|
|
அறம் - 1
I
ஒரு சராசரி இலக்கிய வாசகனின் கண்ணோட்டத்திலிருந்து,
நான் வாசித்த இலக்கியப் பிரதிகளில் என் ரசனைக்கு ஏற்பாக இருந்த
ஆக்கங்களையும், அவை என் சிந்தனைப் போக்கில் ஏற்படுத்திய சலனங்களையும் பதிவு
செய்வதையே என் கட்டுரையின் நோக்கமாக வைத்திருக்கிறேன். ஒரு வாசக எதிர்வினை
என்பதைத் தாண்டி வேறு இலக்கிய மதிப்பொன்றும் அது பெறுமா என்பது என்
ஆர்வத்திற்கு உட்பட்டதன்று.
மலேசிய இலக்கிய வாசகன் ஒருவனின் வாசிப்புத் தேர்வு, மனப்பதிவு போகும் தடம்,
இயங்கும் தளம் பற்றிய பதிவை முன் வைப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
இலக்கிய வாசிப்பு எனக்கு வாழ்வின் தேடல்களை முன்னிறுத்திய ஒரு செயல்பாடல்ல,
சமீப காலம் வரை. எனக்கு எல்லாமே 'on-sit literature' தான். படித்தோமா,
ரசித்தோமா, ஓகே அவ்வளவுதான்.
படித்தவை வாழ்க்கையில் ஏதாவது மாற்றத்தை, ஒரு சிறு கீற்றான சலனத்தையாவது
உண்டாக்கியுள்ளதா என்று பிரக்ஞை பூர்வமாக யோசித்ததில்லை.
அப்படி எந்த மாற்றமும் இல்லாமலா இருந்திருக்கும்?
பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, ஆள்மனதில் பதியும் செய்திகள் நமது
செயல்பாடுகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த
உளவியல் கருத்து எனக்கு உவப்பானதே. வாழ்வின் பல, பெரும்பாலும் துக்க
கணங்களை - tragic moments - கடந்து செல்ல இலக்கிய வாசிப்பு கொடுத்த
தெளிவும், துணிவும் துணை நின்றதை மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன்.
இத்தகைய கவித்துவமான இலக்கிய பார்வைகள், வாழ்க்கை தரிசனங்கள் பற்றி கொஞ்சம்
ஆழமாகத்தான் யோசிப்போமே என்று நினைத்தால் தயக்கமாக இருக்கிறது. ரொம்ப
மூளைக்கு வேலை கொடுத்து அப்புறம் 'பிரச்சனை' ஏதாவது வந்துவிட்டால்......
யோசிக்க ஆரம்பித்தாலே பிரச்சனைதானே.......!
எல்லா மனக்கட்டுமானங்களையும், முன் முடிவுகளையும், சார்புகளையும் மறு
பரிசீலனை செய்யவேண்டி வரும்; ஏதாவது 'ஓவராகவும்', 'நெனப்பாகவும்' விட்ட
வார்த்தைகளை மீட்டுக்கொள்ள வேண்டிய, தன்னகங்காரத்தை பாதிக்கும் சூழ்நிலை
வரலாம். வராமலும் போகலாம். ஆனால், வரும். எவ்வளவு பேசியிருப்போம்!!!
வாங்கித்தான் ஆகணும்.
ஆக, யோசிக்காமலிருப்பதுதான் உத்தமம்.....
ஆனாலும், கொஞ்சமாகவாவது யோசிக்கலாமே என்பதுதான் என் முடிவு! ..... எங்கு
போய் என்னைச் சேர்க்கும் என்பதையும்தான் பார்ப்போமே!
II
கடைசியாக நான் வாசித்து முடித்த புத்தகம் ஜெயமோகனின்
'அறம்' சிறுகதைத் தொகுப்பு. இணையத்தில் தொடர்ந்து படித்துவிட்டு, இப்போது
புத்தகமாக மறுவாசிப்பு செய்கிறேன். 12 கதைகள்.
கதைகளை வாசித்த பின் மனதில் நங்கூரமிடுமிடுவது வாழ்வின் ஆதாரச் சிந்தனையான
அறம்தான்.
'இன்னும் உலகத்துல நாளு நல்ல மனுசாளு இருக்கறதாலதான் மழைப் பெய்யுது'ன்னு
பாட்டிகள் சொல்வதின் அடிப்படையில் என்ன சிந்தனை உள்ளதோ அதுவே ஜெயமோகனின்
கதைகள் முன்னிறுத்தும் அறமாகும்.
இலட்சியவாதம்தான். வாழ்வின் தேடல்கள் அந்த அடிப்படையில்தானே
இருக்கவேண்டும்.
வாசிக்கும்போதே மனதில் இனம் புரியாத ஒர் ஏக்கம். இப்படியான மனிதர்களெல்லாம்
நமக்கு தெரியாமல் இருக்கிறார்களே, அல்லது தெரிந்தும் தெரியாததுபோல
இருக்கிறோமே?
நமக்கு இவர்களுடன் தொடர்பாவது உண்டா? நமது வாழ்க்கையில் இவர்கள் வந்து போன
கணங்களை சேமித்தாவது வைத்திருக்கிறோமா? இத்தகைய வாழ்பனுபங்களுக்கு நாம்
கொடுத்து வைத்தவர்கள்தானா?
நம்மிடமிருந்து இந்த மனிதர்கள் தனித்து, பிரமாண்டமாய் வியாபிப்பதின்
காரணங்கள் நமக்கு எட்டாதவையா?
நாம் என்ன செய்திருக்கிறோம் இப்படியாக? பல வினாக்கள் முன் எழுந்து
நிற்க..ஆழமான மூச்சிழுத்துவிட மட்டும்தான் வாய்த்திருக்கிறதா?
எனக்குள் எழுந்த இத்தகைய கேள்விகள் வாசித்த அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தீவிரமும், பாதிப்பும் மாறுபட்டிருக்கலாம். கதைகள் எழுப்பிய மனவெழுச்சி
நிஜம். கதைகள் வாசித்த கணங்கள் மிகவும் உன்னதமானதாகவே இருந்தன.
மறுவாசிப்பு மற்ற/மாற்று சிந்தனைகளை கிளைக்கச் செய்யலாம். ஆனால், 'அறம்'
கதைகளை உணர்வுப் பூர்வமாக அணுகுவதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது. தவிற,
எல்லா ஆரவாரங்களும், ஆர்ப்பரிப்பும் அடங்கிய பின் வாழ்வின் இருப்பை
அர்த்தப்படுத்துவது மனித நேயம்தானே!
III
Reader`s Digest-ன் 'Classic Collection
'(2011/December) பதிப்பில் பல அருமையான கட்டுரைகளை மீள்பதிப்பு
செய்திருக்கிறார்கள். குறிப்பாக `The night I Met Einstein`, 'The Man Who
Wouldn`t Quit' போன்றவையும், மற்றும் பலவும். மனித வாழ்வின் உன்னத கணங்களை
மீட்டெடுத்து, சிறப்பு தொகுப்பாக வந்துள்ளது. ஜெயமோகன் கதைகள் முன்
வைக்கும் அறம்தான், மானுட வெற்றிதான் பெரும்பாலான கட்டுரைகளின் உள்ளீடு.
|
|