இதழ் 16
ஏப்ரல் 2010
  பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு
 
 
 
  சிறப்புப்பகுதி:

ம‌லேசியா - சிங்கை 2010

ம‌. ந‌வீன்

சர்ச்சை: இலக்கியச் சுரண்டல்

பத்தி:

காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்

அகிலன்

இயற்கை (1) - கோடை
எம். ரிஷான் ஷெரீப்

அகிரா குரோசவாவின் 'இகிரு': வாழ்வதின் பிரியம்
சு. யுவராஜன்

பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு

உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!
சீ. முத்துசாமி

கட்டுரை:

சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும்
யதீந்திரா

தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

சிறகு
சு. யுவராஜன்


ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி

சுவீர்
கிரகம்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...9
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10
சீ. முத்துசாமி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...6

ஏ. தேவராஜன்

றியாஸ் குரானா

இரா. சரவண தீர்த்தா

செல்வராஜ் ஜெகதீசன்

தர்மினி

ரேணுகா

திரைவிமர்சனம்:


அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
ம‌. ந‌வீன்

இதழ் அறிமுகம்:


எதிர் (www.ethir.org)

எதிர்வினை:


சு. யுவராஜனின் ‘அழைப்பு’
க. ராஜம்ரஞ்சனி
     
     
 

சுதந்திரம் என்பது மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது, ஆனால் எனக்கு சுதந்திரம் என்றால் அடுத்த அறைமணி நேரத்தில் நான் என்ன செய்ய போகிறேன் என்பது எனக்கே தெரியக்கூடாது. ஆனால் அப்படியொரு சுதந்திரம் நான் வேலை பார்த்தத் தமிழ்ப்பத்திரிகைத் துறையில் எனக்கு கிடைக்கவே இல்லை. பிறர் சுதந்திரம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாதவர்களிடம் வேலை செய்யும் காலக்கொடுமையைச் சுமக்க முடியாமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவர்களிடமிருந்த என் சுதந்திரத்தை நானே பிடுங்கி எடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து இன்று வரை என் சுதந்திரம் என் கையில்தான் இருக்கின்றது.

உலகம் அறிந்த ஓவியர்களின் ஓவியங்களை காண நேரும்போதெல்லாம் அவர்களின் சுதந்திரம் என்னை வெகுவாக நெருடியுள்ள‌து.

ஓவியம் வரைவதற்காகவே வாழ்ந்த ஓவியன் வான்கொ. வரைவதற்காகச் சுற்றித்திரிந்த ஊர்கள் நகரங்கள் நடந்து திரிந்த நிலப்பரப்புகள் சந்தித்த நண்பர்கள் துயரங்கள் என்று இந்த உலக வாழ்விலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு வாழ்ந்த வான்கொவின் சுதந்திரம் அவன் வரைந்து குவித்த ஓவியங்களில் அமர்ந்து கொண்டு நம் சுதந்திரங்களைப் பரிகசித்துக் கொண்டிருக்கிறது.

வான்கொவின் சுதந்திரத்தைக் காட்டிலும் என்னை தவிடுபொடியாக்கியது இன்னொரு ஓவியனின் சுதந்திரம். அந்த ஓவியன் பிக்காசோ. நவீன ஓவியத்தின் தந்தை என்று சொல்லப்படும் பிக்காசோவின் ஓவியங்களைப் பார்க்கும் போது உள்ளூர ஒருவித பயம் ஏற்படுகிறது. பிக்காசோவின் ஓவியங்கள் கட்டுடைப்பின் உச்சம் என்று கருதுகிறேன். உருவங்களை அதன் இயல்புக்கு அப்பால் புதியதொரு தளத்திற்குப் பயப்படாமல் தாவியிருக்கும் பிக்காசோவின் சுதந்திரம் ஒரு சூறாவளியானது.

இப்படியாக ஓவியர்களின் சுதந்திரங்களைப் பற்றி பேசுகையில் எனக்கு சரஸ்வதி அக்காதான் நினைவுக்கு வருவார். நான் நயனம் வார இதழில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் எனக்கு வேலையைச் சொல்லிக் கொடுக்கப் பணிக்கப்பட்டவ‌ர் சரஸ்வதி அக்கா.

நயனத்தின் பிரதான வடிவமைப்பாளராக (Layout Artist) ஒரு ஓவியர் இருந்தார். அவருக்கு உதவியாளராக சரஸ்வதி அக்கா வேலை செய்தார். அன்று கணினி வசதிகள் இல்லை என்பதால் வெட்டி ஒட்டும் வேலைதான். கொஞ்சம் வளவளப்பான வெள்ளைத் தாளில்தான் வடிவமைப்புகள் செய்யப்படும். அப்போது நயனம் வார இதழில் தாட்கள் வீண‌டிக்கப்படாமல் கச்சிதமாகப் பணியை முடிக்க வேண்டும். நான் புதியவன் என்பதால் தாள்களை வீணடித்து விடுவேன். அதையெல்லாம் ஆசிரியருக்குத் தெரியாமல் வேலையைச் சொல்லிக் கொடுத்தார்.

தபால் மூலம் ஓவியம் பயின்றவர் சரஸ்வதி அக்கா. ஆனால் அவர் ஓவியம் வரைந்து நான் பார்த்ததேயில்லை. அவர் ஒரு பக்க வடிவமைப்பாளராகவே வேலை செய்தார். அதுவும் அவர் சொந்தமாகவே வடிவமைக்க மாட்டார். அந்த ஓவியர் சொல்லும்படிதான் வடிவமைப்பார். ஓவிய எழுத்துக்கள் வரைய கற்றுக் கொடுத்தவர் என்பதால் அந்த ஓவியர் மீது சரஸ்வதி அக்காவுக்கு குருபக்தி ரொம்ப ஜாஸ்தி. சரஸ்வதி அக்காவின் பிரதான வேலை ஆசிரியர் கொடுக்கும் தலைப்புகளை ஓவிய எழுத்துக்களாக வடிவமைத்து வரைவதுதான். அவர் வரைந்த தலைப்புகளை வைத்து அந்த ஓவியர் பக்கங்களை வடிவமைத்துக் கொடுப்பார். சரஸ்வதி அக்கா வரையும் எழுத்துக்களும் அந்த ஓவியர் வரையும் எழுத்துக்களும் ஒரே மாதிரி இருக்கும். அந்த ஓவியருக்கு சொந்தமாக அலுவலகம் இருந்தது. அவர் பகுதிநேரமாகத்தான் நயனத்தில் வேலை செய்தார்.

காலபோக்கில் மற்றவர்களைவிட சரஸ்வதி அக்காவிடம்தான் என்னால் சகஜமாகப் பேச முடிந்தது. அவரும் என்மீது பிரியமாக இருந்தார். நான் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருக்கும். அரைகுறையாக வேலை கற்று வைத்திருந்தேன். அதே சமயத்தில்தான் அந்த ஓவியருக்கும் ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஓவியர் வேலையை விட்டு நின்றுவிட்டார். அவருடன் சரஸ்வதி அக்காவும் நின்று விட்டார். ஏன் என்று அப்போது எனக்கு புரியவில்லை. குருபக்தி என்று நினைக்கிறேன்.

அந்த ஓவியரின் அலுவலகத்திலேயே போய் வேலைக்குச் சேர்ந்துவிட்டார் சரஸ்வதி அக்கா.

எப்போதாவது தொலைபேசியில் அழைத்து பேசுவார். சரஸ்வதி அக்காவின் அன்பு அப்படியே இருந்தது. தூரத்தில் இருந்தே என் வளர்ச்சியைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.

இப்படியாக எட்டு வருடங்கள் கழித்து நானும் நயனத்தில் வேலையை விட்டு விலக நேர்ந்தது. ஒரு மாதம் வீட்டில் நெளிவு எடுத்து விட்டு சரஸ்வதி அக்கா வேலை பார்க்கும் அதே ஓவியரிடம் நானும் வேலைக்குச் சேர்ந்தேன். மீண்டும் சரஸ்வதி அக்காவுடன் வேலை செய்ய போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தேன். அந்த ஓவியரின் அலுவலகம் கணினி மயமாக இருந்தது. அன்றைய தேதிக்கு நவீன மென்பொருட்களை கணினியில் பொருத்தியிருந்தார். வெட்டி ஒட்டும் வேலை எதுவும் இல்லை. எல்லாம் கணினியில்தான் வடிவமைப்பு வேலைகள் நடந்தது.

சரஸ்வதி அக்காவின் வளர்ச்சி என்னை பிரமிக்க வைத்தது. கணினியில் வடிவமைப்பதிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வேகமாகத் தட்டச்சு செய்வதிலும் தேர்ந்தவராக இருந்தார். மீண்டும் மாணவனாக சரஸ்வதி அக்காவிடம் கணினி வடிவமைப்பு பயில ஆரம்பித்தேன். அவர் கற்றுக் கொடுப்பது எளிமையாகவும் சுலபமாகவும் புரிந்து விடும். கணினியை இயக்குவதற்கு கொஞ்சம் பழகிக் கொண்டேன்.

அலுவலகத்தின் அருகிலேயே அந்த ஓவியரின் வீடு இருந்ததால் அவர் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டார். சரஸ்வதி அக்காவும் அவர் வீட்டில்தான் தங்கியிருந்தார். மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவர் சொந்த ஊரான பத்தாங் பெர்ஜூந்தைக்குச் சென்று வருவார்.

அலுவலகத்தில் வேலைகள் குறைவாகவே இருந்தன‌. சின்னச் சின்ன வேலைகள்தான் வரும். பெரும்பாலும் நானும் சரஸ்வதி அக்காவும் கதையடித்துக் கொண்டு அமர்ந்திருப்போம். சில வாரங்களிலேயே அந்த அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்கள் நெருடலை ஏற்படுத்தியது. எப்படி வேலை செய்தாலும் சரஸ்வதி அக்காவை அந்த ஓவியர் கேவலமாகவே பேசிக் கொண்டிருப்பார். தீவெட்டி, முட்டாள், அறிவு இருக்கா, ஓங்கி பளார்னு அறைஞ்சுடுவேன் என்றெல்லாம் சகஜமாக பேசுவார். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் சரஸ்வதி அக்கா இங்கு வேலை பார்க்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரியாக பேசிக்கொண்டிருந்த ஓவியர், சரஸ்வதி அக்காவைப் பார்த்து “மூஞ்சியை பாரு.... கிழிஞ்ச வாயி.... அதனாலதான் உனக்கு கல்யாணம் ஆக மாட்டுது எவன் வருவான் கட்டிக்க” என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விட்டு போய்விட்டார். மூலையில் சுருண்டு அமர்ந்து கொண்டு சரஸ்வதி அக்கா அழுதது இன்றும் என்னால் மறக்க முடியாத சம்பவம்.

கொஞ்ச நாளிலேயே அந்த ஓவியரின் ஆணவத்தையும் அதிகாரத்தனத்தையும் பார்க்க நேர்ந்தது. அலுவலகத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது. நான் சும்மா அமர்ந்திருப்பது பொறுக்காமல் அலுவலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சிகளைத் தேடி கொல்ல வேண்டும். அதுதான் உன் வேலை என்று சொல்லிவிடுவார். நாள் முழுக்க கரப்பான் பூச்சிகளைத் தேடிக்கொண்டிருப்பேன். அவர் வீட்டில் தங்கியிருந்தது ஏதோ சீர்திருத்த பள்ளியில் இருந்ததைப் போல் இருந்தது. காலை 9.00 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்றுவிட வேண்டும். ஆனால் அவர் எத்தனை மணி வரை அலுவலகத்தில் இருக்கின்றாரோ அதுவரை நான் அலுவலகத்தில் இருக்க வேண்டும். சில நேரம் விடியற்காலை 4.00 மணி வரை எதையாவது நோண்டிக் கொண்டு அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். அதுவரை தொங்கிப்போய் அமர்ந்திருப்போம் நானும் சரஸ்வதி அக்காவும். ஆனால் எவ்வளவு தாமதமாக வீடு சென்றாலும் மறுநாள் காலை 9.00 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட வேண்டும். (என்னங்கடா நியாயம் இது....!)

ஓவியர் மட்டும்தான் என்று நினைக்காதீர்கள் நண்பர்களே.... ஓவியரின் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னால் முடிந்தளவுக்கு காட்டுக் காட்டியவர் ஓவியரின் மனைவி. ஓவியரின் மனைவி வேலைக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தார். ஆனால் சமைக்கமாட்டார். இரவெல்லாம் ஆங்கிலப்படங்களை வீடியோவில் பார்த்து விட்டு மறுநாள் மதியம் 12.00 மணி வரை தூங்குவார். அவருக்கு மதிய உணவு கடையில் இருந்து வாங்கிக் கொடுப்பது என் வேலைகளில், ஒன்று கரப்பான் பூச்சிகளை கொல்வதைப் போல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு அருகில் பாசார் மாலாம் (இரவுச் சந்தை) போடுவார்கள். வாரம் தவறாமல் அந்த பாசார் மாலாமில் சமையல் சாமான்களை அள்ளிக் கொண்டு வருவார். கோழி, மீன், கீரைகள் என்று என்னனென்னமோ இருக்கும். வாராவாரம் இந்த சாமான்களையெல்லாம் ஐந்தாவது மாடியில் இருக்கும் ஓவியரின் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு படியேறுவது என் முக்கிய வேலைகளில் ஒன்று. சமைக்காதவங்களுக்கு ஏன் இவ்வளவு சமையல் சாமான்கள் என்று புரியவில்லை. இதில் மீனை பார்த்து வாங்கத் தெரியாது என்று சொன்னதற்கு திட்டு வேறு வாங்கிக் கொண்டேன் அவரிடம்.

திடீரென்று என்றாவது ஒருநாள் சமைத்து விடுவார். அவ்வளவுதான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரதான சமையல்காரன்போல் தன்னை நினைத்து தன் சமையல் நுணுக்கங்களைப் பற்றி பேசி பேசி இதற்கு முன் எப்போதோ அவர் சமைத்து நான் சாப்பிட்ட உணவை இப்போது வாந்தியெடுக்க வைத்து விடுவார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு வயது 2. அவனுக்கு பிடித்தமான விளையாட்டு என் மூக்குக் கண்ணாடியை பிடுங்கி வீசி விடுவதுதான். ஒரு முறை நான் அசந்த நேரம் கண்ணாடியை பிடுங்கி பெரிய அல்லூரில் (கால்வாய்) வீசிவிட்டான். ராத்திரி நேரம் வேறு. நல்ல வேளையாக அல்லூரில் தண்ணீர் இல்லை. அந்த ராத்திரியில் அந்தப் பெரிய அல்லூரில் இறங்கி என் கண்ணாடியைத் தேடி எடுத்தேன். குடும்பத்தோடு எங்காவது ஷோப்பிங் சென்றால் என்னையும் அழைத்துச் செல்வார்கள். ஷோப்பிங் மோலின் எங்காவது ஒரு மூலையில் என்னை நிற்கச் சொல்லிவிட்டு மகனை என்னிடம் கொடுத்து விட்டு சாவகாசமாக ஷோப்பிங் பண்ண போய்விடுவார்கள். அங்கும் இங்கும் ஓட முயலும் அவனிடமிருந்து ஷோப்பிங் மோலையும் என் கண்ணாடியையும் பாதுகாப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இவர்களிடம் நான் துன்பப்பட்டது வெறும் மூன்று மாதங்கள்தான். அதற்குப் பிறகு முடியாமல் புடுங்கியடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டேன். ஆனால் சரஸ்வதி அக்கா இதையெல்லாம் வருடக்கணக்கில் அனுபவித்தார்.

தீபாவளி சமயங்களில் ஓவியரின் மனைவி ஓவியரிடம் “சரஸ்வதிக்கு ரொம்ப வேலை கொடுக்காதீங்க. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க” என்று கிட்டத்த‌ட்ட மிரட்டியே வைப்பார். ஓவியரும் 3.00 மணிக்கெல்லாம் சரஸ்வதி அக்காவை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். ஏன் என்று பார்த்தால் தீபாவளி பலகாரங்கள் சுட ஓவியரின் மனைவிக்கு உதவுவத்தான். 3.00 மணிக்கு வீட்டுக்குப் போய் இரவு 12.00 வரை பலகாரம் சுட்டுக் கொண்டிருப்பார் சரஸ்வதி அக்கா. ஆனால் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை கொடுக்க மாட்டார்கள். வெறும் 700.00 வெள்ளி சம்பளத்தை கொடுத்து விட்டு EPF, Socso எதுவும் இல்லாமல் ஒரு அடிமையைப் போல் வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் கடைக்கு சென்று ஷாம்பு, குளியல் சவக்காரம் வாங்குவதற்குக் கூட ஓவியரிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருப்பார் சரஸ்வதி அக்கா. பெரும்பாலும் ஓவியர் அனுமதி தர மாட்டார்.

சரஸ்வதி அக்கா நினைத்திருந்தால் அங்கிருந்து வெளியேறியிருக்கலாம். அவரின் திறமைக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு வேலையை சொல்லிக் கொடுத்து வேலையும் கொடுத்த ஓவியருக்குத் துரோகம் செய்ய மனம் ஒம்பவில்லை என்றார்.

இதில் வேதனையான கொடுமை என்னவென்றால், இதை எதையுமே அவர் துன்பமாக நினைக்கவில்லை. ஓவியர் குடும்பத்தில் தானும் ஒருத்தி என்ற எண்ணத்தோடு மனம் ஒத்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார் சரஸ்வதி அக்கா. யாருக்கு யார் துரோகம் செய்தார்கள் என்றே அவருக்கு புரியவில்லை.

இன்று அந்த ஓவியர் தொழில் நொடித்துப் போய் அலுவலகத்தை மூடி விட்டு குடும்பத்தோடு வேறு இடத்திற்குச் சென்று விட்டார். சரஸ்வதி அக்கா கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தில் ஒரு சாதாரண அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

தபால் மூலம் அவர் பயின்ற ஓவியக்கலை இன்று அவருக்கு ஞாபகத்தில் இருக்குமா?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768