வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 7
ஜனவரி-மார்ச் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

கவிதை

 

இந்தோனேசியக் கவிஞர் சைறுல் அன்வர் கவிதைகள்
தமிழில் : எம்.ஏ. நுஃமான்

 

       
 

(சைறுல் அன்வர் (1922-1949) இந்தோனேசியாவின் முக்கியமான நவீன கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். டச்சுக்காரர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் ஒரு கொரில்லாப் போராளியாகக் கலந்து கொண்ட இவர் வாழ்க்கையின் பாதாளங்கள் வரை சென்றுவந்தவர். 27 வயது நிறைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு அற்ப ஆயுளில் இறந்த இவர் சுமார் 70 கவிதைகளே எழுதியிருக்கிறார். இவரது முழுக் கவிதைகளும் கட்டுரைகளும் Burton Raffel என்பவரால் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இங்குத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கவிதைகள் இடம்பெறும் நூல் Chairul Anwar, Selected Poems translated by Burton Raffel and Nurdin Salam, Published by World Poets Series, New Directions, New York City, 1962)

எனது வீடு

எனது வீடு கவிதைக் குவியலால் கட்டப்பட்டது
ஒளிரும் கண்ணாடிகள் ஊடு நீ எல்லாவற்றையும் பார்க்கலாம்

பரந்த முற்றம் உள்ள பெரிய கட்டித்தை விட்டு நான் ஓடினேன்
வழிதவறிவிட்டது என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை

மங்கிய ஒளியில் ஒரு கூடாரத்தை அமைத்தேன்
அது எங்குப் பறந்தது என்பது காலையில் யாருக்கும் தெரியாது

எனது வீடு கவிதைக் குவியலால் கட்டப்பட்டது
இங்குதான் நான் மணம் முடித்தேன் குழந்தைகள் பெற்றேன்

நீண்டகாலம் காத்திருக்கவேண்டும்போல் தோன்றுகிறது

ஆனால் அது தன் பாதையில் உள்ளது
பிரகாசமான நாளை நான் இனியும் தேடவேண்டியதில்லை

தேன் சொற்கள் உருகி ஒழுகட்டும்
அவன் அவற்றை எடுக்க வந்தால்


நண்பர் சுகார்னோ

ஹாய்! நண்பர் சுகார்னோ, உனது கையைத் தா
எல்லாவற்றையும் நாம் செம்மைப்படுத்துவோம்
உனது சொற்பொழிவுகளை நிறைய கேட்டிருக்கிறேன்
உன் சொல்லாற்றலால் பதப்பட்டிருக்கிறேன்
உன் குரலின் கடற்பெருக்கால் நான் உப்பிடப்பட்டிருக்கிறேன்

இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து
உன் அருகில் நான் அணிவகுத்து வந்திருக்கிறேன்
இப்போது நான் நெருப்பின்மீது, இப்போது நான் வெள்ளப்பெருக்கு

நண்பர் சுகர்னோ நீயும் நானும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டவர்கள்
நம் இருவருக்கும் நரம்புகள் ஒன்றுதான்
நானும் நீயும் எதனால் ஆக்கப்பட்டோமோ
அதில்தான் நமது கப்பல்கள் செல்கின்றன
நமது கப்பல்கள் நங்கூரத்தை இழுப்பதும் போடுவதும்
உனது நரம்புகளிலும் எனது நரம்புகளிலும்


இணைவு

முடிவற்ற இரவில்
இந்த அறைதான் நமது கடைசிக் கூடு

நாம் இருவரும் இப்போதுதான்
இந்தக் கறுப்பு மிதவையை எட்டிப் பிடித்தோம்

நாம் கரையை அடைவோமா
அன்றேல் மாயச் சூழலில்
சிக்கிச் சுழல்வோமா

உனது கண்கள் ஊதாக் கற்கள்

நாம் இன்னும் தழுவிக்கொண்டிருக்கிறோமா
அல்லது
நிழல் நம்மைப்போல் பாவனை செய்கிறதா


நானும் எனது நண்பனும்

பனிப்புகாரினூடே இரவில் நாம் பிந்தி நடக்கிறோம்
மழை நம் உடலை நனைக்கிறது
துறைமுகத்தில் நிற்கும் படகுகள் உறைகின்றன

என் இரத்தம் தடித்து ஓட்டம் குறைகிறது
என்னால் சிந்திக்கமுடியவில்லை

அங்குப் பேசிக்கொண்டிருப்பது யார்...?
என் நண்பன் ஓர் எலும்புக்கூடுதான்
பலம் அவனிடமிருந்து விரட்டியடிக்கப்பட்டுவிட்டது

என்ன நேரம்? என்று கேட்கிறான்
மிகவும் பிந்துவிட்டது
எதற்கும் அர்த்தம் இல்லை
எந்த அசைவுக்கும் பொருள் இல்லை


போய்வருகிறேன்

நான் கண்ணாடியில் பார்க்கிறேன்

இந்த முகம் காயங்களால் மூடப்பட்டிருக்கிறது

இது யாருடையது?

பெருகிவரும் ஓர் அழைப்பைக் கேட்கிறேன்
-என் இதயத்தில்?-
காற்று வீசிச்செல்லும் ஒலிதானா அது?

பிறகு மீண்டும் ஒரு பாடல்
இரவின் நடுவில் பரவிச்செல்கிறது

ஆ...!

எல்லாமே தடிக்கிறது, எல்லாமே இறுகுகிறது
எனக்கு ஒன்றும் தெரியவில்லை
போய்வருகிறேன்...!


வீண்

கடைசியாக வந்தபோது
பிரகாசமான மலர்களைக் கொண்டுவந்தாய்
சிகப்பு ரோசாக்கள், வெண்ணிற மல்லிகை
இரத்தமும் புனிதமும்

அவற்றை என்முன் பரப்பினாய்
ஒரு தீர்க்கமான பார்வையுடன்: உனக்குத்தான்

நாம் திகைத்துப்போனோம்
ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டோம்: என்ன இது?
காதல்? நம் இருவருக்குமே புரியவில்லை

அன்று நாம் ஒன்றாய் இருந்தோம்
நாம் தொடவில்லை

ஆனால் என் இதயம் தன்னை உனக்குத் தராது
நீ தனிமையால் கனிந்திருக்கிறாய்
என்பதைப்பற்றி அதற்கு அக்கறை இல்லை


காத்திருப்பு

என்னால் தூங்கமுடியாது
பேச்சுக்குரல்கள், நாய்களின் குரைப்பு
உலகம் தொலைவில் மங்கித் தெரிகிறது
இருள் கல்லால் சுவர் எழுப்பியுள்ளது
மீண்டும் மீண்டும் குரல்களால் அடிக்கப்பட்டேன்
அருகே நெருப்பும் சாம்பலும்

நான் பேசவேண்டும்
என் குரல் காணாமல் போகிறது
நான் பலமற்றுப் போகிறேன்
சரி! பரவாயில்லை!
இந்த உலகம் பேசப்படுவதை விரும்பவில்லை, போகட்டும்

ஆற்று நீர் பனிக்கட்டியாகிறது
வாழ்க்கை இனியும் வாழ்க்கையல்ல

நான் முன்பு செய்ததையே மீண்டும் செய்கிறேன்
காதுகளை மூடுகிறேன், கண்களை மூடுகிறேன்
வரவேண்டிய அமைதிக்காகக் காத்திருக்கிறேன்


விருப்பு

நீ விரும்பினால் உன்னை மீண்டும் ஏற்கிறேன்
முழுமனதுடன்

இன்னும் நான் தனிமையில்

நீ முன்பு இருந்தவள் அல்ல என்பது எனக்குத் தெரியும்
இதழ்கள் பிடுங்கப்பட்ட ஒரு மலர்

கூனிக் குறுகாதே
தைரியமாக என்னைப் பார்

நான் உன்னைப்போல் உன்னைத் திரும்பவும் ஏற்கிறேன்
எனக்காக

ஆனால்
ஒரு நிலைக்கண்ணாடியுடன்கூட
உன்னைப் பகிர்ந்துகொள்ள மாட்டேன்


கைது செய்யப்பட்டவரும் விடுவிக்கப்பட்டவரும்

இருட்டும்
கடந்து செல்லும் காற்றும்
என்னைக் குடைகின்றன.

நான் நடுங்குகிறேன்,
எனக்குவேண்டிய ஒருவர் விழுந்துகிடக்கும்
அந்தப் பெரிய அறையும் நடுங்குகின்றது.
இரவு மூழ்குகின்றது,
கற்தூண்கள்போல் மரங்கள் உயிரற்று இருக்கின்றன.

காற்றில்,
(அடுத்து நான் போக இருக்கும்) காற்றில்,
இரைச்சலுடன் குளிர்காற்று வீசுகிறது.

நான் என் அறையை,
என் இதயத்தைச் சுத்தப்படுத்துகிறேன்
நீ வரக்கூடும் என்று
உனக்காக ஒரு புதிய கதையை
நான் விடுதலை செய்யமுடியும்
ஆனால் இப்போது என் கைகள் மட்டும்தான்
மூர்க்கமாக அசைகின்றன

என் உடல் அமைதியாகவும்
தனிமையாகவும் இருக்கிறது
கதையும் காலமும்
விறைப்பாகப் பனிக்கட்டியாக நகர்கின்றன


ஒரு சிறிய துறைமுகத்தில் மாலைப்பொழுது

இம்முறை
குடிசைகளுக்கும் பழைய வீடுகளுக்கும் இடையில்
கற்பனைக் கணுக்களுக்கும் கயிறுகளுக்கும் இடையில்
யாரும் காதலைத் தேடிக்கொண்டிருக்கவில்லை
ஒரு படகு
நீரற்று மூச்சுவாங்கிச் செல்கிறது
எதையோ பிடித்துவிடலாம் என்ற எண்ணத்துடன்

தூறல் பலத்து இருள்கிறது
ஒரு பருந்து ஊடலுடன் சிறகசைத்துச் செல்கிறது
பகல் பட்டுப்போல நீந்துகின்றது
வரப்போகும் ஆர்வத் தூண்டல்களைச் சந்திக்க
எதுவும் அசையவில்லை
கடலும் மணலும் தூங்குகின்றன
அலைகள் போய்விட்டன

யாரும் இல்லை
நான் தனிமையில்
எங்கு அந்தக் கடைசி அழுகை
என்னை இறுக்கமாகக் கட்டியணைக்கக்கூடுமோ
அந்த நான்காவது கடற்கரையிலிருந்து
எல்லாருக்கும் பிரியாவிடை கூறுவதற்கு
அதன் முடிவை ஒருமுறையாவது அடைந்துவிடும் நம்பிக்கை
இன்னும் மூழ்கிக் கொண்டிருக்க
அதன் முனையை நோக்கி நான் நடக்கிறேன்


பசுக்கி றெசொபோவோவுக்காக
ஒரு கவிதை


இது ஒரு பயணமா?
ஒரு காலடி மட்டும்தான் - உன்னால் இன்னும் போகமுடியும்
ஆனால் எப்படி?
விழுந்துகிடக்கும் இலைகளைக் கேள்
ஒரு பாடலாக மாறும் மடிந்து கொண்டிருக்கும் இசையைக் கேள்

நினைத்துப்பார்க்க என்ன இருக்கிறது?
முன்னேற்றம் இல்லாத கோழியைப் பார்
அல்லது சோர்ந்துபோன காற்றை,
உதிரும் நட்சத்திரத்தை!

எவ்வளவு காலத்துக்கு இந்தப் பயணம்?
சிலவேளை ஒரு நூற்றாண்டு...
இல்லை, இல்லை, ஒரு வினாடிதான்
ஆனால் ஏன் இந்தப் பயணம்?
ஊமையாகப் பிறந்த வீட்டைக் கேள்
அங்கு உறைந்து போய்க்கொண்டிருக்கும்
என் பிள்ளைகளின் பிள்ளைகளைக் கேள்!

ஏதாவது விடை கிடைக்கிறதா?
ஏதாவது வழி தெரிகிறதா?
உன் விடையை நீயே கண்டுபிடி
நான் சும்மா நேரத்தை வீணடிக்கிறேன்


ஓர் அறை

ஒரு ஜன்னல்
இந்த அறையை உலகுக்கு வழங்குகின்றது
ஒளிரும் சந்திரன் இன்னும் அறிய விரும்புகின்றது
"ஐந்து குழந்தைகள் இங்கு வாழ்கிறார்கள்
நான் அவர்களுள் ஒருவன்"

என் தாய் அழுதுகொண்டு தூங்குகின்றாள்
சிறைச்சாலைப் பொழுதுபோக்கு
எப்போதும் வெறுமையாய் இருக்கிறது
அலுப்புற்ற என் தந்தைகூட படுத்துகிடக்கிறார்
அவரது கண்கள்
சிலுவையில் அறையப்பட்ட மனிதனில்
நிலைக்குத்தி நின்றது

முழு உலகும் தற்கொலை செய்துகொள்கிறது!
எண்ணிக்கையில் சேர்க்கப்படாத
என் தாய் தகப்பனிடமிருந்து எனக்கு இன்னும்
ஒரு தம்பி வேண்டும்
இதுபோன்ற 3 x 4 அறை மிகவும் சிறியது
ஆன்மாக்களுக்குள்
உயிரை ஊத அது போதாது


நான்

என் காலம் வரும்போது
யாரும் எனக்காக அழவேண்டாம்
நீயும்தான்

அழுவோர் எல்லாம் அகல்க

இதோ நான் இங்கிருக்கிறேன்
தன் சகாக்களிடமிருந்து தொடர்பறுந்த
ஒரு காட்டு விலங்கு

சன்னங்கள் என் சருமத்தைத் துளைக்கலாம்
நான் தொடர்ந்து செல்வேன்

என் காயங்களுடனும் வலியுடனும்
தாக்கியவாறு
தாக்கியவாறு
முன்னேறுவேன்
துயரம் மறையும்வரை

அதுபற்றி இனி அக்கறை இல்லை

நான் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் 

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768