|
|
ஷோபாசக்தி கேள்வி பதில்கள் அடுத்த இதழில் (டிசம்பர் 2011) நிறைவுபெறுகின்றது. எனவே, வாசகர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் கேள்விகளை
editor@vallinam.com.my என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக
நினைக்கிறீர்களா?
சீனிவாசன் - தமிழ்நாடு
இதற்குப் பதிலளிக்கக் கடப்பாடுடையவர்கள் நாடு கடந்த அரசாங்கம், நெடியவன்
குழு, புலிகள் ஆதரவு ஊடகங்கள் போன்றவைதான். ஆனால் அவர்கள் மக்களைச்
சுத்தலில் விட்டிருக்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பது போன்ற
பிரமையை தங்களது அரசியல் இலாபங்களிற்காக அவர்கள் திட்டமிட்டே வளர்த்து
வருகிறார்கள். அரசியல் விமர்சகர்களும், ஒருதொகை எழுத்தாளர்களும் உண்மையை
அறிந்திருந்தும் அதைப் பேசினால் அவர்கள் தனிமைப்படுத்தப்படலாம் என்ற
அச்சத்தில் வாயைத் திறக்கப் பஞ்சிப்படுகிறார்கள். எனக்கு அவ்வாறான அச்சம்
ஏதுமில்லை. பிரபாகரன் கொல்லப்பட்ட உடனேயே அது குறித்து நான் தீராநதியில்
'பிரபாகரன் ஜீவிக்கிறார்' என்று கட்டுரை எழுதினேன். பிரபாகரன்
இறந்துவிட்டதை நான் தெரிவித்தேன்.
அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளிற்காக இறந்தும் அவர் விலைசெலுத்த
நேர்ந்திருக்கிறது. அவரது அரசியலைப் பின்தொடர்ந்த மனிதர்கள் அவரின்
மரணத்தை அறிவிக்கக் கூடத் தைரியமற்றவர்களாக உள்ளார்கள். பிரபாகரன் என்ற
பெயரை வைத்து இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் மக்களிடம்
சுருட்டுவதில்தான் அவர்களின் கவனம் உள்ளது. எத்தனையோ போராளிகளின்
நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றிவைத்த அந்த மனிதருக்கு ஒற்றை
மெழுகுவர்த்தியாவது ஏற்றி அஞ்சலிக்க எவரும் தயாரில்லாதது வரலாற்றின்
துயரம்!
இம்மாதக் காலச்சுவடு இதழில் செங்கடல் படம் பற்றி (ஷுட்டிங்) கண்ணன் எழுதிய
விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
ரவி - கனடா
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட
பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் படத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சனல் 4
காட்சியிலிருந்து கடற்புலித் தளபதி சூசையின் இறுதிச் செய்திவரை செங்கடலில்
பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றே டில்லியில் நடந்த எழுத்தாளர்களின்
போராட்டமும். எழுத்தாளர்கள் நடத்திய போராட்டம் பத்துநிமிடங்கள் வரை
திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக கண்ணன் சொல்வதே தவறு. டில்லிப்
போராட்டக் காட்சி 30 வினாடிகள் மட்டுமே படத்தில் வருகிறது.
தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் ஏமாற்றப்பட்டு டில்லிக்கு
அழைத்துச் செல்லப்பட்டு துணை நடிகர்கள் ஆக்கப்பட்டார்கள், அங்கு நடந்தது
போராட்டமல்ல, ஷுட்டிங்கே என்றெல்லாம் கேஸ் பைல் பண்ணி கண்ணன் கலாச்சார
கான்ஸ்டபிள் வேலை பார்ப்பது குறித்து இனிச் சொல்லவேண்டியவர்கள்
போராட்டத்தில் கலந்துகொண்ட எழுத்தாளத் தோழர்களே.
நான் செங்கடல் இயக்குனரிடம் இவ்வாறு சொன்னேன்: செங்கடல் மூலம்
எழுத்தாளர்களின் டில்லிப் போராட்டம் குறித்த செய்தி இன்னும் நான்கு
தேசங்களுக்கும் நான்கு மொழிகளிற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைக்
குறித்து நமது எழுத்தாள நண்பர்கள் உற்சாகம் கொண்டிருப்பார்களே தவிர கண்ணன்
போல அவர்களும் கோணல் பார்வை பார்க்க வாய்ப்பில்லை. ஏனெனில்
என்னயிருந்தாலும் ஒரு எழுத்தாளரின் பார்வைக்கும் ஒரு தொழிலதிபரின்
பார்வைக்குமிடையே வேறுபாடு கண்டிப்பாக இருந்தேயாகும். போராட்டத்தில்
கலந்துகொண்ட சில எழுத்தாளர்களும் கண்ணனின் கண்கள் வழியே இந்தப்
பிரச்சினையைப் பார்த்து எதிர்ப்புத் தெரிவிப்பார்களெனில் அதைப் பற்றியும்
கவலைப்படத் தேவையில்லை. அந்தக் குறிப்பிட்ட காட்சியில் கணனித் தொழில்
நுட்பத்தின் மூலம் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் முகத்தை மாஸ்க்
செய்துவிடலாம். அது அர்த்தபூர்வமானதாகவும் அதேசமயம் திரையில் சம்திங்
டிபரெண்டாகவும் இருக்கும்.
நண்பரே,
//அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘
முழக்கம்// இவ்வாறு ஒரு கட்டுரையில் எழுதியுள்ள நீங்கள் வினவு தளத்தின்
வேறு எந்தக் கட்டுரையையும் படிப்பதில்லையா? ஏதோ வினவு உங்களை விமர்சிக்க
மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பதை போல பேசுவது நியாயமா? ஈழப்
போராட்டம்இ பார்ப்பன எதிர்ப்புஇ உலகமய எதிர்ப்பு மற்றும் பல்வேறு
சமூகப்பிரச்சினைகளில் போர்க்குணத்துடன் போராடும் ஒரு செயல்பாட்டை இப்படி
சிறுமைப்படுத்துவதில் என்ன சுகம் காண்கிறீர்கள்? அந்தத் தோழர்கள் உங்களைப்
போன்று எழுத்து ஒன்றே தவம் என்று கிடக்கும் ஒற்றை காரிய செயல்பாட்டாளர்கள்
இல்லையே? தோழர் கணேசனை தெரியுமா? ஒரு கல்லூரி வாசலில் மாணவர்களை
ஈழப்போராட்டத்துக்காக அறைகூவி அழைத்த போதுஇ போலீஸ் அவரை கடத்தி சென்றுஇ
வயிற்றை லத்திக் கம்பால் குத்தி கூழாக்கியது. ஒரு சிறு குற்ற உணர்ச்சி கூட
இல்லாமல் உங்களைப் போன்ற ஒற்றைக் காரிய செயல்பாட்டாளர்களால் எப்படி எளிதாக
கடந்து போக முடிகிறது? கொஞ்சம் அசல் மார்க்சியர்களையும் திறந்த மனதோடு
பாருங்கள்.
(பெயர் இல்லை)
அன்பான பெயர் இல்லாத் தோழரே. எனது நீண்ட பத்தியிலிருந்து கடைசி வாக்கியத்தை
மட்டும் நீங்கள் பிய்த்தெடுத்துச் சுட்டிக் கேள்வி கேட்பது சரியற்றது. நான்
எழுதியது இதுவே: //மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகத்து அரசியல் சூழலில்
தவிர்க்கவே முடியாத தரப்பு. அவர்களது நீண்ட அரசியல் வரலாற்றில் கருத்து
மாறுபாடு உள்ளவர்கள் கூட அவர்களது எண்ணற்ற களப் போராட்டங்ளை மதிக்கவே
செய்வார்கள். ம.க.இ.கவினரின் அரசியல் முன்னோக்கில் உடன்படாதவர்கள் கூட
அவர்களது உழைப்பைக் கனம் செய்வார்கள். வினவு இணையத்தளமோ ம.க.இ.கவின்
மானத்தை வாங்கியது. பாட்டாளி வர்க்கத்திற்கு ‘கற்று‘க் கொடுப்பதற்கு
அவதூறுகளும் ஆபாசமும் வினவுவிற்குத் தேவைப்பட்டன.//
தோழரே! ம.க.இ.க மீது எனக்கு நீண்டநாட்களாகவே தோழமையுணர்வும் மதிப்புமுண்டு.
அதைப் பல இடங்களிலும் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக ஈழப் போராட்டம்
குறித்து அவர்களது நிலைப்பாடு மிக முக்கியமானது எனப் பல இடங்களிலும்
சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும் செங்கடல் படம் இலங்கை இந்திய அரசுகளுக்கு
ஆதரவானது என்றும் இயக்குனர் லீனா மணிமேகலை குறித்தும் என்னை டக்ளஸ்
தேவானந்தாவின் ஏஜெண்ட் என்ற பொருள்படவும் அவர்கள் அவதூறுகளை எழுதிக்
குவித்தது கடுமையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக லீனா மணிமேகலையின் கவிதை
நூலுக்கு தடையைக் கோரிய இந்துத்துவா அமைப்பைக் கண்டித்து நடத்தப்பட்ட
கூட்டத்தில் ம.க.இ.கவினர் நடந்துகொண்ட முறை சகிக்க முடியாதது. அந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ம.க.இ.கவினர் வாரிச் சொரிந்த வசைகள்
வக்கிரங்களே தவிர புரட்சிகர முழங்கங்களல்ல.
எனினும் அண்மைக்காலங்களாக வினவு இணையத்தளத்தில் இத்தகைய அவதூறுகளும்
வக்கிரங்களும் யாரைக் குறித்தும் எழுதப்படாமலிருப்பது ம.க.இ.க
வெளியீடுகளின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் எனக்கு நிறைவைத் தருகிறது.
'சுயவிமர்சனம் ஏற்பது' என்ற அரசியல் கலைச்சொல்லையே உருவாக்கியவர்கள்
ம.க.இ.கவினர்தான். அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள் என்றே
நம்புகின்றேன்.
ஷோபா சக்தி, நான் பெரியாரைத் தொடர்ந்து செல்ல நீங்கள் ஒரு முக்கியக் காரணி.
உங்கள் வாசிப்பில் நீங்கள் பெரியார் கருத்தோடு ஒருமுறைகூட
முரண்பட்டதில்லையா? அதே போல அ.மார்க்ஸ் வெளியிடும் பல்வேறு கருத்துகளோடு
நீங்கள் உடன்படுகிறீர்களா?
அதியன், துபாய்.
அன்புள்ள அதியன், பெரியார் அறுபது வருடங்கள் களத்தில் இயங்கியவர்.
பல்வேறுவிதமான அரசியல் சூழல்களிற்குள்ளாலும் நெருக்கடிகளுக்குள்ளாலும்
பயணித்தவர். அந்தக் குறிப்பான சூழல்களில் குறிப்பான கருத்துகளைத்
தெரிவித்தவர்/ செயற்படுத்தியவர். இந்தப் புரிதலோடு பெரியாரை அணுகும்போது
அவரோடு நான் முரண்படுவதேயில்லை. மாறாக ஒவ்வொரு தடவையும் பெரியார் தனது
காலத்தைத் தாண்டிய சிந்தனைகளால் என்னை ஆச்சரியப்படுத்தியவாறே உள்ளார்.
அ. மார்க்ஸோடு சில விடயங்களில் உடன்படாதிருந்திருக்கிறேன். குறிப்பாக அவர்
எழுதிய "இளையராஜா சனாதனத்தை அசைத்தாரா இசைத்தாரா" என்ற கட்டுரையில் எனக்கு
முற்றிலும் வேறு கருத்துகளிருந்தன. அண்மையில் கூட 'அ. மார்க்ஸ்: சில
மதிப்பீடுகள்' நூலில் 'பின்நவீனத்துவம் வரை என்னைத் தொடர்ந்து வந்த
ஷோபாசக்தியால் காந்தியாரைப் பற்றிய எனது சிந்தனைகளைத் தொடர முடியாமற்
போயிற்று" என்று மார்க்ஸ் எழுதியிருந்தாரே.
ஷோபா சக்தி, இது நான் உங்கள் மேல் வீசும் குற்றச்சாட்டு இல்லை.
தோழமையுடன்தான் சொல்கிறேன் அல்லது கேட்கிறேன். பல சமயம் நீங்கள் இந்து
மதத்தைச் சாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒரு கிருஸ்துவர். உங்கள் குருவும்
ஒரு கிருஸ்துவர். பெரியார் இந்து மதத்தில் இருந்துகொண்டுதான் அதில் உள்ள
பிற்போக்கை எதிர்த்தார். முதலில் உங்கள் மதத்தில் உள்ள பிற்போக்கை
எதிர்க்காமல் இந்துமதத்தில் உங்களுக்கு என்ன வேலை? அதே போல இஸ்லாம்
மதத்தைத் தூக்கிப் பேசுகிறீர்கள். இஸ்லாம் மதத்தை ஒரு வன்முறை மதம் என்பது
உங்களுக்குப் புரியவில்லையா? ஷோபா மற்றவர்களிடம் சொல்வதுபோல கிண்டல் செய்து
என் கேள்வியில் தப்பிக்காதீர்கள். என் இரண்டு கேள்விக்கும் நேர்மையான பதில்
தேவை.
இந்தியன், இந்தியா
ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறீர்கள் என்று நீங்கள் கேட்காததால் வர்ணாசிரம்,
சாதி என்றெல்லாம் நீண்டதொரு விளக்கத்தை அளிக்கும் சுமையை எனக்குக்
குறைத்துள்ளீர்கள்.
நமது சாதியச் சூழலில் கிருத்துவ மதத்தை இந்து மதம் உட்செரித்துக்கொண்டது.
இன்றைய கிருத்துவம் இந்து மதத்தின் இன்னொரு கிளைப்பிரிவே என்று சொல்வேன்.
எனவே கிறித்துவ மதத்தில் சாதி உட்பட இந்து மதத்தின் அனைத்துப் புண்களும்
புரையோடிப்போயுள்ளன. இந்த இருமதத்தினரின் பண்பாட்டு கூறுகளும் சாதியத்தால்
ஆக்கப்பட்டவை.
இஸ்லாம் சாதியத்தை விலக்கிவைத்துள்ள மதம். அதன் பண்பாட்டுக் கூறுகளில்
சாதியம் கிடையாது. ஆகவேதான் சாதி இழிவிலிருந்து விடுபட இஸ்லாமையும்
பவுத்தத்தையும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஒரு மாற்றாக
முன்வைத்தார்கள். இஸ்லாம் மட்டுமல்ல இந்துத்துவமும் கிருத்தவமும் கூட
ஓர்புறத்தில் அன்பையும் அமைதியையும் போதித்துக்கொண்டே மறுபுறத்தில் கொடிய
தண்டனைகளையும் புனிதப் போர்களையும் ஊக்குவிக்கும் மதங்களே. குறிப்பான
அரசியல் சூழல்களில் பெரியார் இஸ்லாமையும் பவுத்தத்தையும் ஏன் சில
சமயங்களில் கிறித்துவத்தையும் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்குப்
பரிந்துரைந்தார். ஆனால் அவர் இறக்கும்போதுகூட 'கடவுளைக் கற்பித்தவன்
அயோக்கியன்' என்று கூறியவாறே இறந்துபோனார்.
தம்பி உங்களுக்குப் பிடித்தத் திரைப்படங்கள் எவை?
வசந்தபாலன், அவுஸ்திரேலியா.
The Great Dictator, Bread and Roses, Chicago, Frida, Enter the Dragon,
Good Bad and Ugly, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், நவராத்திரி,
தில்லானா மோகனாம்பாள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், ஒருதலை ராகம், அழியாத
கோலங்கள், பசி, கருத்தம்மா, ஆடுபுலி ஆட்டம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, காதல்
கொண்டேன், பொன்மணி, வாடைக்காற்று, புரகந்த களுவர, பாலம யற்ற, மதிலுகள்,
செம்மீன், ஆரதனா என்று ஏராளமுண்டே.
கனடாவுக்குச் சென்றபோது அ. முத்துலிங்கத்தைப் பார்த்ததாக அறிகிறேன். அந்த
இனிய அனுபவம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன். ஆசையாக இருக்கிறது.
கணேஷ், சிங்கப்பூர்
அதை குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் அ. முத்துலிங்கம்
எழுதியிருக்கிறார். படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
சோபா, வல்லினத்தில் உங்கள் பதில்களை இப்போதுதான் மொத்தமாகப் படித்து
முடித்தேன். உங்களுக்கு வாழ்த்து கூறி தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம்
எழுதலாம் என்றிருந்தபோது ஒரு பதில் மனதை பாதித்தது. அந்த பதிலின் வழி
நீங்கள் இலங்கை இலக்கியத்தை மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது. இலங்கை
இலக்கியம் உங்கள் போற்றுதலுக்குறியதாக இல்லையா? செங்கை ஆழியான், ராஜேஸ்வரி
பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எண்ணற்ற இலங்கை நாவலாசிரியர்களை நீங்கள் எவ்வாறு
பார்க்கிறீர்கள்?
அசான் கனி, நோர்வே.
ராஜேஸ்வரி ஒரு புனைகதை எழுத்தாளராக என்னைக் கவர்ந்தவரல்ல. செங்கை ஆழியானின்
வாடைக்காற்றையும் காட்டாறையும் ஆச்சி பயணம் போகிறாவையும் மறக்க முடியுமா
என்ன! பாலமனோகரன், தாமரைச் செல்வி, இராசரத்தினம், இலங்கையர்கோன், அ.செ.
முருகானந்தம், ரஞ்சகுமார், உமாவரதராஜன், ஓட்டமாவடி அரபாத், திருக்கோவில்
கவியுகன், கௌரிபாலன், மு.தளையசிங்கம், சட்டநாதன், கோகிலா மகேந்திரன், அருள்
சுப்பிரமணியன் என்று எண்ணற்றவர்களை வாசித்து என்னை நான்
உருவாக்கிக்கொண்டேன். என்னவொரு துர்ப்பாக்கியம் பாருங்கள்...இங்கே நான்
குறிப்பிட்டவர்களில் ராஜேஸ்வரியைத் தவிர வேறுயாரையும் நேரில் சந்திக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை. எஸ்.பொவும், டானியலும் எனது ஆசான்கள்
என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அது உங்களுக்குத்
தெரிந்திருக்கும்.
கவிதை எழுதிய அனுபவம் உண்டா சோபா உங்களுக்கு? அல்லது கவிதை வாசிப்பனுபவம்.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்?
விசித்திரா
அதெல்லாம் உண்டு. கவிதை வாசிப்புப் பெருகிய ஒரு தருணத்தில் நான் கவிதை
எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். அவ்வாறு வாசிப்புப் பெருகும் தருணத்தில்
இன்றெழுதிக்கொண்டிருக்கும் பல கவிஞர்கள் தாங்களும் கவிதைகள் எழுதுவதை
நிறுத்திக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு. வ.ஐ.ச.
ஜெயபாலன், இளவாலை விஜேந்திரன் இருவரும் என் மனதிற்கு நெருக்கமான கவிஞர்கள்.
எனது உணர்வுகளை அவர்கள் எழுதியிருப்பதாகவே அவர்களைப் படிக்கும்போது நான்
உணர்வேன். பிரேம் - ரமேஷ் மற்றும் மனுஷ்யபுத்திரன் என்
கொண்டாட்டத்துக்குரிய கவிஞர்கள். ம. மதிவண்ணனின் கவிதைகள் நெருப்பு. அவரது
கவிதைகளிற்குள் நுழைந்து ஒவ்வொரு தடவையும் சூடுபட்டே திரும்புகிறேன். மாலதி
மைத்ரியும் சுகிர்தராணியும் லீனா மணிமேகலையும் ஆழியாளும் தமிழ்க் கவிதையின்
மறுபாதிகள். ஏழு கடல்களையும் சர்ப்பங்களையும் காவல்களையும் மாயப்
பொறிகளையும் தாண்டிச் சென்று உயிர் இரகசியத்தைக் கவர்ந்து வந்து நமக்கு
அளிப்பவர்கள் அவர்கள். எளிய மனிதனின் அந்நியமாதலையும் தமிழகத்தின்
சிறுநகரங்களின் ஆன்மாவையும் நான் முகுந்த் நாகராஜனின் கவிதைகளில்
தரிசிக்கிறேன்.
|
|