|
வாழ்வில் எத்தனையோ சம்பவங்களைக் கடந்து வருகிறோம். அதில் சில சம்பவங்களை
மட்டும் ஏதோ ஒரு தருணத்தில் நம்மை அறியாமலேயே மீண்டும் கடந்து செல்லும்
வாய்ப்பு அமைந்து விடுகிறது. சிறுவயது முதல் நாம் பார்த்த, கேட்ட,
அனுபவித்த அனைத்து விஷயங்களும் மீண்டும் மீண்டும் உலகம் சுழன்று வருவது
போல் உயிர்ப்பித்துக் கொள்கின்றன. திடீரென நமது கடந்த கால நினைவுகள்,
சம்பவங்கள், அதனையொட்டி கிடைத்த அனுபவங்கள், படிபினைகள் போன்றவற்றை
மற்றொரு தருணத்தில் தரிசிக்கும் பொழுது நமக்குள் ஏற்படும் உள்ளுணர்வுகள்,
இரகசியமாக்கப்படுவதும் பகிர்தலுக்கு உட்படுத்துவதும் வழக்கமாகிப் போகிறது.
அண்மையில் என் கணவருக்கும், நண்பர் சு. யுவராஜனுக்கும்
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் முறையே ‘சிறந்த இளம் கவிஞர் விருது’
மற்றும் 'சிறந்த இளம் எழுத்தாளர் விருது’ வழங்கப்பட்டன. மகிழ்ச்சியில்
நானும் தோழியும் திளைத்திருந்தோம். ஒருவருக்கு விருது
கிடைப்பதென்பது சாதாரண நிகழ்வு அல்ல. அது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
விருதுக்குத் தங்கள் பெயர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது
தெரிந்ததுமே கணவரும் யுவராஜனும் பலவாரான திட்டங்களைத் தீட்டத்
தொடங்கிவிட்டிருந்தனர். யுவராஜன் தோழியிடம் பரிசு பெற்ற படம்
மற்றும் தகவல்களைச் சேகரித்து பத்திரப்படுத்த வேண்டும் என்றார்.
விருது யாருக்கு என்று முடிவாகாத நிலையில் அவர்களின் 'தன்னம்பிக்கை'
எனக்கும் தோழிக்கும் சிரிப்பை வரவழைத்தபடி இருந்தது. நிகழ்ச்சி
முடிந்து விருதோடு வீடு திரும்பினோம். "ஒருவேளை தனியாக விருது
வாங்கியிருந்தால் இத்தனை மகிழ்ச்சி இருக்காது என நினைக்கிறேன்" எனக்
கணவர் வழி நெடுகிழும் கூறிக்கொண்டே வந்தார்.
மறுநாள் அவ்விருது நிகழ்வையொட்டிய செய்தி தமிழ்நேசன் நாளிதழில் வெளியானது.
செய்தியைப் வாசித்தப்பின், நானும் கணவரும் அந்த நிகழ்வு தொடர்பாக சிறிது
நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கணவர் இதற்கு முன் தனக்குக் கிடைத்த
பரிசுகள் மற்றும் விருதுகள் தொடர்பாக நினைவு கூர்ந்தார். அவைகளை
இதுநாள் வரை பாதுகாக்காதது குறித்து வருத்தம் கொண்டார். யுவராஜன்
கூறியது போல் இதுபோன்ற செய்திகளை சேகரித்து அவற்றைப் பாதுகாப்பாக வைக்க
வேண்டும் என்றார். நான் 'கணினி உலகத்தில் இது போன்ற செயல்கள் மிகவும்
சாதாரணம்' என்றேன். எல்லா வகையான தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இருக்கும்
பட்சத்தில் உடல் உழைப்பை மட்டும் கொஞ்சம் தானம் செய்தால் போதும் என்று
தோன்றியது.
நாளிழ்களில் வெளியாகும் செய்திகளை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அதற்கான
தனியான கோப்பைத் தயாரித்து சேர்த்து வைக்குமாறு ஆலோசனை கூறினேன். வைரஸ்
தொல்லை இருக்காது; நினைக்கும் தருணத்தில் அதை உடனே திறந்து பார்க்கலாம்;
எத்தனை வருடம் ஆனாலும் அழியாது; எல்லோரிடமும் சுலபமாக பகிர்ந்து கொள்ள
உதவியாக இருக்கும் என்றேன். பதிலுக்குத் தலையை மட்டும் அசைத்துக் கொண்டார்.
அன்றைய மாலை வேளையில், தமிழ்நேசனில் வெளிவந்த அந்தச் செய்தியை வெட்டி
வைத்தேன். அவர் கேட்கும் போது விரைவில் எடுத்துக் கொடுக்க இலகுவாக
இருப்பதற்காக வெட்டிய செய்தியைத் எனது தகவல் பலகையில் ஒட்டினேன். திடீரென
அம்மாவின் ஞாபகம் முளைத்துக் கொண்டது. பெரும்பாலும், அம்மாவைப் பற்றிய
பிரக்ஞை என்னிடம் நெருங்காமல் இருப்பதில் மிகவும் தீவிரமாக இருப்பேன்.
அவரின் நினைவுகள் என்னை பலவீனமாக்கிவிடும். மிஞ்சுவது கண்ணீர் மட்டுமே.
எனது சிறுவயது ஞாபகத்தில் அம்மா, அப்பாவைப் பற்றி நாளிதழ்களில் வெளியாகும்
செய்திகளை இப்படிதான் வெட்டி சேகரித்து வைப்பார். (அப்பா ஒரு
பத்திரிகையாளர்) அச்சமயத்தில் அப்பாவைப் பற்றிய செய்திகள் அடிக்கடி
நாளிதழ்களில் வெளியாகும். ஒவ்வொரு நாளும் காலையில் நாளிதழ்களைத்
திறந்தவுடன் அப்பா தொடர்பான செய்திகளைதான் அவர் கண்கள் முதலில் தேடும்.
மற்றவையெல்லாம் பிறகுதான். சில சமயம் அப்பாவின் நடவடிக்கைளை அம்மா நாளிதழ்
செய்திகளின் மூலம்தான் அறிந்து கொள்ளும் நிலை ஏற்படும்.
அம்மா வெள்ளை தாட்கள் கொண்டு, ஒரு தடிப்பான நீண்ட புத்தகத்தைத் தயார்
செய்துவைத்திருப்பார். அதில் அப்பா தொடர்பான செய்திகளை வெட்டி ஒட்டுவார்.
ஒவ்வொரு செய்தியின் கீழ் திகதியும் கிழமையும் செய்தி வெளிவந்த நாளிதழின்
பெயரையும் பதிவு செய்வார். இதையெல்லாம் அப்பா சொல்லி அம்மா செய்யவில்லை.
அப்பாவின் எழுத்தின் மேல் அம்மாவிற்கு எப்பொழுதும் ஈர்ப்பும் அதன் மேல்
அன்பும் ஒட்டியேயிருந்தது. அவைதான் அம்மாவின் இச்செயலுக்குத் தூண்டுதலாக
அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
அம்மா ஒரு மூட்டுவலி நோயாளி. ஏறக்குறைய நானறிந்து 7 வருடமாக அந்நோய் அவரை
ஆட்கொண்டிருந்தது. இரவு நேரங்களில், குளிர் காலங்களில் அல்லது தண்ணீர்
பட்டாலோ அவருடைய கை, கால் மூட்டுகள் வீங்கிக் கொள்ளும். விரல்களை மடக்க
முடியாது; நடக்கக்கூட முடியாது. அந்நிலை ஏற்படும் போதெல்லாம் தொடர்ந்து
இரண்டு, மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட படுத்த படுக்கையாகி விடுவார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின்னரே உடல் தேறி வருவார். பிறகு சில
நாட்களில் அந்நோய் மீண்டும் அவரை தொல்லைப்படுத்தும்.
மூட்டு வலி வரும்போதெல்லாம் அவரால் கத்திரிக்கோல் பிடித்து செய்திகளை
வெட்டி ஒட்ட முடியாது. இருந்தபோதும் அவ்வேலையிலிருந்து அவர் பின்
வாங்கியதில்லை. எங்கள் நால்வரில் (சகோதர சகோதரிகள்) ஒருவரை அழைத்து
செய்திகளை வெட்டி ஒட்டச் சொல்வார். பிறகு திகதி, கிழமை, நாளிதழின் பெயரைச்
எழுதச்சொல்வார். நாங்கள் வேலையை முடித்து புத்தகத்தை மூடி வைக்கும் வரை
பக்கத்திலேயே கங்காணியைப் போல் கவனித்துக் கொண்டிருப்பார். சரியாக
நாற்பக்கமும் பசைப் போட்டு ஒட்டவில்லையென்றால் திட்டு கிடைக்கும்.
செய்தியைப் பென்சிலால் கோடுப் போட்டு கோட்டோடுதான் வெட்ட வேண்டும்.
கோட்டிற்கு வெளியே கத்தரிக்கோல் நறுக்கல் இருந்தால் மீண்டும் திட்டு
கிடைக்கும். இப்படியே அப்பா தொடர்பான செய்திகளை அம்மா சேகரித்துக் கொண்டே
வந்தார்.
அம்மா இறந்த பிறகு, அவர் சேகரித்த செய்தி புத்தகங்களை மட்டுமே எங்களால்
பாதுகாக்க முடிந்தது. அவை முக்கியமான ஆவணமாக அப்பா வீட்டில் உள்ளன. அப்பா
அவர் அறையிலே பத்திரமாக வைத்திருக்கிறார். வெள்ளை தாட்கள் மஞ்சளாகி விட்டன.
சில பக்கங்கள் தண்ணீர் துளிகள் பட்டு ஓட்டையாகி விட்டது.
அதன் பிறகு அப்பாவின் செய்திகளைச் சேகரிக்கும் பணியைத் தொடர எங்கள்
நால்வருக்கும் விருப்பம் இல்லை. அதில் அம்மாவின் ஞாபகங்கள்
ஒட்டியிருப்பதால் நாங்கள் நால்வரும் அதை தவிர்த்து விட்டோம். இன்றளவும்
அப்பாவின் செய்திகள் நாளிதழ்களில் வரும்போதெல்லாம் அப்பா அதை எடுத்து
பத்திரப் படுத்தி வைக்க எங்களிடம் பணிப்பார். பணிகளின் காரணமாக நாங்கள் சில
சமயம் அப்பா விடுத்த பணியைச் செய்வதை மறந்து விடுவோம். சில சமயம் திடீரென
அந்தச் செய்தி தாட்களை கேட்டும் போதும் நாங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர்
முகம் பார்த்துக் கொள்வோம். வைத்த இடம் ஞாபகமில்லாமல் வீட்டையே அலசி
விடுவோம். அப்பொழுது அப்பா “உங்க அம்மா இருந்திருந்தா இப்படி தேட வேண்டிய
அவசியமிருக்காது” என்று கூறி நகர்ந்து விடுவார்.
இந்தக் காரணத்திற்காகவோ என்னவோ நான் செய்திகளைப் புத்தகத்தில்
ஒட்டிச் சேகரிக்க துணியாமல் கணினியில் சேகரிக்க முனைந்துள்ளேன்.
காகிதங்களின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் பிரியமும் அது
சேகரித்திருக்கும் பலவீனமும் கணினியிடமிருந்து எப்போதும்
விலகியிருப்பதாகவே தோன்றும்.
|
|