என்னைப் புதைத்த இடம்
எப்படி இருக்கிறாய் என்கிறாய்
அடர்ந்த மௌனம் உன்னை இம்சிக்கிறது
மாறவேயில்லை நீ என்கிறாய்
பிறகு தொடர்கிறாய்
உனக்குப் பிறந்த குழந்தைப் பற்றி
சங்கீத வகுப்புக்குப் போவதுப் பற்றி
என்னைப் புதைத்த இடம் மறந்தது பற்றி
நான் சுயமிழக்குந்தருணம்
துண்டிக்கிறது நம்மை
குழந்தையின் சிணுக்கல்
கவ்விச் செறிக்கிறது
பேரிரைச்சலுடன் தனிமை.
விதையாய் விழுபவர்கள்
உங்களது, எனது இறப்பில்
சுற்றத்தைக் கண்ணீர் சிந்தச் செய்யலாம்
பாலூற்றி புதைக்கச் செய்யலாம்
அல்லது எரிக்க
ஆனால் புனிதராக முடியாது ஒருபோதும்
ஒரு அரசியல்வாதியின் உயிர்பிரிதல் அத்தகையதன்று
முள்கிரீடம் தேவையில்லை
சிலுவையும் கூட
அசரீரிக்கானக் காத்திருப்புக்கு அவசியமில்லை
ஒரு அரசியல்வாதியின் உயிர்பிரிதல் புனிதமானது
பரதேசிகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு
மின்சார வசதியைக் கொடுக்கும்
சாலைகளைச் செப்பனிட்டுத்தரும்
கொட்டகைவாசியான உங்கள் கூரைகள் இனி ஒழுகாது
உங்கள் அடையாளம் சிவப்பிலிருந்து
நீலத்திற்கு மாறும்
அல்லது அடையாளமே இல்லாத உங்களுக்கு
சிவப்பு அடையாளத்திற்கேனும் உத்தரவாதம் தரும்
உங்கள் குதத்தில் புண்ணிருந்தாலோ
அல்லது மூலவியாதியால் அவதிப்பட்டாலோகூட
ஆசானவாயை விரித்து பொதுவில் தைரியமாகக் காட்டலாம்
மருந்திட நீளும் மாயக்கைகள் ஆயிரம்
கண்டு பிரமித்து போவீர்கள்
நக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
ஒரு அரசியல்வாதியின் உயிர்பிரிதல் புனிதமானது
சிலர் வாழும்போது புனிதர்
சிலர் இறந்தப்பின்
ஒரு அரசியல்வாதி இரண்டாம் ரகத்தினன்
உங்கள் 50 வருட மன்றாட்டுகள்
5 நாட்களில் நிறைவேற்றப்படும்
புனிதர்களான அரசியல்வாதிகள் அதிசயங்கள் நிகழ்த்திட
புழுவினும் கீழான நீங்களும் நானும்
கூடியபட்சம் இரண்டு விசயங்கள் செய்து உதவலாம்
ஒன்று:
உயிர்பிரிதலுக்கான வேண்டுதல்களை செய்யலாம்
கோவில்களில், மசூதிகளில், தேவாலயங்களில்
ஏதாவதொரு தெய்வம் தூங்காதிருக்கக்கூடும்
இரண்டு:
நம்மில் ஒருவனைத் தேர்ந்து
'கோட்சே'வாக்கிவிடலாம்
துப்பாக்கிதான் என்றில்லை
முதலாவது சுலபமானது
நீங்கள் காத்திருக்கத்தயாராகயிருந்தால்
இரண்டாவது கொஞ்சம் கடினம்
ஆனால் உடனடி தெய்வம் கண்திறக்கும்.
|