|
|
சு. யுவராஜனின் ‘கருப்பண்ணன்’
நிகழ்கால வாழ்க்கையில் அன்பை நித்தம் தொலைத்துக்
கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அன்புடன் நடமாடும் உள்ளங்கள்
பிரகாசமாகவே தெரிகின்றன. அன்பைக் காட்ட உயர்ந்த விலைமதிப்புள்ள பொருட்களைத்
தேடி செல்லும் மனங்களுக்கும் அதைப் பெற்று மட்டும் அன்பை உணர முடிந்த
மனங்களுக்கும் ஆழ்ந்த அன்பின் அர்த்தம் புரிய சுற்றி இருக்கும் தருணங்களைச்
சற்று நிதானித்தாலே போதுமானதாக இருக்கும். அத்தகையதொரு தருணத்தை நம்
மனங்களில் படர செய்கின்றது சு.யுவராஜனின் ‘கருப்பண்ணன்’ கதை.
ஸ்கார்புரோ தோட்ட மக்களின் மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று
பாதுகாப்பாக மாட்டின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைப்பதுதான் கருப்பண்ணனின்
அன்றாட கடமை. தன் கடமையுடன் கண்ணியத்தையும் சேர்த்துக் கொள்கின்றார். கவனம்
சற்று சிதறினாலும்கூட மாடுகளுக்கு ஆபத்து, அதன் விளைவால் கருப்பண்ணனுக்கும்
ஆபத்து. இதை நினைவிற்கொண்டே அவரது பணி தினமும் தொடங்கி முடிகின்றது.
உறவுகளற்ற அவருக்கு உணவு சமைத்து தருகின்றார் ராஜாலு அக்கா. அவரின் பேத்தி
லட்சுமி மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார் கருப்பண்ணன். தன் மாசில்லா
மழலையின் அன்பால் கருப்பண்ணனின் உணர்வில் கலக்கின்றாள்.
அறிவில் பதியாத கல்வி, ஐந்து அடிக்கு மேலில்லாத உயரம், மரம் சீவும் திறன்
இல்லாமை, நாட்டுப்பிரஜை என்ற உரிமையைத் தராத சிவப்பு அடையாள கார்டு என
புதைந்து அவ்வப்போது தலைக்காட்டும் குறைகள் அவருள்ளே வேதனையைக்
கிளப்பிக்கொண்டே இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மருந்தாய் மழலை அன்பைத்
தருபவளாய் லெட்சுமி மட்டுமே அவருக்கு இன்பம் தருகின்றாள். ஒருநாள்
மேய்ச்சலில் கறுப்பு வாலும் விரிஞ்ச மூக்கனும் காணாமல் போகின்றன. தவித்துப்
போகும் கருப்பண்ணனைப் கறுப்பு வாலுக்கு உரிமையாளரான பெரியசாமி வசைகளால்
வதைக்கின்றார். வெறுமை நிறைந்த வாழ்வு தற்கொலைக்குத் தள்ளுகின்றது. சட்டென
அடுத்த கணமே லெட்சுமியின் நிழல் நினைவில் விழ தற்கொலையை உதறுகின்றார்.
தோட்ட மக்களின் அக புற வாழ்க்கையின் சிறு வடிவம் இக்கதை. தோட்டங்களின்
புறங்கள் தெளிவாய் சிந்தனைகளில் பதிந்துவிடுகையில் அகங்களையும் கொஞ்சம்
காட்டி சிந்திக்க வைக்கின்றது. மனிதர்கள் பட்டணத்தில் மட்டும் வாழவில்லை;
தோட்டங்களிலும் வாழ்கின்றனர். பட்டணங்களில் இருக்கும் மனிதக்குணங்கள்
தோட்டங்களிலும் உண்டென கதையின்வழி உணரமுடிகின்றது. எப்பொழுதும்
பட்டணங்களில் வாழும் மனிதர்களின் குறைகளையே மைக்ராஸ்கோப் கொண்டு பார்க்கும்
கண்களுக்கு இக்கதை ஒரு மறுமலர்ச்சியைக் கண்டிப்பாக ஏற்படுத்தும்.
உறவுகளற்ற தனக்கு உறவென தோட்டத்து மக்களையே ஏற்றுக்கொள்ளும் கருப்பண்ணனின்
மனம், தன்னைச் சுற்றி இருப்பதோ நேசமற்ற உலகமென உணரவில்லை. அதை உணரும் கணம்
அவரது வாழ்க்கையை வெறுமை சூழ்ந்து கொள்கின்றது. அன்பில்லா இடைவெளிகளை
வெறுமை வெகு விரைவாக நிரப்பிக்கொண்டு விடுகின்றது. தற்கொலையின் விளிம்பில்
நிற்கும் கருப்பண்ணனின் முடிவை முறியடிக்கின்றது மழலையின் அன்பு. அன்பின்
வலிமையை உணர செய்யும் கதையின் முற்றுப்புள்ளி அன்பை உணர்ந்த மனங்களுக்கு
இதமான திருப்தியைத் தருகின்றது.
கதையில் வரும் சீனரான அலீனுக்குச் சீனத்தோடு மலாய், ஆங்கிலம், தமிழ்,
தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பேச முடிகிறது. அலின் மற்றும்
கருப்பண்ணனைத் தனிமனிதர்கள் என்ற எண்ணத்திலிருந்து சற்று விலகி சமுதாய
நோக்கில் ஒப்பிடும் போது தன்னுடன் ஒப்பிட்டு கருப்பண்ணன் விடும் பெருமூச்சு
நம்மிடையும் வெளிப்படுகின்றது.
கருப்பண்ணன் தற்கொலையிலிருந்து மீண்டுவிட்டார். ஆனால் வைக்கம் முகம்மது
பஷீரின் (தமிழில்: சுரா) ‘நீல வெளிச்சம்’ என்ற கதையில் வரும் பார்கவி
தற்கொலையைக் கடந்துவிட்டவள். பார்கவி நிலையத்துக்கு வாடகைக்கு வரும்
கதைசொல்லி அதைக் கேள்விப்படுகின்றார்.
“ஒரு பொண்ணு அங்கே கிணத்துல குதிச்சு செத்துட்டா. அவ ராத்திரி நேரத்துல
அங்க வர்றதா பேச்சு. சார்... உங்களுக்குப் பேயைப் பார்த்து பயம் கிடையாதா?
”
“பல பேரு அங்க வந்து தங்கி இருக்காங்க. ராத்திரி நேரங்கள்ல வாசல் கதவுகள்
படார்படார்னு அடிக்கும். தண்ணீ வர்ற குழாய் அதுவாகவே திறந்து தண்ணீர்
வழியும்..”
கதைசொல்லி வாடகை வீட்டில் தான் பார்த்திராத பார்கவியிடம் பேச
தொடங்குகின்றார். இசைத்தட்டைப் பாட வைத்து பார்கவியைக் கேட்க சொல்கின்றார்.
காதலுக்காக உயிர் துறந்தவளின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார்.
பார்கவியிடம் அன்பாக பழகுகின்றார். பார்கவியின் உருவமும் குரலுமற்ற உயர்ந்த
அன்பினில் நனைந்த உறவொன்று பிறப்பெடுக்கின்றது.
ஓர் இரவில் கதைசொல்லி கதை எழுதிக் கொண்டிருக்கும்போது விளக்கில்
மண்ணெண்ணெய் முடிந்துவிடுகின்றது. நண்பர்களிடம் மண்ணெண்ணெய் வாங்கி வர
வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்புகின்றார். மழை பெய்து ஓயும்வரை நண்பர்களுடன்
சீட்டாடுகின்றார். மண்ணெண்ணெய்யுடன் வீடு திரும்ப ஏறக்குறைய மூன்று மணி
நேரங்கள் ஓடிவிட்டன. வீடு திரும்பும் வழி நெடுகிலும் கும்மிருட்டு
கவ்வியிருந்தது. கதைசொல்லி பூட்டிச் சென்ற வீடு பூட்டியபடியே உள்ளது.
வீட்டில் நுழைந்து பூட்டையும் தாழ்ப்பாளையும் திறந்தவருக்கு அதிர்ச்சி.
மூன்று மணி நேரங்களுக்கும் முன்னதாக முற்றிலும் மண்ணெண்ணெய் தீர்ந்து
அணைந்துவிட்ட விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. பிரகாசமான நீல வெளிச்சம்
அறை முழுவதும் பரவியிருக்கின்றது.
‘மண்ணெண்ணெய் இல்லாமல் அணைந்துபோன விளக்கை யார் எரிய வைத்தது? பார்கவி
நிலையத்தில் இந்த நீல வெளிச்சம் எங்கே இருந்து வந்தது?’ என கதைசொல்லி விடை
தேட முயல்கையில் பல அர்த்தங்களைக் கொண்ட விடைகள் நம் முன்னே அணிவகுத்து
நிற்கின்றன.
தற்கொலைக்குச் சென்ற உயிரை திருப்பித் தந்த மனதிலும் தற்கொலையைக்
கடந்துவிட்ட மனதிலும் நிரம்பி இருந்தது என்னவோ அன்பு மட்டும்தான்.
|
|