|
முதுகலை
பட்டப்படிப்பிற்காகத் திருமதி இராஜம் இராஜேந்திரன் செய்திருக்கும்
'மலேசிய புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற ஆய்வு
தற்போது நூல் வடிவம் கண்டிருக்கிறது. பட்டப்படிப்பிற்காக அதுவும்
முதுகலை படிப்பிற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆய்வு என்பதால்,
புதுக்கவிதை பற்றிய தகவல்களைப் புள்ளிவிவரங்களோடும் அட்டவணைகள்
வழியும் தனது ஆய்வுக்கு உரத்தைச் சேர்க்க முயன்றிருக்கிறார்.
இந்நூலைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் அல்லது
பேராசிரியர்கள் அணுகுவதற்கும் விமர்சகர்கள், ஆய்வாளர்கள்,
எழுத்தாளர்கள், கவிஞர்கள் அணுகுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
தமிழில் இதுவரைக்குமான விமர்சன மதிப்பீடுகளை மூன்று விதமாக
பிரித்து காண்பிக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன். 1) கல்வித்துறை
விமர்சனம் 2)கோட்பாடு விமர்சனம் 3) ரசனை அடிப்படையிலான விமர்சனம்.
ஆய்வுகளும் இந்த மூன்று வகுத்தலையே அடிப்படையாகச்
சார்ந்திருப்பதால், இராஜம் அவர்களின் புதுக்கவிதை ஆய்வை முழுக்க
முழுக்க கல்வித்துறை ஆய்வாகவே எடுத்தக் கொள்ளலாம். ஏனெனில்,
கோட்பாடு பற்றியும் ரசனை பற்றியும் இந்நூல் மெனக்கெடவில்லை.
இந்நூல் பற்றி எழுத்தாளர் டாக்டர் ரெ.கார்த்திகேசுவும்
இணைப்பேராசிரியர் டாக்டர் வே.சபாபதியும் குறிப்பிட்டுள்ள செய்திகள்
முதலில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
'மலேசியாவில் புதுக்கவிதையின் தோற்றம், வரலாறு, வளர்ச்சி பற்றிய
முழுமையான நூல் வருவது மலேசிய இலக்கியத்திற்கு நல்வரவாகும்' என
டாக்டர் ரெ.கார்த்திகேசு கூறியுள்ளார். முழுமையான தகவல்கள் தரும்
களஞ்சியம் என்றும் வருணித்துள்ளார். 'மலேசிய புதுக்கவிதை பற்றிய
முழுமையானதொரு ஆய்வு நூல் இதுநாள் வரையில் வெளிவந்ததில்லை' என
டாக்டர் சபாபதி குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துரைக்காக மட்டுமே
அவ்வாறு கூறப்பட்டிருக்குமாயின், அதில் தவறேதும் இருப்பதாக
தெரியவில்லை. எனினும் அந்நூலின் பலவீனம், அல்லது அதில் விடுபட்ட
புதுக்கவிதை குறித்த முக்கியமான விவரங்கள், அண்மைய போக்குகள்,
கலைநயம் பற்றி எவரேனும் சுட்டிக்காட்டியிருக்கலாம்.
இந்நூல் ஒருபோதும் மலேசிய புதுக்கவிதை குறித்த முழுமையான ஆய்வு
நூலாகாது. அதற்கான பதிலையும் ஆதாரத்தையும் நூலாசிரியரே, நூலின்
ஆறாவது பகுதியில், (537)வது பக்கத்தில் வைத்துள்ளார். 'மலேசிய
தமிழ்ப்புதுக்கவிதை தொகுப்புகள் (1977-2002) சுமார் 50 புதுக்கவிதை
தொகுப்புகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. பெறமுடிந்த 47
புதுக்கவிதை நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு
அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் நூலாரிசிரியர்.
இந்நூலில் புதுக்கவிதையின் வளர்ச்சி குறித்தும் அதன் அண்மைய நவீன
போக்கு குறித்தும் பதிவு செய்யப்படவில்லை. இன்றை கவிதை சூழலையும்
கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாட்டையும் கிஞ்சிற்றும் குறிப்பிடாமல்,
அறவே பொருட்படுத்தாமல் ஓர் ஆய்வை நூல் வடிவில் கொண்டு
வந்திருப்பதும் மலேசிய புதுக்கவிதையின் தோற்றத்தை முழுமையாகப்
பிரதிபலிப்பதாக அதனை முன்நிறுத்துவதும் ஒரு வகை அரசியல்தான்.
'பெற முடிந்த' என்ற சொல்லை நூலாசிரியர் பாவித்திருப்பதில் மாபெரும்
அரசியல் பின்னணி இருப்பதாகவே படுகிறது. 2002ஆம் ஆண்டுக்குப்
பின்னர் மலேசிய புதுக்கவிதையில் நிகழ்ந்துள்ள எழுட்சி குறித்தும்,
அக்கவிதைகளின் வகைமை குறித்தும், அவை உணர்த்தும் தற்கால வாழ்வின்
முரண்கள் குறித்தும், வாசிப்பில் ஏற்பட்டுள்ள ரசனை மாற்றம்
குறித்தும், நவீனத்துவ அழகியல் கூறுகள் குறித்தும் இந்நூல்
பேசவில்லை. பேசுவதற்கு விருப்பமில்லை போலும். 2002ஆம் ஆண்டுக்குப்
பின்னர் வெளிவந்த கவிதைகளையும், தொகுப்புகளையும் நூலாசிரியர் ஏன்
தனது ஆய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை என தெளிவாகத் தெரியவில்லை.
கிடைக்கவில்லை என்பது பதிலாக இருக்கலாம். அதற்கான காரணத்தை
முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போகலாம். ஆனால் திட்டமிட்டே
அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதே நிதர்சனமாக இருக்கக்கூடும்.
2007 நவம்பர் மாதம் பதிப்பிக்கப்பட்ட நூலில், கடந்த ஐந்தாண்டுகால
பதிவுகள் முற்றாக விடுபட்டிருக்கின்றன.
மலேசிய தமிழ் புதுக்கவிதை கருத்தரங்குகள் எனும் தலைப்பில், மலேசிய
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதை திறனாய்வு
கருத்தரங்குகளை, 'மறுமலர்ச்சி காலம்' என வருணிக்கும் நூலாசிரியர் ,
எட்டாவது கருத்தரங்கோடு நின்று விட்டார். அதற்குப் பின்னர்
நடைபெற்ற கருத்தரங்குகளில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுகளின் சாரங்கள்,
தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் புதுக்கவிதை இன்று, புதிய
இயங்கு தளத்தில், புதிய மொழியில், புதிய பரிசோதனை முயற்சிகளுடன்
எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வேளையில், இந்நூல் மலேசிய
புதுக்கவிதைகள், உலக மற்றும் தமிழக கவிதைகளுடன் ஒப்பிடுகையில் பின்
தங்கியிருப்பதாகவே ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நாட்டில் இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி ஓர் ஆய்வு எழுதினால்,
நவம்பர் 25 சம்பவம் பற்றியும் ஹிண்ட்ராப் பற்றியும், மக்கள் சக்தி
பற்றியும், 12வது பொதுத்தேர்தல் பற்றியும் எழுதாமல் விடுவது எப்படி
முழுமையாகும்? இதற்கு முன்னதான, இந்தியர்களின் நீடித்த வரலாற்றை
மென்று திண்ணும் அளவிற்கு அண்மைய கால போராட்டம் அமைந்துள்ளது.
அதனைப் பேச மறுப்பது, சமகால நிகழ்வுகளைப் புறக்கணிப்பதாக
பொருள்படாதா?
நாட்டின் புதுக்கவிதை பற்றி பேசும் போது, சி.கமலநாதன் தொடங்கி
இன்று தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் நவீன், அருண், அகிலன்,
பூங்குழலி வீரன், தோழி, சந்துரு இன்னும் சிலரது நேர்மையான எழுத்து
வடிவங்களை முறையாக பதிவு செய்யாமல் போவது ஆக்கப்பூர்வமானது அல்ல.
2006ஆம் ஆண்டு வெளிவந்த 'காதல்' இதழ் தொடங்கி, தற்போது வந்துக்
கொண்டிருக்கும் 'வல்லினம்' இதழ் வரை, புதுக்கவிதை பயணித்துக்
கொண்டிருக்கும் திசை குறித்து தெளிவாக உணரலாம்.இன்றைய இந்தக்
கவிதைகள் நேற்றைய புதுக்கவிதையின் நீட்சிதானே தவிர, புதுக்கவிதையை
அழிக்க புறப்பட்ட எழுத்தல்ல. அவற்றைப் பதிவு செய்வதால்,
அக்கவிதைகளைப் புனைந்த கவிஞர்களைக் கொண்டாடுவதாகிவிடும் என்கிற
'மிகு அரசியல் பிரக்ஞை' யால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன என்றே
தோன்றுகிறது.
இந்நூலில் அருவருக்கத்தக்க மற்றொரு செய்தியும் உள்ளது. மீண்டும்
மீண்டும் அது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. திரு.இராஜேந்திரன்
அவர்களின் பொறுப்பில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதை
கருத்தரங்குகள் நடத்தப்பட்ட காலம், மறுமலர்ச்சி காலம், பொற்காலம்
என்றெல்லாம் நூலாசிரியர் அவரைக் கொண்டாடியிருக்கிறார். கொண்டாடி
விட்டு போகட்டும். ஆனால், அது உண்மையா என்பது புதுக்கவிதையின்
இயக்கப்பூர்வமான செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து
வருபவர்களுக்குத் தெரியும். ஆகக் கடைசியாக புதுக்கவிதை
கருத்தரங்கம் நடத்தப்பட்டது 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.
எம்.ஏ.இளஞ்செல்வன் புதுக்கவிதை போட்டி, தனிநபர் அரசியல்
காரணங்களுக்காக அந்தரத்தில் தொக்கி நிற்கிறது. தொடர்ந்து
நடத்தப்படவில்லை. சமகாலச் சூழல் இப்படியிருக்க, தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் புதுக்கவிதை கருத்தரங்குகள், புதுக்கவிதையை ஆரோக்கியமான
வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் சென்றுக் கொண்டிருப்பதாக நூலாசிரியர்
குறிப்பிட்டுள்ளார். இதே வகை சிலாகிப்புகள், நூல் முழுவதும்
விரவிக்கிடக்கின்றன. கிட்டத் தட்ட எழுத்தாளர் சங்கத்தின் பிரச்சார
பீரங்கியாகவே இந்நூல் காட்சி தருகின்றது. இங்கு ஒரு வரலாற்றுப்
பூர்வ சம்பவம் பற்றிய குழப்பத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
புதுக்கவிதை கருத்தரங்கை நடத்துவதற்கான சிந்தனை முதலில் யாருக்கு
தோன்றியது? போகிறவர்கள்- வருகிறவர்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள்!
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதை கருத்தரங்கை
முன்வைத்தே கவிதை வளர்ச்சியைப் பற்றி பேசுவதைத் தவிர்த்திருக்க
வேண்டும். குறிப்பிடுவதற்கும் , விவரிப்பதற்கும், கொண்டாடுவதற்கும்
வேறுபாடுகள் உள்ளன.கொண்டாடுவதைக் கூட நான் தவறென்று
சொல்லவில்லை.ஆனால், அக்கொண்டாட்டம் அதற்கு உரியதா?நியாயமானதா
என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
புதுக்கவிதை இம்மலை நாட்டில் வேரூன்றியது முதல்,ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் தோன்றிய முக்கியமான கவிஞர்கள் குறித்தும்,
அவர்களின் கவிதை பதிவு குறித்தும், படைப்புகள் குறித்தும் இந்நூல்
விவரிக்கவில்லை.உதாரணத்திற்கு கவிஞர் கோ.முனியாண்டியின் தொடக்கக்
கால கவிதைகள் முதல் அண்மைய கவிதைகள் வரை , அவரின் தொடர்ச்சியான
கவிதை முயற்சி பற்றி, அவருக்கே உரித்தான கவிநயம் குறித்து ,அவரது
சொற்கள் குறித்து ஆய்வு ரீதியாக அணுகியிருக்கலாம்.ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் கவிதை மொழிதாவல் புரிந்திருக்கிறது.அதன்
நகர்ச்சிக்கு ஏற்ப பதிவான கவிதைகளை அடையாளப்படுத்தியிருக்கலாம்.
சை.பீர்.முகம்மது, ஏ.தேவராஜன், ந.பச்சைபாலன்,சீ.அருண் என
ஒவ்வொருவரும் கவிதையை எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்றும்
வறட்சியான, ஒரே வகை கட்டுக்குள் இருந்து அவர்களது கவிதைகள் எவ்வாறு
தங்களை விடுவித்துக் கொண்டன அல்லது விடுவித்துக்கொள்ள முற்பட்டன
என்பது மிகவும் முக்கியமான ஆவணமாகும்.அதைப்பற்றி கொஞ்சமாவது
பேசியிருக்கலாம்.
'மலேசியப் புதுக்கவிதையின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலான
கட்டுரையில் புதுக்கவிதையில் ஏற்பட்ட தேக்கத்திற்கான காரணங்களில்
'போராட்டம் குறைவு' என்பதை முதலில் சுட்டுகிறார் நூலாசிரியர்.
தமிழ்நாட்டின் வறுமை, அரசியல் அநீதிகள், இலங்கையில் கொளுந்து
விட்டு எரியும் இனக்கலவரம், என இத்தகைய போராட்டச் சூழலில் நமது
தற்காலக் கவிஞர்கள் இல்லை. எனவே, பாடுபொருள்களில் திரட்சியான
தெளிவான இலக்கு இல்லை என்கிறார் நூலாசிரியர். இதனை ஏற்றுக் கொள்ள
முடியாது. நமக்குப் போராட்டங்கள், பிரச்சனைகள், இன்னல்கள்,
இடர்பாடுகள், தோல் வண்ண பேதங்கள் இல்லை என எவர் சொன்னார்? நமக்கு,
நமக்கே உரித்தான போராட்டங்கள் உள்ளன.தமிழ்நாடு, இலங்கை அளவுக்கு
இல்லையென்றாலும் நம்முடைய பிரச்சனைகள் நமக்குப்
பெரியதுதான்.ஏனெனில், நாம் பல்லின மக்கள் வாழும் நாட்டில்
வாழ்கிறோம், ஒரு சிறுபான்மை சமூகமாக. நாம் இழுத்து
வரப்பட்டவர்கள்... கொத்தடிமைகளாக ரப்பர் காடுகளில் காண்டாவைத்
தூக்கிக் கொண்டு அலைந்தவர்கள்... வெயிலில் விறகுக் கட்டைகளாய்
எரிக்கப்பட்டவர்கள்.. ரத்தம் உறிஞ்சிக் கொடுத்து, ஏய்த்த முதலாளி
வர்க்கத்தினரை வாழ்வாங்கு வாழ்வித்தவர்கள்... அன்று தொடங்கி
இன்றும் பல்வேறு வகையில் சுரண்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்..
போராட்டச் சூழலில் இந்தியர்கள் இல்லை என சொகுசு வாழ்க்கையை மட்டுமே
வாழ்ந்தவர்கள் சொல்லக் கூடாது. சமூகத்துக்காக யாரும் எதுவும்
செய்யவில்லை என்று கூக்குரலிட்டுக் கூவி, பின்னர் கொலிசியத்தில்
வரிசை பிடித்து நிற்பதும்- தொலைக்காட்சி தொடர்களிலும்,
கலைநிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் உறைந்து போய் கிடப்பதும்
வெவ்வேறு கேவலமான கிளைக்கதைகள். நமது அவல நிலை பல கவிதைகளில் பதிவு
செய்யப்பட்டுள்ளன. ஆனால், கவிஞரின் பெயர் பார்த்து, ஆய்வில்
சேர்த்துக் கொள்பவர்களுக்கு நேர்மையான பதிவுகள் கண்களுக்குத்
தெரியாது.
புதுக்கவிதை மட்டுமின்றி பிற இலக்கிய வடிவங்களிலும் இளைஞர்களை
ஊக்குவிக்கும் முயற்சிகளைப் பலர் இயக்கம் சாராமல், தன்னிச்சையாக
செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எழுத்தாளர் டாக்டர்
ம.சண்முகசிவா அதற்கு ஒரு சிறந்த உதாரணம். செம்பருத்தி ஏற்பாட்டில்
அமரர் கணபதி கணேசன் நடத்தி வந்த கவிராத்திரி, அகம் ஏற்பாட்டிலான
இலக்கிய சந்திப்புக்கள், விருட்சம் மாலையின் தொடக்க கால
சந்திப்புகள் போன்றவை புதுக்கவிதையின் அடுத்த கட்ட நகர்வுக்கு
சிறிதேனும் பங்களித்திருக்கும். இல்லையென்பது எவ்வளவு பெரிய
அபத்தம்.
'மலேசிய புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலில்
விடுபட்ட முக்கிய தகவல்களை, குறிப்புகளை ஓரளவேனும் பதிவு
செய்வதும், இந்நூலில் மறைந்திருக்கும் ராட்சத அரசியலைக் கொஞ்சம்
விவாதத்திற்கு இழுப்பதும்தான் இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி
இந்நூலில் வரையறுக்கப்பட்டுள்ள பாடுபொருள்கள், உத்திகள், மொழி
நடைகள், மலேசிய தன்மைகள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் நான்
பதிவு செய்ய விரும்பவில்லை.
நாட்டில் ஒட்டுமொத்த புதுக்கவிதையின் வரலாற்றைப் பேசுவதற்காக
பீற்றிக் கொள்ளும் ஆய்வு நூலை வெளியிட ஓர் எழுத்தாளர் அல்லது ஒரு
கவிஞர் கிடைக்கவில்லை என்பது, இன்னும் ஒரு நூறாண்டுக்கும்
நமக்கெல்லாம் அவமானமாக இருக்காது. ஏனெனில் எழுத்து, இலக்கியம்,
கடவுள் என அனைத்திலும் அரசியலை மெல்ல மெல்ல புகுத்திக்
கொண்டிருக்கிறோம். வாழ்க அரசியல்வாதிகள்!
|
|