|
கூத்துப்பட்டறைக்கு வந்து 3 வாரமும் ஆயிற்று. முற்றிலும் மாறுபட்ட நாடக
வகுப்பில் [இவளது அனுபவ அறிவில்], எதை எடுப்பது, எதைவிடுவது என்று
தடுமாறிக் கொண்டிருந்தாள். இவளோ முழுக்க முழுக்க சமூகக் கதாசிரியை.
சிறுகதையோ, நாவலோ, ஏன்? நாடகம் எழுத்தில் கூட முழுக்க முழுக்க பெண்மணம்
வீச, ஒரு பெண்ணின் பார்வையில், அங்கதம் எப்படி விழுகிறது என்ற பாணியிலேயே
எழுதிக்கொண்டிருந்தவள். இங்கோ எல்லாமே வேறு கோணம். சோஷலிச எதார்த்த வாதம்
[socialist realism] என்ற இலக்கியக்கொள்கையே வீதி நாடகங்களில், பிரதானமாக
விளங்குவது சிந்திக்க வைத்தது.
எளிமையான மொழிநடையில், மனித வாழ்வின் ஆழமான பரிமாணங்களை, அலங்காரமின்றி
வெளிப்படுத்துவது மட்டுமே இலக்கிய லட்சியமாகக் கொண்டிருந்த இவளுக்கு
நவீனத்துவ, நாடகப்பார்வை மிகவும் நூதனமாக இருந்தது. எழுத்தை வெறும் craft
ஆக மட்டுமே காணாமல், ரொம்ப உணர்ச்சிப்பூர்வமாக எழுதும்போது, வடிவ
நேர்த்தியில்
கிட்டிய திருப்தியில் இவள் மகிழ்ந்த காலம், இனி வராதோ எனும் பயமும்
ஏற்பட்டது. ஓ ஹென்றி, செகாவ், மாப்பாசான், காதரீன் மான்ஸ்பீல்ட் போன்ற
இலக்கிய மேதைகளின் எழுத்தை, ஒரு பயிற்சியாகவே எடுத்துப் படித்ததுண்டு.
ஆனால் தாமஸ்மான், டால்ஸ்டாய், டாஸ்டாவஸ்கி நூல்களின் பயிற்சிக்குப் பிறகு,
தமிழில் எழுத இயலா சாகசங்களை, மலையாள நாடகத்தில் கொண்டுவர முடிந்த
மகிழ்ச்சியும் கூட காணாமல் போயிருந்தது
மலையாள இலக்கியக்களம், பல பரிசோதனை முயற்சிக்கும், தரமான வாசகர் வட்டம்
பெறவும், உதவியதை மறுப்பதற்கில்லை. தமிழிலோ அந்தப் பேச்சுக்கே இடமில்லை.
மானுட மனத்தின், ஆழ்மனப்படிவத்தின், தொன்மையான பிரச்சினைகளைக்கூட குறியியல்
[semiotics], அரங்கக்குறியியல், உருவகக்குறி [iconic sign], சுட்டுக்குறி
[indexical sign], பன்னிலைக்குறித்தல் [connotation], என அரங்க பாஷையே
வேறாயிருந்தது. இதில் உடல்மொழியும், பேச்சுமொழியும், குறியீட்டு மொழியில்
முற்றிலும் மாறுபட்டு நின்றது. முகத்தை இறுக்கி, கண்களைப்பெரிதாக்கி,
புருவங்களை பெரிதாக்கி, மூக்கை விடைத்து, நாக்கைத்துருத்திக்
காட்டுவதையெல்லாம் கண்டு, கேலி செய்த அஞ்ஞானம் பனிப்படலமாய்
விலகியிருந்தது. பரிசோதனை நாடகங்களிலும், வீதி நாடகங்களிலும்
வாய்மொழிச்சங்கேதம் தான் மிகவும் கவர்ந்தது.
அப்படிக்கண்ட வீதி நாடகமொன்றில் முத்துசாமி சார், ரவீந்திரன் சார், இவள்,
எனப் பார்வையாளர்களாய் நிற்க, பசுபதி மற்றும் கூத்துப்பட்டறை மாணவர்கள்
அரங்கேற்றிய நாடகத்தில் அன்று கண்டவை மனதை விட்டகலா நிகழ்வு. ஏதோ
கோயிலுக்கு முன்னால் சென்று நின்று, வண்டியிலிருந்து இறங்குவதே தெரியாமல்,
ஒரே பாய்ச்சலாய், பழனி ஓடிச்சென்று அபினயிக்க, சந்திரா, குமரவேல், முருகன்
,ஜோர்ஜ், குமார், கலைராணி, [மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை] என
வீதியே பார்க்க, இவர்கள் வீதி நாடகம் போட, மூக்கொழுகும் குழைந்தைகளும்,
நிர்வாணமாக, குழந்தைகளை இடுப்பில் ஏற்றிக்கொண்டு, சற்று பெரிய
குழந்தைகளும், மற்ற பார்வையாளரும் கூட இவர்கள் நிலையில் தான் இருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்தது கூடதெரியாமல், சின்னக்குழந்தைகள் அப்படியே நிற்க,
தாங்கமுடியாமல், இவள் கையில் கொண்டு போயிருந்த சில்லறையும், குறைந்த
ரூபாயும், அப்படியே பார்த்த குழந்தைகளின் கையில் திணித்துவிட்டு
திரும்பினாலும், இன்றும் மறக்கவேமுடியாமல் கண்ணில் நிற்பது
அந்தக்குழந்தைகளின் பீளை வடிந்த கண்களில் தெரிந்த பசியைத்தான்.
ஆனால் ஆசிரியர் முத்துசாமி அட்டகாசமாக சிரித்தார், வீரபாண்டிய கட்டபொம்மன்
மீசையை திருகி விட்டுக்கொண்டே, கேட்டார். ’கமலாதேவி, பார்த்தீர்களா?
சேரியில் தான் இலக்கியம் வாழ்கிறது, என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?’
என்றபோது இவள் பேசவே இல்லை. இதை விட வேடிக்கை மறுநாளே நடந்தது.
நட்ட நடு வீதியில் மரிச்ச பிணத்துக்கு முன்னாலும், பின்னாலும், டாம் டக்கர
டய்யர டூம் டூம், என பாட்டுப் பாடிக்கொண்டே, ஒரு குழுவினர்
சென்னையில், நடனமாடிக்கொண்டே போவதைப்பார்த்த இவள் உறைந்து போய் நின்றாள்.
முழு போதையில் இப்படிக்கூட பரலோகத்துக்கு வழி அனுப்புவார்களா?
திகைத்துப்போய் இவள் நிற்க, டெல்லி ரவீந்திரன் சார் விளக்கினார்.
முத்துசாமி சார் சிரித்தார், 'கமலாதேவி, இதில் தப்பில்லை, நீங்கள்
சிங்கப்பூரில் இதையெல்லாம் கண்டிராததால் தான் உங்களுக்கு ஆச்சர்யம்,"
என்று இன்னும் கூட ஏதோ சொல்ல, ஏற்றுக்கொள்ளவேமுடியாமல் இவளுக்கு கண்கள்
நிரம்பியது.
|
|