|
'பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று
ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
நான்காவது
நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி
க்ருப்யா க்யான் தே...' காதைக் கிழித்துவிடும் நோக்கில், சென்ட்ரல் ரயில்
நிலையம் முழுவதும் அப்பிக்கிடந்த சலசலப்பையும், பரபரப்பையும் தாண்டி
கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண், ரயில் நிலைய ஒலிப்பெருக்கியில். கடைசி
நிமிடத்தில் வந்து ரயில் கிளம்புவதற்குள் தங்கள் பெட்டிகளில் ஏறிவிட அவசர
அவசரமாய் ராகவனைக் கடந்து விரைந்து கொண்டிருந்த பலதரப்பட்ட மக்களினூடே,
லாவகமாய் ஒரு கையில் கூடை நிறைய புத்தகங்களைத் தாங்கிய சிறுவனொருவன்
இன்னொரு கையில் ஒரு புத்தகத்தை ஆட்டியபடி ராகவனைக் கடக்கையில் ஒரு நொடி
நிதானித்து வினோதமாய் பார்த்துவிட்டு போய்க்கொண்டிருந்தான்.
ராகவன் நடைமேடையில் நின்றபடி மணிக்கட்டை உயர்த்தி மணி பார்த்தான். 10:20.
இன்னும் 10 நிமிடங்கள் இருக்கின்றன ரயில் கிளம்ப. ரயில் பெட்டியின்
சன்னலூடே பார்த்தபோது, தான் முன்பே முன்பதிவு செய்திருந்த சீட்டின் மேல்
இருந்த பெர்த் காலியாக இருப்பதை கவனித்தான். சொற்ப மக்களே இருந்தனர்
பெட்டிக்குள். அதனால் பெர்த்தை அவசரப்பட்டு ஆக்ரமிக்க தேவைகள்
இருக்கவில்லை. இருந்தாலும், வெகு நேரம் முன்பே ரயில் நிலையம் வந்துவிட்ட
படியால், வேடிக்கை பார்க்கும் பொருட்டு வெளியில் வெகு நேரம் நின்றதால்,
கால்கள் வலியெடுக்கத் துவங்கியிருந்ததை உணர்ந்தபடியே நின்றிருந்தான்.
எப்படியும் இன்னும் 10 நொடிகளில் வண்டி புறப்பட்டுவிடும், இனி
நின்றென்ன என்றபடியே மெதுவாக நடந்து வண்டிக்குள் ஏறினான்.
ராகவனைத்தொடர்ந்து சிவப்பு வெள்ளையில் கட்டம் போட்ட சட்டையில்
முப்பத்தைந்து வயதுக்காரர் ஒருவரும், ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும்
பின்னாலேயே ஏறினர். திருமணமான தோற்றத்தில் இருந்த அந்தப் பெண் அந்த
முப்பத்தைந்து வயதுக்காரரின் மனைவியாக இருக்கக்கூடுமென்று
நினைத்துக்கொண்டான். மெதுவாக நடந்து தன் இருக்கையில் சென்று அமர்ந்து
கொண்டான் ராகவன். அந்தப் பெண் இவனுக்கு முன் இருந்த இருக்கையின் மேல்
பெர்த்தில் ஒரு பெரிய தென்னைமர நாரில் செய்த பெரிய பை உட்பட கொண்டு
வந்திருந்த ஏனைய லக்கேஜ்களை வைத்துக்கொண்டிருக்க, அந்த
முப்பத்தைந்து வயதுக்காரர் சீட் எண்களை சரிபார்த்துக்கொண்டிருக்க,
அந்த சிறுமி சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ஒரு நிமிடம் இவனைப்
பார்த்துவிட்டுப் பின் திரும்பி வெளியில் வேடிக்கை
பார்க்கத்துவங்கியிருந்தது.
இந்நேரம் வரை, வெளியில் நின்றது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
பதினைந்து இருபது நாட்களாக மனதை சூழ்ந்திருந்த ஒரு வித நிம்மதியின்மை
சட்டென பனி விலகியது போன்ற வகைக்கு இல்லாமல் போனதான ஒரு உணர்வு. அந்த
நிம்மதியின்மைக்கு காரணங்கள் இல்லாமலில்லைதான். எதனால் என்று இப்போது
யோசித்தாலும் பிடிபடவில்லை. ராத்திரிகளில் கெட்ட கெட்ட கனவுகள். அதுவும்
சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி. மூளையின் மின்னனு அலைகளும், பூமியின் காந்த
அலைகளும் நேர்கோட்டில் சந்திக்கும் திசையில் இம்மாதிரியான விரும்பத்தகாத
கனவுகள் பால்யத்தில் பழகி தற்போது தொடர்பு அறுபட்ட நண்பனொருவன்
சொல்லக்கேள்வி பட்டிருக்கிறான். சமீப நாட்களாக அதை உணரவும்
செய்திருக்கிறான்.
யாரோ முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவன் தன்னைப் பார்த்து புன்னகைக்கிறான்.
அவனிடம் இவன் ஒரு கறுப்பு லெதர் பேக்கை நீட்டுகிறான். அவன் முகம் மாறியதா,
மாறவில்லையா என்பது நினைவில்லை.அவனின் பார்வைக் கோணம் இவனையும் தாண்டிச்
செல்கிறது. சட்டென அவன் திரும்பி ஓட முனைகிறான். அவன் அப்படி ஓட முனைந்தது
எதையோ எச்சரிக்க, ஏனென்று தெரியவில்லை, இவன் கால்களை மடக்கி கீழே
குனிகிறான். அவனைச் சுற்றிலும் மழை போல ரத்தம் கொட்ட, சூடான ரத்தம் அவன்
முதுகில் வழிவதான ஒரு உணர்வுடன் ராகவன் விழித்துக்கொள்கிறான். இப்படித்தான்
அந்த கெட்ட கனவுகள் வருகின்றன. தொடர்ச்சியாக நான்காவது முறையாக இரண்டு
நாட்களுக்கு முன்பு கூட இதே கனவுதான். பயந்து பாதி ராத்திரியில்
விழித்துவிட்டு அதன் பிறகு தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு
படுத்துக்கிடந்தது இவனுக்குத்தான் தெரியும்.
இடம் மாறி படுத்தும் கனவுகள் நிற்கவில்லை. அதெப்படி ஒரே கனவு மீண்டும்
மீண்டும் வருகிறதென்றும் விளங்கவில்லை. ராகவன் தீர்க்கமாய்
யோசித்துக்கொண்டிருக்கும் போதே அந்த குரல் கேட்டது.
'தம்பி, மதுரை போற பாண்டியன் தானே இது'. ராகவன் சன்னலுக்குத் கடன்
கொடுத்திருந்த முகத்தை மீட்டுவிட்டு, திரும்பிப் பார்த்தான். அந்த
முப்பத்தைந்து வயதுக்காரர் நின்றிருந்தார்.
'இல்லங்க. இது ராக்ஃபோர்ட். திருச்சி போவுது. பாண்டியன் ஒன் அவர் லேட்.
ப்ளாட்ஃபார்ம் சிக்ஸ்ல நிக்கிது பாருங்க' என்றான் ராகவன்.
'அப்படியா' அவசரத்தை வார்த்தைகளிலேயே கொட்டிவிட்டு சுற்றும் முற்றும்
பார்த்த அவர், அந்த பெண்ணிடம் திரும்பி 'ஹேய், இது பாண்டியன் இல்லயாம்.
அதெல்லாம் எடுத்துக்கோ' என்றபடியே அந்த பெண்ணின் பதிலை எதிர்பாராமல் ரயில்
பெட்டியில் கதவை நோக்கி ஓடினார். கடைசி நிமிடத்தில் ரயில் பிடிக்க வந்தால்
இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டான் ராகவன். அவர்கள் அவசர அவசரமாய் மேலே
பெர்த்தில் அடுக்கி வைத்ததை எடுத்துக்கொண்டிருக்க, ராகவன் அவர்களையே
பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்கும் நோக்கில் மீண்டும் வெளியே
பார்க்கத்தொடங்கினான்.
வெளியே பரபரப்பு இன்னும் ஓயவில்லை. மக்கள் கூட்டம் தினம் தினம் ஏதோவொரு
காரணம் தொட்டு ஊர் ஊராக போவதும் வருவதுமாகவே இருக்கிறார்கள். இன்று
அவர்களோடு இவனும். நெருங்கிய உறவினர் ஒருவரது திருமணம். நல்லவேலையாக வார
இறுதியில் திருமண நாள். இல்லையெனில் அலுவலகத்திற்கு லீவ் சொல்ல வேண்டி
இருந்திருக்கும். ஏற்கனவே நிறைய லீவ் எடுத்தாகிவிட்டது.
இப்போது ராகவன் திரும்பி எதிர் இருக்கையை கவனித்தான். ஒருவரும் இல்லை.
காலியாக இருந்தது. போய் விட்டார்கள் போலும் என்று நினைத்தபடியே யதேச்சயாக
மேலே பெர்த்தை பார்த்தபோது அது தெரிந்தது. அது தென்னைமர நாரில் செய்த
பெரிய பை. இது அந்த முப்பத்தைந்து வயதுக்காரருடையதாச்சே!! விட்டுட்டு
போய்ட்டாரோ. வண்டி கிளம்ப இன்னும் சில நொடிகளே இருக்கிறது. இந்த நேரத்தில்
இதென்ன குழப்பம். ராகவன் துரிதமாய் யோசித்தான். சற்றுமுன் தான்
இறங்கியிருப்பர். உடனே சென்று தேடினால் ஒரு வேளை, வெகு அருகாமையிலேயே
அவர்களை பிடித்துவிடலாம் என்று தோன்றியது. ராகவன் எழுந்து அந்த பையை
எடுத்துக்கொண்டான். கீழே குனிந்து சன்னலூடே அந்த முப்பத்தைந்து வயதுக்காரரை
தேடியபடியே கதவருகே ஓடினான். ஒரு பத்தடி தூரத்தில், அந்த சிவப்பு கட்டம்
போட்ட சட்டையில் அந்த முப்பத்தைந்து வயதுக்காரர் அவசர அவசரமாய் சென்று
கொண்டிருந்தார். அந்த பெண்ணும் சிறுமியும் கண்ணில் படவில்லை. ஒரு வேளை
மக்கள் கூட்டத்தில் அவர்கள் அருகாமையிலேயே இருந்து, தன் கண்ணில்
புலப்படாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. யோசிக்க நேரமில்லை. தூர
சென்றுவிடுமுன் ஒட்டிச்சென்று தந்துவிடலாம் என்று நினைத்தபடி ரயிலை
விட்டிறங்கி ஒட்டமும் நடையுமாய் அவரைத் நெருங்கினான்.
அருகே சென்றதும், அவர் தோலில் லேசாக தட்ட, அவர் திரும்பினார்.
புன்னகைத்தபடியே அவர் திரும்ப, ராகவனுக்கு ஒரு நிமிடம், தன்னைப்பார்த்துத்
தான் புன்னகைக்கிறாரா அல்லது அவர் புன்னகைக்கும் நேரத்தில் தான் அவரை
நெருங்கிவிட்டோமா என்று தோன்றியது. 'சார், இத அங்கேயே விட்டுட்டீங்க'
என்றபடியே அந்த பேக்கை நீட்டினான். அவர் இவன் சொன்னதை காதில் வாங்கியது
போல் தோன்றவே இல்லை இவனுக்கு. அவரின் பார்வைத் தன்னையும் தாண்டி தனக்குப்
பின்னால் எதிலோ நிலைக்கொள்வதை உணர்ந்தவனுக்கு கையிலிருந்த பேக்கின் ஒரு
கைப்பிடி கிழிய உள்ளிருந்து ஒரு கறுப்பு லெதர் பேக் கீழே விழ எத்தனிப்பாய்
தொங்கியதும் திடீரென அந்த கனவுகள் நினைவுக்கு வந்தது. கனவுகளில் நடப்பது
போலவே இருப்பதாய் அவன் மனம் உணரத்தொடங்கியது.
இது கனவில் வரும் நிகழ்வுகள் தானோ என்று சந்தேகம் கொண்ட மறுநொடியே ராகவனின்
கால்கள் அணிச்சையாய் மடங்கியது. அப்போது குனிகையிலேயே, தான் ஏன் குனிகிறோம்
என்று நினைத்து, கனவிலும் இப்படித்தான் நடந்தது அதனால் இருக்குமோ என்று
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டபடியே அடுத்து கோரமாய் ஏதோ
நடக்கப்போகிறதென்று அவன் நினைத்துக்கொண்டிருந்த நொடிகளிலேயே, பூட்ஸ்
ஷூக்கள் நடைமேடையில் தடதடவென பதிந்துஎழும் ஓசையுடன் தன்னைக்கடப்பது போல்
உணர்ந்தான். ராகவன் கீழே கால்களை மடித்து பாதங்களில் உட்கார்ந்தவாறே நிமிர,
அந்த முப்பத்தைந்து வயதுக்காரரை மூன்று காக்கிச்சட்டை போட்ட போலீஸார்
கொத்தாக இறுக்கிப் பிடித்திருக்க, சுற்றிலும் நான்கைந்து போலீஸார்
வாக்கிடாக்கியில் 'அக்யூஸ்ட் சர்ரவுண்டட். ஓவர்' என்று யாருக்கோ
சொல்லிக்கொண்டிருக்க, ஒரு போலீஸார் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான்.
அருகே வந்த போலீஸ்காரர் இவனிடம் ஏதோ கேட்க, ராகவன் நடந்து முடிந்த
நிகழ்வுகளின் அதிர்ச்சியில் அப்படியே உறைந்திருந்தான். அடுத்த ஒரு மணி
நேரம் ராகவன் அவனுடைய ஒரே பையுடன் ரயில்வே போலீஸ் அலுவலகத்தில்
உட்கார்ந்திருந்தான். அங்கே தான் அவனுக்கு பல விஷயங்கள் புரிந்தது. அந்த
முப்பத்தைந்து வயதுக்காரன், விட்டுச்சென்றதாய் நினைத்த தென்னைமர
நார்ப்பையில் வெடிகுண்டை மறைத்து வைத்து திருச்சி செல்லும் ரயிலில் வைத்து
பொதுச்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் விளைவிக்க முயன்ற தீவிரவாதி அவன்.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க குடும்பமாய் வந்து ரயில் ஏறுவதாய்
பாவ்லா காட்டவே ஒரு பெண்ணும், ஒரு சிறுமியுடனும் வந்திருக்கிறான். தவறான
ரயிலில் ஏறிவிட்டதாய் நடித்தபடியே லக்கேஜ்களை திரும்ப எடுக்கும்போது
தவறுதலாய் விட்டுவிட்டதாய் அந்த வெடிகுண்டு பையை ரயிலில் வைத்துவிட
முனைந்திருக்கிறான். போலீஸ் விசாரணையில் ராகவன் அப்பாவி என்று தெரியவர
போலீஸ் ராகவனை, கேஸ் கோர்ட்டுக்கு வருகையில் சாட்சி சொல்ல வரும்படி
நிபந்தனைகளுடன் வெளியே விட்டது.
ராகவன் செல்ல வேண்டிய ராக்ஃபோர்ட் ரயில் அவனை விட்டுவிட்டு போயே
விட்டிருந்தது. அதற்கு மேலும் அவனும் பயணம் மேற்கொள்ளும் நிலையில்
இல்லையென்பதால் ரயில்வே நிர்வாகம் அளித்த மாற்று ரயில் டிக்கேட்டையும்
நிராகரித்துவிட்டு வெளியே வந்தான். தளர்வாய் நடந்து வந்தவன், ரயில் நிலையம்
விட்டு வெளியில் வந்ததும் ஒரு நீண்ட பெருமூச்சொன்றை செறிந்தான். வெளியே
ரோட்டோரமாய் ஒரு டீகடையில் டீ சொல்லிவிட்டு கொண்டு வந்த ஒரே பையை
காலிடுக்கில் வைத்துவிட்டு டீக்கு காத்திருந்தான். பக்கத்தில் இருந்த ஒரு
மெடிக்கல் ஷாப்பில் ஒருவர் இவனைப்போலவே இரு கால்களுக்கு இடையே ஒரு சூட்கேசை
வைத்துவிட்டு, ஒரு கையால் போன் பேசியவாறே ஒரு காகிதத்தில் ஏதோ
எழுதிக்கொண்டிருந்தார். அந்த டீகடையை ஒட்டி மெயின் ரோட்டை விட்டு பிரிந்த
ஒரு குறுகிய சந்தில் கேரம் போர்ட் விளையாடிக்கொண்டிருந்த நால்வரை
பார்த்தபடி நின்றிருந்த ராகவன் மனதில் பலவிதமான சிந்தனைகள்
ஓடத்துவங்கியிருந்தன. கனவு முழுவதுமாக நடக்கவில்லை. ஆனால், கனவில் வந்தது
போல் நடக்கவே இல்லை என்பதாகவும் இல்லை. பாதி நடந்தது. மீதிக்கு வேறு ஏதோ
நடந்தது. எதற்காக இப்படி நடக்கவேண்டும். இதுதான் இறைவன் செயல் என்பதா?
தன்னால் இத்தனை பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்படவேண்டும்
என்பதுதான் இறைவன் சங்கல்பமா அல்லது அந்த தீவிரவாதி மாட்டிக்கொள்ள வேண்டும்
என்பது விதியா? இது போல இதற்கு முன் நிகழ்ந்ததில்லைதான்.
தற்செயல் என்று கொள்ளலாமா? இல்லை. முழுக்க அப்படிக்கொள்ளத் தோன்றவில்லை.
தமிழ் நாட்டில் 7 கோடி ஜனம் இருக்கிறது. தனக்கு ஏன் இது நிகழ வேண்டும்.
காரணம் இருக்கிறது. தீவிரவாதி சேதமுண்டாக்க நினைத்தது திருச்சி செல்லும்
ரயிலில். அவனுக்கு சைதாப்பேட்டையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் ட்யூஷன்
சொல்லித்தரும் ஆசிரியர் மூலமாகவா தடங்கல் வந்துவிடப்போகிறது. எதற்கும் ஒரு
தொடர்புவேண்டுமல்லவா? அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. அதே ரயில்
நிலையத்தில் தன் இருத்தலைக்கொண்டிருக்கும் எவனுக்கு ஒரு தொடர்பிருக்கும்
என்று சர்வ நிச்சயமாய் சொல்லமுடியாவிட்டாலும், ஒரு தொடர்புக்கான
சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நிச்சயமாகக் கொள்ளலாம். அந்த தீவிரவாதியின்
இன்றைய ப்ளான் தன்னால் நாசமாய்ப்போக மிக அதிக அளவிலான சாத்தியக்கூறுகள்
இருந்திருக்கலாம்.
எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கேன்ன என்று நானிருந்திருந்து, அந்த பையை
கண்டும், அவனிடம் திரும்பச் சேர்க்க முயலாமல் அப்படியே விட்டிருந்தால் ஒரு
வேளை அவன் ப்ளான் செய்த விபத்து நடந்தே இருந்திருக்கலாம். ஆனால் அது தன்
இயல்பல்ல. மொத்தத்தில், இந்த கேரம் போர்டில் ஒன்றொடொன்று மோதிக்கொள்ளும்
காய்கள் போலத்தான் எல்லோரும். யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, டொப்பென்ற
சத்தத்துடன் ஒரு டீ கிளாசை பிஸ்கட் நிரப்பப்பட்டிருந்த பாட்டில்
ஜாடியின்மேல் வைத்தான் கடைக்காரன்.
கை நீட்டி அந்த டீ க்ளாசை எடுக்கும்போதுதான் ராகவன் கவனித்தான். இப்போது
அந்த மெடிக்கல் ஷாப்பில் அந்த பெட்டி மட்டும் தான் இருந்தது. சுற்றும்
முற்றும் பார்த்தபோது, அந்த பெட்டியை காலிடுக்கில் வைத்திருந்த ஆள், சற்று
தொலைவில் ஃபோனில் பேசியபடியே நடந்து போய்க்கொண்டிருந்தான். ராகவனுக்கு
இப்போது தலைசுற்ற ஆரம்பித்திருந்தது.
|
|