|
நீண்ட நாட்களுக்குப்
பிறகு, மீண்டும் இணையத் தளத்தோடு இணைந்தபோது எனது முகம் தெரியா
அன்பர்கள் என் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சிலசமயம்
மட்டுமே தன்னை வெளிப்படுத்தும் ஒருவர் இணையத்தள நண்பர்களிலே எனக்கு
மிகவும் நெருக்கமானவராக உருவெடுத்திருந்தார். துபாய் நாட்டில் வேலை
புரியும் இவரோடு பேசும் பொழுதெல்லாம், வாழ்வில் ஏற்படும்
சிக்கல்களுக்கு சின்ன சின்ன தெளிவுகள் பிறப்பதுண்டு. என்னைத்
தொடர்பு கொள்ளும் தருணங்களிலெல்லாம் எனது வாழ்வின் அவ்வப்போதைய
குறிப்புகளை அவரோடு பகிர்ந்து கொள்வது வழக்கம். நான் மட்டுமல்ல;
அவரும்தான். அவர்.. நான்... ஒருவருக்கொருவர் கேள்விகளைக் கேட்டு
எங்கள் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்து கொள்வோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைத் தொடர்புக் கொண்டிருந்த
சமயத்தில், எனது பணிக் குறித்தான கேள்வி அவரிடமிருந்து எழுந்தது...
* * *
மற்றவர்களைப் போல் எனக்கும் சின்ன வயதிலிருந்து
கனவு காணும் பழக்கம் உண்டு. பல கனவுகள் நிஜ உருவங்களைப்
பற்றியிருக்கின்றன. சில கனவுகள் இரவோடு கரைந்துவிடும்.
தமிழாசிரியராக உருவாவது ஆறு வயதிலிருந்து நான் கண்ட கனவு; எனது
லட்சியம்; குறிக்கோள். மற்றவர்களைப்போல் நானும் எனது கனவுகளுக்குக்
கொஞ்சம் கொஞ்சமாகத் தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தேன். ஆரம்பப்
பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எனக்குப் படித்துக் கொடுத்த
ஆசிரியர்களின் பண்பு, குணம், நடை, உடை அவர்கள் பேசும் விதம் போன்ற
சின்ன சின்ன விஷயங்களை திருடி எனக்குள் சேமித்து வைத்திருந்தேன்.
ஆரம்பப்பள்ளியில் பயிலும் காலங்களில், எனதாசிரியர் போதிக்கும்
பாடங்களை வகுப்பரையில் மாணவியாக செவிமடுத்து வீட்டிற்குப்போனவுடன்
ஆசிரியராக என்னை மாற்றியமைத்துக்கொள்வேன். வீட்டின் பின்
புறத்திலுள்ள மரங்களுக்கும் செடிகளுக்கும் பாடம் போதிக்க
வகுப்பறையில் உள்ள வெண்கட்டிகளை திருடவும் செய்தேன். ஆசிரியர்
இடுப்பில் கை வைத்துக் கொண்டு கரும்பலகையில் எழுதும் விதம்
என்னையும் அவர் போல உருவெடுக்கச் செய்தது. என் வீட்டு மர அலமாரி,
மர நாற்காலி, சுவர், கதவு என என் தமிழ் எழுத்து படர்ந்து
பரவியிருக்கும். இதற்காகவெல்லாம் அம்மா என்னைத் திட்டியதில்லை.
அம்மா என்னை நன்கு அறிந்து வைத்தவராக இருந்தார்.
எனது கனவு கடந்த வருடம் நிறைவேறும் எல்லையைத் தொட்டது. பினாங்கு
மாநிலத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சிப் பெற கடிதம்
வந்தது. 'நானும் ஒரு தமிழாசிரியர்' என்ற தலைக் கனத்துடன்
கல்லூரியில் எனது கால்களைப் பதித்தேன். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்
பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், லட்சியத்தை அடைந்துவிட்ட
குதூகலத்தில் இருந்தேன்.அது சிறிது நிமிடங்களே நீடித்தது.
விரிவுரையாளர் "நீங்கள் எல்லாம் தமிழாசிரியர்கள். வாழ்த்து கள்.
ஆனால் நீங்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களல்ல. தேசிய பள்ளி
ஆசிரியர்கள்" என்றார். ( நானும் உங்களைப் போலத்தான் குழம்பிக்
கொண்டிருந்தேன்).
இது கல்வி அமைச்சின் புதிய திட்டம். தேசியப் பள்ளியில் பயிலும்
ஒன்றாம் இரண்டாம் ஆண்டு மலாய், சீன, இந்திய மாணவர்களுக்குத்
தமிழ்மொழி பாடம் போதிக்கும் திட்டம். மாணவர்கள் எந்தவொரு
கட்டாயத்திற்கும் உட்படுத்தப்படாமல் தங்களின் விருப்பத்திற்கிணங்க
தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு. ஏறக்குறைய
50க்கு மேற்பட்ட தேசியப் பள்ளிகளில் இத்திட்டம் சோதனை முறையில்
நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு முதல், நாட்டில்
தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பள்ளியில் இத்திட்டத்தைக் கல்வி அமைச்சு
அமலாக்கம் செய்ய போகின்றது போன்ற உண்மைகள் எனக்கு அதற்கு பின்பே
தெரிய வந்தது.
எனது தமிழ்ப்பள்ளி தமிழாசிரியராகும் கனவின் கரைதலை கொஞ்சம்
கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். காலங்களின் ஓட்டத்தோடு நாங்களும்
ஓடினோம். சில விஷயங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படும்
திருப்புமுனைகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.
சூழ்நிலை கைதியாக நான் தேசியப் பள்ளியில் எனது பணியைத்
தொடங்கினேன். நான் வேலை செய்யும் பள்ளியின் தலைமையாசிரியர்
மாணவர்களுக்குத் தமிழ் போதிக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும்
உட்சாகத்தையும் கொடுத்தார். "இங்கும் நம்மின மாணவர்கள்தானே
பயில்கிறார்கள்" என்று எனக்குள் சமாதானம் கூறிக்கொண்டு எனது
தமிழ்வகுப்பைத் தொடங்கினேன். மாணவர்களுக்குக் கடிதம் வாயிலாக
தமிழ்மொழி வகுப்பின் உருவாக்கத்தைப் பெற்றோர்களிடம் தெரிவித்தோம்.
மறுநாள் வகுப்பின் தொடக்கம். 20 மாணவர்கள் பதிவு செய்துக்
கொண்டனர். நம்மின மாணவர்களின் வருகை மிகவும் கவலைக்குரியதாக
இருந்தது. 20 மாணவர்களில் 16 பேர் மலாய்காரர்கள்...4 பேர் மட்டுமே
இந்திய மாணவர்கள். எனது பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய
மாணவர்கள் பயில்கிறார்கள். வருகைப் பதிவு நான்கு மாணவர்கள் மட்டுமே
என்ற உண்மை மிகக்கசப்பாக இருந்தது. 'தகவல் சரியாக இந்திய
பெற்றோர்களிடம் சேரவில்லை' என சமாதானம் செய்து கொண்டு முதல்
தினத்தில் 'உயிர் எழுத்துகளை' மாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன்.
மலாய், சீன மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை நம்மின மாணவர்கள்
காட்டவில்லை என்ற செய்தி எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. 'எனது
மொழி தமிழனுக்கு மட்டும் சொந்தமில்லை. அனைவருக்கும் பொது...'
என்றுணர்வில் எனது மலாய் மாணவர்களுக்குத் தமிழை நன்முறையில்
கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
அடுத்த சில வாரங்களில் முதலாம் ஆண்டு இந்திய மாணவர்களை வேட்டையாட
ஆரம்பித்தேன். இந்திய பெற்றோர்கள் அவரவர் பிள்ளைகளின் கைகளை
இறுக்கிப் பிடித்தவாறு மற்றப் பெற்றோர்களை நோட்டமிட்டுக்
கொண்டிருந்தார்கள். கதவோரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த ஒரு
பெற்றோரை நோக்கினேன். தமிழ் வகுப்பைப் பற்றிக் கூறினேன். அவரும்
சிரித்துக் கொண்டே 'கண்டிப்பாக அனுப்புகிறேன்' என்று
வாக்களித்தார். (இன்றுவரை அந்த மாணவன் என் வகுப்பின் நுழைவாசலை
மிதிக்கவில்லை.) பின், சிற்றுண்டி சாலையை நோக்கி எனது கால்கள்
நகர்ந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்த இந்திய பெண்மணி என் வருகையை
கண்டதும் இடது காலை வலது காலின் மேல் போட்டு வேகமாக ஆட்டவும்
தொடங்கினார். எதையும் பொருட்படுத்தாமல் அவரிடமும் பள்ளியில்
நடைபெறுகின்ற தமிழ் வகுப்பைப் பற்றி ஆங்கிலத்தில் கூறினேன். அவர்
கூறிய பதிலில் எனது வார்த்தைகள் மௌனமாகி விட்டன. "எனது மகள்
தமிழ்ப் படிக்கக்கூடாதென்றுதானே நான் இங்கு வந்து
சேர்த்திருக்கிறேன். இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும்
தமிழ்ப்பள்ளிக்கு எனது மகளை அனுப்பத் தெரியாதா?..."
* * *
இதை என் நண்பரிடம் கூறிய போது மௌனமாகத்
தொடர்பைத் துண்டித்திருந்தார். (உங்கள் மௌனத்தையும் என்னால் உணர
முடிகிறது.)
|
|