் கூடத்தில் உட்கார வைத் திருக்கிறார். இதிலிருந்து வெள்ளையர்களுக்கு அவர் உண் மையான, நேர்மையான அதிபராகச் செயல்படுவார் என்பது திண்ணம்.

'கவிஞனும் அரசனும் நல்ல நண்பர்களாக இருக் கக் கூடாது; ஏனெனில் கவிஞனின் வேலை அரசன் கொடுமை இழைக்கும் பொழுது அதைப்பற்றி யாரும் கேள்விப்படுவதற்கு முன்பே மக்களிடம் அதைத் தெரிவிப்பது தான்'. இப்படி நைஜீரிய நாவலாசிரியர் சினுவா அச்சுபி கூறுகிறார்.

ஓபாமா கவிஞராக இருக்கப் போகிறாரா, அரச னாக இருக்கப் போகிறாரா?

எனக்கு என்னவோ, எப்பொழுதும் அரசியல் வாதிகளின் நிறங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. எந்த நிறத்தில் இருந்தாலும் அவர்களின் சிந்தனை- செயல் ஒரே விதமாகத்தான் இருக்கின்றன.

ஜோமோ கென்யாட்டா ஒரு மாபெரும் கறுப் பின விடுதலை வீரன். காலம் காலமாகப் புரட்சிப் படை யில் இருந்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியவர். பிற்காலத்தில் அவரே அந்தப் புரட்சிப் படைக்கு எதிராகச் செயல்பட்டார்.

ஓபாமா மாபெரும் தலைமறைவுப் படை நடத்தி ஆட்சிக்குப் புரட்சி மூலம் வந்தவரல்லர். ஜனநாயக முறைப்படி ஓட்டுப் போட்டு வென்று வந்துள்ளார்.

இப்போதையப் பிரச்சனை அவரின் நிறம் மட்டும்தான். சிறுபான்மை சமூகத்திலிருந்து ஆட்சிக்கு வந்துள்ளார். அவ்வளவுதான். அமெரிக்க கறுப்பின மக்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவார்களா? உலகில் அமெரிக்காவால் குண்டு வீசித் தாக்கப்பட்ட மக்களின் அவலக்குரல் அவர் காது களில் ஒலிக்குமா?

அமெரிக்காவால் மோசமான உலகப் பொருளா தாரம் மீட்டெடுக்கப்படுமா? இல்லை அமெரிக்காவே திவாலாகுமா?

ஓபாமா வரலாற்றுப் பாடங்களை மீண்டும் ஒரு முறை திரும்பப் படிக்க வேண்டும்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768