இதழ் 17 - மே 2010   முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
மா. சண்முகசிவா
 
 
 
  சிறப்புப்பகுதி:

சர்ச்சை: இலக்கிய மோசடி (தன்னிலை விளக்கம் & எதிர்வினை)

பத்தி:

உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் கண்ணோட்டம்: எப்போதும்போல் மீண்டும் கடவுள் தோற்றுவிட்டார்

சு. யுவராஜன்

அவ‌தாரும் ஆத்தாவும்!
ம‌. ந‌வீன்

செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன்
கமலாதேவி அரவிந்தன்

இயற்கை (2) - நதி
எம். ரிஷான் ஷெரீப்

அந்த போலிஸ்காரர்களும் இந்த போலிஸ்காரரும்
தோழி

எஞ்சி இருக்கும் காகித‌மும்... கொஞ்ச‌ம் பிரிய‌மும்
வீ. அ. ம‌ணிமொழி

கட்டுரை:

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
மா. சண்முகசிவா

ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் டிவி சேனல்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் - கதை 2
கோ. புண்ணியவான்


மோதிக்கொள்ளும் காய்கள்
ராம்ப்ரசாத்

தயக்கம்
மதன். எஸ்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...10
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...5
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...7

ம. நவீன்

செல்வராஜ் ஜெகதீசன்

லதா

இரா. சரவண தீர்த்தா

ரேணுகா


பதிவு:


சிலாங்கூர் மாநில இளம் படைப்பாளர் விருது 2010
     
     
 

முள் கிரீடம் அணிந்திருக்கும் நீண்ட நெடுஞ்சுவர்கள் எப்போதும் ஏதோ ஒரு விதமான உணர்வுகளையே கிளர்த்தெழச் செய்யும். சிறைச்சாலையின் மதில்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது ஒரு பயம் கலந்த கற்பனையைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும். உள்ளே இருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு தீராத தவிப்பு, ஆழமான இரணம், தனக்கான நியாயங்களுடன் கூடிய ஒரு கதை கனன்று கொண்டிருக்கும். இந்த நினைப்பே அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவலைப் பெருக்கிக் கொண்டே இருக்கும். புடுராயா சிறைச்சாலையில் வெளிப்புறச் சுவர்களில் எல்லாம் அழகிய வர்ணங்களைத் தீட்டிய அந்தக் கைதியின் கைவிரல்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கடந்து செல்ல விடாமல் சாலையில் தடுத்து நிறுத்தும். மதத்தின் பெயராலும் நிறத்தின் வேற்றுமையாலும் மனிதர்களுக்குள்ளும் அவர்தம் மனங்களுக்குள்ளும் தகர்க்க முடியாத சுவர்களைக் கட்டி எழுப்பியவர்களெல்லாம் வெளியே இருக்க, இந்தச் சிறையில் சுவருக்குள்ளேயே இருப்பவர்கள் என்ன அவ்வளவு பெரிய பயங்கரவாதிகளா என எண்ணத் தோன்றும். அதனாலேயே, சிறைக் கைதிகளுக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்பு வந்தபோது அதனை ஆவலுடன் ஏற்றுக்கொண்டேன். ஆனால் எப்பொழுதும் அருகிலேயே இருக்கும் காவலர்கள் அதிக நேரம் அவர்களுடன் பேச அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் நாங்கள் தமிழில் பேசிக்கொள்வதை அவர்கள் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பதைப் போல பார்ப்பார்கள். தொடர்ந்து பேச அனுமதிக்க மாட்டார்கள். ஏதோ விதிமுறைகளை நாங்கள் மீறுவது போல் நடந்துகொள்வார்கள். பேச்சுக்குக் கூட அங்குச் சிறைதான்.

மிகவும் குறுகிய கால அனுபவம்தான் அது. அதற்குப் பிறகு, நான் என் அரசு சேவையிலிருந்து விலகி மீண்டும் அங்கு “உள்ளே” இருப்பவர்களுடன் உறவாட வேண்டும் என்ற என் முயற்சிக்குப் பலன் கிடைக்க ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாகி விட்டது. நாள் அவர்களோடு ஆன்மிகம், மனோவியல், குற்றவியல், சமூகவியல்... பற்றியெல்லாம் பேசி அவர்களைத் திருத்த முயற்சிக்கப் போவதாகச் சத்தியம் செய்ததை உள்துறை அமைச்சு என் தகுதிகளின் அடிப்படையில் நம்பிக்கை வைத்துப் பெரிய மனது பண்ணி, இந்தப் பெரும் பாக்கியத்தை எனக்களித்தது. காஜாங் சிறைச்சாலையில் இளம் குற்றவாளிகளோடு என் சனிக்கிழமைகளில் காலைப் பொழுதுகள் கழிந்து வருகின்றன.

இருபது வயதிற்குக் குறைந்தவர்களாகவும் கொஞ்சம் தமிழ் பேசக்கூடியவர்களாகவும் சிறு சிறு குழுக்களாகவும் தேர்வு செய்து அவர்களைத் தனித் தனியாகவும் சந்தித்துப் பேச முடிந்தது ஒரு புதிய அனுபவம்.

கண்களின் நேரெதிர்ப் பார்வைகளைத் தவிர்ப்பவர்களாகத் தரையையோ, சுவர்களையோ பார்க்க விழைபவர்களாக, ஒரு சாதாரண புன்னகையைக் கூட மறுப்பவர்களாக எங்கோ வெயிலில் பாறைகள் பிளந்து வெடிக்கப் போவது முன் விம்மிக் கொண்டிருப்பது போல மனம் குமைந்து கொண்டிருப்பவர்களாக, “எங்களை ஏன் இங்கே அழைத்து உட்கார வைத்திருக்கின்றீர்கள்?” என்பதை வெறுமை காட்டும் விழிகளால் கேட்பவர்களாக... இருந்தார்கள். தொடக்கூடிய தூரந்தான்... ஆனாலும், தொட முடியாத தூரத்தில் இருந்தார்கள் அவர்கள். அவர்களிடமிருந்து அன்பை யாசிக்கும் முன்பாகப் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வது அதி அத்தியாவசியமானதும் கஷ்டமானதுமாக இருந்து வந்தது. “என்னை ஏன் நீ நம்பக்கூடாது?” என்ற என் மன்றாடலுக்கு “உங்களை நான் ஏன் நம்ப வேண்டும்.... அப்படி நம்பித்தான் என்ன ஆகப் போகிறது?” என்ற அவர்களின் எதிர்க் கேள்வி வலிமையானதாக இருந்தது.

காயப்பட்ட பிஞ்சு மனங்களில் ஏற்பட்டிருக்கும், வலியின் வேதனையின் முதல் படி இந்த நம்பிக்கை இழப்பாகத்தானிருக்கும். நானும் யாரையும் நம்ப மாட்டேன்.... என்னையும் யாரும் நம்ப வேண்டாம்”, என்ற இறுகிய நிலையில் துவங்கிய உறவு, “நான் உன்னை நம்புறேன், நீ என்னை நம்பித்தான் ஆக வேண்டும்”, என்று வற்புறுத்த மாட்டேன். நீ என்னை நம்பாவிட்டாலும் கூட எனக்குச் சம்மதந்தான்”, என்று என் நிலைப்பாட்டில் தொடர்ந்தது உண்மைதான். என்னை நம்புவதற்கான அடிப்படைக் காரணங்கள் ஏதுமில்லாத நிலையில் எதன் அடிப்படையில் எப்படி நம்பிக்கைகள் உருவாகும். அன்பற்ற சூழலில், பாதுகாப்பின்மையின் பிடியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் கணங்களை நகர்த்தும் பிள்ளை பிராந்தியத்தில் எதை, எவரை, எதற்காக நம்ப வேண்டும் என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத வரையில் ‘நம்பிக்கை என்பது ஆபத்தானது, ஏமாற்றத்தின் முதல் படிநிலை’, என்ற எச்சரிக்கை உணர்வுதான் மனமெங்கும் வியாபித்திருக்கும். பிறர் மீது ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கை மட்டுமல்ல தன்னையே வெறுக்கும் மனம் தன்னைப் பற்றிய தவறான கட்டுமானங்களும் மிகத் தாழ்வான அபிப்பிராயங்களின் மேல் தன் மீதுமே நம்பிக்கையற்ற நிலையில்தான் செயல்படுகின்ற அதற்கான காரணிகளான சம்பவங்கள், சூழல்கள், மனிதர்கள், சொல்ல இயலாத உணர்வுகளை மனதின் மேல் தளத்திற்கு, பிரக்ஞை நிலைக்குக் கொண்டு வந்து பேசாமல், விசாரிக்காமல், பிரித்துப் போட்டு விரித்துப் பார்க்காமல் இருக்கும் வரை, அவர்கள் பிறர் மீதும் தன்மீதும் கொள்ளும் நம்பிக்கையின்மை என்ற தளத்திலேயேதான் மனம் உறவுகளை நிறுத்திப் பார்க்கும்.

உருவாகி வரும் கணங்களில் நிகழ்ந்துவிடும் பிறழ்வுகளால்தானே ‘மனம்’ வளராமல், மலராமல், எங்கோ ஸ்தம்பித்துவிடுகிறது. அஃது உருவாக்கிய பாதுகாப்பின்மையும் நம்பிக்கை வறட்சியும்தானே மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகின்றன.

எங்களிடையே தொங்கிய மாயத்திரைகள் மெல்ல மெல்ல விலக நேயமிக்க உணர்வுகளை இப்பொழுதெல்லாம் உணர முடிகிறது. குற்றமும் அவமான உணர்வுகளும் நீங்கிய முகங்களில் அன்பின் இதமான அசைவுகளும் மகிழ்வின் மங்கிய ரேகைகளும் தென்பட ஆரம்பித்தன. இலேசாகக் கதவு திறக்கப்படும் போது சிலர் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவது வருத்தமளித்தது. அவர்களை எங்கே, எப்படி தொடர்வது? வழக்கறிஞர்களை வைத்து வழக்காட வசதி இல்லாதவர்களுக்கு என்ன செய்வது எனும் கேள்வி கவலை அளித்தது. நினைவு தெரிந்த நாள் முதலாக பெற்றோர் முகம் காணாது உறவினர்கள், அண்டை வீட்டாரின் தாழ்வாரத்தில் காவல் நாய்களுடன் படுத்தெழுந்து, வாழ்ந்து-வளர்ந்து வந்த அந்தச் சகோதரர்கள் இருவரின் துயரங்களை எந்த நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது? போதை மருந்தில் காதலனுடன் மயங்கிக் கிடந்த தாயை விட்டு நடு நிசியொன்றில் தெருவில் இறங்கி நடந்து சீனக் கல்லறையில் பனி போர்த்தியிருக்கப் படுத்துறங்கிய அந்தச் சிறுவனின் தனிமையை எந்த உறவுகளின் அடர்த்தியில் தொலைப்பது, பிட்டத்திலும் பாலியல் உறுப்புகளிலும் சுடுநீர் தங்கிச் சென்ற அவனது காயங்களுக்கு யார் மருந்திடுவது? அடுக்கு மாடி வீட்டின் உச்சியிலிருந்து கண்ணெதிரே குதித்து மாண்ட தாயின் திறந்த விழிகள் இன்னமும் மனதில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை எப்படி மறக்கடிப்பது?

தற்காலிகமாகக் காப்பாற்றி வைத்திருக்கும் சிறைக்கூடத்தின் இருப்புக் கதவுகள் திறந்து தெருவில் எச்சங்களாக உதறி விழுகையில் பொறுக்கி எடுத்துப் போக, மறு சுழற்சிக்கு மீண்டும் பயன் படுத்திக்கொள்ள காத்திருக்கும் அண்ணன்மார்களிடமிருந்து யார் காப்பாற்றுவது?

நியாயங்களைக் கடந்த பிரதேசங்களுக்கு வாழ்வு இழுத்துச் செல்ல, மென்மையான உணர்வுகளான வழித்தடங்கள் மறுக்கப்பட, மனமும் மனசாட்சியும் மறுத்துப் போக, அவர்களில் பயணங்களின் திசைகளுக்கு மாற்று வழிகளை யார் மாற்றப் போகிறார்கள்...?

குற்றங்களின் விளைநிலமாக இருக்கும் இந்தச் சமூக அமைப்பை, சூழலை, புறம்போக்கு குடியிருப்புகளை, அடுக்குமாடி வீடுகளின் நெருக்கடி மிகுந்த மக்கள் கூட்டத்தை அங்கில்லாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஏழ்மையை, வாழ்வின் நிச்சயமற்றத் தன்மையை, சமூகப் பொருளாதார தாழ்வு நிலையை, வன்முறை நிறைந்த சூழலை, குடியில் தள்ளாடி விழுந்து கிடக்கும் தந்தைகளை, ஹெரோயின் விற்கும் தனையன்களை, எல்லாவற்றையும் செழித்தோங்க வளரவிட்டு மாமுல் வாங்கிச் செல்லும் மேன்மை தாங்கிய அரச போலீஸ் படையின் நேர்மையற்ற அதிகாரிகளை, யார் என்ன செய்வது?

பால்ய பருவந்தொட்டே சிக்கல்களிலும் சிடுக்குகளிலும் செருகிக் கொள்ளும் இவர்களது வாழ்வை, அன்பைத் தொட்டு ஸ்பரிசிக்காத, அன்பால் தொடப்படாத மனம் திரிந்து திரள்கிற சிறார்களைக் கரை சேர்க்க விடை கிடைப்பது எளிதன்று என்பது மட்டும் நிச்சயமாகிறது.

சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியிலும், அரசு ஒரு சாராருக்கு மட்டுமே மனமாற்றத்திற்கு, மறுவாழ்வுக்கு, தொழிற்பயிற்சிக்கு, வேலை வாய்ப்புக்கு என அரசு அதிகாரிகளைக் கொண்டு ஏற்பாடு செய்து தருகிறது. இந்த வசதிகள் இந்தியர்களுக்கு ஏனில்லை என்ற கேள்வி இங்கு யாராலும் இதுவரை கேட்கப்படவில்லை.

இந்தியர்களுக்கான தொண்டூழிய நிறுவனங்கள், அரசு சார்பான, சார்பற்ற, மதம் சார்ந்த, மதம் சாரா, சங்கங்கள், இயக்கங்கள் ஏராளமிருக்கின்றன. பத்திரிகைகளில் கண்டன அறிக்கைகள், வாழ்த்துச் செய்திகள் வெளியிட அவ்வப்போது புகைப்படங்களாகப் புன்னகைத்தவாறு உயிர்ப்பித்து மறைகின்றன. இவை அனைத்திலும் தோற்றுப்போன இடத்தில்தான் நாம் இவர்களைச் சந்திக்கிறோம்.

சீரழிந்த வாழ்வின் சின்னங்களாக நமது சிறார்கள் / இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பல்கிப் பெருகி வருகிறார்கள். அரசு நிர்ணயித்திருக்கும் நம்மினத்துக்கான “கோட்டாவை” மீற தாராளமாக அனுமதித்திருக்கும் இடம் இது ஒன்றாகத்தானிருக்கிறது. முளைவிடும் குற்றவாளியாக உள் நுழைந்து, பின் முழுநேரக் குற்றவாளிகளாக மாற்றம் கொள்ளும் இந்த வாழ்வுக்கான காரணிகள் தான் என்ன?

ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் அளிக்குமா இதற்கான விடைகளை? ஏழை இந்தியச் சிறார்கள் தங்கிப் படிப்பதற்கென்று விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றுகூட உலகின் உயர்ந்த விண்ணை முட்டும் இரட்டைக் கோபுரங்களைக் கட்டி எழுப்பிய நாட்டில் இல்லாது போனது எதனால்?

மற்ற இனங்களின் மேல்தட்டு வர்க்கம் பெருக, மத்தியத் தர வர்க்கம் மேல் நோக்கி நகர இந்தியர்களின் அடித்தட்டு மக்கள் மட்டும் வறுமைக் கோட்டைப் பிடித்துத் தலைகீழ் வௌவால்களாய் எந்தப் பழமும் தின்னாமல் தொங்கிக் கொண்டிருப்பது ஏன்? பள்ளிகளின் பல் சக்கரங்களில் நசுங்கிப் பிதுங்கி விழும் இந்திய மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகக் குற்றச் செயல்களுக்கெனப் பதியமிட்டுப் வளர்க்கப்படும் பயிர்களாக உருமாற்றம் பெறுவதை யார் தடுப்பது?

ஒவ்வோர் ஆண்டும் இந்தியர்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. எதிர்காலம் குறித்தும் இந்நாட்டின் அரசியல் சமூக அமைப்புகள் மீதும், தங்கள் மீதுமே கூட நம்பிக்கை இழந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பள்ளிகளில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொள்பவர்கள், சிறைக்கூடங்கள் நிரப்புபவர்கள், இந்தச் செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்கள், காவல்துறையால் ‘எண்கவுண்டரில்’ சுடப்பட்டுச் சாகின்றவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் என எந்த உதவும் கரத்தாலும் தீண்டப்படாதவர்களாகச் சமூக நெருக்கடியின் அத்தனை குறியீடுகளுக்கும் உரியவர்களாக இவர்களே இருக்கின்றார்கள்.

இந்தச் சூழலில்தான் குற்றச் செயல்களால் சிறையில் இருந்து விடுதலையாகி இன்று சிறு குழுக்களாகத் தொண்டூழியம் செய்யும் இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. தடம் மாறிச்சென்ற வாழ்வின் பயணங்களில் மனம் மாறிக்கிடந்தபோது செய்த குற்றச் செயல்களைத் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசும் இவர்கள் உதவிக் குழுக்களாக மாறி உதவும் கரங்களை நீட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பிக்கைகளை நெஞ்சோடு அணைத்து ஏந்தியபடி தோற்க மறுக்கும் மனிதர்களாய் இவர்கள் இருப்பது தொடுவானத்தில் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது.

இங்கே பொதுத்தொண்டு செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது இயக்கங்களைக் காட்டிலும், சமூகம் சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் முயற்சிக்கும் இவர்களின் மீது நம்பிக்கை படர்கிறது. இந்தியர்களின் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களையும் அவற்றைத் தடுக்க அல்லது குறைந்த பட்சம் குறைக்கவாவது இயலாமற்போன அரசு மற்றும் பொது இயக்கங்களின் தோல்வி குறித்துத் தொடர்ந்து பேச, ஆராய, பொது விவாதம் நடத்த முயற்சிகள் தொடர வேண்டும் என மனம் ஏங்குகிறது.

‘குற்றங்களைச் சமூகம் தயாரிக்கின்றது; அவற்றைக் குற்றவாளிகள் செய்து முடிக்கின்றார்கள்,’ என்று சொன்னது சரியென்றே தோன்றுகிறது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768