|
கை சமாதி
'உன்ஹாசு'வை ஒரு 'தம்' இழுத்தவாறே,
"இவ்வருட சிறுவர் தினத்தன்று
மகனோடும் மனைவியோடும்
கை கோர்த்துக் கொண்டு
சிறுவர் பூங்காவுக்கு
போகலாம் என்றிருக்கிறேன்..."
என்று தோழன் ச்சோங்
முடிப்பதற்குள்
கை துண்டானது
அழுக்கேறிய தொழிலாளர்
உடையில் இருந்ததால்...
தொழிலதிபர் தன் கப்பல் போன்ற 'காரிலோ',
தொழிற்சாலை இயக்குனர் தன்
படகு போன்ற 'காரிலோ',
தொழிற்பகுதி மேற்பார்வையாளர் தன்
'கார்' போன்ற 'காரிலோ',
அவனை எடுத்துச் செல்லவில்லையாம்.
அதிக இரத்தம் வீணானதும்
ச்சோங்கை 'லாரியொன்று'
மருத்துவமனைக்குச் சுமந்து சென்றது.
இயந்திரம் சுவைத்த கரம்
இன்னும் பசையேறிய கையுறைக்குள்
துடித்துக் கொண்டிருந்தது.
36 வருடங்களின் துயரங்களை
விழுங்கி விம்மிக்கொண்டிருந்த தொழிலாளியின்
கரத்தைக் கண்டபோது
நாவுறைந்து போனேன்.
கரத்தைச் சுருட்டியெடுத்துக்கொண்டு
'போங்ச்சோன்-டோங்'கில் இருக்கும்
ச்சோங்கின் வீட்டை அடைந்தேன்.
சோகம் ஊறிய விழிகளோடு
வரவேற்ற அவன் மனைவி, குழந்தை...!
என்னால் கரத்தைக் காட்டமுடியவில்லை.
மத்தியான வேளை... உள்ளூர் கடையொன்றில்...
மதுப்புட்டியைக் காலிசெய்துவிட்டு
இடிந்துபோய் அமர்ந்திருந்தேன்.
பிறகு...
ச்சோங்நோ வில் இருக்கும்
மிகப்பெரிய புத்தகக்கடைக்குள் நுழைந்து
தொழில் விபத்துகளைப் பற்றி
ச்சோங் கேட்டிருந்த புத்தகத்தைத் தேடினேன்.
என்ன சொல்ல...!
எவ்வளவு தான் தேடினாலும்
பாழாய்ப்போன
புத்தகக்குவியலில்
ஒரு கூலி படிக்க ஒன்றுமில்லை.
*'உன்ஹாசு' - மட்டமான சிகரெட்
(தென் கொரியக் கவிதை காதலையும், தனிமையையும், மரபுப் பெருமைகளையும்
கட்டியழுது கொண்டிருந்தபோது, 80-களில் 'தொழிலாளர்களின் விடியல்' என்ற
நூலோடு வெடித்தெழுந்தவர் பாக் நோ-ஹி. பாமர மக்களின் மனசாட்சியாய் அவரது
கவிதைகள் செய்த இலக்கியப்புரட்சி இன்றும் தொடர்கிறது.)
|
|