|
ஷேக்ஸ்பியர், இப்ஸன், பெர்னார்ஷா காலம் தொட்டு இன்றுவரை, ஒரு கருத்தை
மக்களிடம் புகுத்தவேண்டுமாயின், நாடகத்தால் மட்டுமே சொல்லமுடியும்
என்பதாலேயே, மேல்நாட்டு அறிஞர்கள் தொட்டு, இன்றைய கலை சார்ந்தவர்கள் வரை,
நாடகத்தை அறிவு சார்ந்த, ஏன் புரட்சிக்குக் கூட பயன் படுத்தியுள்ளார்கள்
என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாடகம்,
கூத்து எனத் தொடங்கி, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டில் மாயக்கூத்தாகி,
பதினொன்றாம் நூற்றாண்டில் இயல் நாடக வழியில் நடத்திக்காட்டப்பட்டு, 14,
15ம் நூற்றாண்டில் தெருக்கூத்தாகி, 18, 19ம் நூற்றாண்டில் தான், நொண்டி
நாடகங்கள், குறவஞ்சி, பள்ளு நாடகங்கள், வளர்ந்துள்ளது. 20 நூற்றாண்டின்
தொடக்கத்தில்தான் சூரிய நாராயண சாஸ்திரி, பம்மல் சம்பந்த முதலியார்
ஆகியோரால் மறுமலர்ச்சி நாடகங்கள் தொடங்கப்பட்டது.
ஒரு தாள் ஊன்றி, ஒரு தாள் ஏற்றி
ஒரு கை மறித்து மறுகை அமைத்து
இருகையில் ஆக்கமும் இறுதியும் ஏற்று
அருவுரு ஆக்கும் அம்மைக்கூத்து ஆட்டப்
பெருவெளி நடிக்கும் பெருமான்
இறைவன் நடராஜனின் உடல்பாவத்தைப் படம் பிடித்துக் காட்டுவதும் ஒரு சமூக
உடல்மொழியின் இலக்கணமே என்கிறது கூத்தநூல். கலை இலக்கியப்படைப்புக்களை
தரவுகளாகக்கொண்டு, சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதென்பது
கலைத்துறையில் இன்றைய அணுகுமுறையே. ஆனால் ஒரு நாடகாசிரியன் தமது
கருத்துக்களுக்கு பெளதீக வடிவம் கொடுக்கும்போது [ஒலி, ஒளி] வடிவம் மூலம்
மட்டுமே, அவனது கட்டமைப்பு செயல்பாட்டில் வெளிவர முடிகிறது. இதற்கு
பேச்சுமொழி இன்றியமையாதது. ஒருவர் கத்திப் பேசலாம். மெல்லப் பேசலாம்.
நீட்டிச்சுருக்கியும் பேசலாம். அழுத்தம் கொடுத்து , உடல் மொழிகளின்
அத்தியாவசிய சைகையினால் கூடப்பேசலாம். அல்லது வட்டார வழக்குத்தொடரில் அவரது
செளகரியத்துக்குக் கூட பேசலாம். ஆனால் நாடகமொழியில் இதற்கென்று தனித்த
மொழியுண்டு. நடிப்பு, நடனம், ஓவியம், இசை, ஒளி, ஒலி, வசனம், சிற்பம்,
அலங்காரம் என அனைத்துக்கூட்டுக்கலைகளையும் உள்வாங்கியதொரு தனிவடிவமாக
சிறப்புப் பெறும்போதுதான் நிகழ்வுப்பனுவலும், உணர்வுப்பனுவலும்,
நாடகவடிவமாக பூரணம் பெறுகிறது.
ஆரம்பகால நாடக ஆய்வுகள் கூறுவதுபோல் கதாபாத்திரத்தின் தன்மை, கதாசிரியர்,
நடிகர், இயக்குனர், ஆகியோரின் சுயபச்சாதாபங்கள், நிகழ்ச்சி விமர்சனங்கள்,
பிற நாடகங்களோடு ஒப்பீடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற நிலை
இன்றில்லை. இந்தியாவின் தலை சிறந்த நாடகாசிரியரான இப்ராஹிம் அல்காசியின்
படைப்புக்கள் பன்முகத்தன்மை கொண்டவை. தமிழ் நாட்டிலேயே சே.ராமானுஜம் [எண்டெ
மதிப்பிற்குரிய ஆசிரியர்] அவர்களின் வெறியாட்டம் அற்புதமான படைப்பு.
அல்காசியின் ரஸியா சுல்தான், காவாலம் பணிக்கரின் மத்தவிலாசப் பிரகசனம்,
மோஹன் மஹரிஷியின் ஈடிப்ஸ்மன்னன் ஆகிய அனைத்திலும், பல்வேறு உடல்நிலையில்
[காட்சி நிலையில்] மேடைப்படிமம், சந்த லயம் மிக்க ஒரு சித்திரமாக
அரங்கேற்றப்பட்டபோது நவீனத்துவத்துக்கே, ஒரு தனிப்பார்வை கிட்டுகிறது.
ஆனால் யதார்த்த நாடகங்களில் இவள் கவனித்தது வரை [இவள்
புலனுக்குப்பட்டதுவரை], பங்கேற்கும் குறிகள், நடைமுறையில், அழகியல்
சங்கேதமாக வெளிப்படுவதால், பன்முக அர்த்தமே அங்கே கேள்விக்குறியாகிறது.
பொதுவாகவே, நவீன நாடகங்களில், கதைக்கும், நடைமுறைக்கும் பொருத்தமே
இருப்பதில்லை. ஆசிரியர் முத்துசாமியின் ”நாற்காலிக்காரர்” நாடகத்தில்
முழுக்க முழுக்க வசனங்களையே குறியீடாக பயன்படுத்தியதை, இங்கு
குறிப்பிடவேண்டும். நவீன நாடகத்திலும், நிஜ நாடக இயக்கம், தளிர் நாடக
இயக்கம், வீதி நாடகம் எனப்பல்வேறு இயக்கங்களையும் அணுகிக்கவனிக்கும்போது,
யதார்த்த நாடகத்தில் மட்டுமே, சம்பவங்களோடு நெருங்கிய தொடர்பு,
நாடகத்துக்கு உள்ளதாகக் காட்டமுடிகிறது.
சென்னையில் முத்துசாமி, ஞானி, பிரளயன், டெல்லியில் பெண்ணேஸ்வரன்,
எனப்பலரும் நவீனத்துவத்தில் பயணித்திருப்பினும், ஆசிரியர் ராமானுஜத்தின்
இலக்கிய பங்களிப்பு, அவரது நாடக வாழ்வுக்கே கட்டியங்கம் கூறுகிறது
என்பதுதான் நிதர்ஸனம். நாடகக்கலையில், இந்த நூற்றாண்டின் கொடையாக மேலை
நாட்டிற்குக் கிடைத்த பேறுகளில் ஒன்றாகக் கருதவேண்டியது,
ஸ்தான்ஸ்லாவஸ்கியின் முறைமை எனப்படும் உளவியல், உடலியல் உத்திகள் என்று
ராமானுஜம் சார் அடிக்கடி கூறுவார். இதில் பரிசோதனை நாடகங்களில் வசனங்கள்
குறைந்தும், இயல்பான மொழி நடை இருப்பதில்லை என்பதையும் காணலாம்.
தெருக்கூத்து, மேடை நாடகம், பரிசோதனை, நாடகம், என ஒவ்வொரு வடிவத்துக்கும்
உள்ள பேச்சுமொழியின் வித்தியாசமே, வாய்மொழிச்சங்கேதத்தின் மூலம் மட்டுமே,
உணர முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, ஏற்கனவே நாடகம் குறித்த எனக்கே உரித்தான, நாடகாசிரியனின் அனுபவ
அறிவாக, தெரிந்த விஷயங்களில், இங்கு கூத்துப்பட்டறையில் முத்துசாமி,
ராமானுஜம் சார் போன்றோரிடையே மேலும் ஞான் என்ன கற்றேன்?
|
|