|
ஒரேயொரு நாட்டின்
ஒரேயொரு மக்களின்
ஓராண்டு நினைவுக் கொண்டாட்டம்
கவிதை கட்டுரை கதைகளோடு
மலர்கள் தயாராகின்றன
அமைச்சர்கள் நடிகைகளோடு
கூட்டம் ஏற்பாடாகிறது
பேச்சுகளை சூடாக்கி வருகிறோம்
ஒருநாளாவது சிறைக்குப் போய்வர வேண்டும்
ஆய்வரங்க மாநாடுகளும் உண்டு
பெண்கள், அறிவுசீவிகளுக்குத் தனி ஏற்பாடு
வலைப்பூக்களும் இணையப் பக்கங்களும்
பதிவு செய்தாகிவிட்டது
படங்களும் பேட்டிகளும் சேகரித்து வருகிறோம்
பார்வையிடச் சென்றவர்களின் ஒளிப்பதிவுகள்
பிரதிகள் எடுக்கப்படுகின்றன
ஏற்றப் பாடல்களும்
இசை வட்டுகளும் எக்கச்சக்கம்
வழிபாட்டு இடங்கள் எல்லாம்
விளம்பரம் கொடுக்கத் தொடங்கி விட்டன
சாதி மத பேதமின்றி சிறப்புப் பிரார்த்தனைகள்
சாமியார்களும் சாமியை நம்பாதவர்களும்
தனியாகக் கூட்டுகிறார்கள்
பேரணிகளுக்கும் உண்ணா போராட்டங்களுக்கும்
சொல்லி வைத்தாகி விட்டது
கணக்குப் பார்க்காமல் செலவு செய்கிறோம்
ஓரிரு வாரங்களுக்குள்
முள்வேலி பிய்ந்துவிடுமோ
என்றுதான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது.
|
|