|
சென்ற வாரம் மா.சண்முகசிவா அவர்களோடு அவருடைய கிளினிக்கில் உரையாடும்
சந்திப்பு வாய்த்தது. அவருடைய நகைச்சுவை ததும்பும் பேச்சு, எப்போதும் நான்
இரசிப்பது. அவருடைய பேச்சு மிகவும் உற்சாகத்தையும் கற்பனையையும் தூண்டக்
கூடியது. அவர் பேச்சின் உற்சாகம் அவரின் எழுத்திலும் முழுமையாக படியத்
தொடங்கினால், மலேசியாவில் எழுத்தில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.
(எழுதத் தொடங்கிவிட்டால் மட்டும் ஏனோ மிகவும் சீரியஸாகிவிடுகிறார்)
உரையாடல் நிகழ்ந்த சில நாட்களுக்கு முன்புதான் ஓர் புத்தக வெளியீட்டில்
புத்தகத்தை பற்றி அறிமுக உரை ஆற்றும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
பேச்சை ‘இடைத்தேர்தல் என்ற என்ன தெரியுமா?" என்ற கேள்வியோடு தொடங்கி சற்று
நிதானித்திருக்கிறார். அவையில் எப்போதும் போல் நிசப்தம். சில ஜனரஞ்சக
பத்திரிக்கைப் போல் நடிகைகளின் ‘இடை’யைப் பற்றி டாக்டர் பேசுகிறாரோ என்று
சிலர் நினைத்திருக்கலாம். பலர் இன்னும் வேறு ஏதாவது விபரிதமாக யோசிப்பதற்கு
முன் டாக்டரே பதிலளித்திருக்கிறார். ‘இவர் வேட்பாளரா அவர் வேட்பாளரா என
விவாதித்துக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் ‘இடையில்’ வந்தாரே, அதுதான்
இடைதேர்தல்’. வழக்கம்போல அவையினர் நிச்சயம் குலுங்கி குலுங்கி
சிரித்திருப்பார்கள்.
சென்ற மாதம் நடந்து முடிந்த உலு சிலாங்கூர் இடைத் தேர்தலின் மஇகா வேட்பாளர்
நடப்பு மஇகா துணைத் தலைவரும் சென்ற தேர்தலில் இந்த நாடாளுமன்றத்தில் சொற்ப
வாக்கு வித்தியாசத்தில் தோற்றவருமான ஜி. பழனிவேலா இல்லை அவருடைய செயலாளராக
அங்கு இருந்த முகிலனா என்ற மலேசிய பத்திரிக்கைகள் விவாதம் செய்து
கொண்டிருந்தன. மஇகாவின் தலைவர் ச. சாமிவேலு இடைத் தேர்தல்
அறிவிக்கப்பட்டவுடனேயே ஜி.பழனிவேலை வேட்பாளராக தேசிய முன்னணியின் தலைமையை
கலந்தாலோசிக்காமல் எப்போதும் போல் தன்மூப்பாக அறிவித்து விட்டார். அவருக்கு
இன்னும் பிரதமர் அவருடைய பழைய நண்பர் மகாதிர் என்று நினைவு போலும்.
கடந்த பொதுத் தேர்தலில் திரு. சாமிவேலு தனது தொகுதியில் தோல்வியைத் தழுவிய
போதே அவர் மீதிருந்த அத்தனை மாயைகளும் நொறுங்கத் தொடங்கிவிட்டன. கிட்டதட்ட
ஒரு கொடுங்கோலனின் வீழ்ச்சியைக் கொண்டாடும் மக்களின் மனநிலையை அப்போது காண
முடிந்தது. இந்தியர்களே அவரைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலையில்,
இந்தியர்களை எப்போதுமே பொருட்டாக மதிக்காத அம்னோவின் நிலையைக் கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.
சாமிவேலு பரிந்துரை செய்த வேட்பாளரை ஏற்காது அம்னோ தரப்பு முகிலனை
முன்மொழிந்ததும், இரண்டு தரப்புகளும் விடாது முரண்டு பிடித்ததும் நமக்குத்
தெரியும். பிறகு எப்போதும்போல் தேசிய முன்னணி பங்காளிகள் சமரசம் செய்து
கமலநாதனை வேட்பாளராக கொண்டு வந்தனர்.
இத்தனை அமளிகள் நாட்டில் நடந்துக் கொண்டிருந்தபோது பிரதமர் நஜிப் பல
மில்லியன் செலவு செய்து அமெரிக்காவில் ஒபாமாவோடு நட்புறவாடிக்
கொண்டிருந்தார். ஒரு நாட்டின் தலைவரை மற்ற நாட்டு தலைவர் சந்திக்க எதற்கு
மில்லியன்கள் செலவழிக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்
கூடாது. எல்லாவற்றிற்கும் நஜிப்பிடம் தற்போது உள்ள ஒரே பதில் ‘ஒரே
மலேசியா’. மலேசியாவின் அத்தனை சமுகப் பிணிகளுக்கும் உள்ள ஒரே சர்வ நிவாரணி
‘ஒரே மலேசியா’ என்று நஜிப் கூட நம்ப மாட்டார். நிற்க.
‘ஒரே மலேசியா தந்தை’ ஊரில் இல்லாத தைரியத்தில் அவரது உதவியாளரான துணைப்
பிரதமர் முகைதின் யாசின் ‘நான் முதலில் மலாய்காரன், பிறகே மலேசியன்’ என்று
சொல்லியிருக்கிறார். இந்த கூற்று மற்ற இனத்தவர்களை பெரிதும் புண்படுத்தியதை
அறிந்தும் மறுநாள் அதே கூற்றை மறு
உறுதிபடுத்தினார். அம்னோவிற்கு பெரிதும்
சரிந்துவிட்ட மலாய்காரர்களின் ஓட்டுகளை மீண்டும் கவர்ந்திழுக்கவே இத்தகைய
மலிவான வார்த்தைகள் என்பதை அம்னோவின் நடவடிக்கைகளை அறிந்தவர் உணர்வர். இதே
கூற்றை தேசிய முன்னணியின் மற்ற இனத் தலைவர்கள் சொல்லியிருந்தால் அவர்களின்
நாட்டுப்பற்று கேள்வி குறியாக்கப்பட்டிருக்கும்.
கமலநாதனை எதிர்த்து எதிர்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணி ஜாயிட்
இப்ராஹிமை நிறுத்தியது. ஜாயிட் ஒரு கருத்துவேறுபாடால் ஆளும் தேசிய
முன்னணியிலிருந்து வெளியேறி அண்மையில் எதிர்கட்சியில் இணைந்தவர். அண்மையில்
இணைந்தவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக அவரது கட்சியில்
முணுமுணுப்பு இல்லாமல் இல்லை. அன்வாரின் குரலுக்கு மறுகுரல் கெஅடிலான்
கட்சியில் இன்னும் இல்லை.
கடந்த பொது தேர்தலின்போது எதிர்கட்சியின் கூட்டணியான மக்கள் கூட்டணி ஆளும்
கட்சியான தேசிய முன்னணியின் ஐம்பதாண்டு கால 2/3-க்கும் அதிகமான
பெரும்பான்மையை முறியடித்தது. உடனே அன்வார் மலேசிய நாட்டின் விடிவெள்ளி
அளவுக்கு கொண்டாடப் படத் தொடங்கினார்.
நான் அப்படி நினைக்கவில்லை. அதை ஒரு தற்காலிக மாற்றமாய்தான் எண்ணுகிறேன்.
உழலில் திளைத்தும் அதிகார வெறியில் ஆட்டமாய் ஆடியும் பெரும் முதலாளிகளின்
கைப்பாவைகளாய் மாறி மக்களிடமிருந்து அந்நியமாகிவிட்ட தேசிய முன்னணிக்கு
விழிப்பு வெடியாய் மக்கள் எழுப்பிய குரல்தான் எதிர்கட்சிகள் கணிசமான
இடங்களைப் பெற உதவியது. அதோடு 2007 ஹிண்ட்ராஃப் பேரணியின் மகசூலை
எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதும் வரலாறு.
அன்வாரின் பழைய சரித்திரம் தெரிந்தவர்கள் நான் சொல்வதை ஒப்புக்
கொள்வார்கள். அன்வார் அம்னோவில் துணைத் தலைவராக இருந்தபோது நடந்த பண
அரசியல் பிரச்சனையில் சம்பந்தப்படுத்தப்பட்ட தலைவர்களின் பெயர்களில் அவர்
பெயரும் ஒன்று. அவர் என்ன பாமர மக்கள் சுரண்படுகிறார்களே என கோபப்பட்டா
அம்னோவை விட்டு வெளியே வந்தார்? அவருக்கும் மகாதீருக்கும் நடந்த அதிகார
போட்டியில் தோற்று மகாதீரால் கட்சியை விட்டு தூக்கியெறியப்பட்டவர்தானே.
ஆனால் வரலாற்றிலிருந்து தேசிய முன்னணி எந்த பாடத்தையும் கற்றுக்
கொள்ளவில்லை என்பதை இந்த இடைதேர்தலில் அதன் செயல்பாடுகள் மீண்டும்
நிருபித்துள்ளன. எளிய மக்கள் பயம்பெறும் நீண்டகால திட்டங்களை
முன்வைக்காமல், மீண்டும் பணத்தை நம்பியே இடைதேர்தலை சந்தித்தது. ஃபெல்டா
குடியேற்றகாரர்கள் (பெரும்பாலும் மலாய்காரர்கள்) திருப்திப்படுத்த இரப்பர்
மறுநடவு திட்டங்களுக்கு பல மில்லியன்கள் ஒதுக்கியது. சாலை மற்றும் மின்
விளக்குகள் மறுசீரமைப்பு என இடைதேர்தல் லஞ்சங்கள் உலு சிலாங்கூரிலும்
நடந்தேறவே செய்தன.
உச்சகட்டமாய் எல்லோராலும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக பேசப்பட்டது
அங்குள்ள மின்சார வசதியில்லா தமிழ்ப்பள்ளிக்கு மின்சார வழங்க ஆவணச்
செய்வதாக சொல்லப்பட்டதுதான். 30 வருடங்களாக தான் இல்லாவிட்டால் இந்திய
சமுகம் நடுரோட்டில்தான் நிற்கும் என மார் தட்டும் சாமிவேலுவிற்கு இது
பெருந்தலைகுனிவுதான். சுதந்திரமடைந்து 52 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு
தமிழ்ப்பள்ளி மின்சார வசதி இல்லாமல் இருப்பதை ‘தமிழ்ப் பள்ளிகளின் காவலர்’
என பறைச்சாற்றிக் கொள்ளும் சாமிவேலு உணர்வதற்கு ஒரு இடைத் தேர்தல்
தேவைப்படுகிறது. இந்த லட்சணத்தில் அவர் பதவிகாலத்தில் எரிச் சக்தி
அமைச்சராக வேறு இருந்து தொலைத்தவர்.
ooo
மலேசியாவில் ஆளும் தேசிய முன்னணிக்கு மாற்று இப்போதிருக்கும்
எதிர்கட்சிகளின் கூட்டணிகளான மக்கள் கூட்டணி இல்லை என்று நான் போகிற
போக்கில் சொல்லவில்லை. தேசிய முன்னணி முதலாளிகளின் கட்சி என்று சொன்னதை
உங்களால் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். இந்நாட்டின் மிகப் பெரிய
நிறுவனங்கள் எல்லாம் தேசிய முன்னணி தலைவர்களின் உறவுகள்தான்
சொந்தக்காரர்கள். தேசிய முன்னணியின் கொள்கைகள் பெரும்பாலும்
முதலாளிகளுக்குச் சாதகமாகவே இருக்கும். தேசிய முன்னணியின் இந்த அதிகார
அமைப்பு மாறாத வரை, மலேசியாவில் சமதர்ம சமுகம் உருவாக அது தடையாகத்தான்
இருக்கும்.
தேசிய முன்னணி அளவு விரிவானதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டணி கட்சிகளும்
முதலாளிகளுக்குச் சாதகமானவைதான். எதிர்கட்சிகள் ஆளும் பினாங்கு மாநிலத்தில்
நிகழ்ந்த கம்போங் புவா பாலா பிரச்சனை ஒரு சான்றாகும். மக்கள் பதற்றமடையாமல்
பிரச்சனையைத் தீர்ப்பதை விடுத்து அவசர அவசரமாக மக்களை அங்கிருந்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது அதன் ‘மக்கள் நேசம்’ பல்லிளித்துச்
சிரித்தது. பாஸ் கட்சி தலைவர்கள் ஒப்பிட்டளவில் எளிய மக்களின் குரலை
பிரதிப்பலிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எளிய மக்கள் என்றால்
அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டுமென அடம்பிடிப்பதால் அங்கேயும்
பிரச்சனைதான்.
நாட்டின் வளப்பத்தை, அதிகாரத்தை, சமதர்மத்தோடு பங்கீடு செய்யும் சமதர்ம
மக்களாட்சி சிந்தனைக் கொண்ட கட்சியின் இடம் இன்னும் காலியாகவே உள்ளது.
மலேசிய சோசலிஸ்ட் கட்சி இவ்விடத்தை நிரப்பும் சிந்தனை வளத்தைக்
கொண்டிருந்தாலும், அதன் இருப்பை பெரும்பாலான மலேசியர்கள் உணராமல்
இருக்கிறார்கள். அதன் கொள்கைகளை முறையாக மக்களிடம் கொண்டு செல்லும் பணியை
அவர்கள் விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் மனதளவில் (மூளையில் அல்ல) சமதர்ம
சமுதாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை மலேசியாவில் உருவாகி
வேர்விட்டு நெடுநாளாகிறது.
ooo
இந்த இடைத் தேர்தலில் முடிவு நடப்பு ஆட்சிக்குப் பாதகமாக அமையாவிட்டாலும்
ஆளும் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிடும் வேட்கையில் முழுமூச்சாக
இறங்கியது. இதற்கு முந்தைய இடைதேர்த்ல்களில் ஆளும்கட்சி அடைந்த தோல்வி அதன்
முயற்சியை இந்த முறை அதிகரிக்கச் செய்துள்ளது. அதிகார பலம், பணபலம்,
தொடர்பு சாதனங்கள் அத்தனையையும் தீவிரமாக முடுக்கியும் வெறும் 1700 வாக்கு
வித்தியசத்தில்தான் ஆளும் கட்சி வென்றுள்ளது. பத்து வருடத்திற்கு முன்
தேசிய முன்னணி குறைந்தது 10000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்
கட்சியாக இருந்தது. இருந்தும் இவ்வெற்றியை குறித்து கருத்துரைத்த பிரதமர்
மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சொன்னார். இப்படியெல்லாம் பொய்
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி அவரே தனியேயிருக்கும்போது நினைத்துச்
சிரித்திருப்பார்.
எல்லாவற்றையும் விட திரு. கமலநாதன் நிலைமைதான் பார்க்க பரிதாபமாக இருந்தது.
முதலில் அவருடைய கல்வி தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் நன்றாக மலாய்
பேசுவதெல்லாம் சிறப்புத் தகுதியாக விதந்தோதப்பட்டது. இருந்தாலும் நமது
நிருபர்களின் குறும்புக்கு அளவேயில்லை. திரு. சாமிவேலுவிடமே பதில்கள்
இல்லாத கேள்விகளைக் கமலநாதனிடம் கேட்டு குடைந்து விட்டனர். ஆரம்பத்தில்
கொஞ்சம் தடுமாறியவர் பிறகு நன்றாக சுதாரித்துக் கொண்டார். ‘கமல்’ என்று
பெயருடையவர்கள் எல்லாம் குழப்பமான பதில்கள் தருவதில் வல்லவர்களோ என்னவோ.
ஒரு எடுத்துக்காட்டைக் கீழேத் தருகிறேன்.
நிருபர்: அரசாங்கம் பள்ளிகளுக்கு வழங்கும் ஒதுகீட்டின்படி ஒரு மலாய் பள்ளி
மாணவருக்கு ஒரு மாதத்திற்கு ரி.ம 33.30-ம், சீனப்பள்ளி மாணவருக்கு ரி.ம
4.50-ம், தமிழ்ப்பள்ளி மாணவருக்கு ரி.ம 10.55-ம் வழங்கப்படுகிறதே, ஏன் இந்த
பாராபட்சம்?
கமலநாதன்: புதிதாக தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டபோது அதற்கெல்லாம் தேர்தல் முடிந்ததும்
பதில் சொல்வதாக அறுதியாக பதிலளித்தார். நீங்களே சொல்லுங்கள், எந்த
அரசியல்வாதியாவது தேர்தலுக்குப் பின் எதைப் பற்றியாவது பதில்
சொல்லியிருக்கிறாரா?
முத்தாய்பாக கமலநாதன் ஒரு கேள்விக்கு வழங்கிய பதில்தான் என்னை இந்தப்
பத்தியையே எழுத தூண்டியது. தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பைப் பற்றி
கேட்கப்பட்டபோது தான் அதற்கான வேலையைச் செய்வதாகவும் கடவுள் வெற்றியைத்
தீர்மானிப்பார் எனவும் பதிலளித்தார். கமலநாதன் சொல்லியபடியே கடவுள்
வெற்றியை அவருக்குதான் தந்திருக்கிறார். ஆனால் ஜனநாயகத்தை பணநாயகத்தால்
வெல்லும் ஒவ்வொரு தேர்தலிலும் கடவுள் தோற்றுவிடுகிறார். ஏனெனில் மக்களின்
தோல்வி மகேசனின் தோல்வியல்லவா.
|
|