|
|
உதவும் கரங்கள்
மறுநாள் காலையும் எப்போதும் போல புலர்ந்தது.
விடியற்காலையிலேயே நான் எழுந்து விட்டேன். நான் தங்கி இருந்த அறையிலிருந்த
எனது பொருட்களையெல்லாம் எடுத்து பயணப்பைக்குள் திணித்து விடுதியின்
முகப்புக்கு செல்வதற்குத் தயாராகி விட்டேன். நாங்கள் செல்லவேண்டிய
இடத்துக்கான பேருந்து காலை 8 மணிக்கு வரும் என ஏற்கனவே
தெரிவித்திருந்தார்கள். எனவே எல்லாவற்றையும் எடுத்து கொண்டு கீழே இறங்கி
வந்து விட்டேன் எனது தோழிகளோடு. அதுவரையில் என்னோடு யார் ஒரே பள்ளியில்
பணியாற்ற போகிறார்கள் என்று பெயர் பட்டியல் இருந்தும் கூட முகத்தை மட்டும்
என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஒன்றாய் வந்த 360 பேரும் பிரிய வேண்டிய நேரம். ஒன்றாய் புறப்பட்டோம்...
ஒன்றாய் விண்ணிலே பறந்தோம்... அந்த மூன்று நாட்களில் மட்டுமே... ஆனால்
பிரியும் போது மீண்டும் இவர்களை எல்லாம் என் வாழ்வில் சந்திபேனா என்ன
எண்ணம் தோன்றவே செய்தது. 'வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்; அதில் வாழ்பவன் ஒரு
வழிப்போக்கன்; பயணம் நெடுக்க எதுவும் கூடவே வருவதில்லை அனுபவத்தை தவிர',
என்று எப்போதோ எங்கேயோ எதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு வாசகம் என் மன
ஜன்னலில் எட்டி பார்த்தது. ரகசியமாய் சிரித்து கொண்டேன். 'Touch and Go '
அட்டையை போலேவே மனித வாழ்க்கையில் நாம் 'Hi - Bye' எனவே பலரோடு பழக
நேரிடுகிறது. கண்டும், கேட்டும், ரசித்தும், உணர்ந்தும் சிலிர்த்தும் போன
சில நிமிடங்கள் நமக்குள் டைரி படிமங்களாக நிலை பெற்று விடுகின்றன. அதுபோல
தான் இந்த மூன்று நாட்களும் எனக்குள் மித்ராவை பற்றிய நினைவைத் தூவி
விட்டிருந்தது.
பேருந்துகள் இடம் வாரியாக வந்திருந்தன. எல்லோரோடும் விடைபெற்றுகொண்ட பின்
நான் 'கூச்சிங்' என எழுதப் பட்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து பயணத்துக்கு
தயாராகி விட்டிருந்தேன். என்னோடு இன்னும் பலரும் என்னை போலவே அந்தப்
பேருந்தில். சரியாக 8.30 மணிக்கு பேருந்து புறப்பட்டது. போகும் பாதை
மீண்டும் கதை சொல்லும் பாதைதான் எனக்கு. ஆனால் ஒரே படத்தை எத்தனை தடவைதான்
பார்க்க முடியும்? எனவே வழி நெடுக்க தூங்கி விட்டேன். பேருந்து ஒவ்வொரு
பள்ளியாக நிறுத்தி நிறுத்தி என்னோடு பயணம் செய்தவர்களை இறக்கி விட்டு
விட்டு பின் கடைசியாக என் பள்ளியை வந்தடைந்தது. அப்போதுதான் என்னோடு அந்தப்
பள்ளியில் பணியாற்ற போகும் அந்த மலாய் ஆசிரியையைப் பார்த்தேன். முதல்
அறிமுகமாகச் சின்ன சிரிப்பையே உதிர்த்தோம் இருவரும். அந்த நிமிடம் வரை
அன்றைய இரவை நாங்கள் எங்கே எப்படிக் கழிக்க போகிறோம் என்பதற்கு எங்களிடமே
விடை இல்லை.
பேருந்திலிருந்து இறங்கி எங்கள் பயணப் பைகளை ‘ஜாகா’ கொட்டகைக்குள் வைத்து
விட்டு பள்ளி அலுவலகத்தை நோக்கி சென்றோம்.
எங்கள் வருகை பள்ளி தலைமையாசிரியைக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
பார்க்க அமைதியானவராகக் காட்சியளித்தார். பேசும் போது அவரது முகத்திலும்
தொணியிலும் ஒரு தனி தேஜாஸ் தெரிந்தது. முதல் சந்திப்பிலேயே அவர் பேரில்
எனக்கொரு தனி மரியாதை ஏற்பட்டது. அதை தவிர மற்றபடி வேறெதுவும் அவரை பற்றி
எனக்கு தெரியாது. முதல் வேலையாக எங்கள் இருவரையும் சாப்பிட அழைத்து
சென்றார். எங்களுடன் துணைத்தலைமையாசிரியையும் கூட வந்தார். அந்த பள்ளியில்
ஆட்சி பீடம் முழுவதும் பெண்கள் கையிலேதான் இருந்தது. தலைமை கட்டொழுங்கு
ஆசிரியரைத் தவிர.
நானும் பெண்ணல்லவா... எப்போதும் எதிர்ப்பாலை பற்றி நமக்குள் சிறு சந்தேகம்
இருக்கவே செய்கிறது. அது ஆணாய் இருந்தாலும் சரி; பெண்ணாய் இருந்தாலும் சரி.
ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையாய் வாழ வேண்டும் என தெரிந்தும் நாம்
ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சவே பார்க்கிறோம். இதையெண்ணி மெல்ல சிரித்து
கொண்டேன்.
சாப்பிடும் போதுதான் எங்கள் இருவரை பற்றியும் தலைமையாசிரியை கேட்டறிந்து
கொண்டார். அடுத்தக் கட்டமாக அன்றைய இரவு நாங்கள் எங்கே தங்குவது என்ற
பிரச்சனைக்கு வழியாக அவர் இன்னொரு ஆசிரியையை அறிமுக படுத்தினார். அந்த
ஆசிரியை எங்களை போலவே இரண்டாண்டுகளுக்கு முன் சரவாக் மாநிலத்தில் விஜயம்
செய்தவர். எனவே மொழி பிரச்சனை அதிகம் இல்லை. அவர் வீட்டில் எற்கனவே இரண்டு
அறைகள் காலியாய் இருப்பதாகவும் முதலில் அங்கே தங்கி கொண்டு அதன் பின்
யோசிக்கலாம் எனவும் நம்பிக்கையூட்டினார்.
நாங்கள் தங்குமிடம் தேடுவதில் அதிகம் சிரமம் நோக்கவில்லை. எங்களுக்காகவே
எல்லாமே தயார் செய்யப்பட்டிருந்தது போலவே இருந்தது. ஊரை விட்டு ஊர் வந்த
எங்களை போன்றவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்பது
ஊர்ஜிதப்படுத்தப்படுவதற்கெனவே சில அதிசயங்கள் நடக்கின்றன. நாங்கள் ஓரிரவு
என எண்ணி குடிப்புகுந்த அந்த வீடு மேலும் சில வருடங்களுக்கு எங்களுக்கே
சொந்தமானதுதான் அதிசயம். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த அந்த ஆசிரியைக்கு
அந்த ஆண்டே இட மாற்றுதல் கிடைத்து தீபகற்பத்திற்கு போனதும் தினமும்
பள்ளிக்கு செல்ல இரு வேறு ஆசிரியர்கள் உதவிக்கரம் நீட்டியதும் மிகவும்
அதிசயமாகவே இருந்தது. இது ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய
கதையில்லை. இயற்கை செய்யும் விளையாட்டாக நினைத்துக்கொண்டோம்.
எங்களுக்கு முன் அறிமுகமாக யாருமே அங்கு இல்லையென்றாலும் எங்களுக்கு உதவ
ஆயிரத்தெட்டு கரங்கள் அன்புடன் நீண்டன. இயல்பாவே சரவாக்கியர்கள்
அன்பானவர்கள் என என் மூத்த அக்காவின் கதை மூலம் அறிந்திருந்தேன். அதை
கண்ணெதிரே பிடாயு வம்சாவளியான என் தோழி க்ரேஸியைப் பார்த்து உணர்ந்து
வியந்தேன். சரவாக்கை பற்றி மென்மேலும் ஆழமாக தெரிந்து கொள்ளவும் அவர்களின்
குணாதிசயங்களை அறிந்து கொள்ளவும் எனக்கொரு ‘மீடியம்’ தேவைப்பட்டது.
|
|