இதழ் 17 - மே 2010   சர்ச்சை:
இலக்கிய மோசடி
(தன்னிலை விளக்கம் & எதிர்வினை)
 
 
 
  சிறப்புப்பகுதி:

சர்ச்சை: இலக்கிய மோசடி (தன்னிலை விளக்கம் & எதிர்வினை)

பத்தி:

உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் கண்ணோட்டம்: எப்போதும்போல் மீண்டும் கடவுள் தோற்றுவிட்டார்

சு. யுவராஜன்

அவ‌தாரும் ஆத்தாவும்!
ம‌. ந‌வீன்

செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன்
கமலாதேவி அரவிந்தன்

இயற்கை (2) - நதி
எம். ரிஷான் ஷெரீப்

அந்த போலிஸ்காரர்களும் இந்த போலிஸ்காரரும்
தோழி

எஞ்சி இருக்கும் காகித‌மும்... கொஞ்ச‌ம் பிரிய‌மும்
வீ. அ. ம‌ணிமொழி

கட்டுரை:

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
மா. சண்முகசிவா

ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கும் டிவி சேனல்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் - கதை 2
கோ. புண்ணியவான்


மோதிக்கொள்ளும் காய்கள்
ராம்ப்ரசாத்

தயக்கம்
மதன். எஸ்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...10
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...5
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...7

ம. நவீன்

செல்வராஜ் ஜெகதீசன்

லதா

இரா. சரவண தீர்த்தா

ரேணுகா


பதிவு:


சிலாங்கூர் மாநில இளம் படைப்பாளர் விருது 2010
     
     
 

க‌ட‌ந்த‌ மாத‌ம் 'இல‌க்கிய‌ச் சுர‌ண்ட‌ல்' எனும் த‌லைப்பில் எழுத்தாள‌ர் கோ. புண்ணிய‌வான் ம‌லாயா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ 24-ம் பேர‌வைக்க‌தைக‌ளின் போட்டியில் முத‌ல் ப‌ரிசு பெற்ற‌தையும்; 'இறந்தவனைப்பற்றிய வாக்குமூலம்' எனும் அச்சிறுக‌தை ஏற்க‌ன‌வே 'ம‌க்க‌ள் ஓசை' ஞாயிறு இத‌ழில் பிர‌சுர‌‌மான‌து என்ப‌தையும் தெரிவித்திருந்தோம். இந்த‌ விவ‌கார‌ம் குறித்த‌ வாச‌க‌ர்க‌ள் ம‌ற்றும் எழுத்தாள‌ர்க‌ள் க‌ருத்துக‌ளையும் கேட்டிருந்தோம். மேலும் கோ. புண்ணிய‌வான் ம‌ற்றும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலிருந்தும் அவ‌ர‌வ‌ர் த‌ர‌ப்பு நியாய‌ங்க‌ளைக் கேட்டிருந்தோம். ஏற்க‌ன‌வே பிர‌சுர‌மான‌ சிறுக‌தை மீண்டும் போட்டிக்கு அனுப்ப‌ப் ப‌ட்ட‌து குறித்தும் அதை நீதிப‌திக‌ள் முத‌ல் ப‌ரிசாக‌த் தேர்ந்தெடுத்த‌து குறித்தும் நம‌து கேள்விக‌ள் இருந்த‌ன‌.

இந்நிலையில் எழுத்தாள‌ர் கோ. புண்ணிய‌வானிட‌மிருந்து விள‌க்க‌க் க‌டித‌ம் ஒன்று வ‌ந்த‌து. அதே போல் சுமார் 14 எதிர்வினை க‌டித‌ங்க‌ள் வ‌ந்த‌ன‌. அவ‌ற்றில் நான்கினை ம‌ட்டும் இம்மாத‌ம் பிர‌சுர‌ம் செய்கிறோம். வ‌ந்த‌வ‌ற்றில் சில‌ க‌டித‌ங்க‌ள் போலி அடையாள‌ங்க‌ளுட‌ன் இருந்த‌ன‌. சில‌ வெற்று வ‌சைக‌ளை ம‌ட்டுமே முன்னிறுத்தின‌. சில‌ த‌னிப்ப‌ட்ட‌ அந்த‌ர‌ங்க‌ விவ‌கார‌ம் குறித்தெல்லாம் கேள்விக‌ள் எழுப்பியுள்ள‌ன‌. இது போன்ற‌ க‌டித‌ங்க‌ளைப் பிர‌சுரிக்க‌ 'வ‌ல்லின‌ம்' க‌ள‌ம‌ன்று.

சுய‌ அடையாளத்துட‌ன் அனுப்பி வைக்க‌ப்ப‌டும் க‌டித‌ங்க‌ளே ஏற்றுக் கொள்ள‌ப்ப‌டும். எழுத்தாளர்களின் கடிதங்கள் கீழே பிரசுரிக்கப்படுகின்றன.

- வ‌ல்லின‌ம் ஆசிரிய‌ர் குழு



கோ. புண்ணியவான் க. பாக்கியம் பாவை சீ. முத்துசாமி எம். கருணாகரன்


தன்னிலை விளக்கம்
கோ. புண்ணியவான்

வல்லினம் ஆசிரியருக்கு,

மாலாயாப் பல்கலைக்கழக 24வது பேரவைச் சிறுகதைப்போட்டியில் என் கதை முதற் பரிசு வென்றதும் அது தொடர்பான விமர்சனங்கள் அரசல் புரசலாகப் பேசப்படுவது குறித்தும், என் தரப்பு தன்னிலை விளக்கம் கோரியமைக்கும் முதலில் என் நன்றி. ஒரு ஊடகத்தின் தார்மீகப்பண்பை நிலை நாட்டும் உங்கள் நிலைக்கு முரணாக சிலர் பல ஊடகங்களுக்கும் வலைப்பூவுக்கும் இது பற்றி எழுதச்சொல்லி வலியுறுத்துவதும் என் தரப்பு விளக்கம் தெரியாமல், தெரிந்தவர் முகவரிக்கெல்லாம் மின்னஞ்சல் வழி வதந்திகளைப்பரப்புவதும், தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் பொத்தாம் பொதுவாய் செயல் படுவதும் எந்த நியாயத்தராசு கொண்டு பார்ப்பது என்று தெரியவில்லை. எனக்கு நேரடியாக இது பற்றி எத்தரப்பும் கேட்கவும் இல்லை என்பதிலிருந்து நான் முந்திரிக் கொட்டையென கருத்தை நீட்டுவது அதிகப்பிரசங்கித்தனம் என்றே கருதுகிறேன். உங்கள் வெள்ளந்தியான கோரிக்கைக்கு விளக்கம் அளிக்கும் சந்தர்ப்பத்தின் மூலம், பொதுப்புத்திக்கு இதனைக்கொண்டு செல்வதில் உங்கள் ஊடகம் பெரிதும் துணைபுரியும் என்பதாலும் இதனை எழுதுகிறேன்.

எப்படி விளக்கம் தந்தாலும் பழி மொத்தத்தையும் நானேதான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

பேரவைப்போட்டியின் காலக்கெடு முடியும் தருவாயில் ஒரு கதையை அனுப்பிவிடலாமே என்று முடிவெடுத்து என் கணினிக்கோப்பில் உள்ள கதை ஒன்றை அச்சாக்கி (முன்னமேயே பிழை திருத்தப்பட்டவையே கோப்பில் இருக்கும்) மறு வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளாமல் அவசரமாக அனுப்பிவிட்டு வணிகக் காரணத்துக்காக தமிழகம் சென்று விட்டேன். பின்னர் அதுபற்றி மறந்தும் போயிருந்தேன்.

பரிசு பெற்ற பின்னர் சில நாள் கழித்தே புத்தகம் ஒரு நண்பர் மூலம் என் கைக்குக்கிடைத்தது. பரிசளிப்பு நாளன்றும் நான் திருச்சியில் இருந்தேன். தமிழ்நாட்டிலிருந்து திரும்பியதும் எழுத்து நண்பர் ஒருவர் மூலம் இக்கதை ஏற்கனவே மக்கள் ஓசையில் வந்துவிட்டதே என்று குறிப்பிட்டதும்தான் என் தவறு என்னவென்று புரிந்தது. பரிசு அறிவிக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுவிட்ட நிலையில் என் கையறு நிலை உணர்ந்து வருந்தினேன். எனவே தவறு என்னுடையதே. இத்தவறால் ஏற்பாட்டாளரும் குற்றத்தைச் சுமக்க நேரிட்டது குறித்து வருத்தச்சுமை அதிகரித்தது.

நான் பேரவையில் 13/14 முறை பரிசு பெற்றிருக்கிறேன். இப்படிப்பட்ட பிழை நேர்ந்தது இதுதான் முதல் முறை.

இதுநாள் வரை ஊடகங்கள்தான் நம் எழுத்துக்களைச் சுரண்டி ஊதிப்பெருகினவேயொழிய, எழுத்தாளந்தான் சுரண்டலுக்கு ஆளானவன் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. பத்திரிகைக்கு அனுப்பிய கதைக்கும் எனக்குச் சன்மானம் ஏதும் கொடுக்கப்படவில்லையென்பதும் நீண்ட நெடியச் சுரண்டல் சார்ந்த தொடர்கதை என்பது தெரிந்த ஒன்றே.

பேரவைக்கதையின் பரிசுத்தொகையை (ரிங்கிட் 2000) நான் பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் வதந்திப்பிரியர்கள் அறிந்திராத இன்னொரு ரகசியம்.

நன்றி.

Top


“மறைக்கப்படும் இலக்கிய மோசடி..... இதுவோர் இலக்கியக்குற்றமே....!”
க. பாக்கியம்

எந்த இலக்கியப் போட்டியானாலும் அதற்கென ஒரு விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை இலக்கிய உலகிற்கு நேற்று வந்த புது எழுத்தாளர்கள் கூட அறிவர். (அறிந்தும் பரிசுக்காக ஏங்கி இளைத்து தெரிந்தே தவறிழைப்போரை விலக்கி).

இலக்கிய உலகில் அளிக்கப்படும் அத்தனை பரிசுகளையும் தான் அடைந்து விட வேண்டும் என்பதில் முனைப்புக் கொண்டு செயல்பட்ட ‘அவரை’ப் பாராட்டலாம். ஆனால் ஆசைகள் எல்லை கடந்து போகுமானால் அதன் விளைவு என்னவாகும் என்பதற்கு ‘அவரே’ ஒரு சாட்சியாக விளஙகுவது நமக்கும் வருத்தமே.

இது நிற்க.... மலேசிய இலக்கிய உலகில் நீண்ட காலமாக நிலவி வரும் இலக்கிய நீதி (நீதிபதிகள்) பற்றிய சர்ச்சைகளும், ஐயங்களும் இலக்கியவாதிகளால் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டே வந்துள்ளன. அவ்வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னால் ‘மலேசிய நண்பனிலும்’ பின்னர் ‘உங்கள் குரல்’ மாத இதழிலும், கடந்த ஆண்டு ‘அநங்கம்’ சிற்றிதழிலும் நான் என் கருத்துகளை (உண்மைகளை) எழுதியிருந்தேன்.

சிறுகதைகளின் போட்டி முடிவுகள் பெயர்ப்பார்த்தும், ஒரு சார்பு நின்றும், தொலைபேசி வழியாகவும், உணவகங்களிலும் நிர்ணயிக்கப்படும் நிலையினை (இதே கருத்துகளை இதற்கு முன்னரே பல இலக்கியவாதிகள் வெளியிட்டிருந்தனர்), நான் ‘அநங்கம்’ சிற்றிதழில் எழுதியிருந்தேன். என் கருத்தினை மறுத்து இலக்கியவாதிகள் யாரும் (உண்மை என்பதை உணர்ந்துள்ளவர்கள்) மறுத்து எழுதாத போது, மறு இதழில் புண்ணியவான் அவர்கள் முந்திக் கொண்டு மிக உக்கிரமாகப் பதிலளித்திருந்தார். (குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததோ...?)

அதன் ஒரு பகுதியினை அவர் வார்த்தைகளில் அப்படியே தருகின்றேன்...

“ஆண்கள் மட்டும் தான் பரிசுக்குப் பேரம் பேசலாம் என்ற சட்ட விதி ஒன்றுமில்லை. நீங்களும் ரெஸ்டாரண்டுகளுக்கு வரலாம். சாப்பிடும் சாக்கில் பேரம் பேசலாம் - இன்னொன்று உங்களுக்கு மட்டும் ரகசியமாய்... பெண்களிடம் பேயே இறங்குமாம். உங்கள் பேரம் பேசலில் ஆண் நீதிபதிகளை எளிதில் கவர்ந்து விட முடியாதா என்ன? இன்னமும் உலகம் புரியாத ஆளாக இருக்கிறீர்களே...!” (அநங்கம் சிற்றிதழ், மே 2009, பக்கம் 25/26)

நம்முடைய இலக்கிய நீதி எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என புண்ணியவான் அவர்கள் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தை இலக்கிய உலகம் சிந்திந்திப் பார்க்க வேண்டுகிறேன். ஏனெனில், இதுவரையில் நடந்து முடிந்த இலக்கியப் போட்டிகளில் அதிகமான பரிசுகளைப் பெற்றிருப்பவர் அவர் ஒருவர் மட்டுமே.

‘பெண்ணியம்’ பேசும் எழுத்தாளர் என தன்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் இவர், ஒரு மூத்த பெண்ணிலக்கியவாதிக்குப் பரிசு பெறும் (அநாகரிக) வழியை சிபாரிசு செய்தவர் என்பதை இலக்கிய உலகம் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை.

நீதிபதிகளிடம் எப்படி அணுகினால் பரிசு பெறலாம் என எனக்கு அறிவுரை வழங்கிய புண்ணியவான் தானும் அதே வழியைக் கையாண்டுதான் பரிசு பெற்றாரா என (என் தரத்திலிருந்து கீழே இறங்கி) நான் கேள்வி கேட்க விரும்பவில்லை.

அநங்கம் ஆசிரியர், “புண்ணியவானின் கருத்துக்கு எதிர்வினை அளிக்கிறீர்களா?” என என்னைக் கேட்ட போது (அநங்கம் ஆசிரியரை சாட்சியாக முன்னிருத்தி) நான் அளித்த பதில் இதோ...

“நான் இலக்கியத் தரத்தோடு வெளிப்படுத்திய கருத்துக்கு அதே இலக்கியத் தரத்தோடு, இலக்கிய நாகரிகத்தோடு பதில் கருத்து வருமென எதிர்ப்பார்த்தேன். ஆனால், தன் நிலை இழந்து, அறிவு மயங்கி வீதியோரம் நின்று கூக்குரலிடும் நபருக்கு பதிலளித்து என் தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. என் தரப்பு செய்தியாக நீங்களே இதனை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விடுங்கள்....!” என்றேன்.

இலக்கிய நீதி என்று ஒன்றிருப்பதை உணராது ஆணவத் தேரேறி, பிற இலக்கியவாதிகளை நோக்கி அநாகரிகமான வார்த்தைகளை அள்ளி வீசும் இலக்கியவாதிகளும், பேருக்காகவும் புகழுக்காகவும், பரிசுகளுக்காகவும் மோசடிகளைக் கையாள்வோரும் இலக்கிய நீதிமன்றத்தில் நிச்சயம் ஒரு நாள் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு மாற்று கருத்துக்கு இடமில்லை. இந்நிலை இலக்கிய உலகுக்கோர் பாடம்.

துணிச்சல் மிக்க இந்த இலக்கிய மோசடி மூடி மறைக்கப்பட்டுள்ளதே... வேண்டியவர் என்பதாலா என்ற கேள்வி இயல்பாக எழுகிறதே!

Top


“இலக்கியவாதியா, எழுத்து வியாபாரியா...”?
பாவை

இவ்வாண்டு மலாயாப்பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின், சிறுகதைப் போட்டியில் நடைபெற்ற குழறுபடிகள் படைப்பிலக்கியத்தில் பற்றுடைய உள்ளங்களை பதை பதைக்க வைத்துள்ளது.

மாணவர் பிரிவில் பரிசு பெற்ற ஒரு சிறுகதை காப்பியடிப்பு கதையாகவும், பொதுப் பிரிவில் முதல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை ஏற்கெனவே அச்சில் ஊற்றப்பட்ட (ஜெல்லி) ‘அகார்-அகார்’ ஆகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காப்பியடிப்பு செய்திருந்த மாணவரையாவது மன்னித்து விட்டு விடலாம். எழுத்துத்துறைக்குப் புதியவர். ஆர்வக்கோளாறு காரணமாக தவறு செய்து விட்டார் என்று சம்பந்தப்பட்ட அக்கதை எழுதிய பெண் எழுத்தாளரே தாய்மை உணர்வோடு அவரை மன்னித்து விட்டார். மறப்போம் - மன்னிப்போம்.

ஆனால், எழுத்துலகில் நன்கு அனுபவப்பட்ட சிறந்த படைப்பிலக்கியவாதியாக அறியப்பட்டவர் தனது கதையை மறுபயனீடு செய்து போட்டியில் முதல் பரிசையும் பெற்றிருப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

ஒருமுறை பிரசுரமான படைப்புக்களை போட்டிக்கு அனுப்பி வைக்கக் கூடாது என்கிற அடிப்படை விதிக்கூடவா பலமுறை பேரவைப் போட்டியில், முதல் பரிசு பெற்ற அந்த பிரபல எழுத்தாளருக்கு தெரியாமல் போய் விட்டது? அல்லது மறந்து விட்டது?

வருடந்தோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி, இலக்கியம், வளர்க்கவும் படைப்பாளர்களுக்கு ஊக்கமூட்டவும் தொடர்ந்து எத்தனையோ சிரமங்களுக்கிடையிலும் இப்போட்டியினையும் நூல் வெளியீட்டையும் சிறப்பாக செய்து வரும் பல்கலைக்கழக மாணவர்களின் மொழிப்பற்றும் இலக்கியப் பொறுப்பும்கூட அவர்களிடம் கை நீட்டி பணம் வாங்கும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கட்கு இல்லாமல் போவது வெட்கம்.

தங்களது தீராத கல்விப்பணிக்கிடையிலும் இலக்கியம் - மொழி மீதுள்ள பற்றினால், அந்த மாணவர்கள் போட்டி நடத்துவதற்கும் பரிசுத் தொகை ஈட்டுவதற்கும் எத்தனை பேரிடம் கை நீட்டுகிறார்கள், ஏச்சுப் பேச்சு வாங்குகிறார்கள், சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

பத்திரிக்கை நடத்தி பெரும் அளவு லாபம் சம்பாதிக்கும், நம் நாட்டு தமிழ்ப்பத்திரிகைகளே இப்படியெல்லாம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டுவது இல்லை.

ஆனால், பல்கலைக்கழக மாணவர்கள் செய்யும் இந்த அரும்பணியால் படைப்பிலக்கிய வளர்ச்சியும் தடையுறாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் சிரமங்களும் பிரச்சனைகளும் இவருக்குத் தெரியாதா என்ன? இத்தகைய செயல்களால், பேரவையின் கதவும் இழுத்து மூடப்பட்டால் யாருக்கு இழப்பு...?

ஒருவர் செய்யும், இத்தகைய தவறுகளால் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவமானமும் - அவப்பெயரும் சேர்கிறது. எழுத்தாளன் ஊருக்கு உபதேசம் செய்பவன் மட்டும்தானா? தனக்குள் கொள்கைப் பிடிப்பற்ற சுயநலவாதியா...! என்று சமுதாயம், பேசும் நிலையும் உருவாகலாம்.

இவர்தான், இப்படி செய்தார் என்றால், கதைகளைப் படித்து, வடிகட்டி சாறெடுக்க வேண்டிய நீதிபதிகளோ சாற்றை, தாம் குடித்து விட்டு சக்கைகளை பத்திரப்படுத்தி உள்ளார்கள்.

வெகு காலத்திற்கு முன் என்று கூட சொல்ல முடியாத ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால்தான் பிரபல நாளேடு ஒன்றில், பிரசுரமாகி படித்தவர்களால் சிலாகித்துப் பேசப்பட்ட பார்வைக்குரிய ஒரு கதையைக் கூடவா இவர்களால் ஞாபகத்தில் இருந்திக் கொள்ள இயலவில்லை..?

படைப்பாளனின் பார்வை பருந்தைப் போல் கூர்மையாக இருக்கவேண்டும் என்றாலும் அவர்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் பகுத்துணர்வும் பார்வைத் திறனும் ஊசி முனையை விட நுட்பமாக இருக்க வேண்டும் தானே....!

பிறகு, ஏன் இந்த குளறுபடிகள்...?

பத்திரிக்கைகளில், வரும் கதைகளைப் படிக்க நேரமில்லையோ? இல்லை மனமில்லையோ...?

படைப்பாளர் மீது கொண்டுள்ள அதி நம்பிக்கையும் அதீதபற்றும் - நட்பும் காரணமா? இல்லை பெயரைப் பார்த்தவுடன் தீர்மானத்துடன் தனியாக எடுத்து வைத்து விடுவீர்களா? தொல்லை தரும் தொலைபேசி தொடர்புகள்? எதுவோ, ஒன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

இதுவரை, பேரவை நீதிவான்கள் மீது இருந்த எங்களின் ஆழ்ந்த நம்பிக்கை, ஆட்டம் கண்டுவிட்டதே! இதற்கு என்ன பதிலும் - பரிகாரமும் சொல்லப் போகிறீர்கள்...?

இதற்குமுன், இன்னொரு பிரபல இலக்கியவாதி தமிழக சிற்றிதழ் ஒன்றில், வெளிவந்த தமது கதையை இந்நாட்டு வார இதழ் நடத்தும் போட்டிக்கதையில் இடம்பெற செய்திருந்தார். இதனை பொறுப்புள்ள ஒரு வாசகர் சுட்டிக் காட்டினார். “அந்தக் கதையைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று இதழ் ஆசிரியரிடம் சொல்லிவிட்டேன். சந்தோஷம் தானே இப்போது. டண்டணக்கா என்று குத்தாட்டம் போடுங்கள்” என்று பொறுப்பின்றி பதில் சொல்லியிருந்தார், அந்த இலக்கியவாதி.

இத்தகையோரின் அடிச்சுவடுகளைப் பின் பற்றி நடக்க முயலுவது, முறையான இலக்கிய வளர்ச்சி ஆகாது. இலக்கிய வீழ்ச்சியே நேரும். தம்மை உயர்த்திக் கொள்ள குறுக்கு வழிகளைத் தேடுவதை விட நிதானமாக வளர்ந்தாலும் நேர் வழியைக் கடைப்பிடிப்பது நின்று நிலைக்க வழி செய்யும்.

தயவு செய்து இலக்கியவாதிகள் எழுத்து வியாபாரிகளாய் ஆக வேண்டாம். எழுத்து புனிதமானது. அது ஆன்மாவின் கசிவு. அதை தவமாக செய்வோம்.

‘வல்லினம்’ போன்ற இதழ்களாவது இத்தகைய இலக்கிய ஊழல்களை வெளிக்கொணரும் பொறுப்போடு செயலாற்றுவதற்கு, மிக்க நன்றி. இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தால், தவறு செய்பவர்கள் ஊக்கம் பெறுவார்கள். நமது செயல் யாருக்கும் தெரியாது என்று இறுமாந்து நிற்பார்கள்.

இலக்கிய அநீதிகளை எதிர்த்து பேனா போரிடும்.

Top


குற்றவாளிக் கூண்டில் புண்ணியவான்!
சீ. முத்துசாமி

இந்நாட்டு தமிழ் இலக்கியப் போட்டிகள் நடைபெறும் விதம், தீர்ப்புகள் நிர்ணயிக்கப்படும் பாங்கு, அதனைத் தொடரும் விவாதங்கள் எதிர்மறை விமர்சனங்கள், அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அணுகுமுறை குறித்தெல்லாம் இங்கே நெடுங்காலமாக பல்வேறு மனக்குறைகள் பொதுவெளியில் அவ்வப்போது பதிவாகி, பிறகு அனைவராலும் மறக்கப்பட்டு அடுத்த போட்டியின் முடிவு அறிவிப்பில் மீண்டும் தூசு தட்டி விவாதங்களையும் தொடங்கும் ஒரு போக்குதான் நம் இலக்கிய உலகின் பிரதான அடையாளம்.

முன்னெடுக்கப்படும் பிரச்சனைகளின் ஆழம் நாடி அதற்கான தீர்வை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்தி இலக்கிய வளர்ச்சிக்கு ஏதுவானதொரு சாதகமான சூழலை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் இங்கே அரிதாகவே காணப்படுகிறது.

அண்மைய காலமாக இத்தகைய விவாதங்களும் விமர்சனங்களும் குறிப்பாக அத்தகைய போட்டிகளை முன்னின்று நடத்துவோர், தீர்ப்புகளை வழங்குவோர் மீதானதொரு மனக்குறைகளின் வெளிப்பாடாக விளங்குவதை நம்மால் உணர முடிகிறது.

இப்பொழுது புதிதாக வேறொரு கோணத்திலிருந்து போட்டிகளில் பங்குபெறும் எழுத்தாளர் பெருந்தகைகளின் பரிசை எந்த விலை கொடுத்தேனும் கைப்பற்றியே தீருவது என்கிற தணியாத வேட்கையின் விளைவாய் அவர்கள் துணிந்து மேற்கொள்ளும் சில தகாத செயல்கள் குறித்த விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக, அண்மையில் நடந்து முடிந்த ஒரு சிறுகதைப் போட்டியின் தீர்ப்பில், முதற்பரிசு வென்ற ஒரு சிறுகதை குறித்தும் அதனை படைத்த பழம்பெரும் எழுத்தாளர் குறித்தும் பரவலாக விமர்சிக்கப்படுவதைக் காண முடிகிறது.

பொதுவாகவே போட்டிக்கு வந்து சேரும் படைப்புகள் அதன் விதிமுறைகளை தெளிவாக உள்வாங்கி அவற்றை முறையாக மனசாட்சிக்கு விரோதம் இன்றி நேர்மையுடன் கடைப்பிடிக்கும் எழுத்தாளர்களின் நியாய உணர்வை நம்பியே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை.

அத்தகைய விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கத் தவறிவிடும் எந்தவொரு படைப்பாளனின் படைப்பையும் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவது, அதன் பொறுப்பாளர்களின் கடமை. ஆனால் நடைமுறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் இதனை பழுதின்றி செயல்படுத்த தடையாகிவிடுகிறது.

வருகிற படைப்புகளை அனைத்து விதிகளோடும் சரிபார்த்து சல்லடை போட்டு சலித்தெடுத்து அடையாளம் காண்பது ஒரு நடைமுறை காரியசாத்தியமற்ற செயலாகவே நமக்குத் தோன்றுகிறது.

அதன் நீட்சியாய் போட்டிக்கு வரும் படைப்புகளில் சில மிக நுட்பமான விதிமீறலை நிகழ்த்தி பொறுப்பாளர்களின் கண்களில் மண்ணைத் தூவி பரிசும் பாராட்டும் பெற்று விடுகின்றன.

இந்த நடைமுறை உண்மையை அடியொட்டிதான் சமீபத்தில் 2009ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை தொடர்ந்து நடத்திய சிறுகதைப் போட்டியிலும் ஒரு பெரிய குளறுபடி நடந்துள்ளது.

தாங்கள் புழங்கும் துறை எதுவாயினும் அதில் காணும் ஓட்டைகளையும் - பலவீனமான பகுதிகளையும் நுண்ணறிவாளர்கள் சிலர் துல்லிதமாக அடையாளம் கண்டு அதனை தங்கள் சுயலநலத்திற்கு ஏதுவாக வளைத்து புத்திசாலித்தனமாக செயல்பட்டு பயனடைகிறார்கள்.

போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் இதற்கு முன்பு எங்குமே பிரசுரமாகி இருக்கலாகாது என்பது ஒரு பொது விதி.

அத்தகைய போட்டிகளில் பங்குபெறும் ஒரு கத்துக்குடடி எழுத்தாளனுக்கும் கூட இது ஒரு பால பாடம். ஆனால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் எழுதிக் கொண்டும் பேர் பண்ணிக் கொண்டும், மேடைகளில் முழங்கிக் கொண்டும், பரிசளிப்பு விழாக்களுக்கு லாரியில் வந்திறங்கி பரிசுகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, மலேசிய தமிழ் இலக்கிய உலகையே ‘கலக்கிக்’ கொண்டிருக்கும் கோ.புண்ணியவான் என்கிற மகா புண்ணியவானுக்கு மட்டும் இது தெரியாதாம் அதனை நாம் நம்ப வேண்டுமாம்!

நம்புவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என்பதால், இந்த ஏமாற்று வித்தை அன்னாரால் நன்கு யோசிக்கப்பட்டு மனசறிய திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மிக மோசமான குமட்டலை ஏற்படுத்தும் பக்கா இலக்கிய மோசடி என தயக்கம் ஏதுமின்றி முன்மொழிகிறோம்.

மலேசிய தமிழ் இலக்கிய உலகின் மூத்த தலைமுறையினர் வெட்கி தலைகுனிய வேண்டிய ஓர் அவல நிகழ்வாய் இதனைக் கருதுகிறோம்.

நாம் இத்தனை ஆணித்தரமாக இதனை ஒரு திட்டமிட்ட விதி மீறல் என்று கூறுவதற்கு வேறேதுவும் முகாந்திரம் உண்டா என்கிற நியாயமான கேள்வி பலர் மனதில் எழலாம்.

அதற்கான நமது பதில் புண்ணியவான் என்கிற மனிதர் அடிப்படையிலேயே ‘விதிகளை’ பொறுத்தவரை ஒரு சுத்த நாத்திகர். அவற்றின் மேல் அவருக்கு பெரியதொரு நம்பிக்கையோ மரியாதையோ எப்பவும் இருந்ததில்லை.

நான்காண்டுகளுக்கு முன்பு வரை - ஒரு பத்தாண்டு காலமாக புறவாசல் வழியாக (அதாவது சங்கங்களுக்கான சட்ட விதிப்படி ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்களால் முறையாக தேர்வு பெறாமல்) கெடா மாநில தலைவர் நாற்கலியைக் கைப்பற்றி - அதனை தனது குடும்பக் கம்பனியாக (Sdn. Bhd.) உருமாற்றம் செய்து அதனை தனது குடும்பச் சொத்துகளின் ஒரு பகுதியாகவே நிர்வகித்து இம்சை அரசன் 22ஆம் புலிகேசியின் தமாஷ் அரசியலுக்கு நிகராக கூத்தடித்து எங்கள் அனைவருக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவைத் துணுக்குகளை தவறாமல் அவ்வப்போது வாரி வழங்கியவர்.

இவர் சங்க விதிகளை சட்ட விரோதமாக மீறியது ஒன்றிரண்டு விதிகள் என்றில்லை. அப்படியே ஒன்றிரண்டாக இருந்திருப்பின் அதனை ஏதோ சூழலின் நிர்ப்பந்தம் என்றாவது நமக்கு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் இந்தப் புண்ணியவான் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் ஒட்டு மொத்த விதிகளையே குழி தோண்டிப் புதைத்து அதன் மேல் தனது பதவி நாற்காலியை ஸ்திரமாக அமைத்துக் கொண்டவர்.

ஆண்டுக் கூட்டத்தை அட்ரஸ் இல்லாமல் ஆக்கினார். பொறுப்பாளர்களின் தேர்வு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அன்னாரின் ஆள்காட்டி விரலுக்கு இடம் பெயர்ந்தது. வங்கிக் கணக்கு யாரோ ஒரு பெண்ணின் பெயரில் பராமரிக்கப்பட்டது.

அரசாங்க சங்க பதிவதிகாரியின் அதிகார வரம்புக்குள் வரக்கூடிய, மீறினால் தண்டம் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் சட்ட விதிகளையே தெனாவெட்டாகக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி காலரைத் தூக்கிவிட்டு கட்டப் பஞ்சாயத்து ஸ்டைல் காட்டு தர்பார் நடத்திய புண்ணியவானுக்கு, அற்பம் ஒரு சிறுகதைப் போட்டியில் வரையறுக்கப்பட்ட விதிகளில் குறிப்பிட்ட ஒன்றை கபளீகரம் செய்து ஏப்பம் விடுவது என்ன பெரிய காரியமா? யோசியுங்கள்.

எனவேதான் நம்மால் அடித்துச் சொல்ல முடிகிறது. இந்தப் போட்டிக்கான விதிமீறலை அவர் நன்கு யோசித்து திட்டமிட்டே அமலாக்கம் செய்துள்ளார் என்று! அது அன்னாருக்கு பிறவிலேயே ரத்தத்தில் ஊறிய கசடு!

தானே வலிய வந்து மாட்டிக் கொண்ட இந்தப் பொறியிலிருந்து மீள்வதற்கான வியூகத்தை தனது அதி கூர்மை மதிநுட்பத்தை முழுமையாய் பிரயோகித்து இந்நேரம் அன்னார் ஒரு ‘புனைவை’ உற்பத்தி செய்து - விநியோகத்துக்கான ஏஜென்டுகளையும் நியமித்திருப்பார்.

இப்போட்டியை முன்னின்று நடத்திய மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையினர் இது நாள் வரை பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் இந்தச் சர்ச்சைக் குறித்து எவ்வித எதிர்வினையும் பொது வெளியில் வைக்க முனையாமல் கும்பகர்ண தூக்கத்தில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பது போல் நாமும் இருக்கலாகாது.

உண்மையில் இந்தச் சர்ச்சையில் முனைப்புடன் முன்னின்று செயல்பட வேண்டிய தார்மீக பொறுப்பும் கடப்பாடும் மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினரையே சாரும். பொது வெளியில் அவர்களே முன்வந்து அறிவிப்புகளை செய்து நடத்திய ஒரு போட்டி. அது குறித்த ஒரு சர்ச்சை கிளம்பிய மறுகணமே அவர்கள் பொது வெளிக்கு வந்திருக்க வேண்டும்.

தக்க விளக்கங்களைப் போதிய ஆதாரங்களோடு பதிவு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை.

இந்த மெத்தனப் போக்குக் காரணமாக பொது வெளியில் குறிப்பாக இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் இது பல்வேறு சந்தேகங்களையும் ஊகங்களையும் கிளறிவிட்டு உண்மை எதுவென அறிய இயலாத புகை மூட்டத்தில் எல்லாம் குழம்பிக் கிடக்கிறது.

பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலேனும் அவர்கள் நீள் துயில் கலைந்து சூழலை உள்வாங்கி தங்களது கடப்பாட்டை உணர்ந்து பொது வெளிக்கு வர வேண்டும்.

இந்த சர்ச்சை குறித்த நிஜங்கள் எதுவெனக் கூறும் முழுத் தகுதியும் உடையவர்கள் அவர்கள் மட்டுமே. அவ்வுண்மைகளை தக்க விளக்கங்களோடும் ஆதாரங்களோடும் மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு.

அதனை அறிந்து கொள்வதற்கான பரிபூரண உரிமையும் விருப்பமும் நமக்குண்டு என்பதையும் அவர்கள் ஏற்க வேண்டும்.

இது நாம் தாழ்மையுடன் முன் வைக்கும் வேண்டுகோள். ஒரு வேளை அவர்களின் வழக்கப்படி நம் இவ்வெளிய வேண்டுகோளும் அலட்சியப்படுத்தப்படலாம். அது நிகழுமாயின் - இந்தச் சர்ச்சையில் சம்பந்தப்பட்ட அந்த ‘இரு’ தரப்புக்கும் இடையே இருக்கக் கூடிய ரகசிய ஒப்பந்தம் என்னவாக இருக்கலாம் என்பதை யூகித்தறிய நமக்கு அதிக நேரம் ஆகாது.

அப்படி ஒன்றை நாம் எதிர்கொள்ள நேரிடின் - நாம்தான் விழிப்புடனிருந்து அதோ குற்றவாளிக் கூண்டில் வெற்றிப் புன்னகை கலையாமல் நின்று கொண்டிருக்கும் புண்ணியவானின் பசப்பலான எதிர் தற்காப்பு வார்த்தை ஜாலங்களில் மதி மயங்கி ஏமாறாமல் அன்னாருக்கு தகுந்த தண்டனை வழங்கி பாடம் கற்பிக்க வேண்டும்!

தண்டனை என்றவுடன் யாரும் பயப்படத் தேவையில்லை. திருட்டுத் தனமாக முன்பே பிரசுரமான கதையை உருவி எடுத்து போட்டிக்கு அனுப்பி வைத்த கையை hudud சட்டத்தில் உள்ளது போல முழங்கைக்குக் கீழே வெட்டி எறியச் சொல்லமாட்டோம்!

சொல்லப்போனால், நாம் முன்மொழியப்போகும் இந்தத் தண்டனை புண்ணியவானுக்கு மிகுந்த மனத்திருப்தியையும் சந்தோஷத்தையும் வாரி வழங்கும்.

இலக்கிய ஆர்வலர்களான நமது பங்களிப்பில் ஒரு பெரியதொரு இலக்கிய பாராட்டு விழாவிற்கு கோலாலம்பூரில் உள்ள ஏதேனுமொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்வோம். விழாவின் நாயகன் புண்ணியவான்.

இந்த மாபெரும் விழாவுக்குத் தலைமை தாங்க வருகிற ஜூன் மாத தமிழக கோவை கருணாநிதி செம்மொழி மாநாட்டின் இன்ப இலக்கிய சுற்றுலாவுக்கான மலேசிய ஏஜெண்டும்- ம.த.எ. சங்க ஆயுட்காலத் தலைவருமான பெ. இராஜேந்திரன் அன்னாருக்கு அழைப்பு விடுப்போம்.

இப்போதைக்கு சுற்றுலா ஏற்பாடு தவிர்த்து அன்னாரின் ஒரே பிரதான இலக்கியச் சேவை அது ஒன்றுதான் என்பதால் மறுத்துரைக்காமல் ஏற்பார்.

அந்தப் பாராட்டு விழாவின் உச்ச காட்சியாக புண்ணியவானுக்கு மலர்க்கிரீடம் அணிவிக்கப்பட்டு ‘Recycle வேந்தன்’ என்கிற உயரிய கௌரவ விருதை தலைமை தாங்க வந்திருக்கும் ‘சுற்றுலா மன்னரின்’ திருக்கரங்களால் வழங்கி ஆசிர்வதிக்கச் செய்வோம். அது போதும்! Recycle வேந்தன் (புண்ணியவான்) நீங்களே ஒரு பக்கா Recycle மன்னன்! பின் எந்த முகத்தோடு கடார எழுத்தாளர் சங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைமை துவ மாற்றம் செய்வதை - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர்களை Recycle செய்யப் போகிறீர்களா? என்று நக்கல் அடிக்கத் துணிந்தீர்கள்? கொஞ்சமேனும் விவஸ்தை வேண்டாமா?

நாமும் மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையினரின் அடியொட்டி ‘நமக்கென்ன’ என்கிற அலட்சிய மனப்பான்மையில் இத்தகு தண்டனை ஏதும் வழங்கத் தவறினோமானால் நம் மலேசிய தமிழ் இலக்கிய உலகில் இந்தப் புண்ணியவான் போன்று மேலும் பல புண்ணியவான்கள் புற்றீசலாய் கிளம்பி வர நாமே அடிதளம் அமைத்துக் கொடுத்த தவறினைச் செய்த குற்றவாளிகளாக நிலைநிறுத்தப்படுவோம். எதிர்காலத்தில் இங்கே எழுதப்படும் ஏதேனுமொரு இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் ஏதேனுமொரு இடத்தில் குற்றவாளிக் கூண்டில் தலைகுனிந்து நின்று கொண்டிருப்போம்!

எனக்கென்னவோ அதுதான் நடக்கும் என்று தோன்றுகிறது!

Top


ஏமாற்றும் இலக்கியம் எதற்கு?
எம். கருணாகரன்

கோ. புண்ணியவான் தனித்தரமிக்க எழுத்துப்படைப்பாளி. சமுதாய பார்வையில் கதைகளைச் சொல்லும் கதை சல்லி. வடக்கில் எனது பார்வையில் முதல் வரிசை எழுத்தாளர்களில் முக்கியமானவர். சீ. முத்துசாமிக்குப் பிறகு, நான் வியக்கும் எழுத்துப் படைப்பாளி. அவருக்கு ஏன் இந்த மனச்சரிவு?

போட்டியென்றால் அதற்கென்று விதிமுறைகள் உண்டு. மீறும் போது தண்டனை பெற்றே ஆக வேண்டும். அதைதான் இப்போது பெற்று கொண்டிருக்கிறார் கோ. புண்ணியவான்.

இது அறிவியல் உலகு. துளியில் எல்லாம் கிடைக்கும் காலம். யாரையும் ஏமாற்ற முடியாது. ஏமாற்ற நினைத்தாலும் வினாடிக்குள் கண்டுப்பிடிக்கப்படுவீர்கள். அந்த நிலைதான் அவருக்கு. பரிதாபம். என்ன செய்ய?

இனியும் இந்த மாதிரியெல்லாம் இலக்கியத்தில் விளையாடாதீர்கள். கவனம்! காட்டிக் கொடுக்க ‘கயவர்கள்’ உங்களின் ஆத்ம நண்பர்களாக உலவுகிறார்கள். ரொம்ப கவனம் தேவை.

ஒருவகையில் உங்களையும் குற்றம் சொல்ல முடியாது. காரணம் படைப்பை ஆய்கின்ற ஆய்வாளர்களுக்கு பரந்த வாசிப்பும், நுட்ப பார்வையும் இருந்தால் உங்களைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை தைரியமாக செய்ய மாட்டீர்கள். இனியும் இப்படி செய்து விடாதீர்கள் சார். உங்கள் மீதும் உங்கள் எழுத்தின் மீதும் உயர்ந்த மதிப்பை கொண்டிருக்கும் ஒரு வாசகன் நான். அதனால் பணத்திற்காக இலக்கியத்தை மாசுப்படுத்தாதீர்கள்.

சிலர் இதற்கென்றே உண்டு. எப்போதோ வெளிவந்த சிறுகதை தொகுப்பை, அண்மையில் வெளியீடு கண்டதைப் போல், மேல் அட்டையை மாற்றி, தலைப்பை ‘கூலியும், அவனது மீசையும்’ - நவீனம் என்பதாக மாற்றியமைத்து (நவீனப் பார்வையாம் - மண்ணாங்கட்டி) - இரண்டொரு புதிய கதைகளை அதனுள் நுழைத்து, அந்த ஆண்டுக்கான பரிசு தொகையை ‘லபக்’கென திட்டமிட்டுக் கௌவிக் கொள்வார்கள். அது போன்ற கீழ் மனிதராக, இலக்கியத்தில் உங்களை வைத்துப் பார்க்க மனம் இடம் தரவில்லை. இனியும் இப்படியெல்லாம் தயவு செய்து வேண்டாம் சார்!

Top

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768