வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 5
ஜூன் - ஆகஸ்ட் 08
முகப்பு  |  உள்ளடக்கம்

அஞ்சலி

 

சுஜாதா :  நம் காலத்து நாயகன் (1953-2008)

மனுஷ்ய புத்திரன்

 

       
 

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள்ளுங்கள்' என்று கொடுத்தார். சுஜாதா 90-களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக்குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கைமறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.

புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட்டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலையுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங்கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தையும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன்பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத்தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டிலைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுக்கொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.

கோவை ஞானி, 'நிகழ்' இதழில் எனது கவிதைகளை 90-களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் 'நிகழில்' வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன் முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதினேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவருக்கு அனுப்பினேன். அடுத்த வாரமே இந்த நோட்டுப் புத்தகம் பற்றிய குறிப்புகளுடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரிகளைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.

சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்து கொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக் கொண்டிருந்தேன்.

சென்னைக்கு வந்த பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய்களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக்கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத்தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லைவரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறு விதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதியுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில் கூட அவர் என்னை விட்டுக்கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒருபோதும் அந்தச் சந்தர்ப்பங்களைப் பதிவுசெய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒரு போதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.

உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டு வந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப்பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைக்கதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.

கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.

அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.

சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768