|
|
சமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப்
பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில்
'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில்
வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில்
கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப்
படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை
வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான
'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும்
மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12
முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும்
பெற்று வரும் ஒரே எழுத்தாளர். அவருடைய சமக்காலத்து எழுத்தாளர்களில் பலர்
இன்று போட்டிக்கான நீதிபதிகளாகப் பணியாற்ற அவர் மட்டும் இன்னும் போட்டியில்
களம் காண்பவராகப் பவனி வருகிறார்.
‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17
சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகள் எப்பொழுது எழுதப்பட்டிருக்கக்கூடும்
என்கிற தகவல் இல்லையென்பதால் இவையாவும் அவருடைய அண்மைய கதைகள் என்றும்
சொல்ல முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பத்திரிகைகளில், இணைய
பத்திரிகைகளில், சிற்றிதழ்களில் பிரசுரமானவையாகும். ஒரு சிறுகதையை
விமர்சிப்பதற்கு முன் எனக்கு எப்பொழுதும் ஒரு தயார்நிலை தேவைப்படுகிறது.
கல்வியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாட்டு விமர்சனம் அல்லது
திறனாய்வு ஒரு பக்கமும் கா.நா.சு, சுந்தர ராமசாமி போன்றவர்கள்
உருவாக்கியிருக்கும் இரசனை விமர்சனம் ஒரு பக்கமும் திரண்டிருக்க நம்முடைய
விமர்சனம் எதைச் சார்ந்திருக்கும் என்பதில் ஒரு கேள்விக்குறி.
விமர்சனக் கோட்பாடுகள் சில சமயங்களில் நாம் மதிப்பீடப் போகும்
கதைக்குள்ளிருக்கும் நவீன கூறுகளுக்கு ஏற்புடையதற்றதாக இருக்க
வாய்ப்புண்டு. ஆனால் தீவிரமான வாசிப்பின் வழி எந்தக் கோட்பாட்டு
வழிக்காட்டுதலுமின்றி ஒரு பிரதியின் ஆழத்தை நம்மால் சென்றடையக்கூடும். இது
வாசகனின் அனுபவமும் பயிற்சியும் பொருத்ததாகும். ஒரு வாசகனாக இன்று
தமிழ்ச்சூழலில் பலர் ரசனை விமர்சனங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ரசனை
விமர்சனம் விவாதத்திற்குரியதா எனக் கேட்டால் அது அவரவர் இரசனையைச்
சார்ந்தவை எனச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் அவர்களின் இரசனையே
அவர்களின் வாசிப்பின் அனுபவத்தையும் அது அவர்களைக் கொண்டு போய் சேர்க்கும்
எல்லையையும் அடையாளப்படுத்திவிடும். ஆகையால் இது என் இரசனையின்
அடிப்படையில் உருவாகும் சிறுகதை நூல் விமர்சனம் என்பதை முன்னமே
சொல்லிவிடுகிறேன்.
புத்தகம் பெற்று அக்கதைகளை வாசிக்க நேர்ந்த என்னுடைய சில கதைகளையொட்டிய
விமர்சனம்:
1. எதிர்வினைகள்
கோ.புண்ணியவான் ஒரு நல்ல கதைச்சொல்லி என்பதற்கு இக்கதை ஒரு
எடுத்துக்காட்டு. வாசகனுக்கு மிக நெருக்கமான கதையாடலும் மொழிநடையும்
கையாளப்பட்டிருக்கின்றன. கதையின் தொடக்க வரி சாமிக்கண்ணு தற்கொலை செய்து
கொண்டதைச் சொல்வதன் வழி கதைக்குள் ஒரு வாசகனை இலாவகமாகப் பொருத்த
முடிகிறது. அந்த மரணம் நிகழ்ந்ததற்கான காரணத்தைத் தேடி மனம் கதை முழுக்க
தீவிரமாகப் பரவி செல்லும். இது வாசகன் உருவாக்கிக்கொள்ளும் மனநிலை. ஆனால்
இந்த முதல் வரியே சில சமயங்களில் கதையின் ஒட்டுமொத்த போதாமையையும் கண்டடைய
ஒரு முக்கியப் புள்ளியாக இருக்கும் என நானும் முதலில் அனுமானிக்கவில்லை.
சாமிகண்ணு ஏன் தற்கொலை செய்திருக்கக்கூடும் எனக் கதைக்குள் மாமிசத்தைத்
தேடி ஆக்ரோஷமாக அலையும் புலியைப் போல வேட்டையாட நேர்ந்தது. மாமிசத்தைத்
தேடி நுழைந்த புலிக்கு ஒரு துண்டு எலும்பு மட்டுமே கிடைத்தது என்றால்
எத்தனை பெரிய ஏமாற்றம் அது? அது என்னுடைய ஏமாற்றமா அல்லது பொதுவாக எல்லாம்
வாசகனுடைய ஏமாற்றமாக இருக்குமா என்பதில் திடீர் சந்தேகம் எழுந்தது. இந்தக்
கதை பிரசுரமான காலக்கட்டத்தில் இதே சந்தேகம் எழுத்தாளர்
ரெ.கார்த்திகேசுவிற்கும் உருவாகியிருக்கிறது. கோ.புண்ணியவானை அழைப்பேசியில்
அழைத்து அவரும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார். “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை
செய்து கொண்டான்?”. கதையை மீண்டும் இரு முறை வாசித்துப் பார்த்தேன்.
கதைக்குள் ஒலிக்கும் தொனியும் சாமிக்கண்ணு தற்கொலை செய்து கொள்வதற்கும் ஏதோ
ஒட்டாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
எதிர்வினைகள் எனும் சிறுகதையின் கதைச்சொல்லி சாமிகண்ணுவின் மனைவியான
சாரதாவின் பக்கம் அதிகளவில் ஒழுக்கம், பெண்ணியம் சார்ந்து
சாய்ந்திருக்கிறது. கதை முழுவதும் சாரதாவை நியாயப்படுத்துவதிலேயே ஒவ்வொரு
காட்சிகளும் நகர்கின்றன. கதையை வாசித்து முடிக்கும் வாசகன் சாமிக்கண்ணு ஏன்
தற்கொலை செய்து கொண்டான் என்ற காரணத்தை மறந்து சாமிக்கண்ணு
செத்துப்போனதுதான் நல்லது எனவும் அதன் மூலம் சாரதாவிற்கு ஒரு விடுதலை
கிடைத்திருக்கிறது எனவும் ஒரு பெண்ணிய பார்வையை அடைந்துவிடக்கூடும்.
கதையின் முதல் வரியில் இருந்த யதார்த்தம்/ அல்லது இலக்கியத்தன்மை,
கதைக்குள்ளிருக்கும் மையச்சரடுகளில் ஒரு பெண்ணிய பிரச்சார நிலையை எட்டி,
கதையின் முடிவில் எழுச்சிக் குரலாக மாறுகிறது. ஒரு மரணம்
நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தற்கொலை. அதைப் பற்றிய ஆழமான ஓர் உணர்வை அடைய
முடியவில்லை. சாமிக்கண்ணு வெறும் குடிக்காரனாகவும், கொடுமைக்காரனாகவும்,
சந்தேகம் பிடித்தவனாகவும் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ்
சினிமாவின் வில்லன் மீது உருவாகும் அதீதமான வெறுப்பையே கதை சாமிக்கண்ணுவின்
மேல் கட்டமைக்கிறது.
கவிதையில் உருவாகும் போதாமையும் மௌனமும் எப்பொழுதும் வாசகனுக்குப் பெரிய
சவால். அதனை அவன் நிரப்பும் கணம் அது ஒரு கலை எழுச்சியாக மாறிவிடும். அது
கண்டுபிடிப்பல்ல. மனத்தின் தீவிரமான உணர்வு சார்ந்த தேடல். ஆனால் சிறுகதை
அப்படி அல்ல. வாசகனுக்காக அவன் சிந்திப்பதற்காகச் சில இடங்களை ஆழமாக
விவரிக்காமல் மேலோட்டமாக விட்டுச் செல்வதெல்லாம் ஒரு வகையில் தேக்கம்தான்.
வாசகனுக்காக ஒரு இடைவெளியை விட்டுச் செல்வதென்பது நம்மை அறியாமல்
நிகழக்கூடியது. நாம் கூடுதல் விழிப்புடன் அதைச் செய்ய நேர்ந்தால் அதுவும்
ஒரு கதையை இயந்திரத்தனமாக நிர்வகிப்பதற்குச் சமமாகும். கதைக்குள் இருக்கும்
ஒரு மைய நிகழ்வின் சில இடங்களை வாசகனின் ஊகத்திற்கு விட்டுச் செல்வதற்கும்
அந்த மைய நிகழ்வை முற்றிலும் விவரிக்காமல் விட்டுவிடுவதற்கும் மத்தியில்
நிறைய வேறுபாடுகள் உள்ளன. கோ.புண்ணியவானின் கதையில் சாமிக்கண்ணு அடைந்த
மனநெருக்கடிகள் அல்லது உளப்பாதிப்புகள் கிஞ்சுற்றும் சொல்லப்படவில்லை.
தற்கொலை செய்து கொண்டவனின் மனநிலை பற்றி வாசகன் அனுமானிப்பதற்கு முதலில்
கதையாசிரியர் அவனுடைய ஆழ்மனம் பற்றி கொஞ்சமாவது சொல்லியாக வேண்டும்.
கதைக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சாமிக்கண்ணுவின் மரணத்தின் முழுப்
பின்னணியும் வாசகனே தேடிச் செல்ல வேண்டுமென்றால், இக்கதையில் வாசகனின்
பொறுப்பு என்னவாக இருக்கும்? துப்பறியும் வேலையா? அல்லது கொலைக்குற்றத்தைக்
கண்டறியும் வேலையா?
குடித்துவிட்டு சாலையில் படுத்துக்கிடப்பதும், மனைவியைச் சந்தேகப்படுவதும்
ஒருவன் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருக்கும் எனக் கதைச்சொல்லி கதை
முழுக்க எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. நியாயப்படுத்த வேண்டாம் ஆனால்
கதைக்குள் அதைப் பற்றி விவாதமாவது செய்திருக்க வேண்டும் அல்லவா? தன்
மனைவிக்கும் அவனுக்கும் நிகழ்ந்த மனப்போராட்டத்தின் உச்சம் என்ன?
சாமிக்கண்ணு எப்படிப்பட்டவன்? குடிப்பதும் சாலையில் விழுந்துக்கிடப்பதையும்
தவிர அவனுடைய மனத்தின் இயக்கம் என்ன? எந்த இடத்தில் அவனுக்குள்
சேமிக்கப்பட்டிருந்த தாழ்வுமனப்பான்மையும் உக்கிரமும் அவனைக்
கொலைச்செய்திருக்கக்கூடும்? கதைச்சொல்லியின் குரலிலிருந்து ஒரு சராசரி
வாசகன் அடையும் இறுதிநிலை சாமிக்கண்ணுவின் கொடுமையால் தற்கொலை செய்திருக்க
வேண்டியது சாரதாதானே? மன்னிக்கவும் இது பெண்ணியக் கதை அல்லவா? ஆகையால் சாக
வேண்டியது ஆண் வர்க்கமே. இது கதையின் வழி அடையும் மிகப்பெரிய மனச்சாய்வு.
இயல்பாக வாசகனுக்குள் எழும் கேள்வி பிறகு கதையின் தொனியைக் கண்டடைந்த
அடுத்த கணமே சமரசமாக மாறி ஓய்ந்துவிடுகிறது.
இதுபோன்ற கதையின் தேவை என்ன? எழும் கேள்விகளுக்குக் கட்டாயம் கதைக்குள்
பதில் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. அது வாசகனை எல்லாம்வகையிலும்
திருப்திப்படுத்த முயல்வது. அப்படி எந்தப் படைப்பாளனும் செய்ய முடியாது.
ஆனால் கதையின் நியாயத்தைத் தர்க்கிக்காமல் விட்டுவிடுவது கதையின் போதாமையே.
ஒரு கதையில் போதாமையே இருக்க முடியாதா? அப்படியொன்றும் இல்லை. எல்லாம்
கதைகளிலும் எப்படியும் சில தகவல் பிழைகளும் போதாமைகளும் இருக்கவே
செய்கின்றன. இதைப் பெரும் குற்றமாக நான் முன்வைக்கவில்லை. விமர்சகன்
போதாமைகளையும் தொட்டு செல்வதன் முறைமையையே பின்பற்றியிருக்கிறேன்.
வாசகனுக்கான இடைவெளிக்கும் கதைக்குள் நிகழ்ந்திருக்கும் தேக்கத்திற்கும்
இடையே உள்ள வித்தியாசங்கள் ஒவ்வொரு வாசகனும் கவனிக்க வேண்டியவை. உள்ளே
நுழைந்து அதனை விவாதிப்பதற்கும் ஊகிப்பதற்கும் வாசகனுக்கு குறைந்தபட்சம்
வாசல் தேவை. வாசலே இல்லையென்றால் துளையிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
இப்படியான வன்முறைகளை நிகழ்த்த வாசகனுக்குப் பயிற்சியளிப்பது காலப்போக்கில்
கதை வடிவத்தைவிட்டே அவன் ஓடக்கூடும். தேர்ந்த முறையில் அவன் உள்ளே
நுழைவதற்கு வாசல்களை மெல்லியத்தன்மையில் பின்னுவதும் ஒருவகை இலக்கிய உத்தி.
அதனையாவது கையாளும் போதுமான சிந்தனையைப் படைப்பாளர்கள் கொண்டிருக்க
வேண்டும்.
2. சருகுகள்
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இக்கதைக்கு ‘கதைக்குள்ளிருக்கும் கதையின்
கதை’ பகுதியில் வேறு யாருமே தன்னுடைய விமர்சனத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லை.
இக்கதை எழுதப்பட்ட காலக்கட்டம் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இது
புண்ணியவானின் பழைய கதை என மட்டும் சொல்ல முடியும். இக்கதையின் மொழிநடை
அவருடைய சமீபத்திய மொழிநடையிலிருந்து நிறையவே வேறுப்பட்டிருக்கிறது.
கதையின் மையம் சில சமயங்களில் கதாசிரியர் எடுத்துக்கொண்ட முக்கியப்
பிரச்சனையாக இருக்கக்கூடும் அல்லது கதையின் திருப்பமே சில சமயங்களில்
மையமாக ஆகிவிடும். ஆனால் இக்கதையின் மையப்பிரச்சனை குடும்பச் சிதைவும்
உறவுகளின் புறக்கணிப்பும் மட்டுமே.
80களுக்குப் பிறகு வெளியான பல தமிழ்ப்படங்களில் குடும்பத்துக்காக உழைத்து
தன்னையே தியாகம் செய்து தம்பிகளைக் கரை சேர்த்த அண்ணன்களின் துயரக் கதைகளை
நாம் பார்த்திருப்போம் அல்லவா? “அண்ணன் என்ன தம்பி என்ன..” என ரஜினிகாந்த்
கௌதமியை நோக்கி பாடும் பாடலில் உள்ள அத்தனை நாடகத்தனமான நெகிழ்ச்சியும்
புண்ணியவானின் இக்கதையிலும் இருக்கின்றன. சராசரியாக அது போன்ற
திரைப்படங்களையே மீண்டும் கதை வடிவத்தில் வாசிப்பது போன்ற அனுபவத்தை
மட்டுமே பெற முடிகிறது. அதைக் கடந்த வாழ்வு குறித்த எந்தத் தீவிர
விசாரணையும் அவதானிப்பும் கதையில் இல்லை. வழக்கம் போல குடும்பத்துக்காக
உழைத்துக் கடைசியில் சொந்த சகோதரர்களால் ஒதுக்கப்பட்டு காணாமல்
போய்விடுகிறார் மையக்கதைப்பாத்திரம். இறுதியில் அண்ணன் இறந்துவிட்டதாகக்
கேள்விப்பட்டும் அதை ஒரு செய்தியாகக்கூட மதிக்காமல் அவர்களின்
புறக்கணிப்பின் கொடூரத்தைக் காட்டுகிறார். தர்மத்துறை படத்தில் சொந்தத்
தம்பிகளே ரஜினியின் குழந்தையைக் காரில் மோதி கொன்றுவிடுவதைப் போல இப்படிக்
கட்டமைக்கப்பட்ட கதையோடு ஒட்டாத பல காட்சிகள் கதை முழுக்க நிரம்புகின்றன.
துயரத்தைத் தன் வார்த்தைகளால் பிழிந்து காட்டி வாசகனுக்கு அலுப்பைத்
தருவதோடு கதை அதன் மரபுபடி முடிந்துவிடுகிறது.
புண்ணியவானின் கதையில் தோற்றவர்கள் எல்லோருமே கடைசியில்
குடிக்காரர்களாகத்தான் அலைகிறார்கள். அதுவும் குடித்துவிட்டு சாலையில்
படுத்துக்கொள்வதை ஒரு மரபாகவே கடைப்பிடிக்கிறார்கள். வில்லன் என்றால்
தடுப்பு மீசையும் பருவும் இருக்க வேண்டும், காதலில் தோற்றவனுக்குக்
கட்டாயம் தாடி இருக்க வேண்டும் எனும் மசாலா சினிமா மரபை நல்ல சிறுகதை
ஆசிரியர்கள் தவிர்ப்பதுதான் அவர்களின் கதைக்குள் வரும் கதைப்பாத்திரங்களின்
மீதான நாடகியவில் பார்வையை விலக்கும் என நம்புகிறேன். குடித்துவிட்டு
சற்றும் தன் தன்னம்பிக்கையை இழக்காமல் வீடு வந்து சேர்ந்தவர்களே இல்லையா
என்ன? அவர்கள் தன் தடுமாற்றங்களைச் சரி செய்துகொள்ளும் சூழல்களைச்
சொல்வதில் என்ன தடை இருக்கப் போகிறது? அப்படிப்பட்ட மனிதர்களே இல்லை
என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால் குடித்தவர்கள் மொக்கப் போட்டுக்கொண்டு
போதையில் சாலையில்தான் படுத்துக்கிடப்பார்கள் என ஒரே மாதிரியான சூழலைச்
சொல்லி சொல்லி போதையின் இயலாமையை அந்த எல்லையோடு முடித்துக்கொள்வது
பாரம்பரியமாகிவிடக்கூடாது என்பதே என் விமர்சனம். இக்கதையில் வேறு எதுவும்
பெரியதாக விமர்சிக்கும் அளவுக்கு இல்லை.
3. நிகரற்றவன்
சமக்கால இலக்கிய சூழலில் மிகுதியாகிவிட்ட ஒரு சுரண்டலை மையப்படுத்தும் நல்ல
கதை. கதையின் மொழிநடை பகடி செய்வதையும் தன் இயலாமையைக் கேலியாக மாற்றி அதை
ஒரு பொது நியாயமாக ஆக்குவதிலும் தீவிரம் காட்டியிருக்கிறது. இது போன்ற
கதைகள் தமிழில் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயமோகன்
தீராநதியில் எழுதிய “உட்கார்ந்து யோசிக்கும்போது” எனும் தொடர் பத்தியைக்
குறிப்பிடலாம். இலக்கியக் கோட்பாடுகளை இயல்பான முறையில் கேலி செய்து
எழுதப்பட்டன.
புத்தக வெளியீட்டுக்கு நூல் விமர்சனம் படைக்கச் சென்ற எழுத்தாளர்
ஒருவருக்கு நிகழும் அவமதிப்பும் புறக்கணிப்புமே கதையின் மையம். அதனை ஒரு
புகார் போல கதை நெடுக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கதையுடன் எனக்கு
மிகுந்த நெருக்கம் இருக்கிறது. புண்ணியவான் எழுதிய இக்கதை முற்றிலும் உண்மை
கதையே. அந்தப் புத்தக வெளியீட்டிற்கு கோ.புண்ணியவானும் நானும்
சென்றிருந்தேன். அத்தனை தூரம் பயணம் செய்து வேதனைக்குள்ளானது அவர் மட்டும்
அல்ல, நானும்தான். இரவில் காரை அவ்வளவு தூரம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல்
அந்த ‘நிகரற்றவன்” புத்தக வெளியீட்டில் நடந்த அத்தனை கேவலங்களையும் நானும்
தரிசித்து மனதளவில் வேதனையடைந்திருந்தேன். அதை நான் ஒரு எதிர்வினையாகக்கூட
எழுதியிருந்தேன். புண்ணியவான் அதை ஒரு கதையாக எழுதியிருக்கிறார். இது ஒரு
நேரடி அனுபவம் என்பதால் இக்கதையை வாசிக்கும்போது காட்சிகளை உயிர்ப்புடன்
நினைக்குக் கொண்டு வரமுடிகிறது.
கதையோடு ஒட்டுமொத்த இலக்கிய நூல் வெளியிடுகளுக்குப் பின்னாலிலுள்ள
மோசடிகளையும் விலை போகும் அவலங்களையும் கதையாசிரியர் சுட்டிக்காட்டி
விமர்சித்துக்கொண்டே வருகிறார். கதையின் மூலம் ஒரு பாதிக்கப்பட்ட
எழுத்தாளனின் வாக்குமூலமும் அனுபவமும் எதிர்வினையும் கொஞ்சம் நகைச்சுவை
கலந்து வழங்குவதோடு இக்கதை நின்றுவிடுகிறது. இப்படியொரு கொடுமையா என்ற ஒரு
விழிப்புணர்ச்சியுடன் வாசகன் கதைக்குள்ளிருந்து கதைக்குள் பின்னப்பட்ட
சம்பவங்களிருந்து வெளியேறி ஒரு பார்வையாளனாக மாறிவிடுவான். சமூகத்திற்குள்
ஒரு தரப்பினர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளை ஓர் உண்மை சம்பவத்தின்
வாயிலாக அம்பலப்படுத்திக் காட்டுகிறார் கதையாசிரியர். இது ஒரு வகையான
காட்சிகளால் ஆன ஒரு சம்பவத்தின் விவரிப்பு. அதற்குள் ஒரு விமர்சனமும்
புகாரும் மட்டுமே இருக்கிறது. வாசகனை வாழ்க்கையின் எந்த எல்லையை நோக்கியும்
நகர்த்தாமல் ஒரு கொடுமையை தான் பட்ட துன்பத்தைச் சொல்லுவதாக
தேங்கிவிடுகிறது.
கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடையைப் பற்றி ஒரு விவாதம்
முன்பகுதியில் பேசப்பட்டிருந்தன. கதையைப் படைக்க கதையாசிரியன் தனக்கு
விருப்பமான ஒரு மொழிநடையைத் தேர்ந்தெடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மொழிநடை கதையைப் படைக்கும் விதத்தில் என்ன
மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை வாசகன் ஆராய நேர்ந்தால் அதைத்
தடுக்கவும் முடியாது. கதையில் பகடியை மேலும் அதிகரித்துக்காட்டவே இந்த
மொழிநடையைக் கதையாசிரியர் பாவித்திருப்பார் எனத் தோன்றுகிறது.
கதையாசிரியர்
மேலும் சில கதைகள் புதிய உத்திகளைப் பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
கதையைத் துண்டு துண்டாக உடைத்துச் சொல்லும் உத்தி முதல், உபக்கதைகளை எழுதி
அதற்குத் தலைப்பிட்டு மையக்கதையைப் பல கிளைகளாக மாற்றுவதுவரை
கோ.புண்ணியவான் மேலும் சில நவீன இலக்கிய முயற்சிகளைச் செய்திருக்கிறார்.
‘சருகுகள்’ கதையைப் போல சில பழமையான கதைகளும் இடம் பெற்றுள்ளன.
கோ.புண்ணியவானின் கதை சொல்லும் முறையும் மொழியும் பாராட்டத்தக்கவையாகும்.
மலேசியத் தமிழ் சூழலில் அவர் நல்ல கதைச்சொல்லி என்பதைவிட தொடர்ந்து தன்னைப்
புதுப்பித்துக்கொள்ள விரும்பும் கதைச்சொல்லி எனச் சொல்வதே சிறந்ததாக
இருக்கும். மூத்த எழுத்தாளரான கோ.புண்ணியவான் இதற்குமுன் சமூகத்தின்
அவலங்களை அதன் துயரங்களை உச்சமாக ஓங்கி ஒலிக்கும் பாணியிலேயே கதைகளைச்
சொல்லி வந்தார். வாழ்க்கையின் பரப்பரப்பான சூழலில் சிக்கிக்கொண்டவர்கள்
எப்படி அருகாமையிலுள்ள மனிதர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதும் குடும்ப
உறவுகளின் மத்தியில் மன இடைவெளிகள்/ முரண்கள் பெரும் சுவர் போல எழும்பி
அவர்களுக்குள் வன்மையை உருவாக்கி சிதைக்கிறது என்பதும் கோ.புண்ணியவானின்
முதல் கட்ட கதைச்சொல்லலின் அடிநாதமான இருந்திருக்கின்றன.
அவருடைய சமீபத்திய கதைகள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தை நோக்கி
தத்துவார்த்தமாக விமர்சனக்களுடன், உரையாடல்களுடன் நீள்கின்றன. ஆனால் அது
வாசகனைக் கொண்டு போய் சேர்க்கும் புள்ளி அதனுடன் சுருங்கிவிடுகிறதா அல்லது
மேலும் அகம் சார்ந்து அவனை விரித்து கதையோடு அகலமாக்குகிறதா என்பதை இந்தச்
சமூகம் புண்ணியவான் கதைகள் மீது உருவாக்கும் எதிர்வினைகள் விமர்சனங்கள்
சார்ந்தவை.
நிகழ்ச்சி குறித்து சிறு தகவல்கள்:
சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்றகத்தின் விரிவுரையாளர் திரு.தமிழ்
மாறன் அவர்கள் சிறுகதை நூலை அறிமுகம் செய்து பேசினார். சில இடங்களில்
அவரின் அறிமுகத்தில் மிகையான பாராட்டுதல் ஒரு பெரும் துதிப்பாடலையே
நிகழ்த்திவிட்டிருந்தது. ஒரு படைப்பாளியை மதிக்காத சமூகம் எந்தவகையிலுமே
முன்னேற்றம் காணாது என்ற ஒரு வரவேற்கத்தக்க கருத்தாக்கத்தை முன்வைத்த அவர்,
அதீதமான முறையில் ஒரு பொதுமேடையில் ஒருவரைப் புகழ்வது எத்தனை நெருடலான
ஒன்று என்பதை அறியாமல் விட்டிருந்தார். தமிழ்மாறன் அவர்களின் அறிமுகம்
தொடக்கக் கால வாசகனுக்கு மிகுந்த ஆர்வத்தையும் மேலோட்டமான தகவல்களையும்
கொடுக்கக்கூடியது என்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. முதுகில் தூக்கி
சுமக்க வேண்டும், எழுதியவருக்கு முத்தமிட வேண்டும் எனச் சொல்வதெல்லாம் அவர்
மிகவும் மலிவான ஒரு சலனத்திற்கும் உணர்ச்சிவசப்படலுக்கும் ஆளாகியிருப்பதைக்
காட்டுகிறது. இதற்கு முன் பொதுமேடையில் தமிழ்மாறன் உரையாற்றும்போது ஒரு
முதிர்ந்த விரிவுரையாளரையே நான் பார்த்திருக்கிறேன். நமக்கு வேண்டியது
விரிவான ஆழமான விமர்சனமும் பார்வையுமே தவிர மிகையான
உணர்ச்சிக்கொந்தளிப்புகள் அல்ல. அப்படிச் செய்ய நேர்ந்தால் இலக்கியமும்
அரசியல் மேடைப் பேச்சும் ஒரே ரசனையை அடைந்துவிடும் அல்லவா?
மேலும் தமிழ் மாறன் அவர்கள் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அது
முக்கியமானதா அல்லது இல்லையா என்பதைப் பிறகுதான் தீர்மானித்தாக வேண்டும்.
கோ.புண்ணியவான் புனைவின் இரண்டாவது கட்டத்திலிருந்து அக்கதையைச் சொல்கிறார்
என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது என்ன இரண்டாவது கட்டம் எனத்
தெரியவில்லை. அவர் புனைவின் முதல் கட்டத்தைப் பற்றியும் இதற்கு முன்
சொல்லியதும் இல்லை. ஆகையால் அந்த விசயத்தில் பெரும் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாகக் கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் தொடர்பான சில எதிர்வினைகளை
முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் எங்கு எப்பொழுது பிரசுரமானவை
என்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கவில்லை. பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது
கதைகள் எந்தக் காலக்கட்டத்தியவை என்கிற குழப்பம் ஏற்படக் காரணமாக
இருக்கின்றது. தொகுப்பில் ஒரு கதையின் தலைப்பு பிரசுரமான தலைப்பிலிருந்து
மாற்றப்பட்டிருக்கிறது. அநங்கம் இதழில் பிரசுரமான கோபாலும் கோபாலைச் சுற்றி
பிண்ணப்பட்ட வலையும் எனும் தலைப்பு நீருக்குள்ளிருந்து நழுவும் மீன்கள் என
மாற்றப்பட்டிருக்கிறது. படைப்பாளர் இந்தத் தலைப்பு கதைக்குப் பொருத்தமானதாக
இருந்திருக்கும் என நினைத்து மாற்றியிருக்கக்கூடும். அது அவருடைய
சுதந்திரமாகும். ஆனால் சமக்காலத்தில் அவருடைய கதைகளைப் பிரசுரித்த
இதழ்களுக்கு அவர் அளிக்கும் மதிப்பு என்ன? இன்றைய இலக்கிய மோசடிகளுக்கு
நடுவே எந்தப் புகழ்ச்சியையும் அடையாளத்தையும் விரும்பாமல் இலக்கியத்தை
மட்டும் முன்னெடுக்கும் தேவையை முன்னிறுத்தும் சிற்றிதழ்களுக்கு
படைப்பாளர்கள் அளிக்கும் இடம் என்ன? குறைந்தபட்சம் அவர்களின் படைப்புகளைத்
தொகுப்பாகும்போது அது பிரசுரமான இதழ்களைச் சுட்டிக்காட்டுவது இலக்கியத்தைச்
சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இதழியல் சூழலுக்கு ஓர் அங்கீகாரமாக
அமையும் அல்லவா? இந்த அவசியத்தைப் படைப்பாளர்கள் கவனம் செலுத்தாமல்விடுவது
கட்டாயம் விமர்சனத்திற்குரியவை என நம்புகிறேன். குறிப்பாக கோ.புண்ணியவான்
இதழுக்குப் படைப்பை அனுப்பிவிட்ட பிறகு அதை உடனேயே தன்னுடைய வலைப்பூவிலும்
பிரசுரம் செய்துவிடுகிறார். அந்தப் படைப்பு பிரசுரமான அச்சி இதழின்
பெயரைக்கூட குறிப்பிடாமல் அவர் இப்படிச் செய்வது இதழியல் சூழலில்
விமர்சனத்திற்குரியதே. இதற்குச் சான்றாக அவர் வலைப்பூவில் பிரசுரம் கண்ட
சில படைப்புகளையும் அதே படைப்புகள் அநங்கம் இதழில் பிரசுரமான மாதத்தையும்
வைத்துச் சொல்லமுடியும்.
இதுபோன்ற செயல்கள் இதழகளின் மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது.
பத்திரிகைகள் படைப்பாளனைச் சுரண்டுவதை நாம் பெரும் கேள்விகளாகச்
சமூகத்திற்கு முன் வாதிடுகிறோம். ஆனால் படைப்பாளர்கள் பத்திரிகையை,
குறிப்பாக எந்த இலாப நோக்கமும் அற்ற நிலையில் வெளிவரும் சிற்றிதழ்களைச்
சுரண்டுவதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறோம் என்பதை விவாதிக்க வேண்டிய ஒரு
காலக்கட்டம் இது. படைப்பாளர்களின் படைப்புகளை வைத்து இலாபமும் புகழும் ஈட்ட
எந்தவகையிலுமே நோக்கமில்லாத இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கும்
சிற்றிதழ்களுக்கு ஏற்படும் இதுபோன்ற சிறு சிறு கவனமின்மையைச் சொல்லித்தான்
ஆக வேண்டும்.
அடுத்ததாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘கதைக்குள்ளிருக்கும் கதையின்
கதை’ எனும் பகுதி வாசகனுக்கான ஒரு தடையாகக் கருதுகிறேன். கதைக்குள்
இருக்கும் கதையைக் கண்டடைவது யாருடைய வேலை? அந்தப் பிரதியை வாசிக்கும் ஒரு
வாசகனுக்கே உரிய ஒன்றை கோ.புண்ணியவான் புத்தகத்தின் தொடக்கத்திலேயே
அம்பலப்படுத்தி வாசகனுக்கான வேலையைக் குறைத்திருக்கிறார். எனக்கும் ஒரு
கதைக்கும் உள்ள நெருக்கம் அல்லது உருவாகவிருக்கும் தொடர்பு வேறு யாராலும்
நிர்ணயம் செய்ய முடியாதவை அல்லது கற்றுக்கொடுக்க முடியாதவை. ஒரு கதையை
வாசிப்பதற்கு முன் படைப்பாளனே அக்கதையைப் பற்றி சொல்வதும் அல்லது
அக்கதையின் மையத்தை விவரிப்பதும் அல்லது அக்கதையையொட்டி பிறரின் பார்வையைச்
சொல்வதும் வாசிப்பிற்குப் பெரும் தடையான ஒன்றாகும். ஒரு கதை அசலாக எனக்கு
வைத்திருக்கும் அனுபவத்தை யாரெல்லாம் பங்கிட முடியும்? இதுவும் ஒரு வகையான
சுரண்டலாகவே நான் பார்க்கிறேன். ஆகையால்தான் விரைவில் வரவிருக்கும்
என்னுடைய சிறுகதை தொகுப்பில் முன்னுரை என எந்த உரையும் இல்லை. முழுக்க அதனை
அணுகும் வாசகர்களே அதனை வெவ்வேறு காலக்கட்டத்தில் வேறு வேறாக எடுத்துச்
செல்லப் போகிறார்கள். தக்க வைத்துக்கொள்வதற்கும் தூக்கி எறிவதற்கும் மிக
வசதியான ஒரு சுதந்திரத்தை வழங்கும் முயற்சி இது.
ஒரு கதை உருவான பின்புலத்தைச் சொல்வதும் அல்லது எது இந்தக் கதையை எழுதக்
காரணமாக இருந்தது எனப் பகிர்ந்து கொள்வதும் வழக்கமாகக் கையாளப்பட்ட ஓர்
உக்தி. ஆனால் கதையை வாசிக்கும் முன் அக்கதையைப் பற்றி பிறரைச்
சொல்லவிடுவதும் அதே கதையைப் பற்றி தானும் பேசுவதும் சமீபத்தில்
இலக்கியத்தில் உருவான இலக்கிய முரண் கொண்ட ஒரு முறைமையாகக் கருதுகிறேன்.
இதனையெல்லாம் வாசிக்கும் வாசகனின் மனத்தில் கதைகள் தொடர்பான ஒரு மனச்சாய்வு
ஏற்பட வாய்ப்புண்டு. யாரோ ஒருவரின் புரிதலுடன் கதைக்குள் நுழையும் வாசகன்
வலுக்கட்டாயமாக அவருடைய பிடியிலேயே கதை முழுவதையும் வாசித்து முடித்து
தனக்கான ஒரு அனுபவத்தையும் புரிதலையும் இழக்க நேரிடுகிறது.
இப்புத்தகத்தில் விமர்சனங்கள் எழுதியிருக்கும் சுவாமி பிரமானந்த சரஸ்வதி,
மணிஜெகதீசன், குமாரசாமி, சபாபதி, தமிழ் மாறன், ராஜம் ரஞ்சினி இவர்களெல்லாம்
யார்? கோ.புண்ணியவான் கதைகள் தொடர்பாகத் தன்னுடைய ரசனை விமர்சனத்தை
வழங்கியவர்கள். இது அவரவர்களின் தனிப்பட்ட இயங்குத்தளம். தன் வாசிப்பு
சார்ந்து இலக்கியத்தின் மீதான ஈடுபாடு சார்ந்து வெவ்வேறு வகையில் தங்களின்
இரசனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் கோ.புண்ணியவான்
தன்னுடைய நூலில் தொகுத்த முறை ஒரு தடையாகிவிட்டதாகக் கருதுகிறேன்.
இதெல்லாம் என்ன பணம் கொடுத்து இலக்கிய அனுபவம் பெற வேண்டும் எனப்
புத்தகத்தை வாங்கும் ஒரு வாசகனுக்கான இலவச வழிக்காட்டிகளா? ஒரு நூல்
வாங்கினால் இவர்களுடைய கதை இரசனை விமர்சனங்கள் எல்லாம் இலவசமாக
“புத்தகத்தின் தொடக்கத்திலேயே” இணைத்துத்தரப்படுமா? கோ.புண்ணியவான் கதைகள்
என்ன அத்தனை சிரமமான வடிவமா? ஒரு வாசகனால் சுயமாக உடைக்க முடியாத
சிடுக்குகள் கொண்ட கதையா? ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கினால், அதனுடன்
அதனை உபயோகிக்கும் முறையைத் தெளிவாகப் பரிந்துரை செய்திருக்கும்
வழிக்காட்டி புத்தகமும் இணைத்துத் தரப்படுவது இயல்பு. ஆனால் இலக்கியமும்
குளிர்சாதனப்பெட்டியும் ஒன்றா?
எடுத்துக்காட்டாக, க. ராஜன் இரஞ்சினி ‘நீருக்குள்ளிருந்து நழுவும் மீன்கள்’
கதையைப் பற்றி தன் பார்வையைப் பகிர்ந்திருக்கும் இடத்தில் புண்ணியவானும்
பதில் கொடுத்திருக்கிறார். அக்கதை அம்மாவின் பிம்பத்தை உடைக்கும் முயற்சி
என. அப்படியென்றால் அக்கதையை வாசிக்கும் வாசகன் இரண்டு விசயங்களிலிருந்து
தப்பிக்கவே முடியாது. ஒன்று க.ராஜம் ரஞ்சினியின் பார்வையிலிருந்தும்,
மற்றொன்று புன்ணியவான் வாக்குமூலம் கொடுத்திருப்பது போல அக்கதை அம்மாவின்
பிம்பத்தை உடைத்துக் காட்டும் என்ற பார்வையிலிருந்தும். கதையை வாசிக்கத்
துவங்கும் ஒரு தொடக்கக்கால வாசகன் மீண்டும் மீண்டும் கதையாசிரியர்
அக்கதையைப் பற்றி முன்பே சொல்லியிருந்ததை தாரக மந்திரம் போல உச்சாடனம்
செய்துகொண்டே இருப்பான். கதையாசிரியர் மேற்படி குறிப்பிட்டதிலிருந்து
நழுவாமல் கடைசிவரை அவருக்கு நேர்மையாகக் கதையை வாசித்து முடித்த பிறகு,
‘ஆமாம் அவர் சொன்னது சரித்தான்’ என அவருடைய ஒரு பிரதியாகக் குரல்
எழுப்புவான். இதுதான் நமக்கு வேண்டுமா? நான் முன்பே குறிப்பிட்டது போல
இரசனை விமர்சனம் செய்வதும் கதையாசிரியருடன் கதை சார்ந்து உரையாடுவதும்
ஆரோக்கியமான விசயமாகும். அதில் எந்தத் தடையும் மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் கதைகளை ஒன்றாகத் தொகுக்கும்போது இரசனை விமர்சனங்களை ஓர் இணைப்பாகக்
கொடுக்காமல் ஏன் முதண்மைப்படுத்த வேண்டும்? அங்கிருந்துதான் நான் என்
எதிர்வினையை முன்வைக்கிறேன். இது எப்படியிருப்பினும் ஒரு வாசகனுக்குப்
பெரும் தடைகள்தான். ஒருவேளை கோ.புண்ணியவான் அந்த விமர்சனம்-பார்வைகள்
அனைத்தையும் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இணைப்புகளாகக்
கொடுத்திருந்தால், வாசகனுக்கு அது பெரும் தடையாக இருந்திருக்காது. கதையை
வாசித்து முடித்த வாசகன் தன் புரிதலோடு பிறர் புரிதலையும் ஒப்பிட்டு
அக்கதையை மேலும் கவனப்படுத்த உதவியாக இருந்திருக்கும்.
ஒரு சாதரண குறுக்கெழுத்து பயிற்சியைக்கூட மாணவனைச் சுயமாகச் செய்யச் சொல்லி
அவனுக்கு அனுபவத்தையும் சவாலையும் வழங்கும் இக்காலக்கட்டத்தில் இதன்
அவசியம் என்ன? கதைகள் பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகத்தைக் கொடுப்பது என்றுமே
தவறாகாது. ஆனால் அதையே ஒரு நீண்ட உரையாடலாக அந்தத் தொகுப்பிலேயே அதுவும்
நூலின் தொடக்கத்திலேயே கொடுப்பது எப்படியும் வாசகனைச் சிரமப்படுத்தும்.
எனக்கெழுந்த மிகப்பெரிய கேள்வியுடன் இந்த நூல் விமர்சனத்தை
முடித்துக்கொள்கிறேன்.
1. சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?
|
|