|
வகிடெடுத்துச் சீவிய பெண்ணின் தலைபோல நதியிருக்கும்
ஊர் அழகாக மிளிரும். எனது ஊரில் ஆதி தொட்டு ஒரு நதி ஓடிக்கொண்டே
இருக்கிறது. அதன் அழிவு கடலில்தான் எனினும் அது கடல் நோக்கி ஓடுவதை
நிறுத்துவதாக இல்லை. ஓடிக்கொண்டே இருப்பதனால்தான் நாமும் அதனை நதி
என்கிறோம். நதிகள் எப்பொழுதும் இப்படித்தான். அதன் நீர் பலரதும் கண்ணீரால்
ஆனது. சுழித்துக்கொண்டோடுமது எல்லோருடைய வாழ்வு பற்றியும்தான் சொல்லிச்
சொல்லி ஓடுகிறது. அசைந்து நகரும் நீர் எத்தனை எத்தனை கால்தடங்களை
அழித்திருக்கும்? எத்தனை எத்தனை கரைகளை தூய்மைப்படுத்தியிருக்கும்?
நதியிடம் ஓயாத வாயொன்று இருக்கிறது. அது ஓடுமிடமெங்கும் நீரின் மொழியால்
பேசிக்கொண்டேதான் நகர்கிறது. சூரியன், நிலவு, மேகங்களெனப் பல, நதியின்
கண்ணாடி உடலில் தங்கள் உருவம் பார்த்துக்கொள்கையில் அது சிலிர்த்துக்
கொள்வதை கரையோர நாணல்கள், மரங்கள் அறிந்திருக்கும். நதிநீரின்
சினேகிதர்களென நாணல்களையோ, அது உதைத்து வரும் கூழாங்கற்களையோ, எதையும்
சொல்லமுடியாது. நதிக்குத் தோழர்களே இல்லை. அதற்கு ஓரிடத்தில் தரித்து,
நின்று, பேசி நண்பர்களை உருவாக்கிக் கொள்ள நேரமிருக்காது. பிரசவிக்கப்பட்ட
கணத்திலிருந்து தனது இறப்புவரைக்கும் எதற்கென்றே தெரியாமல் ஓடிக்கொண்டே
இருக்கும் அதைப்போலத்தான் இன்றைய நவீன உலகில் பலரும் இருந்து வருகிறோம்.
எனதூரைச் சுற்றியும் சிறிதாகவும் பெரிதாகவும் பல வற்றா நதிகளுண்டு.
நதிகளின் மத்தியில் சிறு தீவுக் கூட்டங்களும் உண்டு. நதிகளின் பாடல்களை
மீன்கள் அறிந்திருக்கக் கூடும். அத்தீவுகளின் விருட்சங்களும், நாணல்களும்
அறிந்திருக்கக் கூடும். ஆனால் எவ்வளவு நாளாக முயன்றும் என்னால்
அறியமுடியவில்லை. நதிகள் எங்கிருந்து இவ்வளவு நீரை அள்ளிவருகின்றன என்ற
கேள்விக்கு விடைகாண சிறுவயது முதல் தேடியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
நதிக்கரையோர விருட்சங்களும், நாணல்களும், மூங்கில்களும் இன்றைய
அரசியல்வாதிகளைப் போலப் பெரும் தந்திரம் படைத்தவை. ஓடும் நதிக்குச்
சார்பாகப் போய் நதியே அறியாது அதன் நீரை உறிஞ்சிக் குடித்துச் செழித்து
வளரும் அவை நதியின் கதறல்களை, துயரங்களைக் கிஞ்சித்தேனும் கண்டுகொள்ளாமல்
விட்டுவிடுபவை. எப்பொழுதும் குளித்துச் சுத்தமாக இருக்கும் அதிர்ஷ்டம்
நதியின் ஆழத்திலிருக்கும் மணலுக்கும் கூழாங்கற்களுக்கும்
கிடைத்திருக்கிறது.
நதிகள் எதையும் தூய்மைப்படுத்தி அனுப்புவதைத் தம் சேவையாகக்
கொண்டிருப்பினும் அதன் மனதிற்குள் திருட்டுப்புத்தியும் ஒளிந்திருக்கிறது.
ஆண்கள் சவர்க்காரங்களையும் துணிகளையும் தூண்டில்களையும் அதன் நீருக்குள்
தொலைத்துவிடுவதுபோல எல்லாவற்றிலும் கவனமாக இருக்கும் பெண்கள் கூட தங்கள்
அணிகலன்களை நதிகளில் தொலைத்துவிடுகிறார்கள். நதியும் உடனே அவ் ஆபரணங்களை
எடுத்துத் தனக்குள் இருக்கும் பரந்த கற்களிடையே, பாசிகளிடையே ஒளித்து
வைத்துவிடுகின்றது.
இப்படியாக தனது தாலியைத் தொலைத்த ஒரு பெண்ணை அத் தாலியைத் தொலைக்கும்
முன்பு எனது சிறுவயதில் நான் சந்தித்திருக்கிறேன். அவர் எனது நண்பனின்
சொந்தக்காரப் பெண். நண்பனோடு அவரது வீட்டுக்குப் போயிருந்த வேளையில்
அப்பெண்ணும், அவரது கணவரும், குழந்தையுமாக ஒரு மகிழ்வான குடும்பத்தை நான்
கண்டேன். அவர்களது வீட்டின் பின்புறம் எங்களூரின் நதி ஓடிக் கொண்டிருந்தது.
மிக அழகானதும் ஆழமானதும் பரந்ததுமான அது, வேகத்தோடு நீரை இழுத்துச்
செல்லும். அந்தப் பெண் தங்கள் தோட்டத்திலிருந்து பழுத்த மஞ்சள் நிற
கொக்கோப் பழத்தினைப் பறித்து, உடைத்து எங்களுக்கு உண்ணத் தந்தார். அத்
தோட்டத்தின் மிளகுக்கொடிகள் சிவப்புக் காய்களால் மூடப்பட்டுக் கிடந்தன.
அதற்கு ஒரு வாரம் கழித்து அப் பெண், அதே நதியில் குளிக்கும்போது தன்
தாலியைத் தொலைத்தார். தொலைத்த கணத்திலிருந்து பல மணித்தியாலங்கள் தேடியும்
கிடைக்கப்பெறாததை எண்ணி எண்ணிச் சோர்ந்தே அவர் இறந்தும் போனார். அது
எனக்குத் தெரிந்து, அந் நதி செய்த இரண்டாம் கொலை. முதல் கொலையைப் பற்றிச்
சொல்கிறேன்.
எப்பொழுதும் நீர்ப்பறவைகள் வந்துபோகும் தன் பரப்புக்குள் சின்னச்
சின்னதாகப் பல தீவுக்கூட்டங்களையும் கொண்ட எங்களூரின் நதிக்கு பெரிய ஆறு
எனும் பொருள்வர 'மஹா ஓய' எனும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அத் தீவுக்
கூட்டங்களெல்லாம் நதியைக் குறுக்கறுத்துப் போடப்பட்டிருந்த பெரிய பாலத்தைத்
தாண்டியே இருக்கின்றன. அப் பாலம் பண்டைய பிறநாட்டு ஆட்சியாளர்களால் முழுக்க
முழுக்கச் செங்கற்களாலேயே கட்டப்பட்டது. இன்னும் அப்படியே இருக்கிறது. அப்
பாலம், அதன் உறுதிக்காகப் பல உயிர்களைப் பலியிட்டுக் கட்டப்பட்டதென ஊரில்
மூத்தவர்கள் சொல்வார்கள். பாலத்தை உடைத்துப் பார்த்தால் மனித மண்டையோடுகள்
இருக்கக் கூடும்.
அந்நதி தனக்குள் பல வித்தைகளையும் வைத்திருக்கிறது. ஊரில் எல்லோரும்
நீச்சல் கற்றுக்கொண்டது அங்கேதான். அதில் தூண்டிலிட்டு மீன் பிடிக்கவென
நண்பர்கள் பலரும் காலையிலேயே புறப்பட்டுச் செல்வோம். கோதுமை மாவை
நீரிட்டுப் பிசைந்து ஆளுக்கொரு பெரிய உருண்டை எடுத்துக் கொள்வோம். அதில்
கிள்ளியெடுத்து சிறு புழு போல உருட்டி தூண்டிலின் முனையில் வைத்து மாட்டி
நீருக்குள் இடுவோம். குஞ்சு மீன்கள் ஏமாந்துபோய் மாட்டிக் கொள்ளும். பல
மீன்கள் எங்களை ஏமாற்றி இரையை உண்டுசெல்லும். நீர்க் கொசுக்கள் கடித்து
உடல் வீங்க, நாள் முழுதும் காத்திருந்தும் ஐந்தாறு மீன்களாவது சிக்காத
நாட்களும் உண்டு. ஆனாலும் நதியோடு ஒன்றாக வெயிலில் காய்ந்து கிடப்பதிலும்
சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. கரையோரத்திலிருக்கும் மிகப்பெரிய மருத
மரங்களின் உச்சிக்கு ஏறி, கரணமடித்துத் தண்ணீருக்குள் குதிப்பதென்பது
எல்லாச் சிறுவர்களுக்கும் மிகப்பிடித்த விளையாட்டு.
எங்களூர் நதி, தனது முதல் கொலையைச் செய்தபொழுது நான் அதையறியாது
அருகிலிருந்திருக்கிறேன். அப்பொழுதும் நான் சிறுவன். வெள்ளிக்கிழமைகளில்
எங்கள் ஆறு களேபரப்படும். அன்று ஜும்மா தினம் ஆதலால் ஊரின்
கடைகளுக்கெல்லாம் விடுமுறை. பாடசாலை பாதி நாள் விடுமுறை. ஊரின் ஆண்கள்
பலரும், சிறுவர்களும் அன்றைய தினம் மதியத்துக்கு முந்தைய நேரத்தில்
ஆற்றுக்குக் குளிக்கவென வருவர். நானும் அப்படித்தான் நீந்திக் குளித்துக்
கொண்டிருந்தேன். பிறகு எல்லோரும் குளித்துக் கரையேறி தொழுகைக்குப் போனோம்.
ஆறு தன் பாட்டில் ஓடிக் கொண்டே இருந்தது.
ஊரில் கட்டிட வேலைக்கென வந்த வெளியூர் இளைஞரொருவரைக் காணவில்லையெனப்
பிற்பகலில் ஊர் முழுக்கச் செய்தி பரவியது. அவர் இறுதியாக ஆற்றுக்குத்தான்
குளிக்கப்போனாரென அவரது சகாக்கள் சொல்லினர். செய்தி உண்மைதான் என கரையில்
சுற்றி வைக்கப்பட்டிருந்த அவரது ஆடைகளும் சொல்லின. ஊரின் இளைஞர்கள் ஆற்றின்
எல்லாப் பகுதிகளிலும் நீந்தி நீந்தி அவரைத் தேடிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் அவரை ஒரு சடலமாக, நான் குளித்த இடத்தின் அருகிலிருந்து
எடுத்தார்கள். ஆற்றின் ஆழத்திலிருந்த பாறை இடுக்கொன்று அவரை, நீர்ப்பரப்பை
விட்டும் வெளியே வர விடாமல் மிகுந்த பிரியத்தோடு அவரது ஒரு காலை இழுத்துப்
பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது.
அப் பாறை இடுக்கை ஆயுதமாகக் கொண்டு தான் செய்த முதல் கொலையின் களங்கத்தை,
ஆறு தனது எந்த நீரைக் கொண்டு அழித்திருக்கும்? அந் நிகழ்வின் பின்னர்
ஆற்றின் அந்த இடத்தில் குளிக்க யாருக்கும் அனுமதியில்லை. நாங்கள் எல்லோரும்
அந்த இடத்தை மட்டும் புறக்கணித்து ஆற்றைப் பழி வாங்கினோம். அந்த இடம் பிறகு
பாழடைந்துபோயிற்று. எனக்குத் தெரிந்து பின்னர் ஒவ்வொரு வருடமும் இதைப்போலப்
பல இடங்களை ஆற்றின் கொலைகளுக்காக நாங்கள் புறக்கணிக்க வேண்டியவர்களானோம்.
ஆற்றைச் சுவாசித்து இறந்துபோன எல்லோருமே வெளியூர்களைச் சேர்ந்தவர்களாக
இருந்தனர். எங்களூருக்குப் படிக்க வந்த ஒரு சிறுவன் நான் இந்த நாட்டுக்கு
வரமுன்னர் இறுதியாகப் பலியானான். இங்கு வந்த பின்னர் மிகச் சமீபத்தில்
எங்களூருக்கு விளையாட வந்த மூன்று சிறுவர்களை அதே ஆறு கொன்றுவிட்டதாகச்
செய்திகளில் அறிந்தேன். வருடாவருடம் உயிர்களைப் பலியெடுக்கும் வித்தையை
அந்த ஆற்றுக்குக் கற்றுக்கொடுத்தது யார்?
ஒரு முறை கல்விச்சுற்றுலாவாக எனது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனும், சக
மாணவ நண்பர்களுடனும் போய் 'சிங்கராஜவனம்' எனும் இலங்கையின் பெரிய காடு
ஒன்றுக்குள் மூன்று நாட்கள் தங்கிவர நேர்ந்தது. போகும்போதும், வரும்போதும்
நதிகளைக் காணும்போதெல்லாம் எல்லோரும் உடல் சிலிர்த்துக் கூக்குரலிட்டனர்.
நதிகள் தன்பால் எல்லோரையும் காந்தம் போல ஈர்ப்பவை. இப்பொழுதும் ஊர் நாடிச்
செல்ல நதிகள்தான் என்னை நகருமொரு நீளக்காந்தம் போல ஈர்த்துக் கொண்டே
இருக்கின்றன. என் மூத்தோரை நனைத்து வாழும் நதிகளுக்குப் போய் நானும்
நனைவேன் எனும் நம்பிக்கை இருக்கிறது. செல்வேன்.
அக் காட்டின் எல்லையில் அப் பிரதேச மக்கள் வசிக்கின்றனர். தேனை,
காட்டுப்பழங்களை, உடைந்து விழுந்த விறகுத்துண்டுகளைக் கொண்டு கடைகளிலே
நடக்கும் பண்டமாற்று முறையிலான பரிமாற்றங்களை அந்த எளிய மக்களிடம் கண்டேன்.
புதிதாகத் தம் காட்டைப் பார்க்கவருபவர்களுக்கு அவர்களது உபசரிப்பு மிகவும்
மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. தமது குழந்தையின் திறமைகளை பெருமையோடு
சொல்லும் ஒரு தாயைப்போல அவர்கள் புன்சிரிப்போடு தமது காட்டினைப் பற்றி
மூலைக்கு மூலை பெருமையாகச் சொல்லினர். அக் காடு கொண்டிருக்கும்
இரகசியப்பாதைகளை எல்லாம் அவர்கள் அறிந்திருக்கின்றனர்.
அந்தக் காட்டுக்குள் ஒரு நதி இருக்கிறது. காட்டின் மத்தியில் அமைதியாகவும்
மிகவும் தெளிவானதாகவும் தூய்மையானதாகவும் ஓடிக் கொண்டிருக்கும் அக்
காட்டாற்றில் வனத்தின் களிப்போடு மீன்கள் துள்ளுகின்றன. அகலமான அதன்
கரையோரங்கள் ஆழமற்றவையாகவும் தரைப்பரப்புக்கு கூழாங்கற்களைக்
கொண்டவையாகவும் இருக்கின்றன. எம்முடன் வந்திருந்தவர்களில் பலர் நகர்ப்புற
மாணவர்கள். நீச்சலையும் முங்கிக் குளித்தலையும் அறியாதவர்கள். நாம்
நீந்திக் குளிக்கையில் அவர்கள் கரையோரங்களிலிருந்து ஒரு வித ஏக்கத்தோடு
பார்த்துத் தம் கால் நனைத்துக் கொண்டனர். அந் நீருக்குள் முதலைகள்
ஒளிந்திருப்பதாகச் சொல்லி எம்மைச் சலனமுறச் செய்து சிரித்தனர்.
தோலில் ஒட்டி இரத்தம் உறிஞ்சும் சிறு அட்டைகளுக்கு பயந்து நாங்கள்
கால்களில் உப்பும், சவர்க்காரமும் தடவிக்கொண்டு காலை நேரங்கள் முழுவதும்
அந் நதியைக் குறிவைத்து காட்டுக்குள் அலைந்தோம். அசைவம் உண்ணும் தாவரப்
பூக்களை நேரில் கண்டோம். அந் நதி எங்கள் வழிகாட்டியாக இருந்தது. மாலை
நேரங்களில் நதிக்கரையோரம் அமர்ந்து விரிவுரைகளுக்குச் செவிமடுத்தோம்.
நதியும் அவ் விரிவுரைகளுக்குச் செவிமடுத்துத் தன் ஓடும் பாதையெங்கிலும்
நாணல்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும்.
எல்லாம் பார்த்துத் திரும்பிவரும் நாளில் அப் பிரதேசத்து மக்கள் கூட
வந்திருந்த ஆட்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளும்படி எமக்குக் கட்டளையிட்டனர்.
எல்லோரும் எண்ணிக்கையில் சரியாகவே இருந்தோம். ஏனென்று கேட்டதற்கு அந்த ஆறு,
வெளியூராட்களைப் பலியெடுக்கும் என்றார்கள். 'நாம் இங்கு வந்த முதல் நாளே
அதனைச் சொல்லியிருக்கலாமே?' எனச் சொன்னதற்கு, 'சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் எந்தவித அச்சங்களுமற்று, உல்லாசமாகத் திரிந்த இந்த
அற்புதமான மூன்று நாட்களும் உங்களுக்குக் கிடைத்திருக்காது' என்றனர்.
உண்மைதான். மனதுக்குள் அச்சம் இருந்தால் போகும் பாதையெல்லாம் அது
இருளைப்போல எல்லாவற்றுக்கும் தடை செய்துகொண்டே வரும். முன்னேற இடமளிக்காது.
அத்தோடு அவர்களது அவ் வனத்தை, நதியை மிகக் கொடியதானதும், அச்சுருத்துவதுமான
ஒரு வாயகன்ற பிசாசினைப் போல யாரும் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை.
உண்மையில் ஆறுகள் வன்மம் தேக்கிவைத்துச் செய்யும் இம் மாதிரியான
கொலைகளுக்குக் காரணமென்ன?
நாம் நதிகளை, நதிகளாக இருக்கவிடுவதில்லை. இலங்கையில், இரத்தினக் கற்களைத்
தேடுவதாகச் சொல்லி, ஆறுகளில் தோண்டி அதன் தரைப்பரப்பை ஆழக்குழிகளாக
ஆக்கிவிட்டிருக்கின்றனர். இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் ஆறுகளின் எல்லா
இடங்களிலிருந்தும் மணல் அகழ்ந்து எடுத்து விடுகின்றனர். அவையும் ஆற்றினை
ஆழமாக்கி விடுகின்றன. நாம் கழிவுகளை, அழுக்குகளை ஆறுகளுக்குத்
திருப்பிவிடுகின்றோம். ஆறுகள் பெரும் கொடையாளிகளைப் போல நீரையும், மணலையும்
கணக்கு வழக்கின்றி வாரித்தருகின்றன. அவை தம் தூய்மை கெடுவதைக்
கண்டுகொள்வதில்லை. எனினும் நாம் கண்டுகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நதிகளை ஒரு போதும் குற்றம் சொல்லமுடியாது. நமது எல்லாத் தவறுகளையும் அதன்
மேல் சுமத்தமுடியாது. நதிகளிலிருந்து நீரெடுத்து, மணலெடுத்து நம்மைச்
செழிப்பாக்கிக் கொள்ளும் நாம் அதற்கு அநீதங்களைச் செய்து துரோகிக்கிறோம்.
அதுவும் அவ்வப்போது உயிர்களைப் பலியெடுத்து 'தான் இருக்கிறேன்' எனத் தனது
இருப்பையும் கோபத்தையும் நிரூபித்துவருகின்றது. அவ்வளவே!
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை
கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு
அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்
எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்
|
|