|
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மொழி வாரி மாநிலங்கள் அமைக்க மத்திய அரசு
ஸ்டேட்ஸ் ரீ ஆர்கனைஸேசன் கமிஷனை உருவாக்கியது. தெலுங்கானா பகுதி
ஆந்திராவுடன் இணைந்தால் தங்கள் பகுதி வளர்ச்சி அடைவது தடைபடும் என்று
தெலுங்கானா மக்கள் கருதியதால் அந்த இணைப்பை விரும்பவில்லை. இக்காரணத்தால்,
தனது அறிக்கையில் தெலுங்கானா பகுதியை ஹைதராபாத் என்ற தனி மாநிலமாக அறிவிக்க
வேண்டுமென்று சொல்லியது. மேலும் தேர்தலுக்குப் பிறகு வரக்கூடிய சட்டசபையில்
ஆந்திராவுடன் இணைவதாக தீர்மானித்தால் இணைக்கலாம் என்றும் சொல்லியது.
இங்கிருந்து ஆரம்பிக்கிறது காங்கிரஸின் சித்து விளையாட்டு. மக்களை
மரணக்குழியில் தள்ள அச்சாரம் போட்டது காங்கிரஸ்.
மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ், கமிஷனின் அறிக்கையைத்
தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு தெலுங்கானாவை இணைத்து ஆந்திரப்பிரதேசமாக
அறிவித்து விட்டது. இது முதல் விளையாட்டு.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா போராட்டம் அவ்வப்போது தீவிரமடைந்து வர, அதன்
விளைவாக வன்முறைகள் நடந்தேறின. கிட்டத்தட்ட 300 மாணவர்கள் இறந்தார்கள்
என்கின்றன செய்திகள்.
அடுத்த விளையாட்டை சென்னா ரெட்டி மூலம் விளையாடியது காங்கிரஸ். பிரச்சினை
தீவிரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது காங்கிரஸிலிருந்து
பிரிந்து புதிய தெலுங்கானா கட்சியை ஆரம்பித்தார் சென்னா ரெட்டி. தீவிரம்
கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிறது. மீண்டும் அந்த சென்னா ரெட்டியால்
ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கானா கட்சி காங்கிரஸுடன் சேர்ந்து விட்டது.
அதன் பிறகும் தெலுங்கானா பற்றிய தெளிவான முடிவை எடுக்காமல், தனது அடுத்த
விளையாட்டை விளையாட ஆரம்பித்தது காங்கிரஸ்.
தனி தெலுங்கானா அமைய ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை உருவாக்கிய சந்திர
சேகரராவுடன் இணைந்து கொண்டு காங்கிரஸும் தனி தெலுங்கானா ஆதரவுக்கு
தெரிவித்து தேர்தலில் நின்றன. ஜெயித்த பிறகு மத்திய அமைச்சரவையில் குறைந்த
பட்ச செயல்திட்டத்தில் தெலுங்கானாவையும் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ்
அதன்பிறகு மூச்சே விடவில்லை. காங்கிரஸின் உறுதி மொழி காற்றோடு சென்றது.
காங்கிரஸின் இந்த நிலையை எதிர்த்த ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தலின் போது மட்டும் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவிற்கு ஆதரவு
தெரிவிப்பதும், தேர்தல் முடிந்த பிறகு அதை பற்றிப் பேசாமலும்
இருந்துகொண்டு, தெலுங்கானா மக்களை முட்டாளாக்கி வருகின்ற நிகழ்ச்சிகள்
எல்லாம் வரலாறு.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக ஒரு பகுதி மக்கள் தனி மாநிலம்
கேட்டுப் போராடி வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்தைக் கேலிக்கூத்தாக
ஆக்கி வருகின்றன அரசியல் கட்சிகள். தெலுங்கானாவிற்கு ஆதரவு தெரிவிப்பதும்,
பின்னர் பின் வாங்குவதுமான பூனை எலி விளையாட்டை ஆடி வருகின்றன
ஆந்திரப்பிரதேச அரசியல் கட்சிகள். காங்கிரஸோ இந்த விளையாட்டை மேலும் மேலும்
சிக்கலாக்கி வருகின்றது. கிருஷ்ணா கமிஷன் என்ற மாய்மாலத்தை அவிழ்த்து
விட்டிருக்கிறது காங்கிரஸ். மக்களின் போராட்டத்தை திசை திருப்பும் வேலையில்
காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பெரிய பிரச்சினை ஒன்று வந்தால் உடனே
அதை வேறுபாதையில் திருப்பி விடும் தந்திரங்களை வெகு நாசூக்காய் செய்து
வருவதில் காங்கிரஸுக்கு நிகர் காங்கிரஸ்தான்.
உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடாக பிற நாட்டினரால் கருதப்படும் (???)
இந்தியாவின் ஜனநாயகம் என்பது இதுதான். மக்களின் 50 வருட போராட்டத்தைக்
கேலிக்குரியதாய் பார்த்துக் கொண்டிருக்கிறது கோமான்களின் கோடீஸ்வரக் கட்சி
காங்கிரஸ். தெலுங்கானாவிற்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. உயிரோடு
பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரிகிறார்கள் மக்கள். ஏசி அறைக்குள்ளே உட்கார்ந்து
கொண்டு, மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, வெளி நாட்டுக்
கம்பெனி முதலாளிகளுக்கு நவீன பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இந்தியாவை
ஏக்கர் ஏக்கராக விற்றுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. எதிர்கட்சிகளோ
செய்வதறியாது வெளி நடப்பு செய்கின்றன.
தெலுங்கானா என்று தீரப்போகிறது? காங்கிரஸ் கட்சி என்று தீர்த்து
வைக்கப்போகிறது என்பது பெரிய மர்மம்தான். அதுவரை தெலுங்கானா பகுதி மக்களின்
நிலையினை எண்ணிப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
மொழி வாரியான மாநிலங்கள் பிரிப்பு என்று ஆரம்பித்தபோதே பல தரப்பாலும்
எதிர்க்கப்பட்ட அந்தக் கோரிக்கையை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு,
மாநிலங்களுக்கிடையே வேற்றுமையைத் தோற்றுவித்தது காங்கிரஸ். இதைப் போல
காங்கிரஸ் இந்திய மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் தவறுகளைச் சொல்லி
மாளாது. ஆளும் வர்க்கம் கொஞ்சமாவது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு
அதற்கேற்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். கோடீஸ்வரர்களைத் தான்
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும், கொள்கையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஃபார்சூன் பத்திரிக்கை இந்தியாவிலிருக்கும் கோடீஸ்வரக் கோமான்களை
பட்டியலிடுகிறது. காங்கிரஸின் கோரமுகம் தெலுங்கானா பிரச்சினையில் தெளிவாகத்
தெரிகிறது. இன்னும் எத்தனை மக்களை காவு வாங்க காத்திருக்கிறதோ தெலுங்கானா?
இறைவனுக்கே வெளிச்சம்.
|
|