வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

நமக்கு இல்லையா நல்ல தமிழ் நாவல்கள்?
ந.பச்சைபாலன்

 

       
 

14 ஆண்டுகளுக்கு முன் (1994) மயில் வார இதழில் இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இதே தலைப்பில் கட்டுரை எழுதவேண்டிய சூழல்தான் இன்னும் நிலவுகிறது என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு இங்குப் பதிவு செய்கிறேன்.

மலேசியத் தமிழ் நாவல்களில் தரமான நாவல் எனத் தகுதிபெற ஒன்றுமில்லை என்ற கருத்துக்கு எதிர்வினையாற்றியும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம், தேர்வுகளுக்கு மலேசிய நாவல்களே பாட நூல்களாகத் தேர்வாகவேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

நம் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு 51 ஆண்டுகள் கடந்துவிட்டன. சுமார் நாற்பது ஆண்டு களுக்கு மேலாக நம் மாணவர்களுக்குத் தமிழக படைப்பு களையே அரிய படைப்புகளாக அடையாளங்காட்டி அவற்றைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இதனால் உள்நாட்டுப் படைப்புகளும் படைப்பாளர் களும் ஒதுக்கப்பட்டு வருவதை யாரும் ஒரு பொருட் டாகக் கருதாத நிலை என் ஆதங்கத்தின் அடர்த்தியை அதிகமாக்குவதால் மீண்டும் இது குறித்து எழுத வருகிறேன்.

ஒரு நூற்றாண்டு கால மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதை, சிறுகதை, கட்டுரை, புதுக் கவிதை போன்று நாவல் இலக்கியமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. விடுதலைக்கு முந்திய காலக்கட்டத்தில் (1910-1957) சுமார் இருபது நாவல்கள் மட்டுமே வந்துள்ளன. தமிழக, இலங்கைப் பின்னணியைக்கொண்டு நகர்ப்புறத் தமிழர்களால் படைக்கப்பட்ட இந்த நாவல்களில் ஆங்காங்கே ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் அளவில்தான் மலேசியத் தோட்டப்புறச் சமுதாயம் காட்டப்பட்டது.

ஆனால், விடுதலைக்குப் பிந்திய காலக்கட்டம் தொடங்கி 2008வரை நூற்றுக்கும் குறையாத நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தோட்டப்புறச் சமுதாயப் போராட்டமும் நவீன வாழ்வின் சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தொடக்க காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் இங்குக் கொண்டு வரப்பட்ட கதைகளையும் ஆங்கிலேயர்-ஜப்பானியர் ஆட்சியில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும் பதிவு செய்யும் முயற்சி எழுபது களுக்குப் பின் எழுதப்பட்ட நாவல்களில் காணமுடிகிறது. இது குறித்து விரிவாக முனைவர் வே.சபாபதியின் 'விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல்கள்' என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டில் காணலாம்.

க.வேங்கடரத்தினம் எழுதிய கருணாகரன் அல்லது காதலின் மாட்சி (1917) என்ற நாவலும் க.சுப்ரமணியம் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் (1918) என்ற நாவலும் நம் தொடக்க கால நாவல்களாகும். ஆனால், நம் மலேசிய மண்ணின் மணம் கமழும், நம் வாழ்க்கைப் போராட்டங்களை ஆழமாகப் பதிவு செய்யும் முயற்சிகளைப் பின் வந்த பல நாவல்களில் காணமுடிகிறது. துயரப்பாதை (கா.பெருமாள்), மரவள்ளிக்கிழங்கு (சா.அன்பானந்தன்), இலட்சியப் பயணம் (ஐ.இளவழகு), செம்மண்ணும் நீல மலர்களும் (எம்.குமரன்), புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் மரண ரயில் (ஆர்.சண்முகம்), வானத்து வேலிகள் (ரெ.கார்த்திகேசு), ஆடும் மஞ்சள் ஊஞ்சல் (பா.சந்திரகாந்தம்), தீமலர் (சு.கமலா) போன்ற சில நாவல்கள் நம் வாழ்க்கையைப் பதிவு செய்யும் முயற்சிகளில் வெற்றிபெற்றுள்ளதைக் காண முடிகிறது. இவை தவிர்த்து, அச்சிலே வந்து இன்னும் நூலுருவில் வராத நாவல்கள் நிறைய உள்ளன.

நாவல் இலக்கிய வளர்ச்சிக்குப் பல அமைப்புகள் பங்கினை வழங்கியுள்ளன. தமிழ் நேசன் நாளிதழ் (நாவல் எழுதும் போட்டி), வானம்பாடி வாரஇதழ் (மாதமொரு நாவல் திட்டம்), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இப்படிப் பல தரப்பினரின் பங்களிப்பினை யாரும் மறுக்கமுடியாது.

குறிப்பாக, அண்மைய காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தொய்வடைந்திருக்கும் நாவல் இலக்கியத்திற்கு உயிரூட்டும் வகையில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையம், தேசியத் தோட்டத் தொழி லாளர் சங்கம், ஓம்ஸ் குழுமம் இவற்றோடு இணைந்து இரண்டுமுறை நாவல் போட்டியை நடத்தியுள்ளது. முதற்போட்டியில் பரிசு பெற்ற நாவல்களான லங்காட் நதிக்கரை (அ.ரெங்கசாமி), மண்புழுக்கள் (சீ.முத்துசாமி) ஆகிய இரண்டையும் எழுத்தாளர் சங்கம் நூல்களாக வெளியிட்டுள்ளது. இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்ற மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை (சிதனா), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்) ஆகிய இரண்டையும் இப்பொழுது நூலாக்கும் முயற்சியில் எழுத்தாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. மேலும் ஆண்டு தோறும் சங்கம் நடத்திவரும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்பரிசளிப்புத் திட்டத்தில் கடந்த 2007 இன் சிறந்த நாவலாக பா.சந்திரகாந்தத்தின் அமுதசுரபிகள் நாவல் தேர்வுபெற்று ரிங். 7000யைப் பரிசுத்தொகையாகப் பெற்றது.

இப்படிப் பல நாவல்கள் நல்ல நாவல்களாக அடையாளங் காணப்பட்டும் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்து விட்டு, இன்னும் தமிழக நாவல்களையே நம்பியிருப்பது ஏன் என்பதற்கான விடை யாருக்கும் புரியாத, தெரியாத பரம இரகசியமாகவே உள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாவல் கருத்தரங்கில் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'சில விதிகள் சில தகுதிகள்' எனப் பல்கலைக்கழக விரிவுரையாளரால் மழுப்பப் பட்டது.

மலேசிய தேர்வு வாரியத்தைப் பொறுத்தவரை 'நல்ல நாவல்' என்பதற்கான அளவுகோல் அல்லது வரையறை தளர்த்த முடியாத சில கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒன்று, தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் பாடநூலாகத் தேர்வு பெறும் நாவல், மூன்று அல்லது நான்கு ஆண்டு களுக்குக் கேள்வி தயாரிக்கப் போதுமான உள்ளடக் கத்தைக் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, தேர்வைஎதிர்நோக்கும் 17 வயது மாணவர்களுக்குப் பொருத்த மான கதைக்களத்தைக் கொண்டிருக்கவேண்டும். மூன்றாவதாக, காலங்காலமாக தமிழக நாவலைத் தேர்வுசெய்யும் மரபைப் போற்றிப் பாது காக்கவேண்டும் (இல்லாவிட்டால் இத்தகைய மரபைப் போற்றிய முன்னோர்கள் மன்னிக்கமாட்டார்கள்)

தமிழக நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம் நாவல்கள் நல்ல நாவல்களா என்று முடிவுசெய்ய வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத் தாகும். இந்த மண்ணிலே நம் எழுத்தாளர்கள் நம் உண் மையான வாழ்க்கையை மிகைபுனைவு இன்றி பதிவு செய்திருந்தாலே அவை நல்ல நாவல்களாக ஏற்றுக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் நாவல்களை மாணவர்ப் பதிப்புகளாகக் கொண்டு வரலாம். இதன்வழி கேள்வி தயாரிக்கத் தேவையான உள்ளடக்கம் இருப் பதையும் உறுதி செய்யலாம். இது குணப்படுத்தக்கூடிய நோய்தான். இந்நோய்க்கு மருந்து இருக்கிறது. மனம் வைத்தால் மருத்துவத்தைத் தொடங்கி விடலாம்.

மலேசிய நாவல்களே நம் மாணவர்களுக்குப் பாட நூல்களாக அமையவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். பின்வரும் மூன்று காரணங்கள் முக்கியமானவை.

அ) நம் நாவல்களுக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. போட்டிகளில் நாவல்கள் சிறந்த நாவல் களாகப் பரிசுகளைப் பெறுகின்றன. ஆனால், சமூக அங்கீ காரம் இல்லை. மாணவர்கள் மூலமாக பரவலாகச் சமூகத் தில் சென்று சேரும்பொழுது அவற்றுக்குச் சமூக அங்கீ காரம் கிடைக்கும். தமிழ் எழுத்தாளர் சங்கம் இருமுறை தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணம் மூலமாக இன்று, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் நம் நாட்டுப் படைப்புகள் பாட நூல்களாக வைக்கப் பட்டுள்ளன. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் நம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டு அங்கீகாரம் கூட சாத்தியமாகிவிட்டது. உள்நாட்டு அங்கீகாரத்திற்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறோம்.

ஆ) இந்நாட்டு இளையோர்கள் நம் இனத்தின் வரலாற்றையும் நம் வாழ்க்கைப் போராட்டங்களையும் இலக்கியம் வழி அறிந்து தெளியும் வாய்ப்பினை நாம் வழங்கவேண்டும். இந்நாட்டுக்கு வந்த நம் முன்னோர்கள் தொடக்கத்தில் எதிர்நோக்கிய சிக்கல்களையும் இன்னல்களையும் அவர்கள் அறியும் நிலையை இலக்கியம் வாயிலாக உருவாக்கவேண்டும். இதை விடுத்து அவர்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இன்னொரு நாட்டு மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் போராட்டங்களையும் முன் வைப்பதால் என்ன பயன் விளையப்போகிறது?

இ) இந்நாட்டு நாவல்கள் மாணவர்களுக்குத் தேர்வு நூல்களாகத் தேர்வு பெற்றால்தான் தொடர்ந்து இத்துறையில் புதிய நாவல்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக இருக்கும். மாணவர்களுக்குப் பொருத்தமான நாவல்களைப் படைக்க எழுத்தாளர்களைத் தூண்டும். இல்லாவிட்டால் நாம் நடத்தும் நாவல் போட்டியும் நாவல் கருத்தரங்கும் ஏதோ ஒப்புக்கு நடத்தும் இலக்கிய விழாக்களாக அமைந்துவிடும்.

எம்மாதிரியான நாவல்கள் பாடநூல்களாக அமைந்தால் சிறப்பு என்று எண்ணிப் பார்த்தேன். இன்று நகர்ப்புறத்தில் விளிம்பு மனிதர்களாகி நாம் எதிர் நோக்கும் இன்னல்கள் கதைகளாக வருகின்றன. நவீன வாழ்க்கையின் சிக்கல்களும் பதிவாகின்றன. இவற்றைவிட தொடக்க காலத்தில் சஞசிக்கூலிகளாக நம்மவர்கள் இந்நாட்டில் குடியேறிய வரலாற்றுச் செய்திகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் பாட நூல்களாக அமைந்தால் நம் தொடக்க கால வரலாற்றினை நம் இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஆங்கிலேயர் - ஜப்பானியர் காலனித்துவ ஆட்சியில் நம்மவர்கள் பட்ட இன்னல்களை மையமிட்ட நாவல் கள் குறிப்பாக, சயாம் மரண ரயில் அமைப்பதில் கொடு மைக்குள்ளான கதைகளைப் பதிவுசெய்த நாவல்கள் முக்கியமானவை. தோட்டப்புற வாழ்வில் தொழிலா ளர்கள் எதிர்நோக்கிய போராட்டங்கள் பற்றிய நாவல்களும் வந்துள்ளன. இவையும் மாணவர்களுக்கு ஏற்ற நாவல்களாக அமையும்.

இந்தோனேசிய நாவல்களை நம்பியிருந்த மலாய் இலக்கிய உலகம், பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த காலனி உணர்விருந்து மீண்டு உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து பரிந்துரைத்து, இன்று எல்லா நிலைகளிலும் நம் நாட்டு மலாய் எழுத்தாளர்களின் படைப்புகளே தேர்வுக்குரிய நூல்களாக உள்ளன. நாமும் காலனி உணர்விலிருந்து மீள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

'அக்கரையில் விளைபவையே
சத்து
இக்கரையில் வருவதெல்லாம்
சொத்தை'

என்ற இரசனைப் பிடிவாதம் இன்னும் நம்மை ஆட்டுவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். இந்நாட்டு நாவல் இலக்கிய வளர்ச்சிக்குத் மலேசியத் தேர்வு வாரியமும் தனது பங்கினையாற்றவேண்டும். அப்படியொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு நம் நாட்டு நாவல்களே தேர்வுக்கான பாட நூல்களானால் நம் நாவல் வளர்ச்சியில் இன்னுமொரு மைல்கல்லாக அது திகழும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானே வளரும் என்பதெல்லாம் சத்தியமாய் இந்த நாவல் விசயத்தில் நடக்காது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் பிள்ளை சவலையாய்க் கிடப்பது யார் கண்களுக்கும் தெரியாமல் போனது எப்படி? எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். எனக்கு வியப்பாக இருக்கிறது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768